தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஜெனரல் சரத்பொன்சேகா பாராளுமன்றம் செல்வதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கோரப்படவேண்டுமென இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்திருக்கும் கூற்றை ஜனநாயக தேசியக்கூட்டணி முற்றாக நிராகரித்திருக்கின்றது. மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினர் சிவில் நீதிமன்ற உத்தரவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தாலும் கூட அவரால் பாராளுமன்ற அமர்வுக்குச் செல்ல சட்ட ரீதியான அனுமதியுண்டு. அதற்காக அவர் முன் அனுமதி பெறவேண்டிய தேவை கிடையாது.
ஜெனரல் சரத் பொன்சேகாவை விசாரிக்கும் இராணுவ நீதிமன்றம் கூட சட்டபூர்வமானதா என்ற கேள்விஎழுந்துள்ள நிலையில் அவர் பாதுகாப்பு அமைச்சின் அனுமதிகோரவேண்டுமெனக் கூறுவது கேலிக்கூத்தானதாகும். ஜெனரல் சரத்பொன்சேகா 22 ஆம் திகதி காலை புறப்பட்டுத்தான் பாராளுமன்றம் செல்லவேண்டுமெனக் கேட்டால் பாதுகாப்புத் தரப்பு எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் அவரை பாராளுமன்றத்துக்கு அழைத்துவர வேண்டும்.
சட்டம் இவ்வாறிருக்கின்ற போதிலும் அதற்கும் மேலதிகமாக ஜெனரல் பொன்சேகாவின் சட்டத்தரணி வட்டகமே ஊடாகவும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். புறம்பாக இராணுவத்தளபதிக்கும் பாராளுமன்றச் செயலாளர் நாயகத்துக்கும் கட்சி கடிதங்களை அனுப்பியுள்ளது.
ஜெனரல் சரத் பொன்சேகா பாராளுமன்றம் வருவதைத்தடுக்க பல்வேறுபட்ட திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டங்களை முறியடித்து எதிர்வரும் 22 ஆம் திகதி நாம் அவரைப் பாராளுமன்றத்துக்கு அழைத்து வருவோம் என்று நேற்றைய செய்தியாளர் மாநாட்டில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.