ஐரோப்பிய நாடுகளில் விமான நிலையங்கள் பூட்டு; இலட்சக்கணக்கான பயணிகள் பாதிப்பு

iceland.jpgஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து குமுறி வருவதால் ஐரோப்பிய நாடுகளில் சாம்பல் துகள்களும் புகையும் வளிமண்டலம் முழுவதும் பரவி வருவதால் விமானப் பயணங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், ஐரோப்பிய நாடுகளில் விமானப் போக்குவரத்துகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இலட்சக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐஸ்லாந்தின் பனிமலையிலேயே இந்த எரிமலைக் குமுறல் ஏற்பட்டிருக்கிறது. தரையிலிருந்து சுமார் 8 கி. மீ- 10 கி. மீ. உயரத்திற்கு சாம்பலும் புகையும் பரவியுள்ளதாக ஐரோப்பிய விமானக் கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது.

இவைகள் கிழக்கு மற்றும் தென்கிழக்காக நகர்ந்து வருவதால் மேலும் பல நாடுகளிலும் விமானப் போக்குவரத்துக்கள் பாதிப்பை ஏற்படுத்தலாமெனவும் அந்த நிலையம் மேலும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளில், மிகப்பெரிய விமான நிலையங்களான லண்டன் ஹீத்ரு விமான நிலையம், பாரிஸ் சார்ள்ஸ் டி கெளலே விமான நிலையம், பிராங்பேர்ட் விமான நிலையம் ஆகியன முழுமையாக மூடப்பட்டுள்ளன.

விமானப் பயணிகளால் மேற்படி விமான நிலையங்கள் நிரம்பி வழிகின்றன. ஐரோப்பிய நாடுகளை மையமாக வைத்து சுமார் 28 ஆயிரம் விமானங்கள் சேவையில் ஈடுபட்டு வருகின்றன. இவற்றில் 6 ஆயிரம் விமானங்களின் சேவைகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்தது.

பெல்ஜியம், ஆஸ்திரியா, செக்குடியரசு, டென்மார்க், ஜேர்மனி ஹங்கேரி, லத்துவியா, நெதர்லாந்து, போலந்து, ரோமானியா, ஸ்லோவேக்கியா, ஸ்பெயின், சுவீடன், சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகள் விமான நிலையங்களை மூடியுள்ளன. விமான நிலையங்கள் மூடப்பட்டதனாலும், விமான சேவைகள் ரத்துச் செய்யப்பட்டதனாலும் நாளொன்றுக்கு 200 மில்லியன் டொலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விமான நிறுவனங்களை ஆதாரங்காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து லண்டன் செல்லும் எல்லா விமானங்களும் ரத்துச் செய்யப்பட்டு விட்டன. லண்டன் ஹீத்ரு விமான நிலையத்திலிருந்து புறப்படும் 150 விமானங்கள் ரத்துச் செய்யப்பட்டன. அதுபோல் காட் விக் நகரிலிருந்து புறப்படும் 138 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மான்செஸ்டர், பர்மிங்ஹாம் அதுபோல் வட அயர்லாந்து பகுதியிலிருந்து புறப்படும் விமானங்களும் ரத்துச் செய்யப் பட்டன.

ஐரோப்பிய கண்டத்தின் பெரும்பாலான நாடுகளில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். புகை மண்டலத்துக்குள் விமானத்தைச் செலுத்தினால் பாதை சரியாகத் தெரியாமல் விபத்து நேரிட வாய்ப்புள்ளது.

மேலும் புகை துகல்கள் விமானத்தின் என்ஜின் பகுதிக்குள் புகுந்துவிட்டால் பழுது ஏற் பட வாய்ப்புள்ளது. என்று பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் உள்ள விமான தரைக்கட்டுப் பாட்டு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

1989ம் ஆண்டு இதுபோன்று எரிமலை வெடித்த போது அவ்வழியாகச் சென்ற விமானம் விபத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாக தப்பியது.

சுருள் சுருளாய் திரண்டு வரும் புகை மண்டலம் பகலை இருளாக்குவது போன்று காட்சியளிக்கிறது. பிரிட்டன் மட்டுமின்றி நோர்வே பின்லாந்து ஆகிய நாடுகளின் வான் பகுதிகளிலும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.

வெடித்துச் சிதறும் எரிமலையின் பெயர் இஜப்ஜாலாஜோகுல். இது பனிக்கட்டி மலையில் உள்ளது. எரிமலை வெடித்து நெருப்பை கக்குவதால் ஐஸ்லாந்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  இதனால் மக்கள் அலறி அடித்து ஓடி வருகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் இந்த எரிமலை வெடிப்பது இது இரண்டாவது முறையாகும்.

இந்த எரிமலையை சுற்றி 3 இலட்சத்து 20 பேர் வசித்து வருகின்றனர். எரிமலை வெடித்ததை அடுத்து வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment