![]()
இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்தும், போர் நிறுத்தம் ஏற்பட இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியும் சென்னையில் தீக்குளித்து இறந்து போன சிவானந்தத்தின் உடலுக்கு விடுதலைப் புலிகளின் கொடியைப் போர்த்தி அஞ்சலி செலுத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழ.நெடுமாறனின் தமிழர் தேசிய இயக்கத்தைச் சேர்ந்தவரான சிவானந்தன் (46) சென்னையில் பெயிண்டாரக பணியாற்றி வந்தார்.
கரூரைச் சேர்ந்த இவர் சென்னை வடபழனியில் உள்ள தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணைய அலுவலக வாயிலில் நின்றபடி, இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் உயிரிழப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோஷமிட்டபடி உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார்.
இறுதி ஊர்வலத்தில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், பாமக தலைவர் ஜி.கே. மணி, மக்கள் புதிய தமிழகம் நிறுவனத் தலைவர் துரையரசன், இலங்கை எம்பி சேனாதிபதிராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். அதற்கு முன்பாக சிவானந்தன் உடலுக்கு போலீசார் முன்பாகவே விடுதலைப் புலிகளின் அதிகாரப்பூர்வ புலிக் கொடி போர்த்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புலிகள் கொடி போர்த்தப்பட்டது தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு கரூர் காவல் துறை தகவல் தந்தது. இதையடுத்து க்யூ பிராஞ்ச் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருவதாகத் தெரிகிறது.
