சுவாசிப்பதில் சிரமமும், தொடர்ச்சியான இருமல் காரணமாகவும் பொலன் னறுவை திவுலான முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் மாணவர்கள் 12 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வகுப்பறையில் அமர்ந்திருந்த வேளையில் மாணவர்கள் திடீரென சுவாசிப்பதில் சிரமத்தை எதிர்நோக்கியதுடன் நிறுத்த முடியாதபடி தொடர்ச்சியான இருமலும் ஏற்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் நடைபெற்ற இச்சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட 11 மாணவர்கள் உடினடியாக பொலன்னறுவை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அத்துடன் நேற்றும் மற்றுமொரு மாணவரும் பொலன்னறுவை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இம்மாணவர்கள் திடீர் சுகவீனமுறுவதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இருப்பினும் நோய்வாய்ப்பட்ட மாணவர்களின் இரத்த மாதிரிகள் உடனடியாக கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
நோய்வாய்ப்பட்ட மாணவர்கள் தொடர்ந்தும் பொலன்னறுவை ஆஸ்பத்திரியிலேயே சிகிச்சை பெற்றுவருகின்றனர். மாணவர்கள் எவரும் ஆபத்தான நிலையில் இல்லை என்றும் பொலன்னறுவை ஆஸ்பத்திரி டொக்டர் எம். ஈ. ஆர். பெல்லன தெரிவித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.