
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவில் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளவர்களின் மறுவாழ்வுக்கு உதவுமாறு ஜனாதிபதி விடுத்த கோரிக்கையை உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்கள் நிராகரித்துள்ளன. நலன்புரி நிலையங்களில் உள்ளவர்களுக்கு உதவி வழங்கக்கூடிய நிதிவளம் தங்களிடம் இல்லை என அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளவர்களுக்கான மறுவாழ்வுத்திட்டங்கள் தொடர்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை உள்ளூர் அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகளை அலரிமாளிகையில் சந்தித்துக் கலந்தரையாடினார்.
ஒவ்வொரு நிறுவனமும் தம்மாலான உதவிகளை வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி அவர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். என்றும் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளவர்களிற்கு உதவக்கூடிய வகையில் நிதிவளம் தங்களிடம் இல்லை என்றும் வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் வழங்கும் சிறிய நிதிகளைக் கொண்டு தாம் சிறு சிறு திட்டங்களை நடை முறைப்படுத்தி வருவதாகவும் உள்ளூர் தொண்டர் நிறுவனப் பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் எடுத்துக் கூறினர். உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்கள் போதிய நிதி வளங்களுடன் செயற்படக் கூடிய திட்டத்தை நடைமுறைப்படுத்தப் போவதாக ஜனாதிபதி அவர்களிடம் தெரிவித்தார் என்று கொழும்பு ஊடகம் தனது செய்தியில் விவரித்துள்ளது.