எழுத்தாளர்கள்
எழுத்தாளர்கள்
இன்று மாலை 3 மணி முதல் மே 13ம் தேதி மாலை வரை கருத்துக் கணிப்புகளை வெளியிடவும், ஒளிபரப்பவும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
இதுகுறித்து இன்று தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கருத்துக் கணிப்புகள், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் உள்ளிட்டவை செவ்வாய்க்கிழமை மாலை 3 மணி முதல் மே 13ம் தேதி வரை ஒளிபரப்பவோ, பிரசுரிக்கப்படவோ கூடாது.
இதுதொடர்பாக பிப்ரவரி 17ம் தேதியே உத்தரவிடப்பட்டு விட்டது. ஜனவரி 19ம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் கருத்துக் கணிப்புகளுக்குத் தடை விதிக்கப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை மாலை 3 மணி முதல் கடைசிக் கட்டத் தேர்தல் முடியும் வரை இந்த தடை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங் கையில் இடம்பெற்று வருகின்ற யுத்தத்தில் சிக்கியுள்ள மக்களது விடயங்கள் தொடர்பாக இணைத்தலைமை நாடுகள் தொடர்ந்து பேசிவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. நேற்றுக்காலை அமெரிக்கா, நோர்வே, ஐரோப்பிய ஒன்றிய மற்றும் ஜப்பான் நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் தொலைபேசி ஊடாக கலந்துரையாடியுள்ளனர். இக்கருத்தரங்கில் அமெரிக்கா சார்பாக அந்நாட்டின் மத்திய மற்றும் தென்கிழக்காசிய நாட்டு விவகாரங்களுக்கான பிரதி செயலாளர் ரிச்சார்ட் பௌசர் கலந்து கொண்டுள்ளார்.
இக்கருத்தரங்கு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் ரொபேர்ட் வூட், இலங்கை அரசு புத்தாண்டை முன்னிட்டு யுத்தத்திற்கு கொடுத்திருக்கின்ற 48 மணி நேர ஓய்வை இணைத்தலைமை நாடுகள் வரவேற்பதாகவும் அதே நேரத்தில் இருதரப்பும் அங்கு சிக்கியுள்ள மக்களின் அடிப்படை தேவை விடயங்களில் கவனம் கொண்டு அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் மருந்து வகைகள் அவர்களைச் சென்றடைவதை உறுதிப்படுத்துவதுடன் அங்கு காயமடைந்துள்ள மக்கள் சிகிச்சைக்காக வெளியேற இருதரப்பும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார்.
அத்துடன் வன்னியில் சிக்கியுள்ள மக்களை அவர்கள் விரும்பிய இடங்களுக்குச் செல்ல புலிகள் அனுமதிக்க வேண்டும் என அவர்கள் மீண்டும் கேட்டுள்ளனர் எனவும் இலங்கை விடயங்கள் தொடர்பாக இணைத்தலைமை நாடுகள் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நாடாத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மொனராகலை மாவட்டத்திலுள்ள கல்டெம் எரா கிராமததில் நேற்றிரவு ஆயுதக் குழுவொன்றினால் மேற் கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 பெண்கள் உட்பட மூவர் கொல்லப்பட்டுள்ளனர். சம்பவத்தில் வெட்டுக் காயங்களுடன் மற்றுமொரு பெண் மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிராமவாசிகள் புத்தாண்டுப் பண்டிகைக்குத் தயாராகிக் கொண்டிருந்த வேளையில் அங்கு நுழைந்த ஆயுதக் குழுவொன்று இவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகப் பொலிசார் கூறுகின்றனர். ஏற்கனவே இந்தப் பகுதியிலுள்ள மஹாகொடயாய என்ற கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு இடம் பெற்ற இதே பாணியிலான சம்பவமொன்றில் 9 கிராமவாசிகள் கொல்லப்பட்டும் மற்றுமொருவர் காயமடைதிருந்தும் இருந்தார்
இந்தச் சம்பவம் இடம்பெற்று 48 மணித்தியாலத்திற்குள் நேற்றைய சம்பவம் இடம் பெற்றுள்ளது. இந்த இரண்டு தாக்குதல்களும் விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனப் பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். தற்போது அந்தப் பகுதியில் பாதுகாப்பு தரப்பினர் விசேட தேடுதல் நடவடிக்கையொன்றை மேற் கொண்டுள்ளனர்.
புத்தாண்டுப் பிறப்புக் கொண்டாட்டங்களின் போது நடைபெற்ற விபத்துக்களில், 202 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று காலை 6.00 வரையான 24 மணி நேரத்தில் மட்டும் 75 பேர் மேற்படி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது ஏற்பட்டுள்ள தோல்வியை முழுமையாக ஏற்றுக் கொண்டு ஆயுதங்களை கீழே வைத்து விட்டு அரசாங்கத்திடம் சரணடைவதற்கு இந்த தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு அரிய சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளால் தடுத்து வைக்கப்பட்டு பாரிய துன்பங்களுக்கு முகங்கொடுத்து வரும் அப்பாவி மக்கள் தேசியப் புத்தாண்டைப் பொருத்தமான முறையில் கொண்டாட வாய்ப்பும் அளிக்கப்பட வேண்டும்.
இதன் காரணமாகப் புத்தாண்டு காலப் பகுதியில் அத்தியாவசிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாத்திரம் அதிக கவனம் செலுத்தும்படி படை நடிவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது
இலங்கை அரசு தற்போது அறிவித்துள்ளது ஒரு தலைபட்சமான போர் நிறுத்தம், கண்துடைப்பு அறிவிப்பு. இப்போது அவசரத் தேவை நிரந்தர போர் நிறுத்தமே என்று விடுதலைப் புலிகள் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக விடுதலைப் புலிகளின் அரசியல்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:
இரண்டு நாள் போர் நிறுத்தம் என்ற ஒரு கண்துடைப்பு அறிவிப்பை சிறிலங்கா அரசாங்கம் ஒரு தலைப்பட்சமாக அறிவித்து ஒரு அரசியல் நாடகத்தை அரங்கேற்றியுள்ளது.
உலக நாடுகளின் வேண்டுகோளுக்கு செவிசாய்ப்பது போலவும் – முற்றுகைக்குள் உள்ள தமிழ் மக்களுக்கு நன்மை செய்வது போலவும் காட்டிக்கொள்ள இந்தப் போர் நிறுத்த அறிவிப்பை சிறிலங்கா அரசு பயன்படுத்துகின்றது.
சிறிலங்கா அரசின் இந்தப் போர்நிறுத்த அறிவிப்பை – புதுவருடப்பிறப்பிற்கு என தமது படையினருக்கு அது கொடுத்துள்ள இரண்டு நாள் விடுப்பு என்றே நாம் கருதுகின்றோம்.
போர் நிறுத்தம் என்று அறிவித்துவிட்டு மக்கள் மீதான குண்டுத் தாக்குதல்களையும் துப்பாக்கித் தாக்குதல்களையும் சிங்களப் படைகள் தொடர்ந்து நடத்துகின்றன.
உலகையும் – தமிழ் மக்களையும் ஏமாற்றும் நோக்கம் கொண்ட இந்த அரசியல் நாடகத்தை புலிகள் இயக்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது.
இராணுவ ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பொருள் பொதிந்த ஒரு நிரந்தரப் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்று புலிகள் இயக்கம் நீண்ட நாளாகவே கோரி வருகின்றது.
இதனையே நாம் இப்போதும் வலியுறுத்த விரும்புகின்றோம்.
இத்தகைய போர் நிறுத்தம் அரசியல் பேச்சுவார்த்தைக்கான அடித்தளத்தையும் கொண்டிருக்க வேண்டும். அத்துடன் அமைதி வழியில் தமிழரின் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வொன்றைக்காணும் ஏது நிலையையும் அது உருவாக்க வேண்டும் என்று புலிகள் இயக்கம் விரும்புகின்றது.
இத்தகையதொரு நிரந்தரப் போர் நிறுத்தத்தை நிபந்தனைகள் ஏதுமின்றி ஏற்றுக்கொள்ள புலிகள் இயக்கம் தயாராகவுள்ளது.
சிங்களப் படைகளின் முற்றுகைப் போருக்குள் சிக்கியுள்ள தமிழ் மக்கள் இங்கே சொல்லொணாத் துயர்களை அன்றாடம் அனுபவித்து வருகின்றனர்.
மக்களின் இந்த அவல வாழ்க்கை உலகத்தலைவர்களாலும் – உலக மக்களாலும் அனுதாபமாகப் பார்க்கப்படுவது எமது மக்களுக்கு ஆறுதல் அளிப்பதாகவுள்ளது.
சிங்கள அரசின் உணவு மற்றும் மருந்துத் தடைகளால் மக்கள் பெரும் துயரை அனுபவித்து வருகின்றனர். தற்போது பெய்துள்ள கோடை மழையால் ஏற்பட்ட வெள்ளம், நன்னீர் கிணறுகளை அசுத்தமாக்கியுள்ளது.
இதனால் குடிநீருக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
படையினரின் குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்படும், காயமடையும் மக்களின் எண்ணிக்கை நாளொன்றிற்கு 300 என்ற உச்ச அளவை எட்டியுள்ளது.
மக்களின் வாழ்விடத்திற்கு நெருங்கி நின்றவாறு படையினர் நடத்தும் துப்பாக்கித் தாக்குதல்களால் இப்போது அதிகளவில் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
வெட்டவெளியான மணற்திடல்களில் – தறப்பாள் கூடாரங்களுக்குள் முறையான காப்பகழிகள் இன்றி வாழும் மக்களை இந்த ரவைகள் தாக்குகின்றன.
இவ்விதம் சிங்களப் படைகளாலும் இயற்கை அனர்த்தத்தாலும் பாதிக்கப்பட்ட நிலையில் வாழும் எமது மக்களுக்கு உடனடிப் போர் நிறுத்தம் மிகவும் அவசியமாகவுள்ளது.
இந்தப் போர் நிறுத்தம் சிறிலங்கா அரசு விரும்புவது போல அதன் ராணுவ நலன்களை பிரதிபலிப்பதாக இருக்கக்கூடாது.
மாறாக, மனிதாபிமான நோக்கம் கொண்டதாகவும் தமிழரின் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரத்தீர்வு தேடக்கூடிய அரசியல் நோக்கம் கொண்டதாகவும் அமைய வேண்டும்.
அதேவேளை அனைத்துலக அனுசரணையுடன் கூடிய ஒரு போர்நிறுத்தமே ஆக்கபூர்வமானதாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும் என்று புலிகள் கூறியுள்ளனர்.
இலங்கை அரசு அறிவித்துள்ள தாக்குதல் நிறுத்தத்தை விடுத லைப்புலிகள் முறைப்படி அனு சரித்துச் செயற்பட்டால், போர் நிறுத்தத்தை நடைமுறைக்குக் கொண்டுவர அது உதவும் என்று இந்திய உள்துறை அமைச்சர் பி.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இலங்கை தாக்குதல் நிறுத்தத்தை அறிவித்தமை இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு கிடைத்த வெற்றி எனவும் அவர் கூறியுள்ளார். இலங்கையில் போர் நிறுத்தம் ஒன்று கொண்டுவரப் படவேண்டும் என்று இந்தியா இலங்கையைத் தொடர்ந்து வற்புறுத்தி வந்தது.
போர் நிறுத்தம் இரு தரப்புகளும் சம்மதித்தாலேயே நடைமுறைப்படுத்த முடியும் விடுதலைப் புலிகளும் போர் நிறுத்த அறிவிப்பை உடன் வெளியிடவேண்டும். தாக்குதல் இடைநிறுத்தம் இரு நாள்களில் முடிவடையாமல் தொடரவேண்டும் என்பதனையே சமாதானத்தை விரும்பும் அனைவரும் எதிர்பார்க்கின்றார்கள்.
தாக்குதல் இடைநிறுத்தம் சிறிய அளவிலாளன செயற்பாடுதான். ஆனால் இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கைக்குக் கிடைத்த வெற்றி என்றே கூற வேண்டும். நாம் தொடர்ந்து வழங்கிய அழுத்தத்தினாலேயே இலங்கை அரசு இரண்டு நாள்களும் தாக்குதல் இடைநிறுத்தத்தை அறிவித்தது. ஆனால் விடுதலைப்புலிகளும் இந்தியாவின் ஆலோசனையை ஏற்றுக் கொண்டால், நிரந்தர போர் நிறுத்தம் ஒன்றைக் கொண்டுவர நாம் எடுக்கும் முயற்சி பலன் தரும் என்றார் அமைச்சர் சிதம்பரம்.
“மத்திய அரசு கொண்டுவரப்படவுள்ள உள்ளூராட்சி சபைகள் விசேட திருத்தச் சட்டத்திற்கான அங்கீகாரம் தொடர்பாக கிழக்கு மாகாண சபையின் ஆளும் கட்சி எதிர்வரும் வியாழக்கிழமை கூடி முடிவு எடுக்கும்” என சபையின் அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
இத்திருத்தச் சட்டமூலத்திற்கு சகல மாகாண சபைகளினதும் அங்கீகாரம் வேண்டும் என உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாண சபையின் அங்கீகாரத்திற்காக இச்சட்ட மூலம் முன் வைக்கப்படுகின்றது சபையின் எதிர்க்கட்சிகள் இச்சட்ட மூலத்தை எதிர்ப்பது அல்லது நிராகரிப்பது என ஏற்கனவே அறிவித்துள்ளன.
ஆளும் கட்சியின் நிலைப்பாடு குறித்து அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வைத் தொடர்பு கொண்டு கேட்ட போது, “மத்திய அரசாங்கம் கொண்டு வரப்பட்டவுள்ள உத்தேச சட்ட மூலம் உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி மாகாண சபைகளின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும்.
இதன் படி சபை முதல்வர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாண சபையின் அங்கீகாரத்தைப் பெறுவதற்காக இதனை சபையில் சமர்ப்பிக்கவிருக்கின்றார். உத்தேச சட்டத்தைப் பொறுத்த வரை வடக்கு கிழக்கிற்கு வெளியே வாழும் தமிழ், முஸ்லிம் மக்களின் பிரதிநிதித்துவத்தைப் பாதிப்பதாக தமிழ், முஸ்லிம் கட்சிகளிடையே அச்சம் நிலவுகின்றது. மாகாண சபைக்குரிய அதிகாரப் பரவலாக்கத்திலும் சில பிரச்சினைகள் உள்ளன.
அதே நேரம் சில சாதகமான விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இது தொடர்பாகத் தற்போது ஆராய்ந்து வருகின்றோம். இதனை ஆதரிப்பதா, இல்லையா என்பது குறித்து இது வரை எந்தவொரு தீர்மானமும் எடுக்கவில்லை. எதிர்வரும் வியாழக்கிழமை ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் சகல கட்சி உறுப்பினர்களும் கூடி ஆராய்ந்து முடிவு எடுக்கப்படும்” என்று கூறினார்