கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்து நிவாரணக்கிராமங்களில் தங்கியுள்ள மக்களின் முழுமையான விபரங்களை உறவினர்கள் அறிந்து கொள்ளும் விதத்தில், மீள் குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு இணையத்தளத்தில் விசேட ஹொட் மெயில் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளது.
புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து வவுனியா கதிர்காமர், அருணாச்சலம், ஆனந்த குமாரசுவாமி, இராமநாதன் ஆகிய நிவாரணக் கிராமங்களில் தற்காலிக, நிரந்தர வீடுகளில் தங்க வைக்கப்படும் மக்களின் முழுமையான விபரங்களை அமைச்சு எடுத்து வருகிறது.
விபரங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்ட பின்னர் அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்படும். புலம் பெயர்ந்துள்ளவர்கள் தமது உறவுகள் எங்குள்ளார்கள் எனபதை அறிந்து கொள்ள இது ஏதுவாக அமையுமென மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
கடந்த 13 ஆம் திகதி மாலை வரை 34,430 பேர் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்துள்ளனர் எனக் குறிப்பிட்ட அமைச்சர், நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள தமது உறவினர்களுக்கு புலம் பெயர்ந்துள்ளவர்கள் உதவிகள் செய்வதற்கு ஏதுவாக மேற்படி கிராமங்களில் அரச வங்கிகளான மக்கள் வங்கி, இலங்கை வங்கிக் கிளைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் கூறினர்.