இலங்கை யில் ராணுவத்துக்கும் புலிகளுக்கும் இடையே நடந்து வரும் போர், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், விடுதலைப்புலிகள் தமிழகத்துக்குள் ஊடுருவக் கூடும் என்றும், தமிழகத்தில் இருந்து பல்வேறு வகையான பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்படலாம் என்றும் உளவுத்துறைக்கு தகவல்கள் வந்துள்ளன. இதையடுத்து, தமிழக கடலோர பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சேதுபாவாசத்திரம், புதுக்கோட்டை மாவட்டம் திருப்புனவாசல், கன்னியாகுமாரி, ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம், மண்டபம் உள்பட 12 இடங்களில் கடலோர காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இடங்களில் தமிழக கடலோர காவல்படை எஸ்.பி. பாஸ்கரன் சமீபத்தில் ஆய்வு செய்தார்.கண்காணிப்பு பணிக்காக 15 க்யூ பிராஞ்ச் போலீசாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள், க்யூ பிராஞ்ச் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையில் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், வேதாளை, புதுமடம், கீழக்கரை, தேவிபட்டினம் ஆகிய பகுதிகளில் வாரம் ஒருமுறை சுழற்சி முறையில் கடலோரப்பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடலோரப் பகுதிகளுக்கு செல்லும் வாகனங்களை கஸ்டம்ஸ் அதிகாரிகளும் சோதனை நடத்தி வருகின்றனர்.