செய்திகள்

செய்திகள்

செய்திகள்

ரஷியா எதிர்ப்பு தெரிவித்துள்ளமைக்கு நன்றி தெரிவித்து பேரணி

wwww.jpgஇலங்கைக்கு எதிரான ஐ.நா நிபுணர் குழு நியமனத்துக்கு ரஷியா எதிர்ப்பு தெரிவித்துள்ளமைக்கு நன்றி தெரிவித்து தேசிய சுதந்திர முன்னணியின் ஆதரவாளர்கள் பேரணி ஒன்றை நடத்தினார்கள்.

ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளவர்கள் ரஷியாவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பதாகைகளை தாங்கிக் கொண்டும், ஆதரவுக் கோஷங்களை முழங்கிக் கொண்டும் ஐ.நாவின் கொழும்பு அலுவலகத்தின் ஊடாக சென்றார்கள்.

அவர்கள் ரஷ்ய தூதரகத்துக்கு பேரணியாக சென்று நன்றி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

wwww.jpg

வரவு செலவு திட்டம் 68 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது.

parliament.gifஇன்று பாராளுமன்றத்தில் 2010ம் ஆண்டு வரவு செலவு திட்டம் 68 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது. வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 139 வாக்குகளும் எதிராக 71 வாக்குகளும் அளிக்கப்பட்டது  எதிர்வரும் 6 மாதகாலத்திற்கான வரவு செலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் பிரதி, நிதி அமைச்சர் சரத் அமுனுகமவினால் ஜூன் 29ம் திகதி சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இம்முறை அரசாங்கத்தின் மொத்த செலவினம் 97,474 கோடி 83 இலட்சத்து 85 ஆயிரம் ரூபா என்று கணக்கிடப்பட்டுள்ளது.

விமல் வீரவன்ச அமைச்சுப் பதவியை இராஜினாமா

ww.jpgவீடமைப்பு நிர்மாணத்துறை பொதுவசதிகள் அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதாக அமைச்சர் விமல் வீரவன்ச கடிதம் மூலம் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார். கடந்த சில தினங்களாக அமைச்சர் விமல் வீரவன்ச, ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஆலோசனைக் குழுவை கலைக்குமாறு வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ww-i.jpg

மீண்டும் ஒரு புதிய புரட்டாசி பதினொன்றா? :நோர்வே நக்கீரா

pst1.jpg
அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத்தகர்ப்புப் போன்ற பெரிய ஒரு பயங்கரவாத நடவடிக்கை நோர்வேயால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக 3 முஸ்லீம்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் உஸ்பேக்கர்கள் என்று கருதப்படுகிறது. மற்றவர் சீனாவைச் சேர்ந்த உருகு இனத்தவராக இருக்கலாம்.

இவர்கள் வெடிகுண்டு தயாரிப்பதற்குப் பாவிக்கும் ஷய்ரோயின் பரவொக்சைட் எனும் திராவகத்தை மருந்துக்கடையில் வாங்க முயற்சித்தனர். இவர்களைத் தொடர்ந்து திரிந்த உளவுப்பொலிசார் இந்தத்திராவகத்துக்குப் பதிலாக அதேபோன்ற பாதிப்பற்ற வேறு திராவகத்தை மாறிக் கொடுக்கச் செய்தார்கள். இதன் காரணமாக நடக்கவிருந்த பெரிய பயங்கரப்பேரழிவு கொண்ட நடவடிக்கை தடுக்கப்பட்டுள்ளது. இந்த பயங்கரவாத நடவடிக்கை நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவிலும் யேர்மனியில் உள்ள புயிஸ்பர்க்கிலும் நடக்க இருந்தது.

இது சம்பந்தமாகக் கைதுசெய்யப்பட்டுள்ள மூவரும் ஒஸ்லோ யேர்மனுக்கிடையில் பல தொடர்புளை ஏற்படுத்தியிருந்தனர். சென்ற வின்ரறில் வெடிகுண்டு தயாரிப்பதற்கான சகலபொருட்களும் வாங்கப்பட்டு விட்டன. இதுபற்றிய மேலதிகவிபரங்கள் துப்புத்துலக்கப்படுகிறது. பொலிசின் தியறி என்னவெனில் இந்தக்குண்டுகள் நோர்வேயில் மாத்திரம் வைக்கப்பட்டிருக்கும் என்று சொல்ல முடியாது. அயல்நாடுகள் வேறுநாடுகளிலும் வைப்பதற்குச் சாத்தியம் இருந்திருக்கும்.

ஐ.நா சபையின் கொழும்பு அலுவலகம் மூடப்பட்டது

ya.jpgஐ.நா சபையின் கொழும்பு அலுவலகம் மீதான தேசிய சுதந்திர முன்னணியினரின் நடவடிக்கைகளால் கொழும்பு அலுவலகத்தை மூடிவிட்டு தமது பிரதான அலுவலரை நாடு திரும்புமாறு ஐநா செய்லாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள ஐ.நா ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இந்த அலுவலகத்தை ஐநா செய்லாளர் நாயகம் மூடுமாறு உத்தரவிட்டுள்ளார். அத்துடன் இலங்கைக்கான ஐ.நாவின் வதிவிடப் பிரதிநிதி நெய்ல் புக்னேயை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறி நியூயோர்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்துக்கு வர வேண்டும் என்றும் அவசர அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கை மீது அழுத்தம் பிரயோகிக்க வேண்டுமென அமெரிக்காவிடம் ரணில்‘. பொறுப்பு வாய்ந்தவர் இவ்வாறு நடந்து கொள்வது கேவலம்’ – ஜீ. எல். பீரிஸ்

gl.jpgபயங்கர வாதத்துக்கு எதிரான இறுதி யுத்தத்தின்போது நடைபெற்ற சம்பவங்களின் அறிக்கையை Incidents Report  வெளியிடுமாறும் இது தொடர்பாக இலங்கை அரசுக்கு தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுக்குமாறும் எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அமெரிக்க செனட் சபைக்கு தெரிவித்துள்ளார் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.

அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகார உறவுகள் குறித்த குழு 2009 டிசம்பர், மாதம் 7 ஆம் திகதி வெளியிட்டுள்ள ’Sri Lanka Recharting U.S Strategy after The War” என்ற அறிக்கையை மேற்கோள்காட்டியே அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் இதனைத் தெரிவித்தார். வெளிநாட்டமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பொறுப்பு வாய்ந்த எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு நடந்துகொண்டிருக்கக் கூடாது. நாடு என்றதும் கட்சி, நிறம், பேதம் எதுவும் இன்றி வெளிநாட்டுக் கொள்கையை மதித்து நாம் அனைவரும் இலங்கையர் என்ற ரீதியில் செயற்பட வேண்டும். இதற்கு எமது அண்டைய நாடான இந்தியாவை எடுத்துக்கொள்ளலாம்.

ஜனாதிபதி இந்தியா சென்றிருந்தபோது நெருங்கிய நண்பனாக எம்மை வரவேற்றது மட்டுமல்ல, பயங்கரவாதத்தை முழுமையாக வெற்றிகண்டவர்கள் என பாராட்டியதுடன் இந்த நாட்டை மீண்டும் முழுமையாக கட்டியெழுப்ப பூரண ஒத்துழைப்பையும் உதவிகளையும் வழங்குவதாகவும் தெரிவித்தனர். இதேபோன்று எதிர்க் கட்சி உறுப்பினர் சுஸ்மா சுவராஜையும் சந்தித்தோம். அவர்கள் இந்தியாவுக்காக குரல் கொடுத்தார்கள். தாங்கள் எதிர்க் கட்சி என வேறுபட்டு பேசவில்லை. இந்தியா கொண்டுள்ள வெளிநாட்டுக் கொள்கையை மதிக்கிறோம். அதனடிப்படையிலேயே செயற்படுகிறோம் என்றார்கள். இந்தியாவிலுள்ள எதிர்க்கட்சிக்கும் இலங்கையிலுள்ள எதிர்க் கட்சிக்கும் வேறுபாடு இதுதான். இவ்வாறு செயற்படக் கூடாது. இறுதி யுத்தத்தில் ஈடுபட்டுள்ள படையினர் மீது குற்றம் சுமத்தி அவர்களை வேட்டையாடும் எண்ணத்தில் இவை முன்வைக்கப்பட்டனவா?

யுத்தம் என்ற இருட்டிலிருந்து இலங்கை இப்போது தான் வெளிச்சத்துக்கு வந்துகொண்டிக்கிறது. முதலீடுகள் வந்து குவிய ஆரம்பித்துள்ளன. பொருளாதாரம் வளர்ச்சியடைய ஆரம்பித்துள்ளன.அரசியல் இருக்கலாம். எனினும் எதிர்க் கட்சியினர் அதிலிருந்து விடுபட்டு எமது வெளிநாட்டு கொள்கையின்படி நடந்துகொள்ள வேண்டும். யுத்தம் என்ற சாம்பல் மேட்டிலிருந்து எழுந்து வரும் எங்களுக்கு எமது வெளிநாட்டு கொள்கையின் மீது நம்பிக்கை கொண்ட நாடுகள் உதவுகின்றன. கட்சி, நிறம் பற்றி பாராமல் சிந்தியுங்கள் என எதிர்க்கட்சித் தலைவரிடம் கேட்டுக்கொள்கிறேன்.

“2008 ஆம் ஆண்டுகளில் தான் நான் அமெரிக்கா சென்றேன். 2009ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பவம் பற்றி நான் எப்படி அமெரிக்க செனட் சபைக்கு கூற முடியும் என எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சபையில் கேள்வி எழுப்பினார்.நீங்கள் கூறியதாகத்தான் செனட் சபையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதோ என் கையில் இருக்கிறது என ஜீ. எல். பீரிஸ் கையிலுள்ள ஆவணமொன்றையும் காட்டினார்.

சாத்வீகப் போராட்டத்துக்கு இடையூறு இல்லை; பேராசிரியர் பீரிஸ்

g.jpgகொழும் பிலுள்ள ஐ.நா.அலுவலகத்திற்கு முன்னால் மேற்கொள்ளப்பட்டு வரும் எதிர்ப்புப் போராட்டத்தினால் எழுந்துள்ள நெருக்கடி நிலைமையைத் துரிதமாக முடிவுக்குக் கொண்டு வர அரசாங்கம் முயற்சிப்பதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நேற்று வியாழக்கிழமை தெரிவித்தார்.

 அதேசமயம், அமைதியான முறையில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு எதிர்ப்பு நடவடிக்கைக்கும் அரசு இடையூறு ஏற்படுத்தாதென அவர் மேலும் கூறியுள்ளார்.கொழும்பில் நேற்று பிற்பகல் நிருபர்களிடம் இதனைத் தெரிவித்த பீரிஸ், எந்தவொரு குழுவினரும் அமைதியான முறையில் எதிர்ப்பை வெளிப்படுத்துவது அவர்களின் ஜனநாயக உரிமை என்று கூறினார்.

இதற்கிணங்க ஐ.நா.அலுவலகத்திற்கு முன்னால் அமைச்சர் விமல் வீரவன்ச மேற்கொண்டுள்ள சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்த அரசாங்கம் எந்தவொரு முயற்சியையும் மேற்கொள்ளாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அமெரிக்காவின் சர்வாதிகார யுகம் மலையேறிவிட்டது. நைஜீரியாவில் ஈரான் ஜனாதிபதி அஹ்மெதி நெஜாத்

najad.jpgஅமெரிக்கா ஒரு உலக சர்வாதிகாரி, இஸ்ரேல் அதன் கூட்டாளி என ஈரான் ஜனாதிபதி குறிப்பிட்டார். நைஜீரியாவில் நேற்று வியாழக்கிழமை ஆரம்பமான டி 08 மாநாட்டில் பங்கேற்க வந்த வேளை ஈரான் தூதரகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே இதை அஹ்மெதி நெஜாத் குறிப்பிட்டார். இந்தக் கூட்டத்தில் நூற்றுக்கும் அதிகமான இராஜதந்திரிகள் கலந்து கொண்டனர்.

நைஜீரியா வந்த ஈரான் ஜனாதிபதிக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. அபுஜாவிலுள்ள ஈரான் தூதரகத்தில் உரையாற்றிய ஈரான் ஜனாதிபதி அமெரிக்காவின் பிசாசுப் படைகளை பூமியிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும். அமெரிக்காவின் சர்வாதிகார யுகம் மலையேறிவிட்டது.

பலஸ்தீன மக்களின் துன்பங்களுக்கு விரைவில் முடிவுகட்டப் போகின்றோம். விரைவில் எமது வெற்றி விழாவைக் கொண்டாடவுள்ளோம் என்றும் ஈரான் ஜனாதிபதி உரையாற்றினார். சுமார் 150 மில்லியன் முஸ்லிம்கள் நைஜீரியாவில் உள்ளனர். இம்மக்கள் ஈரான் நிலைப்பாட்டையும் ஈரான் ஜனாதிபதியையும் பெரிதும் பாராட்டினர்.

ஐ. நா வின் தலைமைப் பதவியை நைஜீரியா அண்மையில் பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில் இங்கு டி 08 மாநாடு ஆரம்பமானது. எகிப்து, பங்களாதேஷ், இந்தோனேஷியா, ஈரான், மலேசியா, நைஜீரியா, பாகிஸ்தான், துருக்கி ஆகிய நாடுகள் இம்மாநாட்டில் பங்கேற்கின்றன. சுமார் 930 மில்லியன் மக்கள் இந்நாடுகளில் வாழ்கின்றனர். யுரேனியம் செறிவூட்டல் விடயம் தொடர்பாக ஆத்திரமடைந்த ஐ. நா. அண்மையில் நான்காவது பொருளாதாரத் தடையை ஈரான் மீது கொண்டுவந்தது.

இதனால் ஆத்திரமடைந்த ஈரான் எதிரிகளின் விமானத் தாக்குதலுக்குட்படாத இடத்தில் மற்றொரு அணு உலையை அமைக்கப் போவதாகச் சூளுரைத்துள்ளது. தனது நாட்டுக் கப்பல்கள் சர்வதேசக் கடற் பரப்பில் சோதனை செய்யப்பட்டால் ஈரான் தக்க நடவடிக்கை எடுக்கும் எனவும் அறிவித்தது தெரிந்ததே.

விமல் வீரவன்ச சாகும் வரை உண்ணாவிரதம்

uno-vimal.jpgஐ.நா. செயலாளர் நாயகம் பாக் கி மூன் இலங்கை விவகாரம் தொடர்பாக ஆலோசனை வழங்கவென நியமித்திருக்கும் நிபுணத்துவ ஆலோசனைக் குழுவை வாபஸ் வாங்குமாறு கோரி தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்றுக் காலையில் ஆரம்பித்தார். ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு அலுவலகத்திற்கு முன்பாக இவர் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்.

இதேவேளை ஐ.நா. வின் நிபுணத்துவ குழுவை வாபஸ் வாங்கும் படி கோரி கடந்த செவ்வாய்க்கிழமை முதல் கொழும்பு ஐ.நா. அலுவலகத்திற்கு முன்பாக சத்தியாக் கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தேசிய சுதந்திர முன்னணி முக்கியஸ்தர்களான புவாட் முஸ்ஸம்மில், நிமல் பிரேமவன்ச உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் தங்களது சத்தியாக் கிரகப் போராட்டத்தை நேற்றுக் காலையில் கைவிட்டனர். இதேநேரம் ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு அலுவலகம் நேற்றும் இயங்கவில்லை. இப்பிரதேசத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்திற்கு முன்பாக நேற்றுக் காலையில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த தேசிய சுதந்திர முன்னணித் தலைவர் விமல் வீரவன்ச, இலங்கை விவகாரம் தொடர்பாக ஆலோசனை வழங்கவென ஐ.நா. செயலாளர் நாயகம் நியமித்திருக்கும் நிபுணத்துவ குழுவை வாபஸ் வாங்குமாறு கோரி ஊர்வலம் நடாத்தி, சத்தியாக் கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டோம். இருப்பினும் ஐ.நா. செயலாளர் நாயகம் எமது கோரிக்கைக்குத் திருப்திகரமான பதிலை அளிக்கத் தவறியதாலேயே சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் தாமே குதிக்கத் தீர்மானித்து அதில் ஈடுபட்டிருக்கின்றேன்.

எமது நாட்டின் இறைமையையும், சுயாதிபத்தியத்தையும் பேணிப் பாதுகாப்பதற்காக இப்படியான போராட்டங்களைத் தேசப்பற்றுள்ளவர்களும், தாயகத்தின் மீது அன்பு கொண்டவர்களும் நாடு பூராவும் முன்னெடுக்க வேண்டும். அதேநேரம் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர் அந்தந்த நாடுகளிலுள்ள ஐ.நா. அலுவலகங்களுக்கு முன்பாக உண்ணாவிரதப் போராட்டங்களை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொள்ளுகின்றேன்.

அதேநேரம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்ஸிலில் அங்கம் வகிக்கும் இந்தியா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் இந்த நிபுணத்துவ குழுவை ஐ.நா. செயலாளர் நாயகம் வாபஸ்பெறச் செய்வதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றேன். நாட்டைப் பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து மீட்டெடுத்த தலைவரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலாளர் மற்றும் முப்படையினருக்குமாகவே இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கின்றேன் என்றார்.

uno-vimal.jpg

துட்டகைமுனு மன்னன் எல்லாளனுக்கு சிலை வைத்தான் – எஸ். ஸ்ரீதரன்

parliament.gifஎல்லாள மன்னனை தோற்கடித்த துட்டகைமுனு  மன்னன் எல்லாளனுக்கு சிலை வைத்து வணங்கினான். ஆனால் அரசாங்கம் இந்து மற்றும் தமிழ் கலாசாரங்கள், மாவீரர் துயிலும் இல்லங்கள் ஆகியவற்றை அழித்தொழிக்கின்றது. உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்த திலீபனின் நினைவுத் தூபியைக் கூட தகர்த்தெறிந்துள்ளீர்கள். இவ்வாறான தமிழர் விரோத நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். ஆக்கிரமிப்புக்குள்ளாக்கப்பட்டுள்ள காணிகள் உரியவர்களிடத்தில் வழங்கப்பட வேண்டும். தமிழ் மக்களின் மனங்களை வென்றெடுப்பதை விடுத்து மேலும் மேலும் காயப்படுத்தும் நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபடக்கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் நேற்று சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெவித்தார்.