பாராளு மன்றத்தில் தற்போதைய விகிதாசார தேர்தல் முறைமை மாற்றப்படலாம். கண்டி மாவட்டத்தில் இன்றைய தேர்தல் முறையின் கீழ் தமிழ் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை பெறக்கூடிய இறுதிச் சந்தர்ப்பம் இதுவாகவே இருக்கலாம். எனவே இதை மனதில் கொண்டு நாவலப்பிட்டி தொகுதியில் மறுவாக்களிப்பு நடைபெறும் 34 வாக்களிப்பு நிலையங்களில் வாழும் வாக்காளர்கள் வாக்களிக்கவேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவரும் ஐக்கிய தேசிய முன்னணியின் கண்டி மாவட்ட வேட்பாளருமான மனோ கணேசன் எம்.பி.தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மனோகணேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது;கொழும்பு மாவட்டத்திலே 2000 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின்போது சுமார் 96 வாக்குகள் குறைந்த காரணத்தினால் அன்று போட்டியிட்ட நான் வெற்றி பெறவில்லை. இதற்குக் காரணம் அன்று கொழும்பில் இருந்த சுமார் ஒரு இலட்சம் தமிழ் வாக்காளர்களில் 60 விகிதமானவர்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் அசட்டையாக இருந்ததாகும்.
தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு 96 வாக்குகளால் கொழும்பு மாவட்டத் தமிழ் பிரதிநிதித்துவம் கை நழுவிப் போய்விட்டதே என தமிழ் மக்கள் வருந்தினார்கள். வாக்களிப்பில் கலந்துகொள்ளாத தமிழ் வாக்காளர்கள் குற்ற உணர்வினால் கவலையடைந்தார்கள். எனினும் அச்சமயம் பாராளுமன்றம் கலைக்கப்பட்ட காரணத்தினால் அதிர்ஷ்டவசமாக அடுத்த ஒரு வருடத்திற்குள் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் சுமார் 16,000 அதிகப்படியான வாக்குகளை பெற்று கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக நான் தெரிவு செய்யப்பட்டேன்.
கண்டி மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டவில்லை. 2000 ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற மூன்று பாராளுமன்றத் தேர்தல்களிலும் போட்டியிட்ட தமிழ் வேட்பாளர்கள் தோல்வியடைந்துவிட்டார்கள். இதற்கு இரண்டு பிரதான காரணங்கள் இருக்கின்றன. ஒன்று நாவலப்பிட்டி,கம்பளை தொகுதிகளில் தமிழ் வாக்காளர்களுக்கும் தமிழ் வேட்பாளர்களுக்கும் எதிராக தொடர்ந்து நிகழ்த்தப்பட்டு வந்த வன்முறைகளாகும். அடுத்தது கண்டி மாவட்டத்திலே பதிவு செய்யப்பட்ட தமிழ் வாக்காளர்கள் தேர்தல்களின்போது பெருந்தொகையில் முன்வந்து வாக்களிப்பில் கலந்துகொள்ளாததாகும். இது கண்டி மாவட்டத்தின் வரலாறு. இதை யாரும் மறுக்க முடியாது.
இந்தத் தேர்தலின் போது சுமார் 10 வன்முறைச் சம்பவங்களுக்கு நானும் எனது ஆதரவாளர்களும் முகங்கொடுத்திருக்கின்றோம். எனினும் இவற்றை எம்மால் தேசிய ரீதியாக அம்பலப்படுத்த முடிந்துள்ளது.
நாவலப்பிட்டி வன்முறையாளர்களைப் பற்றி அரசாங்கத்தின் அமைச்சர்கள் உட்பட பலரும் கண்டிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கதாகும். இந்த வன்முறையாளர்களுக்கு ஆதரவளித்துக்கொண்டு தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்திற்கெதிராகவே கோடரிக்காம்புகளாக செயற்படும் தமிழின துரோகிகளும் இருக்கின்றார்கள்.
அதேவேளையில், அரசியல் யதார்த்தம் புரியாமல் வெறும் காழ்ப்புணர்ச்சியுடன் கருத்து தெரிவிக்கும் அரசியல் கோமாளிகளும் இருக்கின்றார்கள். இத்தகைய நபர்கள்தான் கண்டிமாவட்டத் தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை வரவிடக்கூடாதென முனைப்புடன் செயற்படும் பேரினவாதிகளுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் துணைபோகின்றார்கள்.
இந்நிலையில் தமிழ் மக்களின் நியாயமான எதிர்பார்ப்பையும் எனக்கு எதிராக இழைக்கப்படுகின்ற அநீதிகளையும் கண்டு எனக்கு ஆதரவாக செயற்படுவதற்கு முன்வந்துள்ள ஒரு தொகை நாவலப்பிட்டி வாழ் தமிழ் பேசும் இஸ்லாமிய சகோதரர்கள் எனக்கு உற்சாகத்தைத் தந்துள்ளார்கள். எனினும் பாரிய பொறுப்பு தமிழ் மக்களுக்கே இருக்கின்றது.
தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் விதத்தில் வாக்களிப்பதிலிருந்து தவறிவிட்டு பின்னர் வருந்தும் நிலைக்கு தமிழ் மக்கள் தம்மை உள்ளாக்கிக்கொள்ளக்கூடாது.