மனித உரிமை மீறல் கலாசாரத்தை அரசாங்கம் தோற்றுவித்திருப்பதாக கடும் விசனத்தை வெளியிட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சி, திருமலையில் சிறுமி வர்ஷா கொலை தொடர்பாக முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி கேட்டுள்ளது.
அரசாங்கம் சர்வதேச அமைப்புகளிடமிருந்து நிதியுதவியை ஏற்றுக்கொள்ளும் அதேநேரம், மனித உரிமை மீறல் குறித்து அவர்கள் பேசுகின்ற போது அதனை ஏற்க மறுப்பது எந்த வகையில் நியாயமானதெனவும் கேள்வியெழுப்பியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் அக்கட்சியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கலந்துகொண்டு பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் பேசுகையில்; திருகோணமலையில் சில தினங்களுக்கு முன்னர் ஆறு வயது சிறுமியான வர்ஷா கப்பம் கோரப்பட்டு, கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பரிதாபமானதும் மிலேச்சத்தனமானதுமான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இதனை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் மேற்கொண்டதாக தெரியவந்துள்ளது.
இந்த தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பினர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் உடன்படிக்கை செய்துகொண்டு அரசுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இக்கொலை தொடர்பில் அரசாங்கம் பொறுப்புக் கூறவேண்டியது கடமையாகும். அரசாங்கம் உண்மையில் இக்கொலையுடன் தொடர்பு இல்லையாயின் உரிய முறையில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கோருகின்றேன்.
இக்கொலை தொடர்பான விசாரணை உரிய முறையில் மேற்கொள்வதற்கு சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு இருக்க வேண்டும். இதன்மூலம் பொலிஸார் எந்தவித அழுத்தங்களுமின்றி செயற்பட முடியும். இந்த சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு முதல் நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்துகின்ற ஏனைய சுயாதீன ஆணைக்குழுக்கள் அமைக்கப்படுவதற்கு அரசியலமைப்பு பேரவை அவசியமானதாகும். இதனை செய்யுமாறு நாம் அரசை வலியுறுத்தி வந்தபோதும் அதனை அரசு மேற்கொள்ளவில்லை.
2005 ஆம் ஆண்டுக்கு பின்னர் நாட்டில் கொலை, கொள்ளை, கடத்தல், கப்பம் கோரல், தாக்குதல் சம்பவங்கள் பரவலாக இடம்பெற்று வருகின்றன. இது தொடர்பில் உரிய விசாரணைகள் இடம்பெறாததனாலேயே இன்று ஆறு வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
யுத்தத்துக்கு அப்பாற்பட்டு ஊடகவியலாளர்கள், வியாபாரிகளென பலதரப்பட்ட தரப்பினர் மீது தாக்குதல், கடத்தல், கப்பம் மற்றும் படுகொலைகள் இடம்பெற்றுள்ளன.
இந்த அரசாங்கம் நாட்டில் வேறு எதனையும் அல்ல கொலை, கொள்ளை, கடத்தல், கப்பம் கோரல், படுகொலை கலாசாரத்தையே உருவாக்கியுள்ளது. கடந்த 21/2, 3 வருடங்களாக இச்சம்பவங்களின் பின்னால் ஆயுதக் கும்பலொன்று உள்ளதென்பதை பாராளுமன்றத்தில் நானும் எனது கட்சியும் தெரிவித்துள்ளோம். இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்குமாயின் இந்த பரிதாப சம்பவம் இடம்பெற்றிருக்காது. எனவே, இதற்கு அரசு பொறுப்புக் கூற வேண்டும். அவ்வமைப்பினர் ஆயுதத்தை கையளித்துள்ளதாக அரசு கூறிய போதிலும் இன்னும் ஆயுதங்கள் அவர்களிடம் உள்ளது.
இந்நிலையிலேயே நாட்டில் மனித உரிமை மீறல்கள் மோசமாக இடம்பெறுவதாக சர்வதேச அமைப்புகள் தெரிவித்து வருகின்றன. அரசாங்கம் நிதிப் பற்றாக்குறை காரணமாக சர்வதேச அமைப்புகளிடம் கோரிக்கை விடுத்து நிதியை ஏற்கின்ற நிலையில் அவர்கள் மனித உரிமை மீறல் குறித்து பேசுகின்ற போது அரசு விமர்சிக்கின்றது. இது எந்த வகையில் நியாயமானதாகும்.
எனவே, நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டவும் ஜனநாயகத்தை நிலைபெறச் செய்யவும் அரசியலமைப்பு பேரவையை உருவாக்குமாறு கோருகின்றோம். இதன் மூலமே நாட்டை உரிய முறையில் கொண்டு செல்ல முடியுமெனவும் தெரிவித்தார்.