மீண்டும் தலையெடுக்கும் மலேரியா – கிளிநொச்சியில் ஒருவர் பாதிப்பு !
இலங்கையில் மீண்டும் மலேரியா நோய் பரவுவதற்கான ஆபத்து ஏற்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் மலேரியா தொற்றுக்குள்ளான ஒருவர் இனங்காணப்பட்டதையடுத்து இந்த அறிவிப்புவிடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 12ம் திகதி ஆபிரிக்க நாடான கானாவிலிருந்து நாடு திரும்பியவர், காய்ச்சலுக்கு சிகிச்சை பெற வந்தவேளையிலே மலேரியா தொற்று இருப்பது தெரியவந்தது.
இலங்கை மலேரியா அற்ற நாடாக உலக சுகாதார தாபனத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சுற்றியுள்ள நாடுகளால் இலங்கையில் அவ்வப்போது மலேரியாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் இனங்காணப்பட்டு வருகின்றனர். குறிப்பாக ஆபிரிக்க நாடுகளிலிருந்து வருவோர் மலேரியா தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளனர். மாலைதீவு தவிர்ந்த கிழக்கு மற்றும் ஆபிரிக்க, தென்னாசிய நாடுகளில் மலேரியா நோய்த் தாக்கம் இன்றும் உள்ளது.
இலங்கையில் இருந்து குறித்த நாடுகளுக்கு பயணம் செய்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எனவே மக்கள் இவ்வாறான நாடுகளுக்கு சென்று வந்தவர்கள் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் மருத்துவரை அணுகி குறித்த நாடுகளுக்கு சென்று வந்த விடயத்தையும் தெளிவுபடுத்த வேண்டும் எனக் கேட்கப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டு மோகத்தினால் முகவர்களாக பயணத்தை மேற்கொள்பவர்கள் ஆபிரிக்க நாடுகளுக்கு ஊடாகவும் பயணிக்கின்றனர். இவ்வாண்டு முற்பகுதியில், யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பிரான்ஸ் செல்ல முற்பட்டு கானாவில் தங்கியிருந்த போது காய்ச்சல் வந்து அங்கேயே மரணமானார். அவரோடு தங்கியிருந்த மற்றையவர் அதற்கு முன்னரே பயணம் சரிவராது எனத் தெரிந்து நாடுதிரும்பிவிட்டார்.