நடிகர் விஜய் காங்கிரசில் இணையக்கூடாது. அவ்வாறு அவர் காங்கிரசில் சேர முன்வந்தால் அதனைத் தமிழர்கள், குறிப்பாக புலம் பெயர்ந்த தமிழர்கள் வரவேற்க மாட்டார்கள் என்பதோடு அதனை முழுமூச்சாக எதிர்ப்பார்கள் என்பதை முன்கூட்டியே சொல்லி வைக்க விரும்புகிறோம்.” இவ்வாறு கனடா, டொரன்ரோவிலுள்ள தமிழ் படைப்பாளிகள் கழகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கனடா தமிழ் படைப்பாளிகள் கழகம் விடுத்துள்ள அறிக்கையில்,
“தமிழ் நாட்டின் முன்னனி நடிகர் விஜய், விஜய்காந்த், சரத்குமார், கார்த்திக் பாணியில் அரசியல் கட்சி ஒன்றை தொடங்கப் போவதாக முன்னர் செய்திகள் வந்தன. இப்போது அவர் இந்திய காங்கிரஸ் கட்சியில் சேரப்போவதாக செய்திகள் வருகின்றன. காங்கிரஸ் கட்சியில் சேரும் பட்சத்தில் அவருக்கு மேலவை உறுப்பினர் பதவியும் வழங்கப்படும் எனத் தெரிகிறது.
அரசியலில் யாரும் பங்கு கொள்ளலாம். நடிகர்களும் குடிமக்கள் என்பதால் அவர்களுக்கும் அரசியலில் பங்கு கொள்ள முழு உரிமை உண்டு. அது மக்களாட்சி முறைமைக்கு மிகவும் நல்லது. ஆனால் நடிகர் விஜய் காங்கிரசில் சேர முன்வந்தால் – அப்படியொரு முடிவு எடுத்தால் – அதனைத் தமிழர்கள், குறிப்பாக புலம் பெயர் தமிழர்கள் வரவேற்க மாட்டார்கள் என்பதோடு அதனை முழு மூச்சாக எதிர்ப்பார்கள் என்பதை முன்கூட்டியே சொல்லி வைக்க விரும்புகிறோம்.
மத்தியில் பதவியில் இருக்கும் இந்திய காங்கிரஸ் – திமுக கட்சிகளது ஆட்சியின் போதுதான் இலங்கையில் வரலாறு காண முடியாத போர் அரங்கேறியது. இந்தியாதான் போர் ஆயுதங்கள், ராடர்கள், புலனாய்வு, உளவு, நிதி, பயிற்சி என்று எல்லாவற்றையும் இலங்கை அரசுக்கு கொடுத்து உதவியது.
இம்மாதம் 3 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி வான்படைத் தள ஓடுபாதையை விரிவாக்குவதற்கு இந்தியா மேலும் ஒரு கோடி 17 லட்சம் ரூபாவுக்கான காசோலையை இந்தியத் தூதுவர் அலோக் பிரசாத் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிடம் வழங்கியிருக்கிறார்.
இந்தப் பின்னணியில் நடிகர் விஜய் சோனியா காந்தியோடும் ஈழத் தமிழர்களைப் பற்றி அவதூறாகப் பேசி வரும் ராகுல் காந்தியோடும் கைகோர்க்க எத்தனிப்பது அவர்இலங்கைத் தமிழர்களுக்குச் செய்யக் கூடிய அதிக பட்ச துரோகம் என்றே நாம் கருதுகிறோம். எனவே நடிகர் விஜய் நடித்த அல்லது நடித்து வெளிவர இருக்கும் படங்களைப் புறக்கணிக்கும் போராட்டத்தில் உலகளாவிய அளவில் நாம் இறங்குவோம் என்பதை முன் கூட்டியே அவருக்கும் சம்பந்தப்பட்டத் தயாரிப்பாளர்களுக்கும் சொல்லி வைக்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.