கொழும்பு – வவுனியா இரவு தபால் ரயில் சேவையை உடனடியாக அமுலுக்கு வரும் விதத்தில் 30ஆம் திகதி இரவு முதல் (நேற்று முதல்) சேவையிலீடுபடுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும நேற்று வவுனியாவில் தெரிவித்தார்.
1993 பெப்ரவரி மாதம் 03ஆம் திகதிக்கு பின்னர் சரியாக 11 வருடங்களாக இந்த இரவு நேர தபால் ரயில் சேவை இயங்கவில்லை. 2007ல் சில நாட்கள் சேவை நடத்தப்பட்டபோதும், பின்பு அது நிறுத்தப்பட்டது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வேண்டுகோளையடுத்து உடனடியாக ரயில் சேவையை ஆரம்பிக்க முடிவு செய்ததாக அமைச்சர் டலஸ் தெரிவித்தார். இரவு நேர தபால் ரயில் சேவை ஆரம்பிக்கும் அதேவேளை, வவுனியா நகரிலும் இரவு 10.00 மணி வரை போக்குவரத்து சேவை பஸ்களும் சேவையிலீடுபடும் என அமைச்சர் தெரிவித்தார்.
தற்போது வவுனியாவில் இரவு 7.00 மணி வரை மட்டுமே பஸ் போக்குவரத்துகள் உள்ளன. வவுனியா மாவட்ட மக்களின் விசேட வேண்டுகோளையடுத்து நகர் மத்தியிலும் சுற்றுப் புறங்களிலும் வீதித் தடைகள், சோதனைச் சாவடிகள் என்பவையும் கட்டம் கட்டமாக அகற்றப்படும் என்றும் அமைச்சர் டலஸ் தெரிவித்தார்.
வவுனியா உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு நேற்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செய்தியாளர் மாநாடொன்றை அமைச்சர் டலஸ் அழகப்பெரும வவுனியாவில் நடத்தினார். இச்செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வவுனியா ரோயல் கார்டன் ஹோட்டலில் நடைபெற்ற இச் செய்தியாளர் மாநாட்டில் மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், மத விவகாரங்களுக்கான அமைச்சர் பண்டு பண்டாரநாயக்க, வவுனியா மாவட்ட ஸ்ரீ ல. சு. க. அமைப்பாளர் பி. சுமதிபால ஆகியோரும் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் மாநாடு முடிவடைந்ததன் பின்னர் வவுனியா ரயில் நிலையத்திற்கு வந்த அமைச்சர், மாத்தறையிலிருந்து நேரடியாக வரும் ரஜரட்ட புகையிரதம் இன்று முதல் மதவாச்சியிலிருந்து வவுனியா ரயில் நிலையத்திற்கு வரும் என்றும் அறிவித்தார்.