எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

உணவு விஷமானதென்று மருத்துவமனைக்கு சிகிச்சைபெற வந்தவர்களில் 95 சதவீதமானோருக்கு எதுவித நோயும் இல்லை.

t-mala-stu.pngதிருகோண மலையில் உணவு விஷமானதென்ற செய்தி பரவியதைத் தொடர்ந்து திருகோணமலை மருத்துவமனைக்கு சிகிச்சைபெற வந்தவர்களில் 95 சதவீதமானோருக்கு எதுவித நோயும் ஏற்படவில்லையென கிழக்கு மாகாண பொதுச் சுகாதாரத்திற்கு பொறுப்பான வைத்திய அதிகாரி டாக்டர் இ.ஜி.ஞானகுணாளன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையில் உணவு விஷமடைந்தமை தொடர்பாக டாக்டர் இ.ஜி.ஞான குணாளனால் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு அனுப்பிய விசாரணை அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருப்பதுடன் இவ் அறிக்கையின் பிரதி கொழும்பு சுகாதாரத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளது.

ராமதாசுடன் சந்திப்புக்கு ஜெயலலிதா போட்ட திடீர் நிபந்தனை

jaya-ram.jpgஅதிமுக வில் சேர முடிவெடுத்து விட்டதைத் தொடர்ந்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நாளை சந்திக்கிறார். அதிமுக கூட்டணியில் இணைய நேற்று பாமக பொதுக்குழுக் கூட்டம் சம்மதம் தெரிவித்தது. இதையடுத்து அதிமுக கூட்டணிக்கு வருகிறது பாமக.

பொதுக்குழுக் கூட்டம் முடிந்ததும், ஜெயலலிதாவை, ராமதாஸ் சென்று சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. மாலை 4 மணிக்கு அப்பாயின்ட்மென்ட் வாங்கப்பட்டிருந்தது. ஆனால் அப்படி எந்த சந்திப்பும் நேற்று நடைபெறவில்லை. அதேசமயம், அதிமுக தரப்பிலிருந்தும் பாமக முடிவு குறித்து எந்தவித ரியாக்ஷனும் வெளியாகவில்லை. இதனால் பாமக தரப்பில் லேசான பீதி பரவியது.

மத்திய அமைச்சர்கள் அன்புமணியும், வேலுவும் ராஜினாமா செய்துவிட்டு வந்த பிறகு சந்திக்கலாம் என்று ராமதாசுக்கு ஜெயலலிதா திடீர் நிபந்தனை போட்டதால் தான் இந்தச் சந்திப்பு நடக்கவில்லை என்று தெரியவந்துள்ளது. நாளை இருவரும் டெல்லி சென்று பிரதமரிடம் ராஜினாமா கடிதம் தரவுள்ளனர். இதையடுத்து ராமதாஸ் நாளை காலை 10 மணிக்கு ஜெயலலிதா சந்திக்க அப்பாயிண்ட்மெண்ட் தரப்பட்டுள்ளது.

பாமக தேர்தல் அறிக்கையில் தனி ஈழம்

26-ramsoss.jpgஇலங்கையில் தமிழர்களுக்கு தனி நாடு உருவாக பாமக பாடுபடும் என்று அக் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பாமகவின் தேர்தல் அறிக்கையை அதன் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று வெளியிட்டார். அதில் மொத்தம் 44 தலைப்புகளில் திட்டங்கள், கொள்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

ஈழத் தமிழர்கள் பிரச்சனையைத் தீர்க்க அங்கு தமிழர்களுக்கு தனி நாடு அமைவது தான் ஒரே வழி. அதை உருவாக்க பாடுபடுவோம். இந்தப் பிரச்சனையை தீர்க்க வேண்டியது இந்தியாவின் கடமையாகும். இந்தியா தனது கடமையை ஆற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை பாமக எடுக்கும்.

கச்சத் தீவை மீட்க நடவடிக்கை எடுப்போம்.

நாட்டை சிறப்பாக ஆளும் வகையில் மாநிலங்களைப் பிரித்து சிறியதாக 50 மாநிலங்களை உருவாக்க மத்திய அரசை நெருக்குவோம். என்று கூறப்பட்டுள்ளது.

சட்டரீதியற்ற பட்டங்களுக்குத் தடை – எஸ்.பி. அரசுக்கு நன்றி

spdesanayaka.jpg
அமைச்சர்களுக்கு சட்ட ரீதியற்ற வகையில் கலாநிதி, தேசபந்து போன்ற கௌரவப் பட்டங்கள் வழங்குவதைத் தடை செய்ய குழு ஒன்றை அரசு நியமித்துள்ளது.  இது வரவேற்கத்தக்கது. இதற்காக அரசுக்கு நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என எஸ்.பி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பல்கலைக் கழகங்களின் பட்டங்களுக்கு மட்டுமே மதிப்பளித்து நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். 

இனம்காணப்பட்ட 14 அரச சார்பற்ற நிறுவனங்களுக்கே சேவையில் ஈடுபட அனுமதி – சமூக சேவைகள் அமைச்சர்

இலங்கையில் நூற்றுக் கணக்கான அரச சார்பற்ற நிறுவனங்கள் இயங்குகின்றபோதும் அவற்றுள் சிறந்த சேவையாற்றுபவைகளாக இனம்காணப்பட்டுள்ள 14 அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு வன்னயிலிருந்து இடம்பெயர்ந்த மக்களுக்குச் சேவையாற்ற அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக சமூக சேவைகள் அமைச்சர் லயனல் பிரேமசிறி தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சேவையில் ஈடுபட்டிருந்த நூற்றுக் கணக்கான அரச சார்பற்ற நிறுவனங்கள் அங்குள்ள மக்களுக்கு எந்த சேவையையும் வழங்கவில்லை. அவைகள் புலிகளுக்கே உதவி செய்து வந்தன. புலிகள் பங்கர் அமைப்பதற்கு உதவிய அரச சார்பற்ற நிறுவனங்களும் உள்ளன. தற்போது வன்னியில் சேவையாற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள 14 அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகளைக் கண்காணிக்க ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பெசில் ராஜபக்ஷ எம்.பி.யின் தலைமையில் செயலணியொன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர அமைச்சர்களான மஹிந்த சமரசிங்க, றிஷாத் பதியுதீன் மற்றும் மாவட்ட அதிபர்கள் உள்ளிட்ட விசேட குழுக்களும் இந்நிறுவனங்களின் செயற்பாடுகளைக் கண்காணித்து வருகின்றன.

இதேவேளை,  அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகளைக் கண்காணிக்கும் வகையில் விசேட சட்டமூலமொன்று விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இச்சட்டமூலம் தொடர்பான அமைச்சரவைப் பத்திரமொன்று சமர்ப்பிக்கப்பட்டு அதற்கு அங்கீகாரமும் கிடைத்துள்ளது என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

கனணி மயப்படுத்தப்பட்ட புதிய சாரதி அனுமதிப்பத்திரம் இன்று முதல் அறிமுகம் – விநியோக நடவடிக்கைகளை பிரதமர் ஆரம்பித்து வைத்தார்.

licence.jpgகனணி மயப்படுத்தப்பட்ட புதிய சாரதி அனுமதிப் பத்திரம் இன்று அறிமுகம் செய்து வைக்கப்பட்டதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. உயர் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சகல தகவல்களையும் உள்ளடக்கிய இப்புதிய சாரதி அனுமதிப்பத்திர விநியோக நடவடிக்கைகளை பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க இன்று காலை ஆரம்பித்து வைத்தார்.

போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெருமவின் தலைமையில் கொழும்பு, வேரஹெரயிலுள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் இன்று காலை இடம்பெற்ற இது தொடர்பான வைபவம் நடைபெற்றது.

ஸ்மார்ட் கார்ட்| எனும் பெயரிடப்பட்ட இந்த சாரதி அனுமதிப் பத்திரத்தில் தேசியக் கொடி, அரசாங்க இலச்சினை,  சாரதியின் புகைப்படம்,  இரகசிய தகவல்களை சேகரிக்கும் அடையாளம்,  சாரதியின் பெயர், தொடர் இலக்கம், பிறந்த திகதி, விநியோகிக்கப்படும் திகதி,  காலாவதியாகும் திகதி, விநியோகித்த உத்தியோகத்தர்,  அடையாள அட்டை இலக்கம் மற்றும் வாகனங்களின் வகைகள் போன்ற விபரங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் நாயகம் அநுராத விஜேதுங்க தெரிவித்தார். 

பயங்கரவாதத்தை ஒழிக்கும் அரசின் செயற்பாட்டில் எந்த மாற்றமும் ஏற்படாது : வெளியுறவு செயலர்

dr-palitha.jpg“பயங்கர வாதத்தைத் தோற்கடிக்கும் அரசாங்கத்தின் தற்போதைய நிகழ்ச்சி நிரலில் எந்த மாற்றமும் ஏற்படாது. இராணுவ மற்றும் மனிதாபிமான நடவடிக்கை தொடரும்” என்று வெளியுறவு செயலாளர் கலாநிதி பாலித்த கோஹன தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் மேலும் கூறுகையில், “அரசாங்கம் தற்போதைய நிலையில் மேற்கொண்டு வரும் பயங்கரவாதத்தை ஒழிக்கும் செயற்பாட்டில் எந்த மாற்றமும் ஏற்படாது. இராணுவ நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும். அத்துடன் மனிதாபிமான நடவடிக்கைகளும் தொடரும். வன்னிப் பகுதியிலிருந்து பொது மக்களை மீட்கும் நடவடிக்கையும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். இந்த நிகழ்ச்சி நிரல் எந்தக் காரணத்தைக் கொண்டும் மாற்றப்படமாட்டாது.

சர்வதேச மட்டத்தில் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்படும் பிரசாரங்களுடன் ஒப்பிடுகையில் இலங்கை அரசாங்கத்தின் பிரசார நடவடிக்கைகள் குறைவாகவே உள்ளன. அண்மையில் அமெரிக்காவில் புலம் பெயர் தமிழர்கள் 2000 பேர் (அரச ஊழியர்கள்) விடுமுறையில் இருந்துகொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். ஆனால் இங்கு வெளிவிவகார அமைச்சின் சில அதிகாரிகளே இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். ஒப்பீட்டளவில் எமது பக்க செயற்பாடு குறைவானதாகும். இருந்தாலும் நாங்கள் வெற்றிபெற்றுவந்துள்ளோம்” என்றார்.

சிறுமி வர்ஷா கொலை தொடர்பாக முறையான விசாரணையை நடத்துமாறு ஐ.தே.க. வலியுறுத்தல்

Regie_Varsaமனித உரிமை மீறல் கலாசாரத்தை அரசாங்கம் தோற்றுவித்திருப்பதாக கடும் விசனத்தை வெளியிட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சி, திருமலையில் சிறுமி வர்ஷா கொலை தொடர்பாக முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி கேட்டுள்ளது.

அரசாங்கம் சர்வதேச அமைப்புகளிடமிருந்து நிதியுதவியை ஏற்றுக்கொள்ளும் அதேநேரம், மனித உரிமை மீறல் குறித்து அவர்கள் பேசுகின்ற போது அதனை ஏற்க மறுப்பது எந்த வகையில் நியாயமானதெனவும் கேள்வியெழுப்பியுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் அக்கட்சியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கலந்துகொண்டு பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் பேசுகையில்;  திருகோணமலையில் சில தினங்களுக்கு முன்னர் ஆறு வயது சிறுமியான வர்ஷா கப்பம் கோரப்பட்டு, கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பரிதாபமானதும் மிலேச்சத்தனமானதுமான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இதனை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் மேற்கொண்டதாக தெரியவந்துள்ளது.

இந்த தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பினர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் உடன்படிக்கை செய்துகொண்டு அரசுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இக்கொலை தொடர்பில் அரசாங்கம் பொறுப்புக் கூறவேண்டியது கடமையாகும். அரசாங்கம் உண்மையில் இக்கொலையுடன் தொடர்பு இல்லையாயின் உரிய முறையில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கோருகின்றேன்.

இக்கொலை தொடர்பான விசாரணை உரிய முறையில் மேற்கொள்வதற்கு சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு இருக்க வேண்டும். இதன்மூலம் பொலிஸார் எந்தவித அழுத்தங்களுமின்றி செயற்பட முடியும். இந்த சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு முதல் நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்துகின்ற ஏனைய சுயாதீன ஆணைக்குழுக்கள் அமைக்கப்படுவதற்கு அரசியலமைப்பு பேரவை அவசியமானதாகும். இதனை செய்யுமாறு நாம் அரசை வலியுறுத்தி வந்தபோதும் அதனை அரசு மேற்கொள்ளவில்லை.

2005 ஆம் ஆண்டுக்கு பின்னர் நாட்டில் கொலை, கொள்ளை, கடத்தல், கப்பம் கோரல், தாக்குதல் சம்பவங்கள் பரவலாக இடம்பெற்று வருகின்றன. இது தொடர்பில் உரிய விசாரணைகள் இடம்பெறாததனாலேயே இன்று ஆறு வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

யுத்தத்துக்கு அப்பாற்பட்டு ஊடகவியலாளர்கள், வியாபாரிகளென பலதரப்பட்ட தரப்பினர் மீது தாக்குதல், கடத்தல், கப்பம் மற்றும் படுகொலைகள் இடம்பெற்றுள்ளன.

இந்த அரசாங்கம் நாட்டில் வேறு எதனையும் அல்ல கொலை, கொள்ளை, கடத்தல், கப்பம் கோரல், படுகொலை கலாசாரத்தையே உருவாக்கியுள்ளது. கடந்த 21/2, 3 வருடங்களாக இச்சம்பவங்களின் பின்னால் ஆயுதக் கும்பலொன்று உள்ளதென்பதை பாராளுமன்றத்தில் நானும் எனது கட்சியும் தெரிவித்துள்ளோம். இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்குமாயின் இந்த பரிதாப சம்பவம் இடம்பெற்றிருக்காது. எனவே, இதற்கு அரசு பொறுப்புக் கூற வேண்டும். அவ்வமைப்பினர் ஆயுதத்தை கையளித்துள்ளதாக அரசு கூறிய போதிலும் இன்னும் ஆயுதங்கள் அவர்களிடம் உள்ளது.

இந்நிலையிலேயே நாட்டில் மனித உரிமை மீறல்கள் மோசமாக இடம்பெறுவதாக சர்வதேச அமைப்புகள் தெரிவித்து வருகின்றன. அரசாங்கம் நிதிப் பற்றாக்குறை காரணமாக சர்வதேச அமைப்புகளிடம் கோரிக்கை விடுத்து நிதியை ஏற்கின்ற நிலையில் அவர்கள் மனித உரிமை மீறல் குறித்து பேசுகின்ற போது அரசு விமர்சிக்கின்றது. இது எந்த வகையில் நியாயமானதாகும்.

எனவே, நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டவும் ஜனநாயகத்தை நிலைபெறச் செய்யவும் அரசியலமைப்பு பேரவையை உருவாக்குமாறு கோருகின்றோம். இதன் மூலமே நாட்டை உரிய முறையில் கொண்டு செல்ல முடியுமெனவும் தெரிவித்தார்.

ருபெல்லா தடுப்பூசி ஏற்றியதால் வடக்கிலும் மாணவி பாதிப்பு

vaccina.jpgருபெல்லா தடுப்பூசி மருந்து ஏற்றப்பட்ட யாழ்ப்பாணப் பகுதி மாணவி ஒருவரும் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  சுழிபுரம் விக்ரோறியா கல்லூரியில் தரம் 8 இல் கல்வி பயிலும் மனோகரன் நிரோஜினி என்ற 13 வயது மாணவியே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த வியாழக்கிழமை இக்கல்லூரி மாணவிகளுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டது. மாலையில் இந்த மாணவிக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டதையடுத்து சங்கானை அரசினர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இரண்டு நாட்களாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற பின்னர் இம்மாணவி குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இந்த மருந்தை இனிமேல் மாணவிகளுக்கு ஏற்றவேண்டாம் என சுகாதார அமைச்சும், கல்வியமைச்சும் அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பிரிட்டிஷ் மகாராணியின் கௌரவ விருது இரு இலங்கையருக்கு

பிரிட்டிஷ் மகாராணியின் உயர்கௌரவ விருதினைப் பெற்றுக்கொள்வதற்கு கொழும்பிலுள்ள பிரிட்டிஷ் தூதுவராலயத்தில் கடமையாற்றிய இருவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். பிரிட்டிஷ் தூதுவராலயத்திற்காக சிறந்த சேவையாற்றிய பிரான்சிஸ் ஞானப்பிரகாசம், மஹேந்திர ரணவீர ஆகிய இருவரே இந்த உயர் விருதுக்காக தெரிவுசெய்யப்பட்டவர்களாவர்.

பிரான்சிஸ் ஞானப்பிரகாசம் , கடந்த 30 வருடங்களுக்கு மேலாக பிரிட்டிஷ் தூதுவராலயத்தில் பாதுகாப்புப் பிரிவில் சேவையாற்றியுள்ளார்.

அதேவேளை, மஹேந்திர ரணவீர, கடல்கோள் ஏற்பட்ட காலப்பகுதியில் பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு ஆலோசனை உதவி வழங்கியவராவார். இதேவேளை, 1958 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் வசித்து வரும் பிரிட்டிஷ்காரரான கிறிஸ்தோபர் வோர்திங்டனுக்கும் இவ்விருது வழங்கப்படுகின்றது.