செய்திகள்

செய்திகள்

செய்திகள்

இலங்கை அணி 36 ஓட்டங்களால் வெற்றி – முரளி ஆட்ட நாயகன்

murali.jpgபாகிஸ் தானுடனான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இலங்கை அணி 36 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

தம்புள்ளையில் நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் தடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 232 ஓட்டங்களை பெற்றது. மத்திய வரிசையில் வந்த அன்ஜலோ மத்தியூஸ் 50 பந்துகளுக்கு 3 பௌண்டரிகளுடன் 43 ஓட்டங்களை பெற்றார்.

கடைசி வரிசையில் முரளி 15 பந்துகளுக்குள் 4 பௌண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கலாக 32 ஓட்டங்களை பெற்றதன் மூலம் இலங்கை வலுவான நிலையை அடைந்தமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் சவாலான இலக்கை நோக்கி பதிலெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 44.4 ஓவர்களில் 196 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக உமர் குல் 21 பந்துகளுக்கு 6 பௌண்டரிகளுடன் 33 ஓட்டங்களை பெற்றார்.

சிறப்பாக பந்துவீசிய திலின துஷார 29 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் சகலதுறை ஆட்டத்தை வெளிக்காட்டிய முரளிக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது.

SRI LANKA
U. Tharanga c Akmal b Razzaq 17
S. Jayasuriya c Aamer b Gul 15
K. Sangakkara c Afridi b Ajmal 36
M. Jayawardene run out 33
C. Kapugedera c Akmal b Afridi 8
T. Samaraweera c Younus b Razzaq 10
A. Mathews c and b Aamer 43
N. Kulasekera c Razzaq b Aamer 16
M. Muralitharan b Aamer 32
T. Thushara not out 8
L. Malinga not out 4
EXTRAS: (b1, lb4, w4, nb1) 10
TOTAL (for 9 wkts) 232

FALL OF WICKETS: 1-31 (Jayasuriya), 2-45 (Tharanga), 3-93 (Sangakkara), 4-105 (Kapugedera),
5-125 (Samaraweera), 6-131 (Jayawardene), 7-173 (Kulasekera), 8-204 (Mathews), 9-223 (Muralitharan).

BOWLING: Aamer 10-0-45-3 (w1, nb1), Razzaq 10-0-33-2 (w1), Gul 8-0-46-1 (w1),
Ajmal 10-0-40-1, Younus 2-0-13-0 (w1), Afridi 10-1-50-1

PAKISTAN
KAMRAN AKMAL b Thushara 20
Shoaib Malik b Kulasekera 9
Shahid Afridi c Sangakkara b Thushara 27
Mohammad Yousuf c Sangakkara b Kulasekera 4
Younus Khan c Mathews b Thushara 12
Misbah-ul Haq c and b Muralitharan 9
Fawad Alam c Sangakkara b Jayasuriya 31
Abdul Razzaq lbw b Muralitharan 17
Umar Gul b Malinga 33
Mohammad Aamer run out 23
Saeed Ajmal not out 0
EXTRAS: (lb5, w5, nb1) 11
TOTAL (all out, 44.4 overs) 196

FALL OF WICKETS: 1-29 (Malik), 2-41 (Akmal), 3-48 (Yousuf), 4-73 (Afridi),
5-78 (Younus), 6-95 (Misbah), 7-134 (Alam), 8-134 (Razzaq), 9-196 (Aamer), 10-196 (Gul).

BOWLING: Kulasekera 7-1-30-2, Malinga 8.4-0-50-1 (w2, nb1), Thushara 8-0-29-3 (w2),
Muralitharan 10-0-46-2, Mathews 5-0-22-0 (w1), Jayasuriya 6-0-14-1

கொழும்பு-வவுனியா இரவு ரயில் சேவை நேற்று முதல் மீண்டும் ஆரம்பம்

dallus_allahapperuma.jpgகொழும்பு – வவுனியா இரவு தபால் ரயில் சேவையை உடனடியாக அமுலுக்கு வரும் விதத்தில் 30ஆம் திகதி இரவு முதல் (நேற்று முதல்) சேவையிலீடுபடுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும நேற்று வவுனியாவில் தெரிவித்தார்.

1993 பெப்ரவரி மாதம் 03ஆம் திகதிக்கு பின்னர் சரியாக 11 வருடங்களாக இந்த இரவு நேர தபால் ரயில் சேவை இயங்கவில்லை. 2007ல் சில நாட்கள் சேவை நடத்தப்பட்டபோதும், பின்பு அது நிறுத்தப்பட்டது.  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வேண்டுகோளையடுத்து உடனடியாக ரயில் சேவையை ஆரம்பிக்க முடிவு செய்ததாக அமைச்சர் டலஸ் தெரிவித்தார். இரவு நேர தபால் ரயில் சேவை ஆரம்பிக்கும் அதேவேளை, வவுனியா நகரிலும் இரவு 10.00 மணி வரை போக்குவரத்து சேவை பஸ்களும் சேவையிலீடுபடும் என அமைச்சர் தெரிவித்தார்.

தற்போது வவுனியாவில் இரவு 7.00 மணி வரை மட்டுமே பஸ் போக்குவரத்துகள் உள்ளன. வவுனியா மாவட்ட மக்களின் விசேட வேண்டுகோளையடுத்து நகர் மத்தியிலும் சுற்றுப் புறங்களிலும் வீதித் தடைகள், சோதனைச் சாவடிகள் என்பவையும் கட்டம் கட்டமாக அகற்றப்படும் என்றும் அமைச்சர் டலஸ் தெரிவித்தார்.

வவுனியா உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு நேற்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செய்தியாளர் மாநாடொன்றை அமைச்சர் டலஸ் அழகப்பெரும வவுனியாவில் நடத்தினார். இச்செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வவுனியா ரோயல் கார்டன் ஹோட்டலில் நடைபெற்ற இச் செய்தியாளர் மாநாட்டில் மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், மத விவகாரங்களுக்கான அமைச்சர் பண்டு பண்டாரநாயக்க, வவுனியா மாவட்ட ஸ்ரீ ல. சு. க. அமைப்பாளர் பி. சுமதிபால ஆகியோரும் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் மாநாடு முடிவடைந்ததன் பின்னர் வவுனியா ரயில் நிலையத்திற்கு வந்த அமைச்சர், மாத்தறையிலிருந்து நேரடியாக வரும் ரஜரட்ட புகையிரதம் இன்று முதல் மதவாச்சியிலிருந்து வவுனியா ரயில் நிலையத்திற்கு வரும் என்றும் அறிவித்தார்.

வவுனியா மன்னார் மாவட்டங்களிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு நேரடியாக அரிசி

jaffna1.jpgயாழ்ப் பாணத்தில் அரிசி விலையை மேலும் குறைக்கும் நோக்கில் வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் உற்பத்தியாகும் அரிசியைää வவுனியாவிலிருந்து நேரடியாக யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்க வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பீ. எஸ். எம். சார்ள்ஸ் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இந்த இரண்டு மாவட்டங்களிலும் உற்பத்தியாகும் அரிசி கொழும்புக்குக் கொண்டு வரப்பட்ட பின்னரே யாழ்ப்பாணத்திற்கு அனுப்பிவைக்கப் படுகின்றது.

இதனைத் தவிர்த்து வவுனியாவில் ஓர் இடத்திலிருந்து நேரடியாக யாழ்ப்பாணம் அனுப்பிவைத்தால், யாழில் குறைந்த விலையில் அரிசியைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும் என்பதாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இவ்வாறு வவுனியாவிலிருந்து வாரத்திற்கு ஒரு தடவை 10 லொறிகளை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பிவைக்க உத்தேசித்துள்ளதாக அரச அதிபர் திருமதி சார்ள்ஸ் மேலும் தெரிவித்தார். இத்திட்டம் தொடர்பாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறியிடமும் விளக்கிக் கூறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சுவாசச் சிக்கல், தொடர் இருமல்: பொலன்னறுவை முஸ்லிம் ம.வி 12 மாணவர் ஆஸ்பத்திரியில்

சுவாசிப்பதில் சிரமமும், தொடர்ச்சியான இருமல் காரணமாகவும் பொலன் னறுவை திவுலான முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் மாணவர்கள் 12 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வகுப்பறையில் அமர்ந்திருந்த வேளையில் மாணவர்கள் திடீரென சுவாசிப்பதில் சிரமத்தை எதிர்நோக்கியதுடன் நிறுத்த முடியாதபடி தொடர்ச்சியான இருமலும் ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் நடைபெற்ற இச்சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட 11 மாணவர்கள் உடினடியாக பொலன்னறுவை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அத்துடன் நேற்றும் மற்றுமொரு மாணவரும் பொலன்னறுவை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இம்மாணவர்கள் திடீர் சுகவீனமுறுவதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இருப்பினும் நோய்வாய்ப்பட்ட மாணவர்களின் இரத்த மாதிரிகள் உடனடியாக கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

நோய்வாய்ப்பட்ட மாணவர்கள் தொடர்ந்தும் பொலன்னறுவை ஆஸ்பத்திரியிலேயே சிகிச்சை பெற்றுவருகின்றனர். மாணவர்கள் எவரும் ஆபத்தான நிலையில் இல்லை என்றும் பொலன்னறுவை ஆஸ்பத்திரி டொக்டர் எம். ஈ. ஆர். பெல்லன தெரிவித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.

யாழ்.மா.ந தேர்தல்: புத்தளத்தில் வாக்களிக்க 4388 பேர் தகுதி

election_cast_ballots.jpgயாழ்.  மாநகர சபைத் தேர்தலில் வாக்களிக்க அங்கிருந்து இடம்பெயர்ந்து தற்சமயம் புத்தளம் மாவட்டத்தில் வதியும் இடம்பெயர்ந்த மக்களில் 4388 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக புத்தளம் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் ஏ. ஏ. எம். நபீல் தெரிவித்தார். இவர்கள் வாக்களிப்பதற்காக ஆறு வாக்குச் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதில் தில்லையடி முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் ‘ஏ’, ‘பீ’ என்ற இரு வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும். மற்றும் புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி, பாலாவி சிங்கள மஹா வித்தியாலயம், கற்பிட்டி அல்-அக்ஷா தேசிய கல்லூரி, புளிச்சாக்குளம் உமர் பாரூக் முஸ்லிம் வித்தியாலயம் ஆகியவற்றில் தலா ஒரு வாக்குச் சாவடியும் அமைக்கப்படும்.

வாக்குகள் யாவும் புத்தளம் மாவட்ட செயலகத்தில் எண்ணப்பட்டு அதன் பெறுபேறுகள் யாழ். மாவட்ட செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் பிரதி தேர்தல் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

இந்திய சீன பிரதமர்களுக்கிடையில் நேரடித் தொலைபேசி!

சீனா மற்றும் இந்தியப் பிரதமர்களுக்கிடையில் நேரடித் தொலைபேசி இணைப்பு (ஹொட்லைன்) இருக்க வேண்டும் என்று சீனா வேண்டுகோள் விடுத்துள்ளதாக இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா எழுத்து மூலம் பதிலளிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இருநாடுகளின் பிரதமர்களிடையே தொடர்ச்சியான தொடர்பிற்கு நேரடித் தொலைபேசி இணைப்பு ஏற்படுத்தத் தேவையான தொழில்நுட்பம்,  மற்ற வசதிகள் குறித்து இருநாடுகளும் ஆலோசனை செய்து வருவதாக தெரிவித்தார். இந்தியா மற்றும் ரஷியாவுக்கிடையே இதுபோன்ற நேரடித்தொலைபேசி இணைப்பு செயல்பட்டு வருவதாக மேலும் அவர் தெரிவித்தார்.

பரீட்சை அனுமதிப் பத்திரம் – பாடசாலைகளுக்கு அனுப்பி வைப்பு

school-children.jpgஅடுத்த மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான அனுமதிப் பத்தரங்கள் தற்போது பாடசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டு வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அநுர எதிரிசிங்க தெரிவித்தார். அனுமதிப் பத்திரங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமாயின் அது குறித்து ஓகஸ்ட் முதலாம் திகதிக்கு முன்னர் குறிப்பிட்ட பிரதேசத்துக்குப் பொறுப்பான கல்விப் பணிப்பாளருக்குத் தெரிவிக்குமாறு அவர் அதிபர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

இவ்வருடத்துக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை அடுத்த மாதம் 11 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. இதேவேளை அடுத்த மாதம்  23 ஆம் திகதி நடைபெறவுள்ள ஐந்தாம் ஆண்டுக்கான புலமைப் பரிசில் பரிட்;சைக்கான  அனுமதிப் பத்திரங்களையும் விரைவில் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுப்பதாக ஆணையாளர் மேலும் தெரிவித்தார்

பரீட்சை வினாத்தாள் குளறுபடி பொலன்னறுவை கல்வி வலய அதிகாரிகள் மூவர் இடைநிறுத்தம்

வடமத்திய மாகாண கல்வித் திணைக்களம் மூலம் பாடசாலைகளில் நடைபெற்று வரும் இரண்டாம் தவணைப் பரீட்சை வினாத்தாள்களில் இடம்பெற்ற குளறுபடி மற்றும் அச்சு பிழை காரணமாக பொலன்நறுவை கல்வி வலயத்தைச் சேர்ந்த மூவர் வடமத்திய மாகாண முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திஸாநாயக்கவினால் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.

அநுராதபுரம், பொலன்நறுவை ஆகிய மாவட்டங்களில் பாடசாலைகளில் நடைபெற்று வரும் இரண்டாம் தவணை பரீட்சை வினாத்தாள்களில் பல்வேறு குளறுபடிகள் நிலவியுள்ளமையால் பாடசாலை நிர்வாகம் மற்றும் பாடசாலை மாணவ, மாணவிகள் பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொண்டுள்ளனர். குறிப்பாக தமிழ்மொழி, சிங்கள மொழி மூல வினாத்தாள்களில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதுடன் நேர அட்டவணைக்கு அமைய வினாத்தாள்கள் கிடைக்காமையால் மாணவ, மாணவிகள் பரீட்சை எழுதுவதில் சிக்கல்களை எதிர்கொண்டனர்.

இவ்விடயம் தொடர்பாக மாகாண முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திஸாநாயக்கவின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்தே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய பொலன்நறுவை வலயக் கல்விப் பணிப்பாளர் பியஷிலி ஜயசிங்க, பாட பணிப்பாளர் கே. விமலரத்ன, பாட ஆலோசகர் கே. பீ. விக்கிரமசிங்க ஆகிய மூவருமே இடைநிறுத்தப்பட்டுள்ளவர்கள்.

இரண்டாம் தவணைப் பரீட்சை குளறுபடிகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக மாகாண முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கண்டிக்கு அழைத்து வரப்பட்ட நலன்புரி நிலைய சிறுமிகள்

kandy-parahara.jpgவவுனியா அகதிகள் முகாமிலிருந்து ஜனாதிபதியின் பாரியார் சிரந்தி ராஜபக்ஷவினால் பொறுப்பேற்கப்பட்டு வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி சிறுவர் இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வருபவர்களில் 73 சிறுமிகளை நாமல் ராஜபக்ஷ தலைமையிலான “இளைஞர்களின் நாளை’அமைப்பினர் மத்திய மாகாண ஆளுநரின் ஏற்பாட்டில் கண்டிக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

கண்டிக்கு அழைத்துவரப்பட்ட சிறுமிகளை கண்டி மகா மாயா தேசியக் கல்லூரி மாணவிகளும் அதிபர் ஐ.விதானாச்சியும் வரவேற்றதுடன், அங்கு கலை நிகழ்வுகளும் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தன. மாலை தலதாமாளிகைக்கு விஜயம் செய்து தரிசித்ததோடு இரவு பெரஹராவையும் கண்டு கழித்தனர். நாமல் ராஜபக்ஷவும் இவர்களோடு கலந்துகொண்டார்.

நேற்று புதன்கிழமை காலை பேராதனைப் பூங்காவிற்குச் சென்ற இவர்களை கண்டிப் பெண்கள் பாடசாலைகளின் மாணவிகள் வரவேற்றனர். கண்டிப் பெண்கள் சாரணியர் மாணவிகள் கலை நிகழ்வுகளை நடத்தினர்.

கண்டி பெண்கள் உயர்தரப் பாடசாலை, சொர்ணாலி பேராதனை கனிஷ்ட வித்தியாலயம், அந்தெஸ்ஸ மகா வித்தியாலயம், தீரானந்த மகா வித்தியாலயம் ஆகியவற்றிலிருந்து தலா 10 மாணவிகள் கலந்துகொண்டனர். இந்த ஒன்று கூடலின் போது விசேட அதிதியாக மத்திய மாகாண ஆளுநர் கலந்து கொண்டு பராமரிப்பு சிறுமிகளுக்கு புத்தகங்கள், உடைகள், பாதணிகள், உணவுப் பண்டங்கள் வழங்கினார்.

“இளைஞர்களின் நாளை’ அமைப்பினர் மற்றும் இவர்களைப் பராமரிக்கும் சிறுவர் நன்னடத்தை பராமரிப்புத் திணைக்களத்தினைச் சேர்ந்த உத்தியோகஸ்தர்கள் இதில் கலந்து கொண்டனர். தாய், தந்தை, உறவினர்களை இழந்து செஞ்சோலையில் பராமரிக்கப்பட்டவர்களே இவ்வாறு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

நாளை வெளியாகவுள்ள தீர்ப்பு குறித்து ஆங் சான் சூ கி அச்சம்

miyanmar_s.pngமியன்மார் எதிரணித் தலைவி ஆங் சான் சூ கிக்கு எதிரான விசாரணை குறித்த தீர்ப்பு நாளை வெள்ளிக்கிழமை வெளியாகுமென எதிர்பார்க்கப்படும் நிலையில், இத்தீர்ப்பு வலி மிகுந்ததாக இருக்குமென தான் அச்சமடைந்துள்ளதாக ஆங் சான் சூ கி தெரிவித்துள்ளார்.  நாளை வெளியாகவுள்ள நீதிமன்றத் தீர்ப்பில் சூ கிக்கு ஐந்து வருட சிறைத்தண்டனை விதிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுவதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

ரங்கூனின் இன்செய்ன் சிறை வளாகத்திலுள்ள நீதிமன்றத்தில் கடந்த இரண்டரை மாதங்களாக நடைபெற்று வந்த விசாரணையின் இறுதிக்கட்ட வாதத்தை சூ கியின் வழக்கறிஞர்கள் முன்வைத்துள்ளனர். முன் அனுமதி எதுவுமின்றி அமெரிக்கரொருவரைத் தனது வீட்டில் தங்க அனுமதித்ததன் மூலம் வீட்டுக்காவல் விதிகளை மீறியதாக சூ கி மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இறுதிநாள் விசாரணைகளை பார்வையிடுவதற்கு அமெரிக்கா, ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த தூதுவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், மிகவும் கவலையைத் தரும் தீர்ப்பே வழங்கப்படுமெனத் தான் அச்சமடைந்துள்ளதாக சூ கி தூதுவர்களுக்குக் கூறியதாக அங்கு பிரசன்னமாயிருந்த பெயர் குறிப்பிட விரும்பாத தூதுவரொருவர் தெரிவித்துள்ளார். மேலும், துரிதமாகத் தீர்ப்பு வெளிவர முயற்சித்தமைக்காக தூதுவர்களுக்கு சூ கி நன்றியும் தெரிவித்ததாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விவகாரம் சட்டரீதியாகக் கையாளப்பட்டால் தீர்ப்பில் சாதகமான மாற்றம் வருமெனத் தாம் சிறிது நம்பிக்கை கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ள சூ கியின் வழக்கறிஞர்கள், இவ்வழக்கு அரசியலுடன் தொடர்புடையது என்பதால் நீதிமன்றத்தின் தீர்மானத்தை தம்மால் புரிந்துகொள்ள முடியாதெனவும் தெரிவித்துள்ளனர். அத்துடன், அரசியல் வழக்குகளில் எந்தவொரு பிரதிவாதியும் விடுதலை செய்யப்படுவதற்கான சாத்தியங்களைத் தான் ஒருபோதும் பார்த்ததில்லையெனத் தெரிவித்துள்ள வழக்கறிஞரும் சூ கியின் கட்சியான ஜனநாயகத்திற்கான தேசிய லீக்கின் பேச்சாளருமான நியான் வின் எம்மால் முடிந்தளவு நாம் சிறப்பாகப் பணியாற்றியுள்ளோம். மோசமான முடிவுகளைச் சந்திப்பதற்கு அவரும் (சூ கி) தயாராகியுள்ளாரெனத் தெரிவித்துள்ளார்.