செய்திகள்

செய்திகள்

செய்திகள்

பொன்சேகா வேண்டுகோள் விடுத்தால் மீள்பரிசீலனை

பொன்சேகா வேண்டுகோள் விடுத்தால் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்டிருக்கும் சிறைத்தண்டனைக் காலம் குறித்து மீள்பரிசீலனை செய்வதற்கு ஜனாதிபதி விரும்புவதாக பத்திரிகையொன்றில் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவை மேற்கோள்காட்டி ஐலன்ட் பத்திரிகை இச்செய்தியை வெளியிட்டிருக்கிறது. பொன்சேகா, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் நேரடியாக வேண்டுகோள் விடுக்க வேண்டுமென கோதாபய ராஜபக்ஷ கூறியதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நேற்று முன்தினம் வியாழக்கிழமை பொன்சேகாவின் 30 மாத சிறைத்தண்டனைக் காலம் ஆரம்பமாகியுள்ளது. இராணுவ நீதிமன்றத்தின் பரிந்துரையை மீள்மதிப்பீடு செய்ய ஜனாதிபதி தயாராகவுள்ளார். பொன்சேகாவின் கோரிக்கையின் அடிப்படையில் அதனை மீள்பரிசீலனை செய்ய அவர் தயாராகவிருந்தார் என்று பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும் இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்புக்கெதிராக சிவில் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்போவதாக பொன்சேகாவின் கட்சியான ஜனநாயகத் தேசியக் கூட்டணி நேற்று முன்தினம் தெரிவித்தது.

வலி. மேற்கில் உயர் பாதுகாப்பு வலயம் எனும் பகுதி இனிமேல் இருக்காது

cc.jpg“வலி. மேற்கில் உயர் பாதுகாப்பு வலயம் என்ற பிரதேசம் இனி இருக்கமாட்டாது. அவ்வாறான பிரதேசம் அகற்றப்பட்டு அபிவிருத்திக்காக மக்களின் கைகளில் வழங்கப்படும்.” வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி இவ்வாறு தெரிவித்தார்.

வலி. மேற்கு பிரதேசத்தின் “தரிசுநிலப் பயன்பாடு அபிவிருத்தி” தொடர்பான கலந்துரையாடல் யாழ். ஆளுநர் அலு வலகத்தில் இடம்பெற்றது. இதில் கல ந்து கொண்ட வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி கருத்துத் தெரிவிக்கையில், வலி. மேற்கு பிரதேசம் 25 கிராம அலுவலர் பிரிவினை கொண்ட பரந்து விரிந்த பிரதேசம். இப்பிரதேசத்தில் உள்ள பயன்படு மற்றும் பயன்படாத நிலங்களின் விபரங்களை திரட்ட வேண்டும்.

பயன்படாத தரிசு நிலங்களில் எவ்வாறான அபிவிருத்திகளையும் உட்கட்டுமான செயற்பாடுகளை யும் மேற்கொள்ளலாம் என பட்டியல்படுத்த வேண்டும். அதற்கான நிதி மூலாதாரங்களைத் தேடும் பணியைப் பொருளாதார அபிவிருத்தி நிபுணர் எந்திரி ஆர். ரி. இராமச்சந்திரன் பொறுப்பில் விடப்படுவதாக தெரிவித்ததுடன், தரிசு நில பயன்பாடு அபிவிருத்தி தொடர்பாக பிரதேச மட்டத்தில் விரைவில் துறைசார்ந்த அமைப்புக்களை திரட்டி கூட்டம் நடத்த வேண் டுமெனக் கேட்டுக் கொண்டார்.

மேற்படி ஆளுநரின் கூட் டத்தில் பொருளாதார அபிவிருத்தி நிபுணர், வலி. மேற்கு பிரதேச தரிசுநில பயன்பாடு தொடர்பான முன்மொழிவுகளைச் சமர்ப்பித்தார். துறைசார்ந்த அபிவிருத்தி உடனடி தேவை குறித்தும் எந்திரி ஆர்.ரி. இராமச்சந்திரன் விளக்கினார்

நாடு முழுவதும் ‘ஒரேநேரம்’ நியம நேரத்தை வர்த்தமானி மூலம் அறிவிக்க தீர்மானம்

clock.jpgநாடு முழுவதும் ஒரே நேரத்தை அமுல்படுத்தும் வகையில் நியம நேரத்தை உத்தியோபூர்வமாக வர்த்தமானி மூலம் அறிவிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி நாடு முழுவதற்குமான பொதுவான நேரம், டிசம்பர் 31ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்கு அறிவிக்கப்பட்டு 2011 முதல் அமுல் படுத்தப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தது.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வேறுபட்ட நேரங்கள் பயன்படுத்தப் படுவதால் அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளது. சில ஊடக நிறுவனங்களும் வேறுபட்ட நேரங்களையே பயன்படுத்துவதாகத் தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக புதிய சரியான நேரத்தை அறிவிக்க அளவீட்டு மற்றும் தரச் சேவைத் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கிரீன்விச் நேரத்திற்கும் இலங்கை நேரத்திற்குமிடையே 5.30 மணி நேர வித் தியாசம் காணப்படுகிறது. இதனடிப் படையில் புதிய நேரம் கணிக்கப்பட உள்ள தாக தகவல் திணைக்களம் கூறியது.

தோழர் சிவம்: தோழமையின் தடம்

தோழர் கணேசமூர்த்தி சிவகுமாரன் (நெல்லியடி சிவம்) நினைவுப்பேருரை ஒக்ரோபர் 2ல் ஸ்காபறோவில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கனடாவில் பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்து வருகின்ற தேடகம் (தமிழர் வகைதுறைவள நிலையம்) இந்நிகழ்வையும் ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்வு தோழமையின் தடம் என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இந்நிகழ்வுக்கு புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சியின் பொதுச்செயலாளர் சி கா செந்திவேல் வரவழைக்கப்பட்டு உள்ளதுடன் இவரே தோழர் சிவம் பற்றிய நினைவுப் பேருரையையும் வழங்க உள்ளார்.

தோழர் சிவம் பற்றி தேடகம் வெளியிட்டுள்ள நினைவுக் குறிப்பில் ”சமூக ஒடுக்குமுறைக்கு எதிராய் போராளியாய் எழுந்து தன் வாழ்நாள் முழுவதும் தன் மானிடத்திற்காய் உழைத்தவர்” எனக் குறிப்பிட்டு உள்ளது.

நிகழ்ச்சி விபரம்:

Saturday, October 2nd, 2010 @ 5:00 P.M
Scarborough Village RC
3600, Kingston Road (@ Markham)
M1M 1R9

யாழ்.அரச அதிபர் அதிவிசேடத்தர நிர்வாகியாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளார்

Imelda_Sugumar_GA_Jaffnaயாழ்ப்பாண அரசாங்க அதிபர் திருமதி. இமெல்டா சுகுமார் இலங்கையின் அதிவிசேடத் தர நிர்வாகியாக தரமுயர்த்தப்பட்டுள்ளார். பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு இலங்கையின் அதிவிசேட நிர்வாகச் சேவையாளர்களாக 57பேரின் பெயர் விபரங்;களை வெளியிட்டுள்ளது.

 அதில் தமிழ் பேசும் இருவர் இடம்பெற்றுள்ளனர். அதில் ஒருவராக யாழப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் இடம்பெற்றுள்ளார். 2005ஆம்ஆண்டு நிர்வாக சேவைத்தர வரிசைப் பட்டியலில் 490வது இடத்திலிருந்த இவர் இவ்வருடம் 44வது இடத்திற்கு தரமுயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு கிழக்கில் போரினால் 89 ஆயிரம் விதவைகள்!- பிரதி அமைச்சர்

Hizbullah M.L.A.Mவடக்கு கிழக்கில் யுத்தத்தினால் 89 ஆயிரம் பெண்கள் தங்கள் கணவரை இழந்து விதவைகளாகியுள்ளதாக சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார். அண்மையில் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

கிழக்கில் 49 ஆயிரம் பெண்களும், வடக்கில் 40 ஆயிரம் பெண்களும் கணவரை இழந்துள்ளனர் என அவர் குறிப்பட்டுள்ளார்.

இதில் 25ஆயிரம் பெண்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இவ்வாறு கணவரை இழந்த பெண்களில் 12ஆயிரம் பேர் 40 வயதிற்கும் குறைந்தவர்கள், 8ஆயிரம் பேர் குறைந்த பட்சம் மூன்று குழந்தைகளுடன் உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கரைச்சி பிரதேசசபை செயலாளர் பணியிலிருந்து இடைநிறுத்தம்.

கிளிநொச்சி மாவட்டம் கரைச்சிப் பிரதேசசபை செயலாளர் பே. குலேந்திரன் என்பவர் நேற்று வியாழக்கிழமை முதல் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறியின் உத்தரவின் பேரிலேயே அவர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிர்வாக நடவடிக்கைகளை துஸ்பிரயோகம் செய்தார் என்கிற குற்றச்சாட்டிலேயே அவர் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்விடயம் தொடர்பாக வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பி.ஜோன்சன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.

இது இவ்வாறிருக்க, போருக்குப்பின் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மக்கள் பெருமளவில் மீள்குடியேற்றப்பட்டுள்ள நிலையில் மக்கள் தங்களின் பல்வேறு தேவைகளுக்காக அரசநிறுவனங்கள், திணைக்களங்களுக்க நாளாந்தம் செல்ல வேண்டி ஏற்பட்டுள்ளதால் அவ்வாறு செல்லும் போது  அவர்கள் அதிகாரிகளாலும், ஊழியர்களாலும் அலைக்கழிக்கப்படுவதாகவும் சில விடயங்களுக்காக சிலருக்கு இலஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

யாழ். மாவட்டத்தில் வெள்ள அனர்த்தங்களைத் தடுக்க அரச அதிபர் முன்கூட்டியே நடவடிக்கை!

Jaffna_Floodயாழ். மாவட்டத்தில் வெள்ள அபாயங்களைத் தடுப்பதற்கு யாழ். அரசஅதிபர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். ஏதிர்வரும் மாதங்களில் கடும்மழை பெய்ய விருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், யாழ். மாவட்டத்தில் வெள்ள அனர்த்தம் ஏற்படக்கூடிய இடங்களை அடையாளம் கண்டு அறிக்கையிடுமாறு அவர் பிரதேசச் செயலர்களை பணித்துள்ளார்.

Jaffna_Floodவெள்ள பாதிப்புக்களிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் நோக்கில் முன்கூட்டியே நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கில் தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன.

வெள்ளப் பாதிப்புகளுக்குள்ளாகுமென எதிர்பார்க்கப்படுகின்ற கிராமசேவையாளர் பிரிவு, கிராமம், அவற்றின் சனத்தொகை, மக்கள் இடம்பெயர வேண்டி ஏற்பட்டால் அவர்களைத் தங்க வைக்க வேண்டிய இடங்கள், அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய வசதிகள் என்பன குறித்த விபரங்கள் திரட்டப்பட்டு அறிக்கைகள் தயாரிக்குமாறு அரசாங்க அதிபரால் கோரப்பட்டுள்ளது.

வயாவிளான் மகாவித்தியாலயம் ஜனவரிக்குப் பின்னரே பழைய இடத்தில் இயங்கும்.

Vayavilaan_Mahavidyalayamஉயர் பாதுகாப்பு வலயத்திலிருந்த வயாவிளான் மகாவித்தியாலயம் கடந்த செவ்வாய் கிழமை படையினரால் பாடசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்படும் வைபவம் இடம்பெற்றிருந்த போதும் அப்பாடசாலைக் கட்டடங்களை புனரமைக்க வேண்டியிருப்பதால் அடுத்த வருடம் ஜனவரி மாதமே அது முழுமையாக கையளிக்கப்படும் என படைத்தரப்பால் அறிவிக்கப்பட்டுள்ளது.

Vayavilaan_Mahavidyalayamகடந்த செவ்வாய் கிழமை வயாவிழான் பாடசாலை கையளிக்கப்படும் நிகழ்வு பெரியளவில் நடத்தப்பட்டது.  அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர். மாணவர்கள் உட்பட்ட பாடசாலை சமூகத்தினர், வடமாகாண ஆளுநர், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும், அதிகாரிகள் பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். பாடசாலைத் தளபாடங்களும் அங்கு கொண்டு செல்லப்பட்டிருந்தன. எனினும் அடுத்த நாளே அப்பாடசாலை உரும்பிராயிலுள்ள அதன் தற்காலிக கட்டடத்தில் மீண்டும் இயங்குகின்றது.

 பாடசாலைக் கட்டடங்கள் புனரமைக்கப்பட வேண்டியிருந்தால் அவற்றைப் புனரமைத்து விட்டு ஜனவரி மாதமே அதனை ஆரமப்பிக்கும் நிகழ்வையும் நடத்தியிருக்கலாமே என அப்பாடசாலையின் பெற்றோர், மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

நீதிமன்றத்தை நாட ஜ.தே.கூ. முடிவு

இராணுவ நீதிமன்றத்தினால் குற்றவாளியாக காணப்பட்டவர் பாராளுமன்ற உறுப்புரிமையை இழக்க வேண்டி வரும் என்ற ஏற்பாடுகள் அரசியலமைப்பில் இல்லாமையால், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் பாராளுமன்ற உறுப்புரிமையை பாதுகாத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றத்தை நாடப்போவதாக அவர்தலைமை வகிக்கும் ஜனநாயக தேசியக் கூட்டணி தெரிவித்துள்ளது.

நாவல சோலிஸ் ஹோட்டலில் நேற்றுவியாழக்கிழமை நடைபெற்ற ஜனநாயக தேசிய கூட்டணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் அக் கட்சியின் பொதுச் செயலாளர் விஜித ஹேரத் எம்.பி.இது பற்றிய கருத்துக்களை வெளியிட்டார்.

அவர் இங்கு மேலும் பேசுகையில்;

“இரண்டாவது இராணுவ நீதிமன்ற தீர்ப்புக்கு கையெழுத்திட்டு சரத் பொன்சேகாவுக்கு 30 மாத (இரண்டரை வருடங்கள்) கடூழியச் சிறைத் தண்டனையை ஜனாதிபதி உறுதி செய்துள்ளார். நாம் இந்த இராணுவ நீதிமன்றத்தையும், அதன் தீர்ப்பையும் ஏற்க தயாராக இல்லை. ஏனெனில் இது பக்கச் சார்பான தீர்ப்பு. நாம் ஏற்கனவே சரத் பொன்சேகாவுக்கு எதிரான முதலாவது இராணுவ நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு அக்டோபர் 8 ஆம் திகதி விசாரிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் இந்த இரண்டாவது இராணுவ நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகவும் விரைவில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்யவுள்ளோம். இராணுவ சட்டத்தின் 79 ஆவது சரத்தானது இராணுவ நீதிமன்ற தீர்ப்பை ஆட்சேபித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் செல்ல உரிமை இருப்பதாக விதைந்துரைக்கிறது. அதன் பிரகாரமே நாம் மேன்முறையீட்டு நீதிமன்றம் செல்கிறோம்.

இதேநேரம், சரத் பொன்சேகாவின் பாராளுமன்ற உறுப்புரிமையைப் பொறுத்த வரையில், சிவில் நீதிமன்றத்தில் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராக இருக்க முடியாதென அரசியலமைப்பில் கூறப்படுகிறது. எனினும் இராணுவ நீதிமன்றத்தினால் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவரது பாராளுமன்ற உரிமை பறிபோகும் என்று எங்கும் கூறப்படவில்லை. அந்த வகையில் நாம் இந்த இராணுவ நீதிமன்றத் தீர்ப்பை சிவில் சட்டத்தின் கீழ் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆட்சேபனைக்குட்படுத்தி சரத் பொன்சேகாவின் பாராளுமன்ற உறுப்புரிமையைப் பாதுகாத்துக்கொள்ளக் கூடிய தீர்ப்பொன்றை விரைவில் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கிறோம். நாம் இவ்விடயத்தில் அதிகபட்ச நீதிமன்ற நடவடிக்கைகளை எடுப்போம். சரத் பொன்சேகாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக இன, மத, குல பேதங்களின்றி அனைத்து மக்களும் அணிதிரள வேண்டும் என்றார்.