விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் போர் முனையில் கொல்லப்பட்டதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரபாகரன் பற்றிய தகவல்களால் தமிழகத்தில் பதட்டமான சூழ்நிலை உருவாகி உள்ளது. வியாசர்பாடியில் அரசு பஸ் மீது கல் வீசப்பட்டது.
இந்த சம்பவங்களால் சென்னையில் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக மத்திய அரசு அலுவலகங்கள், வணிக வளாகங்கள், பஸ் நிலையங்களில் போலீசார் பாதுகாப்புக்காக அதிக அளவில் நிறுத்தப்பட்டுள்ளனர். இலங்கை தமிழர் ஆதரவு இயக்கங்கள் ரகசியமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வடசென்னையில் 110 பேரை இணை கமிஷனர் ரவி தலைமையில் போலீசார் கைது செய்தனர். மத்திய சென்னை இணை கமிஷனர் ரவிகுமார் 72 பேரை கைது செய்தார். சென்னை முழுவதும் இலங்கை தமிழர் ஆதரவாளர்கள் 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
எழுத்தாளர்கள்
எழுத்தாளர்கள்
இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் தா.பாண்டியன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது, ‘’இலங்கை பிரச்சனை தேர்தலில் எதிரொலிக்க வில்லை என்று கூறுவது தவறு. அங்கு தமிழர்கள் படும் இன்னல்கள் பற்றி அறிந்த தமிழர்கள் கொதித்து போய் இருக்கிறார்கள்.
இலங்கையில் தமிழர்கள் அனைவரையும் வென்று விட்டதாக ராஜபக்சே எண்ணலாம். ஆனால் இந்த பிரச்சனைக்கு முடிவே கிடையாது. வேறுவிதமான போராட்டங்களில் அவர்கள் ஈடுபடுவார்கள். அதன் பாதிப்பு தமிழகத்திலும் எதிரொலிக்கும்’’ என்று தெரிவித்தார்.
மோதல் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு அனைவரும் உதவ வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
எம் உடன் பிறப்புக்கள் குறிப்பாகக் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக முன்னெப்பொழுதுமில்லாத அளவுக்கு வன்னி மண்ணில் மனிதப் பேரவலத்தில் அழிவின் விழிம்பில் வீழ்ந்து கிடப்பதை அறிவீர்கள். கடந்த ஐந்து மாதங்களுக்கிடையில் பெருமளவான எம்மின மக்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் விமானக்குண்டு வீச்சுக்களுக்கும், ஏவுகணைகள், எறிகணைகள் தாக்குதல்களுக்கும் உள்ளாகி மாண்டுவிட்டனர். இருபதாயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயங்களுக்குள்ளாகிக் குற்றுயிராய்க் கிடக்கின்றனர். பல இலட்சம் மக்கள் பலவந்தமாக இடம்பெயர வைக்கப்பட்டு பரிதவிக்கின்றனர்.
எம் தமிழ் பெண்கள் படுங்கொடுமைகளும் அவமானங்களும் சொல்லில் அடங்கா. இக்கொடிய நிலை தொடர்கின்றது. இது நாம் சொல்வது மட்டுமல்ல, ஐ. நா. மனித உரிமைகள் ஆணையத்தின் வெளியீடுமாகும். உழைத்து வாழ்ந்த எம் மக்கள் இன்று உணவின்றி மருந்தின்றி ஓடாகிச் செத்து மடிகின்றனர். எஞ்சியோர் ஒரு வேளை கஞ்சிக்குக்கூடக் கையேந்தி நிற்கும் நிலை நீடிக்கிறது.
எங்கள் உழைப்பும் வரிப்பணமும் எம் தேசத்தையும், எம் மக்களையும் அரசியல் அடிமைகளாய் வைத்திடவும் அல்லது பூண்டோடு அழித்திடவும் இலங்கைச் சிங்கள அரசுக்கு இறுமாப்பைக் கொடுத்திருக்கிறது. சர்வதேச சமூகமே போரை நிறுத்தி விட்டுத் தமிழர் உயிர்களுக்கு உத்தரவாதமளிக்க வேண்டும். தமிழர் தம்மை ஆளும் அரசியல் உரிமைக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்ற பொழுதும் இலங்கை அரசு அதிகார ஆணவத்துடன் எம் தமிழ் இனத்தை அழித்து விட்டு, தமிழ் நிலத்தையெல்லாம் ஆக்கிரமித்துப் பௌத்த சிங்களக் கொடியைப் பறக்கவிடக் கங்கணங்கட்டி நிற்கிறது.
ஐந்து தசாப்தங்களுக்கு மேலான தமிழ் மக்கள் உரிமைப் போராட்டத்தின் பின்னரும் அரசியல் தீர்வுமின்றி உயிர் வாழும் உரிமையுமின்றி துடிதுடித்துச் சாகின்றார்கள். நாம் மட்டுமல்ல நாடே சீரழிக்கப்படுகின்றது. இத்தனை காலமும் எம் மக்கள் எத்தனை பெரிய அளப்பரிய தியாகங்களை செய்து விட்டார்கள். தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா? இப்பயிரை கண்ணீராற் காத்தோம் கருகத் திருவுளமோ? எண்ணமெல்லாம் நெய்யாக எம்முயிரினுள் வளர்ந்த வண்ண விளக்கிது மடியத் திருவுளமோ?” எனச் செக்கிழுத்த சிதம்பரனார் பாரத விடுதலைக்காகச் சிறைக்குள் வீழ்ந்து கிடந்த போது பாரதியார் பாடிய திருவடிகள்தான் நினைவுக்கு வருகிறது.
ஒரு கொள்கைக்காக தமிழின விடுதலை என்ற இலட்சியத்திற்காக அர்ப்பணித்து நின்ற தமிழ் மக்கள் ஆவியாய் அலைந்து நிற்கின்றனர். அவர் தம் உறவுகள் அடிமைகளாய் சிறைக்கூடத்தினும் கொடிய அடக்குமுறைக் கூடாரங்களுள் வீழ்ந்து கிடக்கின்றனர். ஹிட்லர் காலத்து யூதச் சிறைக் கூடங்கள் போல இராணுவக் காவலும், காட்டிக் கொடுத்துப் பிழைப்போர் கூட்டங்களும் சூழ்ந்து நிற்கின்றனர்.
கையில் காசுமின்றி நோய்க்கு மருந்துமின்றி, குழந்தைக்குப் பாலுமின்றி உடுக்க மாற்றுத் துணியுமின்றிப் பட்டினியால் சாகும் எம் தமிழ் உறவுகளைக் காத்து நிற்கும் பொறுப்பு எமக்கு உண்டு. உங்கள் எதிர்கால வாழ்வுக்கும் விடிவுக்குமாக இராஜ தந்திர வழிகளில் சர்வதேச சமூகத்திடம் உதவி கேட்டு வருகிறோம்.
புலம்பெயர்ந்த எம் தமிழர் உதவிக் கரம் நீட்டி நிற்பதறிவோம்.
எம்மினத்தைக் கொன்று குவிப்பவர்களே உலகத்திடம் தமக்கு உதவி கேட்டு நிற்கின்றார்கள் எதற்காக? உங்கள் சொந்த இரத்த உறவுகளோ, நாங்களே தானும் உங்களைச் சந்தித்துப் பேசுவதற்குக்கூட அரசு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இப்படியும் ஒரு நாஸிசம் நாட்டில் பரவியுள்ளது.
எனவேதான் நாமெல்லாம் எம் மண்ணில் இராணுவமயச் சூழலில், திறந்த வெளி சிறைக் கைதிகளாய் இருந்தாலும், எமது உழைப்பில், எமது உணவில், எமது உப்பில் ஒரு பிடியையேனும் அல்லலுற்று ஆற்றாது அழுத கண்ணீருடன் வீழ்ந்து கிடக்கும் எம் உறவுகளுக்கு உதவி உயிர் கொடுப்போம். எம் தமிழ் மக்கள் விடிவுக்காக நாளும் பிரார்த்தனையில் ஈடுபடுமாறும் வேண்டுகோள் விடுக்கின்றோம்
ஜப்பானில் மேலும் 12 பேருக்கு பன்றிக்காய்ச்சல் நோய் ஏற்பட்டிருப்பதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இதனை தொடர்ந்து ஜப்பானில் பன்றிக்காய்ச்சலால் பாதிப்பட்டவர்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் ஒசாகா மற்றும் ஹியோகா பிராந்தியங்களை சேர்ந்த பள்ளிக்கூட மாணவர்கள், இவர்களில் ஒருவர் கூட நாட்டை விட்டு வெளியே செல்லவில்லை.
ஜப்பானில் முதன்முதலாக பாதிக்கப்பட்ட நால்வருக்கு வட அமெரிக்காவில் இருந்து பன்றிக்காய்ச்சல் தொற்றியது., மற்றவர்கள் அனைவருக்கும் ஜப்பானுக்கு உள்ளாகவே தொற்றியுள்ளது.
அமெரிக்க அதிபர் ஒபாமா ரோமன் கத்தோலிக்க பல்கலைக்கழகம் ஒன்றில் உரையாற்றுகையில், கருக்கலைப்பு செய்துகொள்வதற்கு சட்டரீதியான உரிமை இருப்பது சரிதான் என்று பேசியுள்ளார்.
அமெரிக்காவில் கருக்கலைப்பு ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் ஒருவர் மற்றவருடைய நம்பிக்கைகளை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இடம் பெயர்ந்துள்ள மாணவர்களின் கல்வி மேம்பாட்டை துரிதப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதுடன் அதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அதன்படி பிரதிக் கல்வி அமைச்சர் எம். சச்சிதானந்தன் தலைமையிலான கல்வி அமைச்சின் உயர்மட்டக் குழுவொன்று விரைவில் வவுனியா செல்லவுள்ளது.
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா, நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேலும் மேம்படுத்துவதற்காக கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலமும் ஏனைய நன்கொடைகள் மூலமும் சேகரிக்கப்பட்ட பாடசாலை உபகரணங்களுடன் இக்குழுவினர் செல்லவுள்ளதாக அமைச்சரின் ஊடகப் பிரிவு தெரிவிக்கிறது.
இடம்பெயர்ந்துள்ள மாணவர்கள் தமது கல்வியைத் தொடர கல்வி அமைச்சினூடாக அவசரகாலக் கல்வியை செயற்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி பிரதிக் கல்வி அமைச்சர் எம். சச்சிதானந்தன் கல்வி அமைச்சின் செயலாளர் நிமல் பண்டாரவுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். இது தொடர்பில் பிரதிக் கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பெறப்பட்ட தகவல்களுக்கமைய வடக்கில் யுத்தத்தின் காரணமாக இதுவரை நாற்பது ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
இடம்பெயர்ந்துள்ள மாணவர்களில் இவ்வருடம் புலமைப் பரிசில் பரீட்சை, கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை, உயர்தரப் பரீட்சைகளுக்கு தோற்றவுள்ள மாணவர்களும் அடங்குவர். அத்துடன் ஆசிரியர் சமூகமும் இவ்விடம்பெயர்வினால் பாதிப்படைந்துள்ளது.
இலங்கையின் உள்விவகாரங்களில் பிரிட்டன் தலையிடக் கூடாது எனத்தெரிவித்து கொழும்பிலுள்ள பிரிட்டன் உயர்ஸ்தானிகராலயம் முன்பாக இன்று திங்கட்கிழமை காலை ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதில் 1000 இற்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.
கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் முன்பாக இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தூதுராதலய அலுவலகத்தை கற்கலால் தாக்கியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் உள்விவகாரங்களில் பிரித்தானியா வீணாக தலையிடுவதாகக் கூறி இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பிரித்தானிய அரசாங்கத்திற்கு எதிராக கோஷமெழுப்பியதோடு கொடும்பாவிகளையும் எரித்தனர். இதைத் தொடர்ந்தும் தூதுராலயத்தின் இலச்சினை கழற்றப்பட்டு தீ வைக்கப்பட்டதோடு, கல்லால் அலுவலகம் தாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலிகளின் முக்கிய தலைவர்கள் பலர் கொல்லப்பட்டுள்ள நிலையில் வெள்ளிமுள்ளிவாய்க்கால் பிரதேசத்துக்கு வடக்கே தொடர்ந்தும் தேடுதல் மேற்கொண்டு வரும் படையினர் இன்று காலை புலிகளின் மேலும் 3 முக்கிய தலைவர்களின் சடலங்களைக் கைப்பற்றியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
புலிகளின் பொலிஸ் பிரிவின் தலைவர் இளங்கோ, பிரபாகரனின் மகனான சாள்ஸ் அன்ரனியின் நெருங்கிய உதவியாளர் சுதர்மன் மற்றும் புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த கபில் அம்மான் ஆகிய மூவரின் சடலங்களையே படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இப்பிரதேசத்தில் இராணுவத்தின் 53ஆம் மற்றும் 58ஆம் படைப் பிரிவினர் விசேட படையினருடனும் இராணுவக் கொமாண்டோக்களுடனும் இணைந்து தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
திங்களன்று பிரஸ்ஸல்ஸ் நகரில் கூடும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள், இலங்கை யுத்தப் பிரதேசங்களில் போர்க்குற்றங்கள் நடந்திருந்தனவா என்பது குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் விசேட கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துவார்கள் எனத் தெரிகிறது. விடுதலைப் புலிகள் அமைப்பினர் மீது எழும் குற்றச்சாட்டுகள் மட்டுமல்லாது, இலங்கை அரசு மீது எழும் குற்றச்சாட்டுகளும் விசாரிக்கப்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் விரும்புகிறது.
சிறார்கள் உட்பட ஏராளமான சிவிலியன்கள் தொடர்ந்து கொல்லப்பட்டும் பாதிக்கப்பட்டும் வருவதாக செய்திகள் வருவது கண்டு ஐரோப்பிய ஒன்றியம் விரக்தியும் வேதனையும் அடைந்திருப்பதாக பிரஸ்ஸல்ஸில் உள்ள எமது செய்தியாளர் கூறுகிறார். பொதுமக்கள் நிறைந்து காணப்பட்ட இடங்களிலும் அரச படையினர் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக வெளியாகிய தகவல்கள் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பெரும் கவலையைத் தந்துள்ளதாக அது கூறுகிறது.
இலங்கையில் தற்போது ஒரு மனித பேரவல நிலை இருப்பதாக பிரித்தானிய வெளியுறவுத் துறை அமைச்சர் டேவிட் மிலிபான்ட் கவலை வெளியிட்டுள்ளார். இந்த விடயத்தில் இலங்கை அரசு கவனம் செலுத்த வேண்டும் என ஐ.நா. வின் தலைமைச் செயலாளருக்கு தாம் கூறியிருப்பதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
“இலங்கையில் மனித உயிர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் .அங்கு காப்பாற்றப்பட வேண்டிய உயிர்கள் இன்னமும் உள்ளன. மக்களுக்கு சிகிச்சை வழங்க வேண்டியுள்ளது. உணவும் குடிநீரும் விநியோகிக்க வேண்டியுள்ளது. ஆகவே இப்படியான பிர்ச்சினைகள் எல்லாம் இருக்கும் போது ஒரு பயங்கரவாத இயக்கததை விட அதிகமாக உயர்ந்த தரத்தைப் பேண வேண்டிய ஒரு ஜனநாயக அரசு, அந்த மக்களின் நலனில் முக்கிய பொறுப்புக்களை கொண்டிருக்க வேண்டும் .”என்றும் இலங்கை நிலவரம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கருத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
