வடமத்திய மாகாண கல்வித் திணைக்களம் மூலம் பாடசாலைகளில் நடைபெற்று வரும் இரண்டாம் தவணைப் பரீட்சை வினாத்தாள்களில் இடம்பெற்ற குளறுபடி மற்றும் அச்சு பிழை காரணமாக பொலன்நறுவை கல்வி வலயத்தைச் சேர்ந்த மூவர் வடமத்திய மாகாண முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திஸாநாயக்கவினால் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.
அநுராதபுரம், பொலன்நறுவை ஆகிய மாவட்டங்களில் பாடசாலைகளில் நடைபெற்று வரும் இரண்டாம் தவணை பரீட்சை வினாத்தாள்களில் பல்வேறு குளறுபடிகள் நிலவியுள்ளமையால் பாடசாலை நிர்வாகம் மற்றும் பாடசாலை மாணவ, மாணவிகள் பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொண்டுள்ளனர். குறிப்பாக தமிழ்மொழி, சிங்கள மொழி மூல வினாத்தாள்களில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதுடன் நேர அட்டவணைக்கு அமைய வினாத்தாள்கள் கிடைக்காமையால் மாணவ, மாணவிகள் பரீட்சை எழுதுவதில் சிக்கல்களை எதிர்கொண்டனர்.
இவ்விடயம் தொடர்பாக மாகாண முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திஸாநாயக்கவின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்தே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய பொலன்நறுவை வலயக் கல்விப் பணிப்பாளர் பியஷிலி ஜயசிங்க, பாட பணிப்பாளர் கே. விமலரத்ன, பாட ஆலோசகர் கே. பீ. விக்கிரமசிங்க ஆகிய மூவருமே இடைநிறுத்தப்பட்டுள்ளவர்கள்.
இரண்டாம் தவணைப் பரீட்சை குளறுபடிகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக மாகாண முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.