எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

வவுனியா மனிக்பாம் நிவாரண கிராமங்களில் 200 விடுதலைப்புலிகள் சரண்

saran.jpgமோதல் இடம்பெறும் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா மனிக்பாம் நிவாரண கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள குடும்பங்களிலிருந்து விடுதலைப்புலிகளுடன் இணைந்து செயற்பட்டவர்கள் என தெரிவிக்கப்படும் 200 பேர் இராணுவத்தினரிடம் சரணடைந்திருப்பதாக பாதுகாப்பு தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது. அதிகாரிகளினால் பொறுப்பேற்கப்பட்டுள்ள இவர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்படும் என்றும் பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

இடம்பெயர்ந்தோர் மறுவாழ்வுக்கு உதவ நிதிவளம் இல்லை என்கின்றன உள்ளூர் தொண்டு நிறுவனங்கள்

ngo.bmp
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவில் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளவர்களின் மறுவாழ்வுக்கு உதவுமாறு ஜனாதிபதி விடுத்த கோரிக்கையை உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்கள் நிராகரித்துள்ளன.  நலன்புரி நிலையங்களில் உள்ளவர்களுக்கு உதவி வழங்கக்கூடிய நிதிவளம் தங்களிடம் இல்லை என அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று  தகவல் வெளியிட்டுள்ளது. நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளவர்களுக்கான மறுவாழ்வுத்திட்டங்கள் தொடர்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை உள்ளூர் அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகளை அலரிமாளிகையில் சந்தித்துக் கலந்தரையாடினார்.

ஒவ்வொரு நிறுவனமும் தம்மாலான உதவிகளை வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி அவர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். என்றும்  நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளவர்களிற்கு உதவக்கூடிய வகையில்  நிதிவளம் தங்களிடம் இல்லை என்றும் வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் வழங்கும் சிறிய நிதிகளைக் கொண்டு தாம் சிறு சிறு திட்டங்களை நடை முறைப்படுத்தி வருவதாகவும் உள்ளூர் தொண்டர் நிறுவனப் பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் எடுத்துக் கூறினர். உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்கள் போதிய நிதி வளங்களுடன் செயற்படக் கூடிய திட்டத்தை நடைமுறைப்படுத்தப் போவதாக ஜனாதிபதி அவர்களிடம் தெரிவித்தார் என்று கொழும்பு ஊடகம் தனது செய்தியில் விவரித்துள்ளது.

இலங்கைக்கு ஐ.நா.வின் விசேட தூதுவராக கிளின்டன் அல்லது அனானை நியமிக்குமாறு கோரிக்கை

w_news.jpgஇலங்கைக்கு ஐ.நா. தூதுவராக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனை அல்லது முன்னாள் ஐ.நா. செயலாளர் நாயகம் கொபி அனானை நியமிக்குமாறு அமெரிக்கத் தமிழர்கள் அமைப்பானது ஐக்கிய நாடுகளிடம் கோரிக்கை விடுத்திருக்கிறது.

“ஒபாமாவுக்கான தமிழர்கள்’ என்ற அமெரிக்காவிலுள்ள தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த அமைப்பு இக்கோரிக்கையை ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் விடுத்திருக்கிறது.

நிலைமையை தெளிவாக ஆராய்ந்து தீர்வு யோசனையை முன்வைக்கக்கூடியவரை விசேட தூதுவராக நியமிக்குமாறு செயலாளர் நாயகத்துக்கு ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதாக இணையத்தள செய்திகள் தெரிவித்தன.

நளினியை பிரியங்கா சந்தித்த பிறகே இலங்கையில் போர் தீவிரமடைந்தது – ஜெயலலிதா

j-j-j.jpgவேலூர் சிறைக்கு வந்து நளினியை பிரியங்கா காந்தி சந்தித்து விட்டுச் சென்ற பின்னர்தான் இலங்கையில் தமிழர்கள் மீதான போர் தீவிரமடைந்துள்ளது. எனவே சிறையில் பிரியங்காவுக்கும், நளினிக்கும் இடையே நடந்த சந்திப்பின்போது என்ன பேசப்பட்டது என்பதை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் நேற்று மாலை பிரசாரக் கூட்டத்தில் ஜெயலலிதா பேசுகையில்,

ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்கா காந்தி வேலூர் சிறைக்கு சென்று ராஜீவ் கொலையாளி நளினியை சந்தித்தன் மர்மம் என்ன?. இந்த சந்திப்பிற்கு யார் அனுமதி கொடுத்தது?. இருவரும் என்ன பேசிக் கொண்டார்கள்?. பிரியங்கா-நளினி சந்திப்பிற்கு பிறகு தான் இலங்கை தமிழர்கள் மீதான அந்த நாட்டின் ராணுவ தாக்குதல் தீவிரம் அடைந்திருக்கிறது. எனவே, பிரியங்கா-நளினி சந்திப்பின் போது நடந்தவற்றை பகிரங்கப்படுத்த வேண்டும். இதை முதல்வர் கருணாநிதிதான் செய்ய வேண்டும்.

ஈழத் தமிழர் பிரச்சினையை முதல்வர் கருணாநிதி சரியாக கையாளவில்லை. தேர்தலை மனதில் கொண்டுதான் அவர் செயல்படுகிறார். திமுகவுக்கும், காங்கிரஸுக்கும் மக்கள் சரியான பாடம் கற்பிக்க வேண்டும். தனி ஈழம் அமைய வேண்டும் என்றால் மக்கள் அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்றார் ஜெயலலிதா.

வெசாக் பௌர்ணமி தினமன்று தொப்பிகலையில் புத்தர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது

thoppigala.jpgமட்டக்களப்பு தொப்பிகலை பிரதேசத்தில் புத்தர் சிலையொன்று வெசாக் பௌர்ணமி தினமன்று புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த இப்பிரதேசம் தற்போது இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.

இப்பிரதேசத்தில் அமைந்துள்ள 23- 2 ஆவது இராணுவ கட்டளைத் தலைமையக வளாகத்திற்குள்ளேயே இந்த புத்தர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இப்பிரதேசத்தில் கடமையாற்றும் இராணவ சிப்பாய்கள் மத வழிபாட்டில் ஈடுபடுவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தும் வகையில் இந்த புத்தர் சிலை பிரதிஷ்டை செய்யபடப்டுள்ளதாக இது தொடர்பாக தெரிவிக்கப்படுகின்றது

இயற்கை அனர்த்தத்தைக் கூட ஐ.தே.க.வின் சதித்திட்டம் என்று கூறுமளவு முட்டாள்தனம்

parliament-of-sri-lanka.jpgஒவ்வொரு இலங்கைப் பிரஜையும் 216000 ரூபாவுக்கு கடனாளியாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஐ.தே.க. எம்.பி. ரவிகருணாநாயக்க, இயற்கை அனர்த்தம் ஏற்பட்டால் கூட அது ஐ.தே.க.வின் சதித்திட்டம் எனக் கூறுமளவுக்கு அரசு முட்டாள்தனமாக செயற்படுவதாகவும் குற்றம் சாட்டினார். அத்துடன் சர்வதேச நாணயநிதியத்துக்கு அரசு அனுப்பியுள்ள கடிதத்தை பகிரங்கப்படுத்த வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலை குறித்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; நாட்டின் பொருளாதாரம் பெரும் பின்னடைவு கண்டுள்ளது.பாரிய வறுமை கடன் சுமை நிரம்பிய நாடாக இலங்கை மாறிவிட்டது. ஆனால், அரசு பிழையான தகவல்களை வழங்கி அனைவரையும் ஏமாற்றிவருகின்றது.

இலங்கையை உலகிற்கு விற்று விட்டதாக சர்வதேசத்தின் பிளக்கை கழற்றுவோம் எனக் கூறியவர்கள் எல்லாம் இன்று அவற்றின் காலைத்தொட்டு கும்பிடுகின்றனர். கல்வி அறிவற்றவர்கள் எல்லாம் பேசிப் பேசியே நாட்டை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்கின்றனர்.கடந்த நாலரை வருடங்களில் மட்டும் 4,520 பில்லியன் ரூபா கடன் பெறப்பட்டுள்ளது. வருடம் தோறும் 650 பில்லியன் ரூபா கடன் அதிகமாகப்பெறப்பட்டுள்ளது.

அரசின் முட்டாள்தனமான போக்கினால் இலங்கைப்பிரஜைகள் ஒவ்வொருவரும் 216000 ரூபாவுக்கு கடனாளியாக்கப்பட்டுள்ளனர்.மத்திய வங்கி பணத்தை அச்சடித்து அச்சடித்து களைத்துப் போய்விட்டது. முழு உலகமும் இலங்கை முன் மண்டியிட்டு மகிந்த சிந்தனைக்கேற்றவாறு ஆடும் என்பதுதான் இந்த அரசின் நினைப்பு. இலங்கைக்குள் உலகம் இல்லை. உலகிற்குள் தான் இலங்கையுள்ளது. சர்வதேசத்துடன் சிநேகபூர்வ உறவை வளர்க்கவேண்டும். சண்டித்தனம் காட்டக்கூடாது.

நாட்டின் நிர்வாகம் என்பது யுத்தத்தில் மட்டும் தங்கியிருக்கக்கூடாது. பொருளாதாரம் ஊடாக சுதந்திரம் ஜனநாயகம் உரிமையென பல பொறுப்புகள் நாட்டின் நிர்வாகத்தில் முக்கியமானவை. மக்கள் நலன் தொடர்பில் நாம் அரசுக்கு எதைக்கூறினாலும் ஐ.தே.க. சதி செய்வதாக குற்றம் சாட்டுகின்றனர். இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டால் கூட அது ஐ.தே.க.வின் சதியெனக் கூறுமளவுக்கு அரசு முட்டாள் தனமாக செயற்படுகின்றது. பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் மக்கள் பிரச்சினை தொடர்பாக எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்க அமைச்சரவை அந்தஸ்துள்ள எந்தவொரு அமைச்சரும் சபையில் இருப்பதில்லை.அடிவருடிகளே இருந்து கூச்சலிடுகின்றனர்.

இலங்கையின் சுற்றுலாத்துறை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு சுற்றுலாத்துறையில் 29 வீத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.அந்நிய செலாவணி குறைந்துள்ளது. ஏற்றுமதிகள் வீழ்ச்சியடைந்துள்ளன.

இலங்கை தமிழரிற்கு ஓப்ரா வின்பிரே உதவ வேண்டும்: பாடகி மாதங்கி அருள் பிரகாசம் (MIA) கோரிக்கை

mia-01.jpgஇலங்கையில் தமிழர்கள் சந்தித்து வரும் பிரச்சினைகள் , தாக்குதல், மனித உரிமை மீறல், தமிழர்களின் துயரங்களை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட உதவ வேண்டும் என உலக டாக் ஷோக்களின் முன்னோடியான ஓப்ரா வின்பிரேக்கு இங்கிலாந்தில் பிறந்த, இலங்கைத் தமிழ்ப் பெண்ணான பிரபல பாடகி மாதங்கி அருள் பிரகாசம் (MIA ) கோரிக்கை விடுத்துள்ளார்.

இங்கிலாந்தைச் சேர்ந்த மாதங்கி பிரபல பாடகியாவார். ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் ஸ்லம்டாக் மில்லியனர் படத்திலும் இவர் பாடியுள்ளார். இந்தப் பாடல் பேப்பர் பிளேன்ஸ் என்ற மாதங்கியின் (MIA) இசைத் தொகுப்பில் இடம் பெற்றதாகும். இப்பாடலே, ஸ்லம்டாக் மில்லியனர் படத்திலும் இடம் பெற்றது.

இதேபோல பைனாப்பிள் எக்ஸ்பிரஸ் என்ற தொகுப்பையும் வெளியிட்டுள்ள. மாதங்கி பேப்பர் பிளேன்ஸ், கிராமி விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் மீதான அடக்குமுறைகள், இனப்படுகொலைகள், பெண்களின் அவல நிலை குறித்து உலகத்திற்கு எடுத்துக் காட்டி அவர்களுக்கு உதவுமாறு ஓப்ரா வின்பிரேவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் MIA மாதங்கி

உள்ளூராட்சி தேர்தல் முறையை திருத்தும் சட்ட மூலத்தை ஒத்திவைக்க அமைச்சரவை தீர்மானம்

sri-lankan-government.jpgஉள்ளூராட்சி தேர்தல் முறையை திருத்துவதற்கான விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தை ஒத்திவைக்க அமைச்சரவை தீர்மானித்திருக்கின்றது. கடந்த 6 ஆம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த உத்தேசிக்கப்பட்ட திருத்தங்களின் மூலம் சிறு கட்சிகளுக்கு அநீதி இழைக்கப்படுவதாக அந்த கட்சிகளின் பிரதிநிதிகள் முன்வைத்த விடயங்களை கருத்திற் கொண்டே அமைச்சரவை இந்த தீர்மானத்திற்கு வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  தொகுதிவாரி முறை மற்றும் விகிதாசார முறை இரண்டும் கலந்த தேர்தல் முறைமையொன்றின் கீழ் உள்ளூராட்சி தேர்தலை நடத்துவது உள்ளிட்ட பல யோசனைகள் இந்த சட்டமூலத்தின் மூலம் முன்வைக்கப்பட்டிருந்தன.

சட்டமூலம் இதற்கு முன்னர் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட போது அது அரசியலமைப்புக்கு முரணானதென ஆட்சேபித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்ததுடன் அந்த மனுவை விசாரணை செய்த உயர்நீதிமன்றம் சம்பந்தப்பட்ட சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதென்றால் அதற்கு மாகாண சபைகளின் அனுமதி பெறப்பட வேண்டுமென தீர்ப்பளித்தது.

இதற்கமைய அரசாங்கம் இந்த சட்டமூலத்தை வாபஸ் பெற்றுக் கொண்டதுடன் பின்னர் அதை மாகாண சபைகளின் அனுமதிக்காகவும் அனுப்பி வைத்திருந்தது. சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாண சபைகளில் இந்த சட்டமூலத்திற்கு அனுமதி கிடைத்த போதும் கிழக்கு மாகாண சபையில் அதற்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டதுடன் அனுமதி வழங்குவதும் நிராகரிக்கப்பட்டது.

இந்த நிலையிலேயே கடந்த 6 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சிறு கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் சிலர் இந்த சட்டமூலத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். உள்ளூராட்சி மன்றங்களுக்கு உறுப்பினர்களை தெரிந்தெடுக்க குறைந்த பட்சம் வாக்கு சதவீதத்தை 12 ஆக உயர்த்தியிருப்பதன் மூலம் சிறு கட்சிகளுக்கு அநீதி இழைக்கப்படுவதாக இந்த அமைச்சர்கள் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனினும் தேர்தல் முறைமை திருத்தம் தொடர்பான இந்த சட்டமூலமானது காலத்தின் அவசியமென ஆளுந்தரப்பின் பிரதம கொரடாவான அமைச்சர் தினேஷ் குணவர்தனவும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனும் அமைச்சரவைக் கூட்டத்தில் வலியுறுத்தியிருக்கின்றனர். இருந்தபோதிலும் சட்டமூலத்தை ஒத்திவைத்து அதை மீண்டும் ஆலோசனைக்கு உட்படுத்த அமைச்சரவை இறுதியாக முடிவு செய்துள்ளது.

மதத்தின் அர்த்தத்தை திரிப்பதை போப் கண்டித்துள்ளார்

pope_afp.jpgமத்திய கிழக்கிற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் போப் பெனடிக்ட், மதத்தை அர்த்தம் திரித்து கற்பிப்பதை கண்டித்துள்ளார். ஜோர்டான் தலைநகர் அம்மானில் மசூதி ஒன்றில் முஸ்லிம் தலைவர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், இவ்வாறு அர்த்தத்தை திரிப்பதனால் சமுதாயத்தில் பாகுபாடுகள் மற்றும் வன்முறை ஏற்படுவதாக கூறினார்.

இதற்கிடையே, கடந்த 2006 ஆம் ஆண்டு இஸ்லாம் வன்முறையானது என கிறிஸ்துவ பேரரசர் ஒருவர் கூறியதாக போப் பெனடிக்ட் கூறினார், அதற்கு பின்னர் அவர் வருத்தம் தெரிவித்தார். அவ்வாறு போப் பெனடிக்ட் வருத்தம் தெரிவித்தமைக்கு ஜோர்டன் மன்னரின் மூத்த ஆலோசகர் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தால் முஸ்லிம்கள் வருத்தம் அடைந்ததாகவும், எனினும் அந்த பேரரசரின் கருத்தை போப் பெனடிக்ட் கொண்டிருக்கவில்லை என்பதை முஸ்லிம்கள் ஏற்பதாகவும் அவர் கூறினார்.

முல்லைத்தீவிலிருந்து ஐ.சி.ஆர்.சியின் உதவியுடன் 518 பேர் புல்மோட்டை அழைத்துவரப்பட்டனர்

icrc.jpg
முல்லைத்தீவிலிருந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் கப்பல் மூலம் நேற்றிரவு மேலும் 518 பேர் புல்மோட்டைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். நோயாளர்கள் ,காயமுற்றவர்கள் ,கர்ப்பிணிகள் மற்றும் இவர்களது உதவியாளர்களும் உறவினர்களும் என 518 பேர் அடங்குவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அதிகாரிகளின் தகவல்களின் படி கடந்த மார்ச் முதல் இது வரை இப்படி 10 ஆயிரத்து 174 பேர் புல்மோட்டைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.