செய்திகள்

செய்திகள்

செய்திகள்

மனுஷன் புலத்தில் 256 வீடுகள்; முதல் வீடு நேற்று கையளிப்பு

house.jpgசுவிஸ் நாட்டின் அபிவிருத்திக்கும் ஒத்துழைப்புக்குமான முகவர் அமைப்பின் நிதியுதவியுடன் யாழ். மறவன் புலத்தில் அமைக்கப்பட்டு வரும் வீடமைப்பு திட்டத்தின் முதல் கட்டி முடிக்கப்பட்ட வீட்டை உரிமையாளருக்கு கையளிக்கும் வைபவம் நேற்று இடம்பெற்றது.

அமைப்பின் பிரமுகரான மாட்டின் ஸ்ரீயூடர் புதிய வீட்டின் வாயிலை சம்பிரதாய முறைப்படி நாடாவெட்டி திறந்து வைத்து உரிமையாளரிடம் கையளித்துள்ளார். மேற்படி சுவிஸ் நாட்டின் அபிவிருத்திக்கும் ஒத்துழைப்புக்குமான முகவர் நிலையமானது சாவகச்சேரி பிரிவில் உள்ள மறவன்புல கிராமத்தில் 256 வீடுகளை கட்டிவருகிறது.

பொன்சேகாவின் பாராளுமன்ற பிரவேசத்துக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி தேவையா?

sarath_fonseka.jpgதடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஜெனரல் சரத்பொன்சேகா பாராளுமன்றம் செல்வதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கோரப்படவேண்டுமென இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்திருக்கும் கூற்றை ஜனநாயக தேசியக்கூட்டணி முற்றாக நிராகரித்திருக்கின்றது. மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினர் சிவில் நீதிமன்ற உத்தரவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தாலும் கூட அவரால் பாராளுமன்ற அமர்வுக்குச் செல்ல சட்ட ரீதியான அனுமதியுண்டு. அதற்காக அவர் முன் அனுமதி பெறவேண்டிய தேவை கிடையாது.

ஜெனரல் சரத் பொன்சேகாவை விசாரிக்கும் இராணுவ நீதிமன்றம் கூட சட்டபூர்வமானதா என்ற கேள்விஎழுந்துள்ள நிலையில் அவர் பாதுகாப்பு அமைச்சின் அனுமதிகோரவேண்டுமெனக் கூறுவது கேலிக்கூத்தானதாகும். ஜெனரல் சரத்பொன்சேகா 22 ஆம் திகதி காலை புறப்பட்டுத்தான் பாராளுமன்றம் செல்லவேண்டுமெனக் கேட்டால் பாதுகாப்புத் தரப்பு எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் அவரை பாராளுமன்றத்துக்கு அழைத்துவர வேண்டும்.

சட்டம் இவ்வாறிருக்கின்ற போதிலும் அதற்கும் மேலதிகமாக ஜெனரல் பொன்சேகாவின் சட்டத்தரணி வட்டகமே ஊடாகவும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். புறம்பாக இராணுவத்தளபதிக்கும் பாராளுமன்றச் செயலாளர் நாயகத்துக்கும் கட்சி கடிதங்களை அனுப்பியுள்ளது.

ஜெனரல் சரத் பொன்சேகா பாராளுமன்றம் வருவதைத்தடுக்க பல்வேறுபட்ட திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டங்களை முறியடித்து எதிர்வரும் 22 ஆம் திகதி நாம் அவரைப் பாராளுமன்றத்துக்கு அழைத்து வருவோம் என்று நேற்றைய செய்தியாளர் மாநாட்டில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

‘மாதா’ விவரண திரைப்பட விவகாரம்; குற்றத் தடுப்பு பொலிஸாரிடம் விசாரணைகள் ஒப்படைப்பு

வன்னியில் இடம்பெற்ற மனிதா பிமான நடவடிக்கையைச் சித்தரிக் கும் வகையில் தயாரிக்கப்பட்ட காதல் காவியமான ‘மாதா’ விவரணத் திரைப்படம் கணனியின் ஹார்ட் டிஸ்க் இலிருந்து முழுமையாக களவாடப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் கொழும்பு குற்றத் தடுப்பு பொலிஸாரிடம் ஒப்படைக் கப்பட்டிருப்பதாக பொலிஸ் வட்டாரங்கள் நேற்றுத் தெரிவித்தன.

 கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸார் இதனுடன் சம்பந்தப்பட்ட அனைவரிடமும் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வரும் அதேவேளை, ஏனைய கணனிகளின் உதவியுடன் இழந்த படத்தொகு ப்பை மீளப் பெற்றுக் கொள்வது தொடர்பான முயற்சியிலும் ஈடுபட்டு வருவதாக அதன் தயாரிப்பாளர் விஸ்வநாத் புத்திக்க கீர்த்திசேன தெரிவித்தார்

விசேட ரயில், பஸ் சேவை இன்றும் தொடர்கின்றது

train.jpgபண்டி கையை முன்னிட்டு சொந்த இடங்களுக்குச் சென்ற மக்கள் திரும்பி வருவதற்காக விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நேற்றும் விசேட ரயில், பஸ் சேவைகள் நடத்தப்பட்டதோடு இன்றும் (19) மேலதிக சேவைகள் நடத்தப்படுவதாக போக்கவரத்து அமைச்சு நேற்று கூறியது.

பிரதான நகரங்களில் இருந்து கொழும்பு வரவும் பிரதான நகரங்களுக்கிடையிலும் மேலதிக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, அம்பாறை, கண்டி, நுவரெலியா, பண்டாரவளை, வவுனியா போன்ற இடங்களில் இருந்து விசேட பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்திய விஸா நிலையம் மே 5 முதல் யாழில் இயங்கும்

இந்திய விஸா நிலையமொன்று எதிர்வரும் மே மாதம் முதல் யாழ்ப்பாணத்தில் இயங்கவுள்ளது. இந்த நிலையம் மே மாதம் 5ம் திகதி திறந்து வைக்கப்படும் என்று இலங்கைக்கான இந்தியாவின் தூதுவர் அசோக் கே. காந்த் நேற்று தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம், மத்திய கல்லூரியில் நடைபெறும் யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக கண்காட்சியை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

யாழ். குடா நாட்டு மக்கள் இந்த நிலையத்தில் விஸா விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக் கொள்ளவும், அவற்றைக் கையளிக்கவும் முடியும்.  இதன்படி விஸாவைப் பெற்றுக் கொள்ள மாத்திரமே கொழும்பி லுள்ள இந்திய உயர் ஸ்தானிகரால யத்திற்கு செல்ல வேண்டும் என்று தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

“அமைச்சுப்பதவிகளுக்காக நாம் சோரம் போகவோ எமது சமூகத்தை விலைபேசி துரோகமிழைக்கவோ நாம் ஒருபோதும் முன்வரமாட்டோம் – ரவூப் ஹக்கீம்

rauff.jpgஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் ஒரு தடவை கையைச் சுட்டுக்கொண்டவன் நான். இன்னொரு தடவை அப்படிச் செய்வதற்கு நானொரு முட்டாள் அல்லவெனத் தெரிவித்திருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அமைச்சுப் பதவிகளுக்காக சிறுபான்மைச் சமூகத்தை விலைபேசும் துரோகத்தனத்தை ஒருபோதும் செய்யமாட்டேன் எனவும் உறுதிபடக் கூறியுள்ளார்.

இன்றைய நிலையில் அரசுடன் எந்தவிதமான பேச்சுவார்த்தைக்கும் இடமில்லையெனவும் சுட்டிக்காட்டியிருக்கும் ஹக்கீம் இது நாவலப்பிட்டியில் தனக்கு அளிக்கப்படக்கூடிய வாக்குகளைத் தடுக்கும் ஒரு சதித்திட்டமெனவும் தெரிவித்தார். எமக்கு நாளைய தினம் கண்டி மாவட்டத்தில் பெரு வெற்றி கிட்டும் என்பது உறுதியானது. அரசுமுஸ்லிம் காங்கிரஸ் பேச்சு விரைவில் இடம்பெறுமென அரச ஊடகங்களில் வெளியான செய்தி குறித்து மறுத்துரைக்கையிலேயே ரவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
.
அரசாங்கம் முதலில் வடக்கு,கிழக்கு தமிழ் பேசும் மக்களுக்கான தீர்வை முன்வைக்கட்டும். அதன் பிரதிபலிப்பு சாதகங்களை வைத்தே எமது அடுத்த கட்ட நடவடிக்கைகள் அமையும். அதைவிடுத்து அமைச்சுப்பதவிகளுக்காக நாம் சோரம் போகவோ எமது சமூகத்தை விலைபேசி துரோகமிழைக்கவோ நாம் ஒருபோதும் முன்வரமாட்டோம் எனவும் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

மருத்துவ சிகிச்சைக்காக சென்னை சென்ற பிரபாகரனின் தாயாருக்கு அனுமதி மறுப்பு

parwathy.jpgசிகிச்சை பெறுவதற்காக மலேசியாவிலிருந்து விமானம் மூலம் வெள்ளிக்கிழமை இரவு சென்னை சென்ற விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதனால் அவர் மீண்டும் மலேசியாவுக்கே திருப்பி அனுப்பப்பட்டார்.

சிகிச்சைக்காக பிரபாகரனின் தாயார் வெள்ளிக்கிழமை இரவு 10.45 மணிக்கு மலேசியாவிலிருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் சென்றடைந்தார். அவருடன் உதவிக்கு ஒரு பெண்ணும் சென்றுள்ளார். எனினும் அவர்கள் இருவரையும் தமிழகத்துக்குள் அனுமதிக்க மாநில பொலிஸார் மறுத்துவிட்டனர். அவர்கள் இருவரும் உடனடியாக மீண்டும் மலேசியாவுக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே விமான நிலையத்திலி ருந்து பார்வதி அம்மாளை அழைத்துச் செல்வதற்காக ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப் பாளர் பழ. நெடுமாறன் ஆகியோர் விமான நிலையம் சென்றனர்.

எனினும் விமான நிலைய நுழைவாயிலிலேயே வைகோவும், பழ. நெடுமாறனும் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். பின்னர் கடுமையான வாக்குவாதத்துக்குப் பின் அவர்கள் விமான நிலையத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

கண்டியில் தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெறுவதற்கான இறுதிச் சந்தர்ப்பம் 20 ஆம் திகதி – மனோகணேசன்

mano-ganesan.jpgபாராளு மன்றத்தில் தற்போதைய விகிதாசார தேர்தல் முறைமை மாற்றப்படலாம். கண்டி மாவட்டத்தில் இன்றைய தேர்தல் முறையின் கீழ் தமிழ் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை பெறக்கூடிய இறுதிச் சந்தர்ப்பம் இதுவாகவே இருக்கலாம். எனவே இதை மனதில் கொண்டு நாவலப்பிட்டி தொகுதியில் மறுவாக்களிப்பு நடைபெறும் 34 வாக்களிப்பு நிலையங்களில் வாழும் வாக்காளர்கள் வாக்களிக்கவேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவரும் ஐக்கிய தேசிய முன்னணியின் கண்டி மாவட்ட வேட்பாளருமான மனோ கணேசன் எம்.பி.தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மனோகணேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது;கொழும்பு மாவட்டத்திலே 2000 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின்போது சுமார் 96 வாக்குகள் குறைந்த காரணத்தினால் அன்று போட்டியிட்ட நான் வெற்றி பெறவில்லை. இதற்குக் காரணம் அன்று கொழும்பில் இருந்த சுமார் ஒரு இலட்சம் தமிழ் வாக்காளர்களில் 60 விகிதமானவர்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் அசட்டையாக இருந்ததாகும்.

தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு 96 வாக்குகளால் கொழும்பு மாவட்டத் தமிழ் பிரதிநிதித்துவம் கை நழுவிப் போய்விட்டதே என தமிழ் மக்கள் வருந்தினார்கள். வாக்களிப்பில் கலந்துகொள்ளாத தமிழ் வாக்காளர்கள் குற்ற உணர்வினால் கவலையடைந்தார்கள். எனினும் அச்சமயம் பாராளுமன்றம் கலைக்கப்பட்ட காரணத்தினால் அதிர்ஷ்டவசமாக அடுத்த ஒரு வருடத்திற்குள் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் சுமார் 16,000 அதிகப்படியான வாக்குகளை பெற்று கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக நான் தெரிவு செய்யப்பட்டேன்.

கண்டி மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டவில்லை. 2000 ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற மூன்று பாராளுமன்றத் தேர்தல்களிலும் போட்டியிட்ட தமிழ் வேட்பாளர்கள் தோல்வியடைந்துவிட்டார்கள். இதற்கு இரண்டு பிரதான காரணங்கள் இருக்கின்றன. ஒன்று நாவலப்பிட்டி,கம்பளை தொகுதிகளில் தமிழ் வாக்காளர்களுக்கும் தமிழ் வேட்பாளர்களுக்கும் எதிராக தொடர்ந்து நிகழ்த்தப்பட்டு வந்த வன்முறைகளாகும். அடுத்தது கண்டி மாவட்டத்திலே பதிவு செய்யப்பட்ட தமிழ் வாக்காளர்கள் தேர்தல்களின்போது பெருந்தொகையில் முன்வந்து வாக்களிப்பில் கலந்துகொள்ளாததாகும். இது கண்டி மாவட்டத்தின் வரலாறு. இதை யாரும் மறுக்க முடியாது.

இந்தத் தேர்தலின் போது சுமார் 10 வன்முறைச் சம்பவங்களுக்கு நானும் எனது ஆதரவாளர்களும் முகங்கொடுத்திருக்கின்றோம். எனினும் இவற்றை எம்மால் தேசிய ரீதியாக அம்பலப்படுத்த முடிந்துள்ளது.

நாவலப்பிட்டி வன்முறையாளர்களைப் பற்றி அரசாங்கத்தின் அமைச்சர்கள் உட்பட பலரும் கண்டிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கதாகும். இந்த வன்முறையாளர்களுக்கு ஆதரவளித்துக்கொண்டு தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்திற்கெதிராகவே கோடரிக்காம்புகளாக செயற்படும் தமிழின துரோகிகளும் இருக்கின்றார்கள்.

அதேவேளையில், அரசியல் யதார்த்தம் புரியாமல் வெறும் காழ்ப்புணர்ச்சியுடன் கருத்து தெரிவிக்கும் அரசியல் கோமாளிகளும் இருக்கின்றார்கள். இத்தகைய நபர்கள்தான் கண்டிமாவட்டத் தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை வரவிடக்கூடாதென முனைப்புடன் செயற்படும் பேரினவாதிகளுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் துணைபோகின்றார்கள்.

இந்நிலையில் தமிழ் மக்களின் நியாயமான எதிர்பார்ப்பையும் எனக்கு எதிராக இழைக்கப்படுகின்ற அநீதிகளையும் கண்டு எனக்கு ஆதரவாக செயற்படுவதற்கு முன்வந்துள்ள ஒரு தொகை நாவலப்பிட்டி வாழ் தமிழ் பேசும் இஸ்லாமிய சகோதரர்கள் எனக்கு உற்சாகத்தைத் தந்துள்ளார்கள். எனினும் பாரிய பொறுப்பு தமிழ் மக்களுக்கே இருக்கின்றது.

தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் விதத்தில் வாக்களிப்பதிலிருந்து தவறிவிட்டு பின்னர் வருந்தும் நிலைக்கு தமிழ் மக்கள் தம்மை உள்ளாக்கிக்கொள்ளக்கூடாது.

தோல்வியடைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் இராஜதந்திர கடவுச் சீட்டுக்கள் ரத்து

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியைத் தழுவிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் இராஜதந்திர கடவுச் சீட்டுக்கள் ரத்து செய்யப்படவுள்ளன. தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருந்த ராஜதந்திர கடவுச் சீட்டு ரத்து செய்யப்பட்டு சாதாரண கடவுச் சீட்டுக்கள் வழங்கப்படவுள்ளன.

குறித்த அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் இராஜதந்திர கடவுச் சீட்டுக்களை உடனடியாக அமுலுக்கு வரும வகையில் ரத்து செய்வதாக குடிவரவு குடியகழ்வுத் திணைக்கள கட்டுப்பாட்டாளர் அபேகோன் பண்டா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நாடாளுமன்ற ஆணையாளருக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த 15 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இவ்வாறு ராஜதந்திர கடவுச் சீட்டுக்கள் ரத்து செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஐ.தே.க.வில் மறுசீரமைப்பை வலியுறுத்துகிறார் சஜித் பிரேமதாஸ

unp-logo.jpgபாராளு மன்றத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிடம் மீண்டும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி தோல்வி கண்டிருக்கும் நிலையில் ஐ.தே.க.வை மறுசீரமைக்க வேண்டுமென்ற வலியுறுத்தல் முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாஸாவின் மகனும் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் மீண்டும் வெற்றிபெற்றிருப்பவருமான சஜித் பிரேமதாசாவிடமிருந்து விடுக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்கள்,விவசாயிகள்,மீனவர்கள் உட்பட தாழ்ந்த மட்டத்திலிருந்து பிரதிநிதித்துவத்தை கட்சி கொண்டிருக்கும வகையில் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டிய தேவை இருப்பதாக பி.பி.சி.க்கு சஜித் பிரேமதாஸ கூறியுள்ளார்.

இதுவரை அறிவிக்கப்பட்ட தேர்தல் முடிவுகளின் பிரகாரம் ஐ.தே.க. 46 ஆசனங்களைப் பெற்றுள்ளது. ஆளும்கட்சி 117 ஆசனங்களைப் பெற்றுள்ளது.ஆளும் ஐ.ம.சு.மு.வுக்கு தேசியப்பட்டியல் உள்ளடங்கலாக 143 க்கும் மேற்பட்ட ஆசனங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கட்சியின் மத்தியிலேயே அதிகாரம் குவிந்து கிடப்பதால் மறுசீரமைப்பை மேற்கொள்வதில் தோல்வி ஏற்பட்டிருப்பதாக கருதப்படுகிறது. கட்சியின் தலைவருக்கே அதிகளவு அதிகாரப்பகிர்வு உள்ளது என்று சஜித் பிரேமதாஸ கூறியுள்ளார். எதிர்காலத் தேர்தல்களில் கட்சி மேம்பாடடைய மறுசீரமைப்பு முக்கியமானது என்பதே கட்சியின் தலைமைத்துவம் அடையாளம் கண்டுகொள்ள வேண்டுமென்று சஜித் பிரேமதாஸ கூறியுள்ளார்.