செய்திகள்
செய்திகள்
செய்திகள்
பிறந்த அடுத்த சில நிமிடங்களிலேயே இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட குழந்தை, தாயின் கத, கதப்பான அரவணைப்பாலும், மெல்லிய விசும்பலாலும் உயிர் பிழைத்த அதிசயம் அவுஸ்திரேலியாவில் நடந்துள்ளது.அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரைச் சேர்ந்தவர் டேவிட். இவரது மனைவி கேட், ஏழுமாத கர்ப்பமாக இருந்தார். தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தால், அந்த குழந்தைக்கு ஜேமி என, பெயர் சூட்டவும் முடிவு செய்தனர். கேட்டுக்கு சமீபத்தில் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆழகான ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், அந்த குழந்தையிடம் இருந்து எந்த அசைவும் இல்லை. டாக்டர்கள் சில சிகிச்சைகளை அளித்தனர். குழந்தையின் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. குழந்தை இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். இதைக் கேட்ட டேவிட்டும், கேட்டும் அழுது புலம்பினர். தன் பச்சிளம் குழந்தை இறந்துவிட்டதை நம்ப முடியாத கேட், குழந்தையை மார்போடு கட்டி அணைத்துக் கொண்டு, முகத்தோடு முகம் வைத்து கொஞ்சியபடி கண்ணீர் வடித்தார். டேவிட்டும் அழுது கொண்டே, குழந்தையின் தலையை மென்மையாக தடவிக் கொடுத்தார். இரண்டு மணி நேரமாக இந்த பாசப் போராட்டம் நீடித்தது.
குழந்தையை இரண்டு மணி நேரமாக மார்போடு அணைத்தபடி, அழுதுகொண்டிருந்த கேட், குழந்தையின் காதுக்கருகே சென்று மெல்லிய குரலில் விசும்பலுடன் பேசினார். அப்போது தான், யாரும் எதிர்பாராத அந்த அதிசயம் நடந்தது. இறந்து விட்டதாக கூறப்பட்ட அந்த குழந்தையின் உடலில் சிறிய அசைவு காணப்பட்டது. அந்த பச்சிளம் குழந்தையின் கைகள் மெதுவாக நீண்டு, தன் தாயின் கரங்களை இறுக பற்றியது. இந்த ஆச்சரிய நிகழ்வை நம்ப முடியாமல் கேட், சில நிமிடங்கள் திகைத்துப் போனார். அவரது கணவர் டேவிட், உடனடியாக ஓடிச் சென்று டாக்டரை அழைத்து வந்தார். குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், “இது வழக்கமாக நடப்பது தான். இறந்து விட்ட குழந்தை, மீண்டும் பிழைப்பதற்கு வாய்ப்பே இல்லை’ என, உறுதியாக தெரிவித்து விட்டனர்.
தன் குழந்தையை விட்டுக் கொடுக்க விரும்பாத கேட், மார்போடு அணைத்துக் கொண்டு, அந்த குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டினார். அதை குழந்தை, ஆர்வத்துடன் குடித்தது. அங்கு நின்றிருந்த டாக்டர், இதை நம்ப முடியாமல் மீண்டும் குழந்தையை பரிசோதித்தார். அப்போது அவர், குழந்தையின் இருதயத் துடிப்பு சீராக இருப்பதையும், குழந்தை சரியாக மூச்சு விடுவதையும் உறுதி செய்தார். பின்னர் அவர்,”என்னால் நம்பவே முடியவில்லை. ஆச்சரியத்தில் என்ன பேசுவதென்றே தெரியவில்லை.குழந்தை பிழைத்து விட்டது என்பது உண்மை’ என்றார்.
ஆச்சரியத்திலும், மகிழ்ச்சியிலும் திக்கு முக்காடிப் போன கேட், இதுகுறித்து பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: குழந்தை இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறியதை அடுத்து, அதை மார்போடு அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டேன். என் வாயில் என்ன தோன்றியதோ அதை குழந்தையின் காதருகே, அழுகையுடன் கிசு, கிசுத்தேன். “உனக்கு ஜேமி என பெயர் வைத்திருக்கிறோம்; உனக்கு ஒரு சகோதரி இருக்கிறாள் தெரியுமா? நீ எங்களுக்கு வேண்டும்; உன்னை விட்டு எங்களால் பிரிந்து இருக்க முடியாது’ என, கூறினேன். இரண்டு மணி நேரமாக, குழந்தையை மார்பில் வைத்துக் கொண்டு, அழுதபடி இருந்தேன். அப்போது திடீரென குழந்தையிடம் அசைவு தெரிந்தது. மெல்ல கண் திறந்து பார்த்தது. அதன் பிஞ்சுக் கரங்கள், என் கை விரல்களை மென்மையாக பற்றியபோது, எனக்கு ஏற்பட்ட உணர்வுகளை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. இந்த நேரத்தில் இந்த உலகத்திலேயே மிக மகிழ்ச்சியான தாய், தந்தையர்கள் நானும், என் கணவரும் தான். இவ்வாறு கேட் உணர்ச்சிப் பெருக்குடன் கூறினார்.
டுபாயிலிருந்து இலங்கை வந்த பெண்ணொருவரிடம் சர்வதேச பொலிஸார் எனக் கூறி, 5 இலட்சம் ரூபா பணத்தையும் நகைகளையும் கொள்ளையிட்ட ஆறு பேரை சிலாபம் பொலிஸார் கைது செய்துள்ளனர். நீண்டகாலமாக டுபாயில் தொழில் புரிந்த பின் நாடு திரும்பிய சிலாபம் கொஸ்வத்த பொத்துவடவன பகுதியிலுள்ள மேற்படி பெண் வீட்டிலிருந்த சமயம் அரச இலச்சினை பொறிக்கப்பட்ட வெள்ளை நிற டிபெண்டர் வாகனமொன்றில் வந்த சந்தேக நபர்கள் வீட்டை முற்றுகை யிட்டதுடன் வெளிநாட்டில் தங்க நகை மோசடி செய்யப்பட்டுள்ளதாக கூறி மேற்படி பெண்ணை தீவிரமாக விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்.
வீட்டை சோதனையிடுவதாக கூறி, வீட்டிலிருந்த சுமார் ஒரு இலட்சத்து 2000 ரூபாவையும் தங்க நகைகளையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். மீண்டும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் மறுநாள் கொழும்புக்கு வருமாறும் கூறிச் சென்றுள்ளனர். கொழும்பில் தாம் குறிப்பிட்ட இடத்துக்கு வருமாறு சந்தேக நபர்கள் தெரிவித்தமைக்கு இணங்க மேற்படி பெண் வந்துள்ளார்.
அங்கும் வெளிநாட்டில் தங்க நகை மோசடி தொடர்பாக தீவிரமாக விசாரணைகளை மேற்கொண்டதுடன் பெண்ணின் வைப்புக் கணக்கிலிருந்து 4 இலட்சத்து 75,000 ரூபாவினையும் பெற்றுக்கொண்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக தான் ஏமாற்றப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் அத்தியட்சகரிடம் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து பொலிஸ் தீவிர விசாரணைகளை ஆரம்பித்தனர்.
பெண்ணின் வீட்டுக்கு வந்த டிபெண்டர் ஜீப் வண்டியுடன் நபர் ஒருவர் பொரளையில் கைதாகியுள்ளார். இவரிடம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் கடுவெல, தெமட்டகொட, கொச்சிகடை போன்ற பகுதிகளிலிருந்து ஏனைய சந்தேக நபர்கள் 5 பேரும் கைதாகியுள்ளனர். அவர்களிடமிருந்து 5 லட்சத்து 81,000 ரூபா பணத்தையும் தங்க நகைகளையும் கைப்பற்றினர். சந்தேக நபர்கள் 6 பேர் நேற்று மாரவில மாஜிஸ்திரேட் முன்னி லையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
கற்றறிந்த பாடங்கள், நல்லிணக்கம் பற்றிய ஆணைக் குழுவின் செப்டெம்பர் மாத அமர்வு இன்று (03) வெள்ளிக்கிழமை ஆரம்பமாகிறது. பாரம்பரிய கைத்தொழில், சிறு கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று பிற்பகல் இரண்டு மணிக்கு ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கின்றார்.
ஆணைக் குழுவின் தலைவர் சீ. ஆர். டி. சில்வா தலைமையில் கொழும்பு 7, ஹோட்டன் பிளேசிலுள்ள லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் நடைபெறும் விசாரணையில் இன்று மாலை 4 மணிக்கு எம். ஐ. எம். மொஹிதீன் சாட்சியமளிக்கின்றார். இதேவேளை எதிர்வரும் 17ஆம், 18ஆம் திகதிகளில் ஆணைக்குழுவின் விசாரணை கிளிநொச்சியில் நடைபெற ஏற்பாடாகி உள்ளது. பொதுமக்கள் சாட்சிய மளிப்பதற்கான ஏற்பாடுகளை கிளி நொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் மேற்கொண்டுள்ளார்.
மாவட்டச் செயலகத்திலும் பிரதேச செயலகங் ளிலும் பொதுமக்கள் சாட்சியமளிக்க ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக அரச அதிபர் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 59 வது வருடாந்த தேசிய மாநாட்டில் முன்வைக்கப் பட்ட மூன்று பிரேரணைகளும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.
அரசியல் யாப்பு திருத்தப் பிரேரணை, பொருளாதார சுபீட்சப் பிரேரணை, ஐக்கியத்தின் ஊடாக எதிர்காலத்தை வெற்றி கொள்ளல் பிரேரணை ஆகிய மூன்று யோசனைகளுமே இம்மாநாட்டில் ஏகமனதாக நிறைவேறின.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 59 வது வெற்றிகரமான தேசிய வருடாந்த மாநாடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் நேற்று நடைபெற்றது. இம் மாநாட்டின் போதே இந்த யோசனைகள் நிறைவேறின.
அரசியலமைப்பு திருத்தப் பிரரேரணையை பிரதமர் டி. எம். ஜயரட்னவும், பொருளாதார சுபீட்சம் தொடர்பான பிரேரணையை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவும், ஐக்கியத்தின் ஊடாக எதிர்காலத்தை வெற்றி கொள்ளல் பிரேரணையை அமைச்சர் ரத்னசிறி விக்கிரமநாயக்கவும் இம்மாநாட்டில் சமர்ப்பித்தனர். மாநாட்டில் பங்கு பற்றிய சகல பேராளர்களும் தங்களது கரங்களை உயர்த்தி இந்தப் பிரேரணைகளை ஏகமனதாக நிறைவேற்றினர்.
வன்னியில் தமிழ் மக்களின் காணிகளை இராணுவம் அபகரிப்பதைத் தடுக்க வேண்டும் எனவும், இரணுவம் பொதுமக்களின் காணிகளை சுவீகரிக்கும் முன் மக்களின் மீள்குடியேற்றம் துரிதப்படுத்தப்பட வேண்டும் எனவும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு இந்திய வெளியுறவு அமைச்சர் நிருபமா ராவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இடம்பெயர்ந்து முகாம்களிலிருக்கும் மக்கள் அவர்கள் வசித்த காணிகளில் மீள்குடியமர்த்தப்பட வேண்டும அவர்கள் பாம்பரியமாக வாழ்ந்த காணிகளை இராணுவத்தினர் அபகரித்து வருகின்றனர். இதனைத் தடுக்க இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
நேற்று புதன்கிழமை இரவு 7 மணியளவில் கொழும்பில் இந்தியத்தூதுவர் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பின் போதே தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாமளுமன்ற உறுப்பினர்களின் குழ இவ்விடயங்கள் குறித்து நிரபமா ராவிடம் தெளிவு படுத்தியது.
வன்னியில் பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இன்னமும் மீள்குடியமர்த்தப்படாமல் அகதி முகாம்களிலும், இடைத்தங்கள் முகாம்களிலும் தங்கியுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள சாந்தபுரம், இந்துபுரம், பொன்னகர், திருமுறிகண்டி. விசுவமடு முதலான பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மீள்குடியேற்றத்திற்கென அழைத்து வரப்பட்டு அவர்களின் சொந்தக் காணிகளுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இடைக்கால தங்ககங்களில் தங்கியுள்ளனர். அவர்கள் வாழ்ந்த இடங்கள் இராணுவத் தேவைகளுக்காக அபகரிக்கப்பட்டு வருகின்றன என கூட்டமைப்பினர் விளக்கினர்.
இவ்விடயம் தொடர்பாக இலங்கை அரசுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது எனவும், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் மீள்குடியேற்றத்திற்காக இந்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கும் எனவும் கூட்டமைப்பினரிடம் நிருபமா ராவ் தெரிவித்ததாக கூட்டமைப்பின் நாமாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதே வேளை, மீளக்குடியமர்ந்த மக்களுக்கு இந்தியா அமைத்துக் கொடுக்கப்படவுள்ள 50 ஆயிரம் வீடுகளுக்கான உதவிகள் குறித்த மக்களுக்கு நேரடியாகவே வழங்கப்படவுள்ளதாக தெரிவித்த நிருபமா ராவ் இவ்வீடுகளை அமைப்பதற்காக 20 ஆயிரம் இந்தியப் பணியாளர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக வெளியான தகவல்களை மறுத்துள்ளார் எனவும் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
தனது மூன்று வயது மகனைக் கொலை செய்த வழக்கில் மரணதண்டனை வழங்கப்பட்ட கைதி ஒருவர் நீதிமன்றக் கட்டட மாடியிலிருந்து குதித்ததில் படுகாயமடைந்தார். நேற்று (01-09-2010) யாழ்.மேல் நீதிமன்றத்தில் வைத்து இச்சம்பவம் நடைபெற்றது.
2003ம் அண்டு பருத்தித்துறை வல்லிபுரக் கோவில் பகுதியில் வசித்து வந்த குறிப்பிட்ட நபர் தனது மூன்று வயது மகனை இரு கால்களிலும் பிடித்தத் தூக்கி நிலத்திலடித்து கொலை செய்தமைக்காகவும், அவரது மனைவியின் கையை வெட்டியமைக்காகவும கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது. வழக்கு விசாரணை முடிவில் மகனைக் கொலை செய்த குற்றத்திற்காக மரணதண்டனை விதிக்கப்பட்டதோடு மனையிவின் கையை வெட்டியதற்காக 25ஆயிரம் ரூபா தண்டப்பணமும் அறவிடப்பட்டது. தண்டப்பணம் செலுத்தத் தவறும் பட்சத்தில் இரு வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டம் எனவும் நீதிமன்றம் தீhப்பளித்தது.
இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டதன் பின்பு குறித்த கைதி யாழ். மேல்நீதிமன்றத்தின் இரண்டாம் மாடியிலிருந்து நிலத்தில் குதித்து படுகாயமடைந்தார். வடமராட்சி வல்லிபுரம் கோவிலடியைச் சேர்ந்த இராஜராஜன் இராஜகுமார் (வயது37) என்பவரே இவ்வாறு மரணதண்டனை விதிக்கப்பட்ட நிலையில் மாடியிலிருந்த குதித்தவராவார்.
விடுதலைப் புலிகள் பயன்படுத்திய விமானங்களின் பாகங்கள் முல்லைத்தீவில் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக படையினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விமானப் பாகங்கள் எரியூட்டப்பட்ட நிலையிலேயே கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இறுதிப்போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில் முள்ளிவாய்க்கால். அம்பலவன் பொக்கணைப் பகுதிகளில் கொள்கலன்களில் இவை மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இவ்விமானப் பாகங்கள் இலகுரக விமானங்களுக்குரியவை என இலங்கை விமானப்படையினர் தெரிவிக்கின்றனர். யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகள் இவற்றிற்குத் தீவைத்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
