முன்னாள் ஜனாதிபதிகளின்; பாதுகாப்புச் செலவீனம் – இரண்டு லட்சம் மாணவர்களுக்கு ரூபாய் 6,000 வழங்கும் என்பிபி திட்டத்திற்குப் போதுமானது!
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட முப்படைகளின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் இடம்பெற்ற பாராளுமன்ற விவாதத்தின் போது இது தொடர்பான அறிவிப்பை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால வெளியிட்டிருந்தார். இந்தச் செலவீனம் இரண்டு லட்சம் மாணவர்களுக்கு ரூபாய் 6,000 வழங்கும் என்பிபி இன் திட்டத்திற்குச் சமனானது என மதிப்பிடப்படுகின்றது. இருந்தாலும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கான பொலிஸ் பாதுகாப்பு தொடர்ந்தும் வழங்கப்படும் எனவும் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை இது மீளாய்வு செய்யப்பட்டு அதற்கேற்ப அவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் சீரமைக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அரசியல் பழிவாங்களுக்காக முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறைக்கப்பட்டது என்று குறிப்பிடுவது அடிப்படையற்றது என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு பலவீனப்படுத்தப்பட்டுள்ளது என்று அரசியல் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் தரப்பினர் முறையான காரணிகளை குறிப்பிட வேண்டும். ஒட்டுமொத்த மக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்கு ஈடுபடுத்தியுள்ள பொலிசாருக்காகான வருடாந்த செலவீனத்திற்காக மக்கள் பணத்திலிருந்து ரூ. 1,100 மில்லியன் (வருடாந்தம் ரூ. 110 கோடி – மாதாந்தம் சுமார் ரூ. 9 கோடி) செலவிடப்பட்டமை பிரமுகர் பாதுகாப்பு தொடர்பில் நடவடிக்கை எடுக்க அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட குழுவினால் வெளிப்படுத்தப்பட்டிருந்தது. மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்கு மாத்திரம் வருடாந்தம் ரூ. 326 மில்லியன் செலவீனம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்திருந்தது. அதற்கமைய மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்ட பொலிஸாரின் ஒரு பகுதியின் 13ம் திகதி மீள பொலிஸ் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.