உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

எம்ஜிஆர் உம் ஈழத்தமிழர்களின் நினைவலைகளும் !

எம்ஜிஆர் உம் ஈழத்தமிழர்களின் நினைவலைகளும் !

எம்ஜிஆரின் 108-வது பிறந்தநாள் - தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை ! - News7  Tamil

இந்தியா தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 108-வது பிறந்தநாள் ஜனவரி 17 ஆம் திகதி தமிழகமெங்கும் உணர்வெழுச்சியுடன் கொண்டாடப்பட்டது. எம் ஜி ஆரால் உருவாக்கப்பட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சியின் தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் எம்ஜிஆரின் சிலைக்கும் உருவப்படத்திற்கும் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். இலங்கையிலும் யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் மலையகத்திலும் எம்ஜிஆரின் நினைவு நிகழ்வுகள் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

அதிமுக தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமியால் 108 கிலோ கேக் வெட்டி கட்சி நிர்வாகிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

எம் ஜி ஆர் என்றழைக்கப்படும் மருதூர் கோபாலன் இராமச்சந்திரன் இலங்கையில் கண்டிக்கு அருகாமையில் நாவலப்பிட்டியில் பிறந்த இந்தியவம்சாவழியைச் சேர்ந்தவர். பிறப்பால் இலங்கையோடு பூர்வீக தொடர்பை கொண்ட எம்ஜிஆர் ஈழத்தமிழர்களோடும் நெருங்கிய உறவைக் கொண்டிருந்தார். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகாலங்களில் தமிழீழ போராளிக்குழுக்கள் அனைவருக்கும் ஒரேமாதிரியான உதவிகளை எம்ஜிஆர் வழங்கியிருந்தார். காலப்போக்கில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் நெருக்கமான உறவைப் பேணிய எம்ஜிஆர், போராட்டத்திற்காக புலிகளுக்கு பல கோடி ரூபாய்களை வழங்கியிருந்தார்.

1982 ஆம் ஆண்டு பாண்டிபஜாரில் புளெட் தலைவர் உமா மகேஸ்வரன் மற்றும் புலிகளின் தலைவர் பிரபாகரன் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் கைது செய்யப்பட்ட தலைவர் பிரபாகரன் உட்பட போராளிகள் எம்ஜிஆரின் தலையீட்டால் இலங்கை பொலிஸாரிடம் கையளிக்காமல் விடுதலை செய்யப்பட்டார்கள். இத்தாக்குதலில் சம்பந்தப்பட்ட புலிகளின் தலைவர் பிரபாகரனுடைய அன்றைய நண்பர் ராகவன் என அறியப்பட்ட சின்னையா ராஜேஸ்குமார் தற்போது லண்டனில் உள்ளார்.

இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தான யூலை 29 1987 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் எம்ஜிஆர் நோய்வாய்ப்பட்டிருந்தார். துரதிர்ஷ்டவசமாக டிசம்பர் 24 ஆம் திகதி 1987 இல் திடீர் மாரடைப்பால் அவர் காலமானார். 1977 ஆம் ஆண்டு முதல் இறக்கும் வரை மூன்று முறை தமிழக முதல்வராக இருந்தார். எம்ஜிஆரின் இறப்பு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் பேரிழப்பாக அமைந்தது. எம்ஜிஆர் அற்ற ராஜீவ் காந்தி தலைமையிலான இந்தியாவின் உறவு புலிகளுக்கும் தமிழ்மக்களுக்கும் பெரும் அழிவைக் கொண்டு வந்து சேர்த்தது.

1987 இல் அமைதிப்படையாக வடக்கு கிழக்கு வந்த இந்திய இராணுவத்தினரால் தமிழ்மக்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டதும்இ இறுதியில் புலிகளுக்கும் இந்திய ராணுவத்துக்கும் போர் மூண்டதும் இப் போரினால் பல நூறு இளைஞர்களும் யுவதிகளும் ஆயிரக்கணக்கான மக்களும் கொல்லப்பட்டதும் வரலாறு. தோல்வியடைந்த இலங்கை – இந்திய ஒப்பந்தம் அதன் தொடர்ச்சியாக 1991 இல் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஶ்ரீ பெரும்புத்தூரில் வைத்து ராஜீவ் காந்தி தற்கொலை குண்டுத்தாக்குதல் மூலம் கொல்லப்பட்டார். இவ்வாறான பின்னணிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இந்தியாவிற்குமான உறவு 2009 ஆம் ஆண்டுவரை மிக மோசமாக சிதைவடைந்திருந்தது.

இலங்கையில் அனைத்துலக எம்ஜிஆர் பேரவைத் தலைவரான பொன் மதிமுகராஜா 1998 ஆம் ஆண்டு எம்ஜிஆர் நினைவுநாள் அனுட்டிக்கப்பட்டுக் கொண்டிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டார். பொன் மதிமுகராஜா தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளராக இருந்தவர். 1998 இல் செப்ரம்பரில் முன்னாள் யாழ் மேயர் பொன்னுத்துரை சிவபாலன் கிளைமோர் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட பின்னர் பொன் மதிமுகராஜாவே யாழ் மேயராக வருவதற்கான வாய்ப்புகள் இருந்தன. அதேசமயம் புளொட் மாணிக்கவாசகனும் காலியாக இருந்த யாழ் மேயர் பதவியை குறி வைத்திருந்தார். புலிகளோ இலங்கை அரச கட்டமைப்பு இயங்கக்கூடாது மாநகரசபை இயங்கக் கூடாது என்ற நிலைப்பாட்டில் இருந்தனர். இத்தகைய அரசியல் பின்னணியிலேயே பொன் மதிமுகராஜா சுட்டுக் கொல்லப்பட்டார். யாழிலில் எம்ஜிஆர் என்றாலே மதிமுகராஜாவும் சேர்ந்தே ஞாபகத்திற்கு வருவார்.

எம்ஜிஆர் படம்பார்க்க இலங்கை வல்வெட்டித்துறையிலிருந்து இராமேஷ்வரத்திற்கு படகில் சென்றுவந்த காலம் ஒன்றும் இருந்தது. ஆனால் 1983 ஆம் ஆண்டிற்குப் பிறகு இலங்கை யுத்த பூமியாக மாறியது. வட இலங்கைக்கும் தமிழகத்தின் ராமேஸ்வரத்திற்கான கடல் பரப்பு ஆயுத தளபாடங்களை பெறுவதற்கும் போராளிகளை பயிற்சிக்கு அழைத்துச் செல்வதும் அவர்களை மீளக் கொண்டுவருவதற்குமான பாதையாக மாறியது. 2009ற்குப் பின் இவ் உறவு இப்போது மேலும் கசந்து இலங்கை இந்திய மீனவர்கள் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

 

விடுவிக்கப்படாத ஆலயங்கள் விரைவில் விடுவிக்கப்படும் – புத்த சாசன சமய மற்றும் கலாசார அமைச்சர் யாழில் தெரிவிப்பு!

விடுவிக்கப்படாத ஆலயங்கள் விரைவில் விடுவிக்கப்படும் – புத்த சாசன சமய மற்றும் கலாசார அமைச்சர் யாழில் தெரிவிப்பு!

ஆலயங்கள் மற்றும் அவை அமைந்துள்ள விடுவிக்கப்படாத நிலங்கள் உள்ளிட்டவற்றை விரைவில் விடுவிப்பதற்கு நடவடிக்கைகளை எடுப்பேன் என்று புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார்.

தேசிய பொங்கல் விழாவிற்காக யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள அமைச்சர் நல்லை ஆதின குருமுதல்வரை சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, கொழும்பில் வெவ்வேறு காரணங்களுக்காக மூடிவைக்கப்பட்டிருந்த வீதிகள் இப்போது திறக்கப்பட்டு வருகின்றன. வடக்கிலும் நாம் முக்கியமான வீதியொன்றை திறந்துள்ளோம். ஏனைய வீதிகளும் திறக்கப்படும். ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ள இராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள ஆலய விபரங்களை பெற்று அடுத்த கட்ட நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுப்பேன் என்றார்.

கஜாவின் புதிய கண்டுபிடிப்பு: அனுரா கோட்டபாயாவைக் காட்டிலும் மோசமான இனவாதி !

கஜாவின் புதிய கண்டுபிடிப்பு: அனுரா கோட்டபாயாவைக் காட்டிலும் மோசமான இனவாதி !

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பா உ பொன்னம்பலம் கஜேந்திரகுமார் யாழில் தங்களுடைய கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின் போது முன்னாள் ஜனாதிபதி கோட்ட பாயவும் செய்யாத அளவுக்கு இனவாத அரசியலை தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மேற்கொள்ள முயல்கிறார் எனக் குறிப்பிட்டார். தமிழ் தேசிய மக்கள் சக்தி தேர்தலின் போது அரசியல் கைதிகள் விடுதலை, பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவது, விடுவிப்பு போன்ற வாக்குறதிகளை வழங்கிவிட்டு தற்போது அவற்றிலிருந்து பின்வாங்கி இனவாத அரசியலை முன்னெடுப்பதாக குற்றம்சாட்டினார். தமிழ் மக்கள் ஜேவிபி இன் இனவாத முகத்தை கவனிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என ஜனாதிபதி அனுர பதிவியேற்று 100 நாட்களிலும் புதிய பாராளுமன்றம் அமைக்கப்பட்டு 50 நாட்களிலும் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தனது பாரிய கண்டுபிடிப்பை ஊடகங்களுக்கு வெளியிட்டார்.

ஜனவரி 25 இல் நடக்க உள்ள சந்திப்பு தமிழ் தேசிய அரசியலின் ஆரம்பப்புள்ளியாக அமையும் என்றும் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் அழைப்பு விடுத்துள்ளார். இவரது அழைப்பை வடக்கு கிழக்கில் உள்ள எந்த அரசியல் கட்சியும் கணக்கில் எடுத்ததாக இதுவரை தகவல் இல்லை.

இவர்கள் மத்தியானச் சாப்பாட்டுக்கு பிறகு கதைக்கிறது எல்லாம் அரசியல் சந்திப்பு என்ற கணக்குக்குள் வராது என பா உ சாணக்கியன் தெரிவித்துள்ளார். அவருடைய தமிழரசுக் கட்சி தங்களுடைய வழி தனி வழி என்றும் தங்களுடைய பயணம் ஏலவே ஆரம்பிக்கப்பட்டுவிட்டது என்றும் கூறுகின்றனர். அந்தப் பயணத்துக்கான குழுவில் பொன்னம்பலம் கஜேந்திரகுமாரோடு பேசிய பா உ சிறிதரனும் உள்ளார்.

இந்தியா தலையிடாட்டி சந்தோசம், 13யை தொடமாட்டோம் என்கிற கதைக்கே இடமில்லை, இந்தியா, மாகாணசபை, 13 இல்லாவிட்டால் தாங்கள் உடன்கட்டை ஏறுவோம் என்கிறார் அரசியலில் தனிக்கட்டையாக நிற்கும் பா உ செல்வம் அடைக்கலநாதன்.

தமிழ் அரசியலில் மூன்று தனிக்கட்டைகள்: பொன்னம்பலம் கஜேந்திரகுமார், சிவஞானம் சிறிதரன், செல்வம் அடைக்கலநாதன்.இவர்கள் தனிக்கட்டைகளாக இருப்பதால் அரசியலில் கூட்டுக்கலவியில் ஈடுபட விருப்பம் கொண்டவர்கள் தான். ஆனால் இவர்களுக்கு ஒற்றுமைப்படுவதற்கான கொள்கை எதுவும் இல்லை என்பது பெரும் பிரச்சினை. இவர்களைவிட இன்னுமொரு தனிக்கட்டை இருக்கின்றார். அவர் அரசியலிலும் தனிக்கட்டை சுயேட்சைக்குழு இராமநாதன் அர்ச்சுனா. இவர் தலைவெட்டப்பட்ட கோழி போல் எந்தப் பக்கம் பாய்வார் என்று அவருக்கே தெரியாது.

அதனால் தான் இவர்களுடைய அரசியல் என்பது பாராளுமன்றம் செல்வதும், கொழும்பில் இருக்கும் போது எங்களுக்கு நேரம் தாருங்கள் என்று கெஞ்சிக் கூத்தாடி வெள்ளைக்கார ராஜதந்திரிகளிடம் நேரம் எடுத்து அவர்களோடு தேநீர் குடித்தவிட்டுவருவதும் என ஈழநாடு பத்திரிகை தனது ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

பொன்னம்பலம் கஜேந்திரகுமார் மதிப்பளிக்கும் இந்த வெள்ளைக்கார தொரைகளே, இலங்கையில் இனவாதம் இல்லாத ஒரு அரசாங்கத்தை அனுரா நடத்துவதாக நற்சான்றிதழ்கள் கொடுக்கின்றனர். பொன்னம்பலம் கஜேந்திரகுமாரின் குற்றச்சாட்டை, அதாவது ஜனாதிபதி அனுரா, முன்னாள் ஜனாதிபதி கோட்டபாயாவை விட மோசமான இனவாதி என்ற கருத்தை கஜேந்திரகுமாரின் நெருங்கிய நட்பான அமெரிக்க தூதுவர் யூலி சங்கே ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. குண்டுச் சட்டிககுள் சைக்கிள் ஓடி இருக்கிற ஒரு ஆசனத்தையும் தொலைக்கப் போகின்றார் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் என்கிறார் பிரான்ஸில் வாழும் சமூக அரசியல் செயற்பாட்டாளர் சோலையூரான் என அறியப்பட்ட முருகவேள் யோகராஜா.

எமது அரசாங்கத்தில் எந்த ஒரு கட்டத்திலும் நாம் இனவாதத்தை முன்னெடுக்க போவதில்லை – அருண் ஹேமச்சந்திர

கடந்த ஆட்சியாளர்கள் தங்களின் தோல்வியின் விளிம்பில் எடுக்கும் ஆயுதம் இனவாதம் ஆனால் எமது அரசாங்கத்தில் எந்த ஒரு கட்டத்திலும் நாம் அதனை முன்னெடுக்க போவதில்லை என பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர இன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அருண் ஹேமச்சந்திர,  எமக்கு எந்தவித பாதிப்புகள் வந்தாலும் நாம் ஒரு காலமும் இனவாதத்தை கையில் எடுக்கப் போவதில்லை என்ற உத்தர வாதத்தை நான் உங்களுக்கு தருகின்றேன். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றத்தில் அரசியல் நெருக்கடி மாற்றப்பட்டுள்ளது. இருப்பினும் பொருளாதார நெருக்கடி சமூக நெருக்கடிகள் காணப்படுகின்றன இவற்றை நாம் வேகமாக மாற்றியமைக்க வேண்டிய தேவை உள்ளது.

நாம் நாட்டை மீள கட்டியெழுப்ப வேண்டிய தேவை உள்ளது சமூக மாற்றத்தின் பிரதான பங்கினை இலக்கியவாதிகள் வகிக்கின்றனர். எமக்கு வழங்கப்பட்டுள்ள அரசியல் பலமானது மாற்றியமைக்கப்பட்டுள்ளது அரசியல் முரண்பாடுகள் ஆனது தேர்தல் நிறைவடைந்த பின் அவை கைவிடப் பட வேண்டும். மக்களுக்காக நாம் இன மத மொழி வேறுபாடு இன்றி ஒன்றிணைய வேண்டும் இதனை மாற்றி அமைத்து நாம் சரியான திசைக்கு மக்களை வழிநடத்த வேண்டிய இடத்தில் இருக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.

 

 

ஓடும் ரெயிலில் ஸ்பா – மசாஜ் விசாரணைகள் ஆரம்பம் !

ஓடும் ரெயிலில் ஸ்பா – மசாஜ் விசாரணைகள் ஆரம்பம் !

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு என முன் பதிவு செய்து எடுக்கப்பட்ட ரெயில் பெட்டிகளில் மசாஜ் செய்யும் காணொலிகள் வெளியாகியதை அடுத்து அதுதொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே மேலாளர் நேற்றுத் தெரிவித்துள்ளார். இந்த ரெயில் பெட்டிகளை முன்பதிவு செய்த நிறுவனம் இவ்வாறான தொழிலை தாங்கள் ரெயிலில் செய்வதைத் தெரியப்படுத்தவில்லை. இவ்வாறான மசாஜ் சேவைகளை வழங்குவதற்கு சட்ட அனுமதியில்லை எனவும் அம்மேலாளர் தெரிவித்தார்.

இலங்கை அரசு தெற்கோடு கை கோர்க்க, தமிழ் தேசியம் மேற்கிற்கு மனுக் கொடுக்கின்றது !

இலங்கை அரசு தெற்கோடு கை கோர்க்க, தமிழ் தேசியம் மேற்கிற்கு மனுக் கொடுக்கின்றது !

உலக சனத்தொகையின், உலக சந்தையின் மிகப்பெரும் நாடுகளான சீனா – இந்தியாவோடு இலங்கை மிகுந்த நெருக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. ஜனாதிபதியின் சீன விஜயம் எதிர்பார்க்கப்பட்டதைக் காட்டிலும் மிகச்சிறப்பாக அமைந்துள்ளமை பல்வேறுபட்ட பரஸ்பர ஒப்பங்தங்களிலும் வெளிப்பட்டு நிற்கின்றது. உலகின் சிறிய தீவுகளில் ஒன்றான இலங்கை உலகின் மிகப்பெரும் சந்தையைக் கொண்டுள்ள, பொருளாதார பலத்தைக் கொண்டுள்ள நாடுகளாலும் கௌரவிக்கப்பட்டுள்ளமை தேசிய மக்கள் சக்திக்கு கிடைத் வெற்றியாகவே பார்க்கப்படுகின்றது. சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையே 21 ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகி உள்ளது.

சீனாவுக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு நேற்று இரவு ஜனாதிபதி நாடு திரும்பினார். நாடு திரும்புவதற்கு முன் காலையில் நிலையான அபிவிருத்தி மூலம் கிராமிய மறுமலர்ச்சியைக் கண்ட சென் கி மாதிரி கிராமத்தையும் தேசிய விஞ்ஞான தொழில்நுட்ப விவசாய மையத்திற்கும் விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அபிவிருத்தியை ஜனநாயகப்படுத்தும் ஜனாதிபதியின் திட்டத்திற்கு இவை உதவும்.

சீனா கடன்பொறிக்குள் நாடுகளைத் தள்ளிவிடுகின்றது என்ற மேற்கு நாடுகளதும், அவர்களது ஊடகங்களினதும் பொய்ப் பிரச்சாரங்களுக்கு எடுபட்டு, சீனாவின் முதலீடுகள் பற்றி பல்வேறு விமர்சனங்கள் வந்தபோதும், அவை பொருளாதார விருத்திக்கான அடிக்கட்டுமானங்கள் என்பது வெளிச்சத்திற்கு வருகின்றது. இனிவரும் காலங்களில் இந்துசமுத்திரப் பிராந்தியம் சர்வதேச கப்பல் போக்குவரத்தின் முக்கிய பாதையாக அமைய இருப்பதும் இதற்கான காரணங்களாக சொல்லப்படுகின்றது.

ஆனால் இதனைக் கடுகளவும் புரிந்துகொள்ளாத தமிழ் தலைமைகள், ரோ புலிகளின் மதியுரைஞர் மு திருநாவுக்கரசு போன்றவர்களின் உலுத்துப்போன கதையாடல்களை வைத்துக்கொண்டு சீனாவுக்கு எதிராக எங்களைப் பயன்படுத்துங்கள் என்று சன்னதம் ஆடுகின்றனர். மறுபக்கம் எங்களுக்கு சீனாவின் புலமைப் பரிசிலும் வேண்டாம், படிப்பும் வேண்டாம் என்று யாழ் பல்கலைக்கழகம் அடம்பிடிக்கின்றது. கோட் ரை கட்டிய வெள்ளைக்காரன் அமெரிக்காவில் ஐரொப்பாவில இருந்து வந்து விசாரிக்க வேண்டும் என்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டு, தற்போது உயிரோடு இல்லாதவர்களின் உறவுகள் வலிந்து கேட்கின்றனர். தமிழ் தேசியமும் அதற்கு பூஸ்ட் கொடுக்கின்றது.

தமிழ் தேசியத்திற்கு சர்வதேச அரசியல் புரியவில்லை என்பது ஒரு பக்கம், தங்கள் வீட்டு தெரு முழுக்க ஜேவிபி வந்த விடயமே இவர்களுக்கு நவம்பர் 15ம் திகதி தானே தெரிய வந்தது. அதுவரைக்கும் அவர்கள் ஊழல், மோசடி என்று போதையேறி மயக்கத்தில் இருந்தனர். கோமாவிலிருந்து எழும்பிய தமிழ் தேசிய மாமாக்களுக்கு கடந்த 15 ஆண்டுகளில் இலங்கையில், சர்வதேசத்தில் என்ன மாற்றம் நிகழ்ந்தது என்பதெல்லாம் மறந்து போய்விட்டது. மீண்டும் வெள்ளாள வெள்ளைக்கார ‘தொரைகளைச்’ சந்தித்து இன்னமும் கண்காணி வேலை எடுக்கத் திரிகின்றார்கள்.

தமிழ் முற்போக்கு கூட்டணியில் தோல்வியடைந்து, தேசியப்பட்டியலில் பாராளுமன்றம் சென்ற மனோகணேசன் பிரித்தானியத் தூதுவர் அன்ட்ரூ பற்றிக்கைச் சந்தித்துள்ளார். இலங்கையின் சமூக பொருளாதார தேசத்தைக் கட்டியெழுப்புவது பற்றியும் மலையகத் தமிழ் மக்களின் உரிமைகள் பற்றியும் அங்குள்ள குறைபாடுகள் பற்றியும் பிரித்தானிய ‘தொரை’யிடம் முறையிட்டுள்ளார்.

இதேசமயம் பா உ சிறிதரன் ஐரோப்பிய ஒன்றியத் தேர்தல் கண்காணிப்புக் குழுவின் தலைமை கண்காணிப்பாளர் நாச்சோ சான் செஸ் அமோர், ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் கார்மன் மொறேனோ உள்ளடங்கிய குழவினரை கொழும்பில் சந்தித்துள்ளார். அவர்களிடம் தமிழர்கள் சமஸ்டி அடிப்படையிலான அதிகாரப்பகிர்வொன்றையே எதிர்பார்ப்பதாக வலியுறுத்தி உள்ளார். இச்சந்திப்பின் இறுதியில் இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் எவ்வாறு முன்மாதிரியாக, இதுவரை நடந்திராத வகையில், ஜனநாயகப்படியும், இனவாதமில்லாமலும், வன்முறையில்லாமலும் நடத்தப்பட்டது என்பதைச் சொல்லும் ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பு அறிக்கையின் பிரதியை சிறிதரனிடம் கையளித்தனர்.

ஆனால் இலங்கையில் புரையோடிப் போயுள்ள இனப் பிரச்சினையை இனவாதத்திற்கு எதிராக போட்டியிட்டு தமிழ் மக்களுடைய கணிசமான ஆதரவோடு ஆட்சிபீடம் ஏறியுள்ள தேசிய மக்கள் சக்தியோடு இது தொடர்பில் உரையாட, இவர்கள் தயாரில்லை. தமிழ் தேசியம் பேசுகின்ற தலைவர்கள் இலங்கையில் ஆட்சிக்கு வந்த தமிழ் மக்களின் ஆதரவைப் பெறாத, இனவாதத் தலைவர்களான ஜே ஆர் ஜெயவர்த்தனா, ரணசிங்க பிரேமதாச, மஹிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, கோட்டபாய ராஜபக்ச, ரணில் விக்கிரமசிங்க என எல்லோருடனும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர். ஆனால் தேசிய மக்கள் சக்தியை தீண்டத் தகாததாக நடத்த முற்படுகின்றனர்.

 

க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் – வீழ்ச்சி வீதிவிபத்து மரணங்கள் வீழ்ச்சி !

க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் – வீழ்ச்சி வீதிவிபத்து மரணங்கள் வீழ்ச்சி !

க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் போக்குவரத்து நடவடிக்கைகளினால் வாகன விபத்துக்களினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதைத் தெரிவித்துள்ளார்.

வீதி விபத்துக்களினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களில் நாளொன்றுக்கு ஒன்பதாக இருந்தது. தற்போது அது நான்கு தொடக்கம் இரண்டாகக் குறைந்துள்ளது. அத்துடன் சில நாட்களில் எந்தவித உயிரிழப்பும் வீதி விபத்துக்களினால் பதிவாகவில்லை.

பொலிஸ் புள்ளிவிபரப்படி வீதிவிபத்துக்களால் தினமும் 10 தொடக்கம் 15 பேர் வரை நிரந்தரமாக ஊனமடைகின்றனர். இது போரின் போது ஒரு நாளைக்கு ஊனமுற்றவர்களின் எண்ணிக்கையை விட அதிகம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாவீரர்களுக்கு மாபெரும் கோயில் கட்டுவேன் ! ஐ.பி.சி பாஸ்கரன் – முதலமைச்சராக்குவார்களா வடக்கு தமிழர்கள் ?

மாவீரர்களுக்கு மாபெரும் கோயில் கட்டுவேன் ! ஐ.பி.சி பாஸ்கரன் – முதலமைச்சராக்குவார்களா வடக்கு தமிழர்கள் ?

இல்லாத தெய்வங்களுக்கு கோயில் கட்டுவதை விட எங்களுடைய மாவீரர்களுக்கு என ஓர் ஆலயம் கட்டுவேன் என ஐ.பி.சி பாஸ்கரன் தெரிவித்துள்ளார். ஐ.பி.சிக்கு வழங்கிய சுயதம்பட்ட நேர்காணல் ஒன்றிலேயே அவர் இதைத் தெரிவித்துள்ளார்.

சைக்கிள் கஜா – கஜா குழுவினரின் உசுப்பேற்றும் அரசியலை ஐ.பி.சி பாஸ்கரனிடமும் எதிர்பார்க்க முடியும் என பல தரப்பினரும் தெரிவித்து வரும் நிலையில் பாஸ்கரனின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. குமார் பொன்னம்பலத்திற்கு அண்மையில் மாலை அணிவித்த ஐபிசி பாஸ்கரன் முதலமைச்சராவதற்கான தடங்களை பதிக்க ஆரம்பிக்கின்றார்.

ஐ.பி.சி தமிழ் மற்றும் ரீச்சா பார் உரிமையாளரான பாஸ்கரன் தனது முதலைமைச்சர் கனவை நோக்கி படிப்படியாக நகர ஆரம்பித்துள்ளார். இது தொடர்பில் தேசம்நெட் பல தடவைகள் பதிவு செய்துள்ளது.

தமிழரசுக்கட்சியில் தனக்கு ஏதேனும் தேறுமா என எதிர்பார்த்த போது முன்னாள் பா.உ சுமந்திரனின் ஆதிக்கத்தால் தமிழரசுக்கட்சி பாஸ்கரனை தூரப்படுத்தியிருந்ததது. இதனை தொடர்ந்து சுமந்திரனை தமிழ்தேசியத்துக்கு எதிரானவராகவும் பா.உ சிறீதரனை மீட்பர் போலவும் ஐ.பி.சி உட்பட பாஸ்கரனின் ஊடகங்கள் காட்சிப்படுத்தி வருகின்றன.

தற்போது, மாகாண சபை தேர்தல்கள் தொடர்பான அறிவிப்புக்கள் வெளியாகிவரும் நிலையில் தனது அரசியல் நிலைப்பாட்டை உறுதி செய்ய முன்னணியின் கஜா – கஜா குழுவினருடன் கைகோர்த்துள்ளார் பாஸ்கரன். படுகொலை செய்யப்பட்ட குமார் பொன்னம்பலத்தின் 25வது ஆண்டு நிகழ்வில் கலந்து கொண்டு இதை உறுதிசெய்திருந்தார்.

புலிகளின் பெயரை சொன்னாலே ஒருவருடைய பின்புலம் – மக்களுக்கான கடந்த கால அரசியல் செயற்பாடுகள் ஆகியவற்றை கவனத்தில் கொள்ளாமல் அரசியல் அதிகாரங்களை தூக்கி கொடுத்துவிடுமளவிற்கு வடக்கு மக்கள் உள்ளனர். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி காய் நகர்த்துகிறார் ஐ.பி.சி பாஸ்கரன் என அரசியல் அவதானிகள் தெரிவித்து வருகின்றனர்.

பாராளுமன்றில் பாலியல் குற்றவாளிகளின் பதவிகள் பறிப்பு – யாழ். பல்கலைக்கழகத்திலும் மாற்றங்கள் நடக்குமா ?

பாராளுமன்றில் பாலியல் குற்றவாளிகளின் பதவிகள் பறிப்பு – யாழ். பல்கலைக்கழகத்திலும் மாற்றங்கள் நடக்குமா ?

நாடாளுமன்ற பெண் ஊழியர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தினர் என குற்றம் சாட்டப்பட்ட ஊழியர்கள் மூவரும் பதவி நீக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பான பல கட்ட விசாரணைகளின் அடிப்படையில் மூவரும் குற்றவாளிகள் என கண்டறியப்பட்டுள்ளனர். அதையடுத்து நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவின் பரிந்துரையில், சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன மூன்று ஊழியர்களையும் பணிநீக்கம் செய்ய ஒப்புதல் அளித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் அரசுக்கு அறிவிக்கப்பட்டு மிகக்குறுகிய கால இடைவெளியில் இந்த பணிநீக்கம் இடம்பெற்றுள்ளமையானது மகளிர் அமைப்புக்கள் பலவற்றினுடைய பாராட்டையும் பெற்றுள்ளது.

இதேவேளை பல்கலைகழகங்களில் உள்ள பாலியல் சுரண்டல்கள் தொடர்பிலும் என்.பி.பி கவனம் செலுத்த வேண்டும் என பெண்ணிய செயற்பாட்டாளர்களின் குரல்கள் மேலோங்க ஆரம்பித்துள்ளன. குறிப்பாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சில விரிவுரையாளர்கள் மாணவிகள் மீதான பாலியல் சுரண்டல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பில் தொடர் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும் தமிழ்தேசியத்தின் பின்னால் அவர்கள் பாதுகாப்பாக ஒழிந்து கொண்டுள்ளனர் என்பதை பலரும் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

தமிழர்களிடம் கொடுத்த வாக்குறுதிகளை மீறி என்.பி.பி அரசு செயற்படுகிறது – அருட்தந்தை மா.சத்திவேல் விசனம் !

தமிழர்களிடம் கொடுத்த வாக்குறுதிகளை மீறி என்.பி.பி அரசு செயற்படுகிறது – அருட்தந்தை மா.சத்திவேல் விசனம் !

அரசியல் கைதிகள் என எவரும் சிறையில் இல்லை என்று அரசாங்கம் குறிப்பிட்டுள்ளமை தமிழ் மக்களை அவமதிக்கும் செயல் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனை இன்றி விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதும் பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதும் தமிழர்களின் மிக நீண்டகால அரசியல் கோரிக்கை. ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நாம் பதவிக்கு வந்தால் அரசியல் கைதிகளை விடுதலை செய்வோம். இதற்கு தெற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என தேர்தல் காலத்தில் உறுதியளித்திருந்தார்.

அதன் ஈரம் காயும் முன்னரே அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார அரசியல் கைதிகள் என்று சிறைகளில் எவரும் இல்லை குறிப்பிட்டுள்ளமை அவர்களின் அரசியல் அநாகரிகத்தை அம்பலப்படுத்தி உள்ளது. என்.பி.பி வாக்களித்த தமிழர்களையும் ஏமாற்றி தமிழர்களின் அரசியலை அவமானப்படுத்தி உள்ளமையை வன்மையாக கண்டிக்கின்றோம் – என குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் உள்ள எந்தவொரு சிறைகளிலும் அரசியல் கைதிகள் என்றொருவரும் இல்லை என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார் என வீரகேசரி செய்தி வெளியிட்டிருந்தது. இது தொடர்பில் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தேர்தலுக்கு முன்னர் தேசிய மக்கள் சக்தி அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் மிகுந்த கரிசனை வெளிப்படுத்தியிருந்தது. இந்த நிலையில் ஹர்ஷண நாணயக்காரவின் கருத்து தமிழ் மக்கள் மத்தியில் அவநம்பிக்கையை விதைத்துள்ளது.

அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார சிறைகளில் அரசியல் கைதிகள் இல்லை என்ற விடயத்தைத் தெளிவுபடுத்தியிருந்தாரே அல்லாமல் தமிழ் கைதிகள் இல்லை என்று குறிப்பிடவில்லை என்கிறார் ஆய்வாளர் வி சிவலிங்கம். தற்போது கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழேயே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்றும் சுட்டிக்காட்டினார் வி சிவலிங்கம். இவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுகளில் மட்டும் செயற்பட்டவர்கள் அல்ல அப்படி ஒரு கட்டமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளில் இருக்கவில்லை என்கிறார் சமூக செயற்பாட்டாளர் மயில்வாகனம் சூரியசேகரம். முன்னாள் வெளிநாட்டமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர், முன்னாள் அமைச்சர் மகேஸ்வரன் ஆகியோருடைய கொலைகளிலும் வேறு படுகொலைகளிலும் சம்பந்தப்பட்ட விரல் விட்டு எண்ணக்கூடிய பத்துக்கும் குறைவானவர்களே தற்போது சிறையில் இருப்பதாகவும் ஆய்வாளர் வி சிவலிங்கம் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். இவர்கள் நாட்டின் சுதந்திர தினம் போன்ற காலங்களில் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்க தேசிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவ்வமைப்பின் ஆதரவாளரான சுடர்மணி கேதீஸ்வரன் தெரிவிக்கின்றார். பத்துக்கும் உட்பட்ட இக்கைதிகளை வைத்து அரசியல் செய்ய முற்பட்டு அவர்கள் விடுவிக்கப்படுவதற்கான வாய்ப்பை இல்லாமால் செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் ஆய்வாளர் வி சிவலிங்கம் தெரிவித்தார்.