இலங்கை யில் ஐந்து வயதுக்குக் குறைவாக உள்ள சிறுவர்களில் 22 சதவீதத்தினர் நிறைகுறைவான பிள்ளைகளாக காணப்படும் நிலையில், இச் சிறுவர்களின் போஷாக்கை கணிசமான அளவுக்கு மேம்படுத்த வேண்டுமென உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
மிலேனியம் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், இச்சிறுவர்களின் போஷாக்கை மேம்படுத்தவுள்ளதுடன், அதே அளவுக்கு போஷாக்கின்மையால் அவதியுறும் மக்களின் போஷாக்கின் நிலையை மேம்படுத்த வேண்டியுள்ளதையும் உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
ஐந்து வயதுக்கும் குறைவான சிறுவர்களில், 18 வீதத்தினர் குறைந்த வளர்ச்சி நிலையைக் கொண்டுள்ளதுடன், 15 வீதத்தினர் மிக மெலிந்த உடலமைப்பை கொண்டுள்ளதாகவும் உலக வங்கியின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
“இலங்கையில் உள்ள உள்ளூர் நிறுவனங்களுக்கு அபிவிருத்திக்கான கூட்டான முயற்சிகளை முன்னெடுக்க வாய்ப்புகள் காணப்படுவதுடன், அரசசார்பற்ற நிறுவனங்கள், பொது சுகாதார சேவைகள் ஊடாக, சத்துணவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான புதிய வழிவகைகள் பற்றியும் ஆராய்ந்து வருவதாக, உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர், நாகோ இஸ்கீ தெரிவித்தார்.
போஷாக்கை மேம்படுத்துவதற்கான, புதிய வழிமுறைகள் வெற்றியளிக்குமாயின், சத்துணவுக்கான நன்கொடை வழங்கலை மேலும் அதிகரிக்க முடியுமெனவும் அவர் குறிப்பிட்டார்.
போட்டியடிப்படையில், போஷாக்கை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் இனங்காணப்பட்டுள்ளதோடு, இதன்மூலம் தெற்காசியாவில் வாழும் சிறுவர்கள், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போஷாக்கை மேம்படுத்தும் புதிய அணுகுமுறையிலான திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்க முடியுமென உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்துக்கான உபதலைவர், இஸ்ஸாபெல் கியூறேறோ குறிப்பிட்டார்.
போஷாக்கின்மையின் பாதிப்பால், தெற்காசியாவில் இளம் சிறுவர்கள், குழந்தைகள் மரணமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.