எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

பிரிட்டன் நிழல் பாதுகாப்பு செயலர் இலங்கை விஜயம்

liam_fo_.jpg
பிரித்தானியாவின் நிழல் பாதுகாப்பு செயலர் லியம் பொக்ஸ் நேற்று இலங்கை வந்துள்ளார். அவரது விஜயத்தின் போது இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர்கள் உட்பட பல பிரமுகர்களைச் சந்திக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிரவுணின் இலங்கைக்கான தூதுவராக, பாதுகாப்பு செயலாளர் டெஸ் பிரவுணே இலங்கை அரசின் அனுமதி பெறாமல் நியமிக்கப்பட்டுள்ளதாக லியம் பொக்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.நேற்று இலங்கை வந்துள்ள லியம் பொக்ஸ் நாளை நாடு திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது

பயங்கரவாதத்தை தோற்கடிக்கும் இறுதிக்கட்டத்திலும் இலங்கையின் பொருளாதாரம் ஸ்திரம்

anura_priyadarshana_yapa.jpg
பயங்கரவாதத்தைத் தோற்கடிக்கும் இறுதிக்கட்ட நிலையிலும் இலங்கையின் பொருளாதாரம் பலமாகவேயுள்ளதென அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். இலங்கை கடன் பெறும் நாடுகளில் எத்தகைய நிபந்தனைகளும் விதிக்கப்படவில்லை. சர்வதேச நாணய நிதியத்தின் எத்தகைய நிபந்தனைகளுக்கும் அரசு அடிபணியவுமில்லையென அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பில் குறிப்பிட்ட அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கு எதிரான வீண் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறார். நாட்டிற்குப் பொருத்தமில்லாத நிபந்தனைகளுக்கு அடிபணிந்தே அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறுவதாக அவர் குற்றம்சாட்டுகிறார். இக் கூற்றை அரசாங்கம் முற்றாக நிராகரிக்கிறது எனவும் தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இங்கு ஊடகவியலாளர்களுக்கு இது தொடர்பில் விளக்கமளித்த அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது, அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகள் பெரும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளன. இதனால் அந்நாடுகளின் வங்கிகள், பாரிய நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதுடன் ஒரு கோடி பேர் தொழில் இழந்துள்ளனர்.

அமெரிக்காவில் கடந்த ஒரு மாதகாலத்துக்குள் 81 பிரபல வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இவ்வருடத்தில் மட்டும் ஆறரை இலட்சம் பேர் தொழில்வாய்ப்பை இழந்து நிற்கின்றனர். ஜப்பானிலும் இதேநிலைமைதான். பெரும் பொருளாதார நெருக்கடி மற்றும் வாகனங்களுக்கான கேள்வி சர்வதேச ரீதியில் வெகுவாகக் குறைந்துள்ள நிலையில் ‘டொயாட்டா’ போன்ற நிறுவனங்கள் பெரும் நஷ்டத்திற்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளது.

இத்தகைய நெருக்கடியான சூழலொன்றில் இலங்கை அரசாங்கம் பொருளாதார ரீதியில் பலமாகவுள்ளது. சாத்தியமானதொரு பொருளாதாரக் கொள்கையை அரசு கடைப்பிடிப்பதால் நாட்டின் பொருளாதாரத்தை நடுநிலையில் பேணுவதற்கான வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. உள்நாட்டு உற்பத்திகளுக்கு முக்கியத்துவமளித்து ஊக்குவிப்புகள் வழங்கப்படும் அதேவேளை வெளிநாட்டு முதலீடுகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. கடந்த வருடத்தில் 860 மில்லியன் டொலரில் முதலீடுகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன.

அரச நிறுவனங்கள் ஒரு போதும் தனியார் மயப்படுத்தப்படமாட்டாது என்ற கொள்கையில் அரசாங்கம் உறுதியாக உள்ளது. அதேவேளை அரசதுறை மற்றும் தனியார் துறை இரண்டையுமே ஒரேநிலையில் கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.

இந்த நிலையில் ரணில் விக்கிரமசிங்க தூக்கத்திலிருந்து கொண்டு பேசுகிறார் என்றே எண்ணத் தோன்றுகிறது. 2002ம் ஆண்டில் அவர்களது ஆட்சிக்காலத்தில் அரச சேவையைச் சீரழித்து அரச நியமனங்களை நிறுத்தி தனியார் துறையை மேம்படுத்தும் நடவடிக்கை உட்பட ரணில் விக்கிரமசிங்கவின் நவீன லிபரல் பொருளாதாரம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் இன்று நாட்டின் நிலை சீரழிந்திருக்கும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

நகைச்சுவை நடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் காலமானார்

omakuchi.jpgநகைச் சுவை நடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் காலமானார். அவருக்கு வயது எழுபத்து மூன்று.

தமிழ் திரையுலகில் ஔவையார் படத்தின் மூலம்  பதிமூன்றாவது வயதில் அறிமுகமான இவர் எழுபத்து மூன்று வயதுவரை தனது நகைச்சுவை திறமையால் ரசிகர்களை சிரிக்கவைத்தார். திரைப்படங்களில் மட்டுமல்லாது தொடர்ந்து நாடகங்களிலும் நடித்து வந்தார். சூரியன்,முதல்வன் என சில படங்களில் தலைகாட்டிய இவர்  சமீப காலமாக திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.உடல்நலக் குறைவால் இன்று இயற்கை எய்தினார். திருவல்லிக்கேணியில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு நிதி

batticaloa.jpgகிழக்கு மாகாணத்தின் வீதிகளை அபி விருத்தி செய்வதன் பொருட்டு 1500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வீதி அபிவிருத்திப் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இதில் மட்டக்களப்பு மாவட்டத்தின் வீதி அபிவிருத்திப் பணிகளுக்காக 500 மில்லியன் ரூபாவும், அம்பாறை மாவட்டத் திற்கென 500 மில்லியன் ரூபாவும், திருகோணமலை மாவட்டத்திற்கென 500 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப் பட்டிருப்பதாக கிழக்கு மாகாண வீதி, கிராமிய மின்சாரம், வீடமைப்பு, நீர்ப்பாசனத் துறை அமைச்சர் எம். எஸ். உதுமா லெவ்வை தெரிவித்தார்.

நீர்ப்பாசனத் துறை அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் கீழும் கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலுமுள்ள பல்வேறு குளங்களை புனரமைப்புச் செய்வதற் காகவும் 900 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் கிழக்கு மாகாண அமைச்சர் குறிப்பிட்டார்.

அமைச்சர் முரளிதரனின் அலுவலகம் மீது தாக்குதல் : நால்வர் பலி

karuna.jpgஅம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேசத்தில் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் அலுவலகமொன்றின் மீது இன்று அதிகாலை ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். இருவர் காயமடைந்துள்ளனர்.

சொறிக் கல்முனை 6ஆம் கட்டையிலுள்ள இவ்வலுவலகம் ஏற்கனவே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அலுவலகமாக செயல்பட்டு வந்ததாகவும் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஸ்ரீ.லங்கா சுதந்திரக் கட்சியில் அண்மையில் இணைந்து கொண்ட பின்பு அவரது அலுவகமாக செயல்பட்டதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை இவ்வலுவலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் போது கொல்லப்பட்ட நால்வருமே அங்கு தங்கியிருந்ததாகக் கூறப்படுகின்றது. விடுதலைப் புலிகளே இந்தத் தாக்குதலை நடத்தியிருப்பதாக அக்காரியாலயத்துடன் தொடர்புடைய பேச்சாளர் ஒருவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். 

‘புலிகளை அரசியல் ரீதியிலும் தோற்கடித்து. புதிய தமிழ்த் தலைமையை உருவாக்க வேண்டும்’

deu-guna.jpgபுலிகள் இயக்கத்தை இராணுவ ரீதியாகத் தோற்கடித்ததும் தமிழ் மக்களுக்குப் புதிய அரசியல் தலைமையொன்றைக் கட்டியெழுப்ப அனைத்துத் தரப்பினரும் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டுமென்று இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டாலும், மீண்டும் தலையெடுப்பார்களென்றும் எனவே அவர்களை அரசியல் ரீதியாகவும் தோற்கடிக்க வேண்டும் என்று இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரான அரசியலமைப்பு விவகார, தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்தார். கொழும்பு – கொள்ளுப்பிட்டியிலுள்ள அமைச்சில் நடந்த செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

தமிழ் மக்களுக்கு இன்று ஒழுங்கான அரசியல் தலைமைத்துவம் இல்லை. அனைவரையும் புலிகள் கொன்றொழித்து விட்டார்கள். புதியவர்கள் உருவாகவும் இல்லை. எஞ்சியுள்ள தமிழ்த் தலைவர்களுக்கு நாம் அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். புலிகள் சார்பு அல்லாத அரசியல் தலைமையைக் கட்டியெழுப்ப வேண்டும். புலிகளின் கோரிக்கைகளையன்றித் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற வேண்டும்.

தமிழ் மக்களை நாம் வெல்ல வேண்டும். தமிழ் மக்களுக்குத் தீர்வொன்றைப் பெற்றுக்கொடுக்கவேண்டிய வரலாற்றுக் கடமை நமக்கு இருக்கிறது”, என்று தெரிவித்த அமைச்சர் குணசேகர, இனப்பிரச்சினைக்கு இறுதித் தீர்வொன்றைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென்றும் இலங்கையில் பயங்கரவாதம் மீண்டும் மீண்டும் தலையெடுப்பதைத் தடுக்க முடியாதென்றும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவிலிருந்து விலகியிருக்கும் அரசியல் கட்சிகள் அதில் இணைந்துகொள்ள வேண்டுமெனத் தெரிவித்த அமைச்சர் குணசேகர, இந்தத் தருணத்திலாவது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு புதிய அரசியல் பாதையில் பயணிக்க முன்வர வேண்டுமென்றும் அழைப்பு விடுத்தார்.

புதுமாத்தளனில் புயல் காற்றால் பெரும் சேதம் : இடம்பெயர்ந்த மக்கள் பாதிப்பு

flod-wanni.jpgமுல்லைத் தீவில் அண்மையில் வீசிய கடும் காற்றுடன் கூடிய மழையால் புதுமாத்தளன் பாதுகாப்பு வலயத்தில் உள்ள 50,000க்கும் அதிகமான இடம்பெயர்ந்த பொதுமக்கள் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இடம்பெயர்ந்து வந்த மக்களில் அநேகமானோர் புதுமாத்தளன் பகுதியில் தற்காலிக குடில்களில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் தற்காலிக குடில்களும் புயல் காற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

இம்மாதம் 9, 10ஆம் திகதிகளில் வீசிய பலத்த காற்றுடன் கூடிய மழை இடம்பெயர்ந்து புதுமாத்தளன் பாதுகாப்பு வலயத்தில் தற்காலிக குடில்களில் வாழும் மக்களைப் பெரிதும் பாதித்திருப்பதாகவும் வேறிடம் செல்ல வழியில்லாது இவர்கள் கஷ்டப்படுவதாகவும் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இவர்கள் போதிய உணவு, மருந்து, சுத்தமான குடிநீர் இன்றி வாழ்வதாகவும் அத்துடன் தற்காலிக மலசல கூடமும் சேதமடைந்துள்ளதால் இவர்கள் பெரும் அவலத்துக்கு உள்ளாகியிருப்பதாகவும் டாக்டர் சத்தியமூர்த்தி தெரிவித்தார். எனவே உடனடியாக பாதிக்கப்பட்ட இம்மக்களுக்கு 50,000 தற்காலிக குடில்கள் தேவைப்படுவதுடன், தற்காலிக மலசல கூடமும் அமைத்துக் கொடுக்கப்பட வேண்டுமென கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் .ரி.சத்தியமூர்த்தி தமது அறிக்கை ஒன்றில் மேலும் தெரிவித்துள்ளார். 

யதார்த்தபூர்வமான அதிகார பகிர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டும் : ஷிவ்சங்கர் மேனன்

shiv-sankar-menon.jpgஇலங்கையில் மூன்று தசாப்தங்களாக நீடித்து வரும் இன முறுகலுக்கு நிரந்தரத் தீர்வு எட்டப்பட வேண்டுமாயின் யதார்த்தபூர்வமான அதிகாரப் பகிர்வுத் திட்டமொன்றை அரசாங்கம் முன்வைக்க வேண்டுமென இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஷிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார். இந்திய வெளிவிவகார செயலாளர் அண்மையில் அமெரிக்காவுக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது இந்தக் கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

உக்கிர யுத்தம் நடைபெற்று வரும் வடக்கில் இயல்பு வாழ்க்கையை விரைவில் ஏற்படுத்த வேண்டுமென அமெரிக்காவும், இந்தியாவும் கூட்டாக இணைந்து தெரிவித்துள்ளன. சிறுபான்மை தமிழர்களின் நியாயமான அரசியல் அபிலாஷைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டியது முதன்மையானதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு அரசாங்கம் சரியான அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்கும் வரையில் தேசிய இனப்பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைக்க முடியாதென அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுடன் இலங்கை விவகாரம் குறித்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் போது இந்தியாவும், அமெரிக்காவும் இலங்கை தொடர்பில் ஒரே நிலைப்பாட்டில் இருப்பது தெரியவந்ததாக ஷிவ்சங்கர் மேனன் குறிப்பிட்டுள்ளார்.

புஷ்ஷுக்கு காலணி வீசிய செய்தியாளருக்கு மூன்று வருட சிறை

120309.jpgஅமெரிக்க முன்னாள் அதிபர் புஷ் மீது இராக்கில் காலணிகளை வீசியெறிந்த பத்திரிகையாளருக்கு மூன்று வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என பி.பி.ஸி. செய்தி வெளியிட்டிருந்தது. .

வெளிநாட்டுத்தலைவர் ஒருவரை அவமதித்தமைக்காக முண்டா ஷார் அல் சைதி என்ற இந்தப் பத்திரிகையாளர் குற்றவாளியாக காணப்பட்டதாக பாக்தாத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தீர்ப்பு அறிவிக்கப்பட்டபோது நீதிமன்றத்தில் இருந்த அவரது உறவினர்களும், ஆதரவாளர்களும் ஆத்திரத்துடன் கத்தினார்கள். அல் சைதி மேன்முறையீடு செய்வார் என்று அவரது வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.

இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் வேண்டும் என்கிறது ஐரோப்பிய நாடாளுமன்றம்

eu.jpg இலங்கையில் போர் நடக்கும் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்கு வழி செய்யும் வகையில் இலங்கை இராணுவத்தினரும், விடுதலைப்புலிகளும் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று கோரும் தீர்மானத்தை ஐரோப்பிய நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது என பி.பி.ஸி. செய்தி வெளியிட்டிருந்தது..

அரசாங்க இடைத்தங்கல் முகாம்களின் நிலைமைகள் குறித்து கரிசனை வெளியிட்டுள்ள ஐரோப்பிய நாடாளுமன்றம், பொதுமக்களை வெளியேற விடாமல் விடுதலைப்புலிகள் பயமுறுத்திவருவதாக கண்டனம் செய்துள்ளது.

நிவாரண நிறுவனங்களும், ஊடகத்தினரும் போர் பகுதிக்கும், முகாம்களுக்கும் தங்குதடையின்றி சென்றுவர அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் ஐரோப்பிய நாடாளுமன்றம் கேட்டிருக்கிறது