உயிர் பறிக்கும் செல்ஃபி மோகம் !
செல்ஃபி மோகத்தால் இருவர் உயிரிழந்த சம்பவம் அனுராதபுரத்தில் நேற்று திங்கட்கிழமை பதிவாகியுள்ளது. அநுராதபுரம் பொது விளையாட்டரங்கில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் பங்கேற்க இரத்தினபுரியிலிருந்து வந்த 18 வயதான மகளும், 37 வயதான தாயுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். காங்கேசந்துறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற அதிவேக ரயிலின் முன் அநுராதபுரம் நிலையத்திற்கு அருகில் செல்ஃபி எடுக்க முற்பட்டபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
செல்பி மோகத்தால் இலங்கையில் தொடர்ந்தும் விபத்துக்கள் பதிவாகிவருகின்றன. அண்மையில் ஓடும் ரயிலிருந்து புகைப்படம் எடுக்க முயன்ற வெளிநாட்டுப் பெண்ணொருவர் மரக்கிளை மோதி விபத்துக்குள்ளானார்.
2023ஆம் ஆண்டு கிளிநொச்சி ஊடகவியலாளர் நிபோஜன் ரயிலிருந்து காணொலி பதிய முற்பட்டவேளையில் தவறிவிழுந்து உயிரிழந்தார். இவ்வாறான மரணங்கள் தொடர்ச்சியாக ஆங்காங்கே பதிவாகிவருகின்றன.
இதேவேளை கைத்தொலைபேசி பாவித்துக்கொண்டு, பாடல் கேட்டுக்கொண்டு ரயில் கடவையை கடக்க முற்படுதல், நீர் நிலைகள், மலைகள் போன்ற சுற்றுலாத் தளங்களில் அட்வென்ஜர் என்ற பெயரில் புகைப்படங்கள் எடுத்தல் போன்றவற்றால் ஏற்படும் மரணங்களும் தொடர்ந்தும் பதிவாகிவருகின்றன.
இவ்வாறான மரணங்கள் பொறுப்புணர்வுடன் நடப்பதன் மூலம் தவிர்க்கப்பட வேண்டியவை. இதுதொடர்பான விழிப்புணர்வு கருத்துக்கள் சிறுவயதிலேயே பாடசாலைப் பிள்ளைகள் மத்தியில் விதைக்கப்பட வேண்டும். இவ்வாறான சம்பவங்கள் நிகழ்ந்த இடங்களில், பொது இடங்களில் பொதுப் போக்குவரத்து வாகனங்களில் வழிப்புணர்வு கருத்துக்கள் பதிவு செய்யப்பட வேண்டும்.