எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

ருபெல்லா தடுப்பு மருந்து ஒவ்வாமை; சுகாதார ஸ்தாபன நிபுணத்துவ குழு ஆய்வு

vaccina.jpgருபெல்லா தடுப்பு மருந்து ஒவ்வாமை குறித்து கண்டறிவதற்காக இலங்கை வந்துள்ள உலக சுகாதார ஸ்தாபன நிபுணத்துவ மருத்துவர் குழு நேற்று (23) காலை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை சந்தித்த பின் மாத்தறை பெரியாஸ்பத்திரிக்கு சென்று ஆய்வுகளை ஆரம்பித்துள்ளது.

ருபெல்லா தடுப்பு மருந்து ஒவ்வாமை தொடர்பான தொழில் நுட்ப, முகாமைத்துவ மற்றும் நிர்வாக ரீதியான விடயங்கள் அடங்கலாக சகல விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தி பக்கச் சார்பற்ற சுயாதீனமான விசாரணைகளை நடத்துமாறு உலக சுகாதார ஸ்தாபன குழுவிடம் அமைச்சர் கோரியுள்ளார்.

ருபெல்லா தடுப்பு மருந்து ஒவ்வாமை காரணமாக மாத்தறை பாடசாலை மாணவி ஒருவர் கடந்த வாரம் இறந்ததோடு பலர் நோய்வாய்ப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக அமைச்சரின் அழைப்பின் பேரில் உலக சுகாதார ஸ்தாபன நிபுணத்துவ மருத்துவர்களான மாதவ் ராம், ஸ்ரீபன் குவிசர்ட் ஆகியோர் நேற்று முன்தினம் இலங்கைக்கு வந்தனர்.

இவர்கள் நேற்று (23) காலை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை அமைச்சில் சந்தித்தனர். ருபெல்லா தடுப்பு மருந்து ஏற்றப்பட்ட பின் மாணவி ஒருவர் இறந்ததோடு 27 பேர் நோய்வாய்ப்பட்டது தொடர்பாக அமைச்சர் இங்கு விளக்கியுள்ளார். தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையில் ஏதும் தொழில் நுட்ப, முகாமைத்துவ அல்லது நிர்வாக ரீதியான ஏதும் தவறுகள் நிகழ்ந்துள்ளதா என ஆராயுமாறும் அமைச்சர் உலக சுகாதார ஸ்தாபன குழுவிடம் கோரியுள்ளார்.

மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ருபெல்லா தடுப்பு மருந்தில் ஏதும் குறைபாடுகள் இருந்தால் அது குறித்தும் கவனம் செலுத்தி தனக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

புலிகள் சகல பொதுமக்களையும் முதலில் விடுவிக்க வேண்டும் -அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல

khegeliya_rampukhala.jpgமுன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு தயார் என புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் ப. நடேசன் விடுத்துள்ள அறிவிப்பை அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளது.

புலிகளின் கோரிக்கைகளுக்கு அரசாங்கத்திடமிருந்து சாதகமான பதில் கிடைக்க வேண்டுமாயின் புலிகள் தங்களின் பிடியிலுள்ள சகல பொது மக்களையும் முதலில் விடுவிக்க வேண்டும் என்று தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

முன் நிபந்தனைகளற்ற பேச்சுவார்த்தைக்கு தயார் என புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் ப. நடேசன் லண்டனிலிருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்றுக்கு மின்னஞ்சல் மூலம் வழங்கியிருந்த பேட்டி தொடர்பாக வினவிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் தகவல் தருகையில்:-

புலிகள் ஆயுதங்களை கீழே வைக்க வேண்டும் என்றோ சரணடைய வேண்டும் என்றோ இம்முறை நாங்கள் கேட்கப்போவதில்லை. ஏனெனில் அதைப் பற்றி எமக்கு கவலையில்லை.

நாம் அதனை எவ்வாறு கையாள வேண்டும் என்று எமக்குத் தெரியும் நாம் பின்னர் அதனை பார்த்துக்கொள்வோம் என்றும் அமைச்சர் ரம்புக்வெல தெரிவித்தார்.

யாழ்.குடாவுக்கு 500 டாக்டர்கள்

nimal-sri-pala.jpgவடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மருத்துவத் துறையை மேம்படுத்தும் திட்டங்கள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கென ஜப்பானிய அரசாங்கம் மேலும் 1.5 பில்லியன் ரூபாவை வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான சுகாதார தேவைகளில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருவதுடன் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வைத்தியர்களில் 500 பேரை கிழக்கிற்கு அனுப்பியுள்ளதுடன் தாதியர் அறுநூறு பேரையும் அம்மாகாணங்களுக்கு சேவைக்கு அனுப்பத் தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேலும் தெரிவிக்கையில்: வடக்கு, கிழக்கு மாகாண சுகாதார நடவடிக்கைகளில் அரசாங்கம் மிகுந்த கவனம் செலுத்திவருகிறது. இது தொடர்பில் பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. அவைகளில் எதுவித உண்மையுமில்லை. அரசாங்கம் கிழக்கு மாகாணத்தை மீட்டு அங்கு முன்னெடுக்கும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் சுகாதாரத்துறைக்கு முக்கியத்துவமளித்து வருவதுடன் அங்குள்ள சகல மருத்துவமனைகளும் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன.

இதேபோன்று வடக்கிலும் சகல மருத்துவ மனைகளையும் அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வடக்கில் பாதிக்கப்படுவோரின் நலன் கருதி அநுராதபுரம் பொது வைத்தியசாலை முழுமையான அபிவிருத்திக்குள்ளாக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் அங்கு சத்திரசிகிச்சைக்கான விசேட பிரிவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்

யாழ்தேவி கருத்திட்டத்துக்கு ஜனாதிபதியின் ஒருமாத சம்பளம்

mahinda-rajapaksha.jpg
யாழ்ப்பாணத்திற்கான புதிய ரயில் சேவையை மீண்டும் ஆரம்பிக்கும் கருத்திட்டத்திற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது ஒரு மாத சம்பளத்தை அன்பளிப்புச் செய்தார்.

மேற்படி கருத்திட்டத்தினை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கும் வைபவம் நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இதன் போது ஜனாதிபதி தமது ஏப்ரல் மாதத்திற்கான சம்பளத்தை அமைச்சர் டளஸ் அழகப்பெருமவிடம் கையளித்தார்.

அதனையடுத்து ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவும் ஜனாதிபதி செயலக ஊழியர்களும் தமது ஒரு நாள் சம்பளத்தை மேற்படி திட்டத்திற்காக வழங்கினர். பிரபல தொழிலதிபர்கள், ரவீந்ர ரந்தெனிய, மாலினி பொன்சேகா போன்ற திரைப்படக் கலைஞர்களும் தமது அன்பளிப்புகளை ஜனாதிபதியிடம் கையளித்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வடக்கிற்கும் தெற்கிற்குமான உறவுப் பாலமாகத் திகழும் இக் கருத்திட்டத்திற்குச் சகலரும் மனமுவந்து தமது பங்களிப்பை வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

யாழ். குடாவுக்கு ஏ-9 வீதியூடாக 300 மெ.தொ உணவுப் பொருட்கள் நாளை மறுதினம் 20 லொறிகளில் அனுப்பிவைக்க ஏற்பாடு

sb_diwarathnass.jpgயாழ். குடாநாட்டுக்கு ஏ-9 வீதி ஊடாக அத்தியாவசிய உணவுப் பொருட்களை எடுத்துச் செல்லும் இரண்டாவது வாகனத் தொடரணி முன்னூறு மெற்றிக் தொன் பொருட்களுடன் நாளை மறுதினம் 26ம் திகதி கொழும்பிலிருந்து பயணமாகுமென அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் எஸ். பி. திவாரட்ன நேற்று தெரிவித்தார்.

இந்த அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இருபது லொறிகளில் அனுப்பி வைக்கப்படவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை கடந்த 8ம் திகதி முதலாவது வாகனத் தொடரணி 350 மெற்றிக் தொன் அத்தியாவசிய உணவுப் பொருட்களை எடுத்துச் சென்றதுடன் வடபகுதி விளை பொருட்களும் தென்பகுதிக்கு எடுத்து வரப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாளை மறுதினம் யாழ். குடா நாட்டுக்குப் புறப்படும் இரண்டாவது வாகனத் தொடரணியில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள், பழவகைகள், மலிகைச்சாமான்கள், மென்பானங்கள் அடங்களான பொருட்கள் அனுப்பப்படவுள்ளன. இராணுவத்தினரின் கண்காணிப்புடன் வெளிசரை களஞ்சியத்தில் அவை லொறிகளில் ஏற்றப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை யாழ்ப்பாணம் கைதடி, நாவற்குழி களஞ்சியத்தில் யாழ். விவசாயிகள் மற்றும் மீனவர்களின் உற்பத்திப் பொருட்கள் கொழும்புக்கு அனுப்புவதற்காக திரட்டப்பட்டு வருவதாகவும் ஆணையாளர் கூறினார். இம்முறை யாழ்ப்பாணத்தில் இருந்து 60 ஆயிரம் கிலோ எடையுள்ள மீன, இரால், கிழங்கு அடங்களான யாழ். மக்களின் உற்பத்திப் பொருட்கள் கொழும்புக்கு எடுத்துவரப்பட உள்ளன.

ஏ-9 பாதையினூடாக தமது உற்பத்திப் பொருட்களை கொழும்புக்கு அனுப்ப வாய்ப்பு ஏற்பட்டதன் மூலம் யாழ். மக்கள் கூடுதல் வருமானம் பெற்று வருவதாகவும் ஆணையாளர் குறிப்பிட்டார். இதற்கு முன் ஒரு கிலோ கிழங்கு 30 ரூபாவுக்கே விற்க முடிந்ததோடு தற்பொழுது 50 ரூபாவுக்கு விற்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

முதலாவது வாகன தொடரணி கடந்த 8ம் திகதி ஏ-9 ஊடாக யாழ் சென்றது. இதன் போது 350 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் அங்கு அனுப்பப்பட்டதோடு 10 லொறிகளில் யாழ். மக்களின் உற்பத்திகள் கொழும்புக்கு எடுத்து வரப்பட்டன.

இதேவேளை அரிசி, மா என்பன தொடர்ந்தும் கப்பல் மூலமே யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும் இதன் மூலம் பெருமளவு அத்தியாவசியப் பொருட்கள் யாழ்ப்பாணத்தில் களங்சியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் தெரிவித்தார். அங்கு உணவுப் பொருட்களுக்கு எதுவித தட்டுப்பாடும் கிடையாது எனவும் சாதாரண விலையில் பொருட்கள் கொள்வனவு செய்யக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். யாழ்ப்பாணத்தில் 7 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி, 3 ஆயிரம் மெற்றிக் தொன் சீனி ஆயிரம் மெற்றிக் தொன் கோதுமை மா என்பன கையிருப்பில் உள்ளதாகவும் 2 வாரத்துக்கு போதிய பெற்றோல் இருப்பதாகவும் கூறினார்.

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கொழும்பின் பாதுகாப்புக்கு 3000 மேலதிக பொலிஸார்

chk-poli.jpgபண்டிகைக் காலத்தை முன்னிட்டு கொழும்பின் பாதுகாப்புக்காக மூவாயிரம் மேலதிக பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வெளியிடங்களிலிருந்து கொழும்பு நகருக்கு வருவோரை மோசடிக்காரர்களிடமிருந்தும், கொள்ளையர்களிடம் இருந்தும் பாதுகாப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் கூறினார். நுகர்வோரை பாதுகாக்கும் வகையில் இம்முறை பெரும் எண்ணிக்கையிலான பொலிஸ் உத்தியோகத்தர்கள் சாதாரண உடையில் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

அத்துடன் மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கர வண்டிகளில் பொலிஸார் ரோந்துச் சேவையில் ஈடுபடுத்தப்படுவார்கள். அத்துடன் முக்கிய இடங்களில் பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். நகரில் போக்குவரத்து நெறிசல்களை சீர்செய்ய மேலதிகமாக பொலிஸார் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

மனைவியை கொலை செய்த திருக்கோணேஸ்வர முன்னாள் குருக்களுக்கு மரண தண்டனை

தமது மனைவியை கொன்று திருக்கோணேஸ்வரம் கோயில் வளவில் புதைத்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த திருகோணேஸ்வர ஆலய முன்னாள் குருக்களுக்கு திங்கட்கிழமை திருகோணமலை மேல்நீதிமன்ற நீதிபதி எம்.  இளஞ்செழியன் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்;
 
சிவகடாட்ச குருக்கள் திகாகேஸ்வர ஐயருக்கே இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டது. 1996 ஆம் ஆண்டு பெப்ரவரி 13 ஆம் திகதி இந்த கொலை சம்பவம் இடம்பெற்றிருந்தது,  இந்த வழக்கை கடந்த 21 ஜூலை 2006 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோது அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.இதனையடுத்து 26 ஜனவரி 2009 ஆம் குடிவரவு குடியகலவு திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டமையை அடுத்து, 27 ஆம் திகதி ஜனவரி மாதம் 2009ல் அவர் கட்டுநாயக்கவில் வைத்து கைது செய்யப்பட்டார்

களனி பல்கலைகழகம் 26 ஆம் திகதி மீண்டும் திறப்பு

kelaniya-sri-lanka.jpgகளனி பல்கலைக்கழகம் எதிர்வரும் 26 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என களனி பல்கலைகழகத் துணை வேந்தர் தெரிவித்துள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதம் இரு குழுக்களிடையே இடம்பெற்ற மோதலையடுத்து பல்கலைகழகம் மூடப்பட்டது. எதிர்வரும் 25 ஆம் திகதி மாணவர்கள் பல்கலைகழக விடுதிகளுக்கு அனுமதிக்கப்படுவர் எனவும் துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.

வருண் காந்தி மீது இரண்டு கிரிமினல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அவர் குற்றவாளி என நிரூபிக்கப்படவில்லை. – பாஜக

20-varun-ganthi.jpgதுவேஷப் பேச்சு தொடர்பாக வருண் காந்தி மீது இரண்டு கிரிமினல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதைக் காரணம் காட்டியும், தேர்தல் ஆணையம் அவரை போட்டியிடுவதிலிருந்து தடை செய்ய முடியாது. காரணம், அவர் கோர்ட்டில் குற்றவாளி என நிரூபிக்கப்படவில்லை. கிரிமினல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, கோர்ட் மூலம் 2 ஆண்டுகளுக்கு தண்டனை விதிக்கப்பட்டால் மட்டுமே தற்போதைய சட்டப்படி தேர்தலில் நிற்க தடை விதிக்க தேர்தல் ஆணையத்தால் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜகவுக்கு அறிவுரை மட்டுமே கூறும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு உண்டு. அதை அமல்படுத்த அது முடியாது என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. மேலும், தேர்தல் ஆணையம் அதிகபட்சம் பாஜகவின் தேர்தல் சின்னத்தை பிலிபித் தொகுதியில் முடக்கி வைக்க முடியும். அது கூட கடைசிக் கட்ட முயற்சியாகவே இருக்கும் என்கிறார்கள். அப்படிச் செய்வதற்கு தேர்தல் ஆணையம் அவசரப்படாது என்றும் கூறப்படுகிறது.

சர்வதேச காச நோய் தினம் உலகெங்கும் இன்று அனுஷ்டிப்பு

robertkoch_.jpgசர்வதேச காசநோய் தினம் இன்று உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகின்றது. காச நோய் தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப் புணர்வை ஏற்படுத்தி நோய் பரவுவதைத் தடுப்பதுடன், நோய்க்கான சிகிச்சை முறைகள் தொடர்பாக மக்களை தெளிவுபடுத்தும் நோக்கத்துடன் வருடந்தோறும் மார்ச் மாதம் 24ம் திகதி சர்வதேச காசநோய் விழிப்புணர்வு தினமாக அனுஷ்டிக்கப்படுகின்றது.

இலங்கையில் இம்முறை சர்வதேச காச நோய் தினத்தை அனுஷ்டிப்பதற்கான விரிவான ஏற்பாடுகளை சுகாதார அமைச்சு மேற்கொண்டுள்ளது. மாவட்ட மட்டத்தில் மாவட்ட மார்பு நோய் சிகிச்சை நிலையங்களின் மூலமாக பல்வேறு விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

காசநோய் பற்றி வரலாறு, நோய்க்காரணி, அதன் அறிகுறிகள், நோய்பரவும் விதம், அதற்கான சிகிச்சை முறைகள் மற்றும் நோய்பரவுவதைக் கட்டுப்படுத்துவதற் கான வழிவகைகள் பற்றி மக்களைத் தெளிவுபடுத்து வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதேவேளை, காசநோய் தொடர்பாக பாடசாலை மாணவர்களை தெளிவுபடுத்தும் நோக்கத்துடன் சுகாதார அமைச்சு கல்வியமைச்சுடன் இணைந்து விசேட வேலைத்திட்டமொன்றினை ஆரம்பித்துள்ளது.