இலங்கையில் நூற்றுக் கணக்கான அரச சார்பற்ற நிறுவனங்கள் இயங்குகின்றபோதும் அவற்றுள் சிறந்த சேவையாற்றுபவைகளாக இனம்காணப்பட்டுள்ள 14 அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு வன்னயிலிருந்து இடம்பெயர்ந்த மக்களுக்குச் சேவையாற்ற அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக சமூக சேவைகள் அமைச்சர் லயனல் பிரேமசிறி தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சேவையில் ஈடுபட்டிருந்த நூற்றுக் கணக்கான அரச சார்பற்ற நிறுவனங்கள் அங்குள்ள மக்களுக்கு எந்த சேவையையும் வழங்கவில்லை. அவைகள் புலிகளுக்கே உதவி செய்து வந்தன. புலிகள் பங்கர் அமைப்பதற்கு உதவிய அரச சார்பற்ற நிறுவனங்களும் உள்ளன. தற்போது வன்னியில் சேவையாற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள 14 அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகளைக் கண்காணிக்க ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பெசில் ராஜபக்ஷ எம்.பி.யின் தலைமையில் செயலணியொன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர அமைச்சர்களான மஹிந்த சமரசிங்க, றிஷாத் பதியுதீன் மற்றும் மாவட்ட அதிபர்கள் உள்ளிட்ட விசேட குழுக்களும் இந்நிறுவனங்களின் செயற்பாடுகளைக் கண்காணித்து வருகின்றன.
இதேவேளை, அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகளைக் கண்காணிக்கும் வகையில் விசேட சட்டமூலமொன்று விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இச்சட்டமூலம் தொடர்பான அமைச்சரவைப் பத்திரமொன்று சமர்ப்பிக்கப்பட்டு அதற்கு அங்கீகாரமும் கிடைத்துள்ளது என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.