செய்திகள்

செய்திகள்

செய்திகள்

புதுக்குடியிருப்பு, விசுவமடு பிரதேசங்களில் பெருந்தொகையான ஆயூதங்கள் மீட்பு – பிரிகேடியர் உதய நாணயக்கார தகவல்

udaya_nanayakkara_brigediars.jpgமுல்லைத் தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு, விசுவமடு பிரதேசங்களில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் நடவடிக்கைகளின்போது பெருந்தொகையான ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். ஐயாயிரம் துப்பாக்கி ரவைகள், 1250மோட்டார் குண்டுகள், அதி சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் உட்பட பெருமளவு ஆயுதங்களை படையினர் மீட்டுள்ளனர்.

புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு,  கிளிநொச்சி பிரதேசங்களில் பாதுகாப்புப் படையினர் பாரிய தேடுதல் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதாகவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இராணுவத்தின் எட்டாவது அதிரடிப்படையினர் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் நடத்திய தேடுதலின்போது,  ரி56 ரக துப்பாக்கி ரவைகள் 5000, 60மி.மீற்றர் மோட்டார் குண்டு 40,  80மி.மீற்றர் ரக மோட்டார் குண்டுகள் மற்றும் கைக்குண்டுக்களையும் மீட்டெடுத்துள்ளனர்.  புதுக்குடியிருப்பு மேற்கு பகுதியில் இராணுவத்தின் இரண்டாவது அதிரடிப்படையினர் நடத்திய தேடுதலில் 81மி.மீற்றர் ரக மோட்டார் குண்டுகள் 550,  60மி.மீற்றர் மோட்டார் குண்டுகள் 468,  120மி.மீற்றர் மோட்டார் குண்டுகள் 330,  12.7மி.மீற்றர் ரவைகள் 470,  வெடிமருந்து 400கிறாம் மற்றும் ஆயுதங்களை படையினர் மீட்டுள்ளனர் என்று பிரிகேடியர் மேலும் தெரிவித்துள்ளார்

சபையில் 5 தடவை நேற்று மின் தடை

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை 5 தடவைகள் மின் விநியோக தடை ஏற்பட்டதினால் சபையில் அடிக்கடி இருள் சூழ்ந்து மறைந்தது.
உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டம் மற்றும் மதுவரி கட்டளைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் விசேட வர்த்தகமானி அறிவித்தல்களின் மூலம் வெளியிடப்பட்ட கட்டளைகளை அங்கீகரிப்பதற்கான பிரேரணைகள் மீதான விவாதத்தில் ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி.யான ரவிகருணாநாயக்க பேசிக் கொண்டிருக்கும் போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றது. முதல் 3 சந்தர்ப்பங்களில் மின்விநியோகம் அடிக்கடி தடைப்பட்டு மீண்டும் வழமைக்கு வந்தது.

இதன்போது சபையில் இருள் சூழவே அரசாங்கத்தின் நிலைமையும் இதுவே என்று ரவி கருணாநாயக்க தெரிவித்தார். இதையடுத்து மீண்டும் 2 தடவைகள் மின் விநியோக தடை ஏற்படவே நாட்டின் நாளைய தலைவர்கள் பாராளுமன்றத்தின் நிலைமையை நேரடியாக பார்த்துக் கொண்டிருக்கின்றனர். என்று கலரியில் அமர்ந்திருந்த பாடசாலை மாணவர்களை சுட்டிக் காட்டி ரவி கருணாநாயக்க கூறினார்.

இதன்போது சபையில் இருந்த அமைச்சர் ஹேமகுமார நாணயக்கார ஏதோ கூறிவிட்டு தனது ஆசனத்திலிருந்து எழுந்து சபையை விட்டு வெளியில் செல்ல முற்பட்டபோது அமைச்சரின் பச்சை நிற சால்வை பொன் நிறமாக மாறிவிட்டதாக ரவி கருணாநாயக்க தெரிவித்தார். அதேநேரம், அது பச்சோந்தியின் நிறமென ஜே.வி.பி. எம்.பி.யான திலகரட்ன விதானாச்சி கூறினார்.

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய குடும்பத்தை அப்புறப்படுத்துமாறு கோரி ஆர்ப்பாட்டம்

maussakele-maskeleya.jpgகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய குடும்பத்தினை தோட்டத்திலிருந்து அப்புறப்படுத்தக் கோரி தலவாக்கலை ஹொலிரூட் ஈஸ்ட் தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் சுமார் 400 பேர் கடந்த மாதம் 25 ஆம் திகதி முதல் பணி நிறுத்தப் போராட்டமொன்றில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தத் தோட்டத்தைச் சேர்ந்த ஒருவரை அதே தோட்டத்தைச் சேர்ந்த ஒருவர் வெட்டிக் கொலை செய்ததைத் தொடர்ந்து தலவாக்கலைப் பொலிஸார் 4 சந்தேக நபர்களைக் கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்தனர்.

இந்த நிலையில், கொலைச்சம்பவத்துடன் தொடர்புடைய குடும்பத்தினை குறிப்பிட்ட தோட்டத்திலிருந்து உடனடியாக அப்புறப்படுத்தி வேறொரு தோட்டத்தில் குடியமர்த்தக் கோரிய ஹொலிரூட் ஈஸ்ட் தோட்டத் தொழிலாளர்கள் பணி நிறுத்தப் போராட்டம் மேற்கொள்கின்றனர். இப்போராட்டம் இதுவரை முடிவுக்கு வரவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

986 கோடி 64 இலட்ச ரூபா குறைநிரப்பு பிரேரணைக்கு சபை அங்கீகாரம்

வரவு செலவுத் திட்ட செலவின ஒதுக்கீட்டுக்கு மேலதிகமாக இரு அமைச்சுகளுக்கென 986 கோடியே 64 இலட்சம் ரூபாவை குறைநிரப்பு தொகையாக வழங்குவதற்கு சபை நேற்று புதன்கிழமை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நிதி, திட்டமிடல் அமைச்சு ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அலுவல்கள் அமைச்சு ஆகிய இரண்டினதும் கீழான செலவினங்களுக்காகவே இந்த குறைநிரப்புத் தொகை வழங்கப்படுகிறது.

பிரதி நிதியமைச்சர் ரஞ்சித் சியம் பலாப்பிட்டிய நேற்று இதற்கான பிரேரணைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இதன் பிரகாரம் ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அலுவல்கள் அமைச்சுக்கான குறைநிரப்புத் தொகையாக 801 கோடியே 64 இலட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நிதி, திட்டமிடல் அமைச்சுக்கான குறைநிரப்புத் தொகையானது 35 கோடி ரூபா மற்றும் 150 கோடி ரூபா என இரண்டு கட்டங்களின் கீழ் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதேநேரம், உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டம் மற்றும் மதுவரி கட்டளைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் விசேட வர்த்தமானி அறிவித்தல்களின் மூலம் வெளியிடப்பட்ட கட்டளை அங்கீகரிப்பதற்கான பிரேரணைகளையும் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இவற்றுடன் சமர்ப்பித்தார்.

அத்துடன், ஏற்கனவே அமுலில் இருக்கும் விடயங்களுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் பெறவே இந்த பிரேரணைகள் சமர்ப்பிக்கப்பட்டதாகவும், இதனால் எந்தப் பொருட்களினதும் விலையும் அதிகரிக்காதென்றும் அவர் சுட்டிக்காட்டினார். இவை மீதான விவாதத்தின் இறுதியில் குறைநிரப்புப் பிரேரணைகள் உள்ளிட்ட அனைத்து விடயங்களும் வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

கழிவகற்றும் 10 பவுஸர்கள் யூனிசெப் நிறுவனத்தால் அன்பளிப்பு

00001111.jpgவவுனியா நலன்புரிக் கிராமங்களில் உள்ள மக்களின் அடிப்படை சுகாதார நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில்; தற்காலிக மலசல கூடங்களிலிருந்து கழிவுகளை அகற்றும் 10 பவுஸர்களை யுனிசெப் நிறுவனம் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாட் பதியுதீனிடம் இந்த பவுஸர்களை யுனிசெப் நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி பிலிப் டுவமெல்லே இன்று காலை  கையளித்தார். இதற்கான வைபவம் யுனிசெப் நிறுவனத்தின் கொழும்பு பணியகத்தில் நடைபெற்றது. ஒவ்வொன்றும் ஐயாயிரம் லீட்டர் கொள்ளளவு கொண்ட இந்த பவுஸர்களின் பெறுமதி 50 மில்லியன் ரூபாவாகும்.

நலன்புரிக் கிராமங்களில் உள்ள மக்களின் நன்மை கருதி மேலும் பல உதவிகளை யுனிசெப் நிறுவனம் எதிர்காலத்தில் வழங்கவுள்ளதாக வைபவத்தில் உரையாற்றிய யுனிசெப் நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி பிலிப் டுவமெல்லே தெரிவித்தார்.

சந்திரகாந்தன் எம்.பி.க்கு 3 மாதகாலம் விடுமுறை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் சந்திரநேருவுக்கு மூன்று மாத காலத்துக்கு விடுமுறை வழங்க சபை அனுமதி வழங்கியுள்ளது. சந்திரகாந்தன் சந்திரநேருவுக்கான 3 மாத கால விடுமுறைப் பிரேரணையை நேற்று புதன்கிழமை சபையில் சமர்ப்பித்த துரைரட்ணசிங்கம் எம்.பி. சந்திரகாந்தனுக்கு இன்றிலிருந்து (நேற்று) 3 மாத விடுமுறை வழங்குமாறு முன்மொழிந்தார். பத்மினி சிதம்பரநாதன் எம்.பி. வழிமொழிந்தார்.

இதையடுத்து அவருக்கு விடுமுறை வழங்க சபை இணக்கம் தெரிவித்தது. கடந்த சில வாரங்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு விடுமுறை வழங்க கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்த அரச தரப்பினர் நேற்று எதுவித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை.

வெளிநாட்டு ஒதுக்கம் இரு மாதங்களில் 27 சதவீதம் வளர்ச்சி – பாராளுமன்றத்தில் அமைச்சர் சியம்பலாபிட்டிய

26parliament.jpgஇலங் கையின் வெளிநாட்டு ஒதுக்கம் கடந்த இரண்டு மாதங்களுக்குள் 27 சத வீதத்தால் வளர்ச்சியடைந்துள்ளதாக நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நேற்று  பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

உற்பத்தித் தீர்வை சட்டம் மற்றும் நிதிச் சட்டம் ஆகியவை சார்ந்த 7 கட்டளைகளும் 3 குறைநிரப்புப் பிரேரணைகளும் நேற்று  பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்தப் பிரேரணைகளைச் சமர்ப்பித்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், கடந்த மே மாதம் காணப்பட்ட வெளிநாட்டு ஒதுக்கத்தின் பெறுமதி 1.2 பில்லியன் அமெரிக்க டொலராகும். இது ஜுன் மாதமாகும்போது 1.7 பில்லியன் அமெரிக்க டொலர் வரை அதிகரித்தது.

நாட்டின் வெளிநாட்டு ஒதுக்கம் இத்தகைய குறுகிய காலப் பகுதியில் இந்தளவு வளர்ச்சியடைந்தமை இதுவே முதற்தடவையாகும்.தீர்வை அதிகரிக்கப்பட்டதால் சிகரட் பாவனை குறைவடைந்துள்ளது. வரியை உயர்த்துவதன் மூலம் வருமானத்தை அதிகரிப்பது மாத்திரமன்றி சிகரட் பாவனையைக் குறைப்பதும் அரசாங்கத்தின் நோக்கமாகும். பொருளாதார வளர்ச்சிப் பதிவின் மூலம் ஆடை உற்பத்தித்துறைக்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தத்துறையில் சிறப்பாக செயற்பட்ட 125 நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நாட்டின் சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்காகவும் அரசாங்கம் பல சலுகைகளை வழங்கியுள்ளது என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

இரண்டரை வயதுக் குழந்தைக்கு நஞ்சூட்டிய தந்தை நேற்று கைது கந்தளாய் பேராறு பகுதியில் சம்பவம்

இரண்டரை வயது பெண் குழந்தையை நஞ்சூட்டி கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் குழந்தையின் தந்தையை கைது செய்துள்ள சம்பவமொன்று கந்தளாயில் இடம் பெற்றுள்ளது. கந்தளாய் பேராறு பகுதி யுனிப் ஒன்றைச் சேர்ந்த நெளபிதா என்ற 2 1/2 வயது சிறுமியே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

குழந்தைக்கு நஞ்சூட்டியதாக சந்தேகிக்கப்படும் குழந்தையின் தந்தையான நவாஸ் என்பர் கந்தளாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்படி குழந்தையின் தாயார் மத்திய கிழக்கு நாடொன்றில் தொழில் புரிவதற்காக சென்றுள்ளார். தாயாரின் சகோதரியின் பாதுகாப்பிலேயே குழந்தை வளர்ந்து வந்துள்ளது. குழந்தையின் தந்தை வேறு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார் என்றும் தெரி விக்கப்படுகிறது.

சம்பவதினத்தன்று குழந்தையின் தந்தை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை காலை 8 மணி யளவில் அழைத்துக் சென்றுள்ளார். 8.30 மணியளவில் மீண்டும் குழந்தையை கொண்டு வந்து வீட்டு வாசலில் விட்டு விட்டுச் சென்றுள்ளார்.
வீட்டிற்குள் வந்த குழந்தை சில மணி நேரத்தில் வாந்தியெடுத்ததுடன் மயக்க மடைந்துள்ளது. உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற போது குழந்தை இறந்துவிட்டதாகவும் குழந்தைக்கு நஞ்சூட்டப்பட்டுள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இதனையடுத்து கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. தந்தையான நவாஸ் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.கந்தளாய் ஆஸ்பத்திரியிலிருந்து அநுராதபுரம் ஆஸ்பத்திரிக்கு இறந்த குழந்தையின் சடலம் நேற்று அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.குழந்தை நஞ்சூட்டப்பட்டு கொல்லப்பட்டதா என்பது பற்றி பிரேத பரிசோதனையின் போதே தெரிய வரும் என கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.

‘வணங்கா மண்’ நிவாரண பொருட்கள் இன்று நள்ளிரவில் கொழும்பு வந்தடையும்

_vanankaman-captionali.jpgஐரோப் பாவில் வாழும் இலங்கைத் தமிழர்களால் இலங்கையின் வடபகுதியில் உள்ள மக்களுக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் நிவாரணப் பொருட்களை ஏற்றி வந்த ‘கெப்டன் அலி’ என்ற கப்பலில் இருந்த பொருட்கள் ‘கேப் கொலராடோ’ கப்பல் மூலம் இலங்கைக்குக் கொண்டு வரப்படுகின்றன.

திங்கட்கிழமை நள்ளிரவு ‘கொலராடோ’ கப்பலில் ஏற்றப்பட்ட பொருட்கள் செவ்வாய்கிழமையன்று சென்னை துறைமுகத்திலிருந்து இலங்கை நோக்கிப் பயணமானது. பெரும்பாலும் இந்நிவாரணப் பொருட்கள் இன்று நள்ளிரவு கொழும்பு துறைமுகத்தை வந்தடையுமென எதிர்பார்க்கப்படுகிறது. 884 தொன் நிவாரணப் பொருட்களுடன் ‘கொலராடோ’ கப்பல் சென்னை துறைமுகத்திலிருந்து இலங்கை நோக்கி புறப்பட்டு வருகிறது.

நிவாரண பொருட்கள் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்ததும் செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஏ9 வீதியூடாக இன்னும் சில தினங்களில் பேரூந்து சேவை – அமைச்சர் டக்ளஸ்

21deva.jpgயாழ் குடாநாட்டுக்கு ஏ9 வீதியூடான பேரூந்து சேவைகள் இன்னும் சில தினங்களில் ஆரம்பமாகும் என்றும், இதற்கான நடவடிக்கைகளை சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டுள்ளார் என்றும் அந்த அமைச்சின் ஊடகத்துறை விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ் குடாநாட்டு மக்கள் தரைவழிப் போக்குவரத்தின்றி எதிர்நோக்கியுள்ள பிரயாண கஸ்டங்களைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளதாகவும் அந்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் முதற்கட்டமாக ஒன்றுவிட்ட ஒரு தினம் ஐந்து சொகுசு பஸ் வண்டிகள் கொழும்பிலிருந்தும், வவுனியாவில் இருந்தும் ஒரே நேரத்தில் சேவையில் ஈடுபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது யாழ் குடாநாட்டுக்கும் கொழும்புக்கும் இடையிலான போக்குவரத்து விமானம் மூலமாகவும் கப்பல் மூலமாகவுமே நடைபெறுகின்றன என்பதும், இதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்களையும் பெருந்தொகைப் பணச் செலவினையும் மக்கள் எதிர்நோக்கி வருகின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது