இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு அனைவரும் உதவ வேண்டும்: தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை

mavai_senathirajah.jpgமோதல் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு அனைவரும் உதவ வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

எம் உடன் பிறப்புக்கள் குறிப்பாகக் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக முன்னெப்பொழுதுமில்லாத அளவுக்கு வன்னி மண்ணில் மனிதப் பேரவலத்தில் அழிவின் விழிம்பில் வீழ்ந்து கிடப்பதை அறிவீர்கள். கடந்த ஐந்து மாதங்களுக்கிடையில் பெருமளவான எம்மின மக்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் விமானக்குண்டு வீச்சுக்களுக்கும், ஏவுகணைகள், எறிகணைகள் தாக்குதல்களுக்கும் உள்ளாகி மாண்டுவிட்டனர். இருபதாயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயங்களுக்குள்ளாகிக் குற்றுயிராய்க் கிடக்கின்றனர். பல இலட்சம் மக்கள் பலவந்தமாக இடம்பெயர வைக்கப்பட்டு பரிதவிக்கின்றனர்.

எம் தமிழ் பெண்கள் படுங்கொடுமைகளும் அவமானங்களும் சொல்லில் அடங்கா. இக்கொடிய நிலை தொடர்கின்றது. இது நாம் சொல்வது மட்டுமல்ல, ஐ. நா. மனித உரிமைகள் ஆணையத்தின் வெளியீடுமாகும். உழைத்து வாழ்ந்த எம் மக்கள் இன்று உணவின்றி மருந்தின்றி ஓடாகிச் செத்து மடிகின்றனர். எஞ்சியோர் ஒரு வேளை கஞ்சிக்குக்கூடக் கையேந்தி நிற்கும் நிலை நீடிக்கிறது.

எங்கள் உழைப்பும் வரிப்பணமும் எம் தேசத்தையும், எம் மக்களையும் அரசியல் அடிமைகளாய் வைத்திடவும் அல்லது பூண்டோடு அழித்திடவும் இலங்கைச் சிங்கள அரசுக்கு இறுமாப்பைக் கொடுத்திருக்கிறது. சர்வதேச சமூகமே போரை நிறுத்தி விட்டுத் தமிழர் உயிர்களுக்கு உத்தரவாதமளிக்க வேண்டும். தமிழர் தம்மை ஆளும் அரசியல் உரிமைக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்ற பொழுதும் இலங்கை அரசு அதிகார ஆணவத்துடன் எம் தமிழ் இனத்தை அழித்து விட்டு, தமிழ் நிலத்தையெல்லாம் ஆக்கிரமித்துப் பௌத்த சிங்களக் கொடியைப் பறக்கவிடக் கங்கணங்கட்டி நிற்கிறது.

ஐந்து தசாப்தங்களுக்கு மேலான தமிழ் மக்கள் உரிமைப் போராட்டத்தின் பின்னரும் அரசியல் தீர்வுமின்றி உயிர் வாழும் உரிமையுமின்றி துடிதுடித்துச் சாகின்றார்கள். நாம் மட்டுமல்ல நாடே சீரழிக்கப்படுகின்றது.  இத்தனை காலமும் எம் மக்கள் எத்தனை பெரிய அளப்பரிய தியாகங்களை செய்து விட்டார்கள். தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா? இப்பயிரை கண்ணீராற் காத்தோம் கருகத் திருவுளமோ? எண்ணமெல்லாம் நெய்யாக எம்முயிரினுள் வளர்ந்த வண்ண விளக்கிது மடியத் திருவுளமோ?” எனச் செக்கிழுத்த சிதம்பரனார் பாரத விடுதலைக்காகச் சிறைக்குள் வீழ்ந்து கிடந்த போது பாரதியார் பாடிய திருவடிகள்தான் நினைவுக்கு வருகிறது.

ஒரு கொள்கைக்காக தமிழின விடுதலை என்ற இலட்சியத்திற்காக அர்ப்பணித்து நின்ற தமிழ் மக்கள் ஆவியாய் அலைந்து நிற்கின்றனர். அவர் தம் உறவுகள் அடிமைகளாய் சிறைக்கூடத்தினும் கொடிய அடக்குமுறைக் கூடாரங்களுள் வீழ்ந்து கிடக்கின்றனர். ஹிட்லர் காலத்து யூதச் சிறைக் கூடங்கள் போல இராணுவக் காவலும், காட்டிக் கொடுத்துப் பிழைப்போர் கூட்டங்களும் சூழ்ந்து நிற்கின்றனர்.

கையில் காசுமின்றி நோய்க்கு மருந்துமின்றி, குழந்தைக்குப் பாலுமின்றி உடுக்க மாற்றுத் துணியுமின்றிப் பட்டினியால் சாகும் எம் தமிழ் உறவுகளைக் காத்து நிற்கும் பொறுப்பு எமக்கு உண்டு. உங்கள் எதிர்கால வாழ்வுக்கும் விடிவுக்குமாக இராஜ தந்திர வழிகளில் சர்வதேச சமூகத்திடம் உதவி கேட்டு வருகிறோம்.

புலம்பெயர்ந்த எம் தமிழர் உதவிக் கரம் நீட்டி நிற்பதறிவோம்.

எம்மினத்தைக் கொன்று குவிப்பவர்களே உலகத்திடம் தமக்கு உதவி கேட்டு நிற்கின்றார்கள் எதற்காக?  உங்கள் சொந்த இரத்த உறவுகளோ, நாங்களே தானும் உங்களைச் சந்தித்துப் பேசுவதற்குக்கூட அரசு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இப்படியும் ஒரு நாஸிசம் நாட்டில் பரவியுள்ளது.

எனவேதான் நாமெல்லாம் எம் மண்ணில் இராணுவமயச் சூழலில், திறந்த வெளி சிறைக் கைதிகளாய் இருந்தாலும், எமது உழைப்பில், எமது உணவில், எமது உப்பில் ஒரு பிடியையேனும் அல்லலுற்று ஆற்றாது அழுத கண்ணீருடன் வீழ்ந்து கிடக்கும் எம் உறவுகளுக்கு உதவி உயிர் கொடுப்போம். எம் தமிழ் மக்கள் விடிவுக்காக நாளும் பிரார்த்தனையில் ஈடுபடுமாறும் வேண்டுகோள் விடுக்கின்றோம்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 Comments

  • அஜீவன்
    அஜீவன்

    இதை இதுவரை யோசிக்காதவர்கள் இப்போது பேசுவதற்கு மட்டுமல்ல எப்போதும் பேசத் தகுதியற்றவர்கள்.இவர்களை முதலில் தூக்கியெறிய வேண்டும். இவர்கள் நேரத்துக்கு ஏற்ப சட்டை மாற்றும் குணமுடையவர்கள். சந்தர்ப்பவாதிகள்.

    இவர்களே அன்றைய இளைஞர்களை தவறாக வழி நடத்தினார்கள். அதன் பிரதிபலனாக இன்று வரை எத்தனையோ வீரமும் – விவேகமும் – ஞானமும் கொண்ட இளைஞர்கள் பலிக்கடாவாகினர். உங்கள் வாழ்வுக்காக இளையோர் இரத்தம் சிந்தி மரணித்தது மட்டுமல்ல, கொலையாளிகளாவும் ஆகினர்.

    விடுதலைப் போரில் இன்று வரை உயிரிழந்த அத்தனை இளைஞர்களும் பாராளுமன்றம் சென்றிருந்தால் உண்மையாக உழைத்திருப்பார்கள். அவர்கள் இன்று எமது தேசத்தின் தலைவர்களாகவே இன்றும் வாழ்ந்திருப்பார்கள். எமது மக்களுக்கா எம்மோடு வாழ்ந்திருப்பார்கள். அத்தனை சாவுகளுக்கும் பொறுப்பு தமிழ் அரசியல் கட்சிகளின் தவறான வழி நடத்தலேயாகும். அது உங்களையே சாரும். அது போராளிகளை சாராது.

    சுயநலமற்று தேசத்துக்காக உயிர் துறந்த ஒரு போராளியின் தூசுக்குக் கூட சமனற்றவர்கள் நீங்கள். உங்கள் அரசியல் அஸ்த்தமனம் இன்றுதான் ஆரம்பம்.

    Reply
  • palli.
    palli.

    ஜயா உன்மைதான் நீங்கள் இனிமேலாவது ஒரு மக்கள் அமைப்பாக செயல் படுங்கள் மக்கள் மத்தியில் வாருங்கள். அப்படி உங்களை அரசு அனுமதிக்காத பட்ச்சத்தில் இந்தியா உடபட சர்வதேசத்துடன் பேசுங்கள். தங்களுக்கு ஆதரவாய் ஊடகங்களும் குரல் கொடுக்கும். இதுவரை தம்பி சொன்னதையே கேட்டு வந்த நீங்கள் இனிமேலாவது மக்களை காப்பாற்ற முயலுங்கள். உங்களை அப்படி செய்ய விடாது அரசு மட்டுமல்ல சில தமிழ் அமைப்புகளும் தடுக்கலாம். அதை எல்லாம் கடந்து எந்தவித பதவிமோகமும் இல்லாமல் செயல்படுங்கள். சங்கரி போல் தம்பி செத்து விட்டான் இனி எனக்கென்ன குறை என்பது போல் இல்லாமல் மக்களின் வாழ்வே உங்கள் செயல்பாடாக இருக்கட்டும். இந்தியாவை நட்ப்பு நடாய் பார்த்து அதன் உதவிஉடன் சர்வதேசத்தையும் எம்மக்களை திரும்பி பார்க்க செய்யவும். அதைவிட்டு KP என்ற சர்வதேச குற்றவாளியுடன்
    சேர்ந்து செயல் பட நினைத்தால் …… செய்ய மாட்டீர்கள் என நம்ப்புவோமே.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    பிரபாகரன் அரசியல் நடவடிக்கையில் மாவை சேனாதிராஜவுக்கும் அரைபங்குண்டு. மிகுதி இருபத்தியொன்றுக்கும் கால்பங்குண்டு. மற்றும்படி தமிழ்மக்களின் அரசியல் வாழ்வு தற்காலநிலைமையில் அழைத்து செல்வது பற்றியது அறிவு முன்நோக்கு எந்தப்பக்கத்தில் பார்த்தாலும் பூஜீயம்

    Reply
  • மாயா
    மாயா

    இவர்கள் இனியும் நம் இனத்தை சாகடிக்க வேண்டாமே? தயவு செய்து எங்காவது போய் மெளனவிரதம் இருங்கள். அதுவே பேருதவி. தேவையான நேரத்தில் பேசாத நீங்கள் இனி ஒரு போதும் பேசவே வேண்டாம்.

    உங்களை நாங்கள் நன்கு அறிவோம். நீங்கள் வாழ்ந்தும் செத்தவர்கள். சிலர் செத்தும் வாழ்பவர்கள். அதில் TNA இல்லவே இல்லை.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    பல்லி, சந்தர்ப்பத்திற்கேற்றவாறு பேசும் மாவை போன்றவர்கள் எனி அரசியலில் இருந்து ஒதுங்குவதே நல்லது. முன்பு நான் சொல்லியவாறு எனி பழையன கழிதலும் புதியன புகுதலுமாக, பொதுமக்களிலிருந்து நல்ல தலைவர்கள் உருவாகி,அவர்கள் ஒரு அமைதியான உறுதிமிக்க தமிழ்ச் சமுதாயத்தை உருவாக்க நாமெல்லோரும் அவர்களுடன் கைகோர்த்து செயற்பட வேண்டும்.

    Reply
  • palli.
    palli.

    பார்த்திபன் உன்மைதான் ஆனால் புதியன வரவு வரை இவர்கள் செயல்படுவது அவசியமல்லவா?? சஙரியரை பாரும் வெடி கொளுத்த தயாரான நிலையில் உள்ளார். மற்ற அமைப்புகளோ யார் அடுத்த புலி என்னும் போட்டியில் இறங்கி விட்டனர். யாருக்குமே மக்கள் மீது அக்கறை இல்லை. தாம் சார்ந்த அமைப்பு மீதுதான் இறுக்கிறது. ஒரு வேற்றிடத்தை நிரப்ப பலர் முன்வரலாம். ஆனால் அது எமது மக்களுக்கு கெடுதல் விளைவிக்கும் என தெரிந்தால் அது வேற்றிடமாகவே இருக்கட்டுமே. மீண்டும் பல ஆண்டுகள் தமிழர் சொந்த இனத்திடமே அடிமை வாழ்வா?? ஆகவே தங்கள் கருத்தைதான் பல்லி அடிக்கடி கூறி வந்தேன். ஆனால் இன்று புதிய வரவு வரை உள்ளதில் நல்லது அந்த வேற்றிடத்தை நிரப்பட்டும் என்பது தான் பல்லியின் கருத்து. மற்றபடி தங்கள் கருத்தே பல்லியின் நிலையும்.

    Reply
  • damilan
    damilan

    நீங்களெல்லாம் ஒரு அரசியல் வாதியா?………..

    Reply
  • Raj
    Raj

    தமிழ் கூட்டமைப்பினருக்குக்கூட இந்த முடிவு உள்ளுர மகிழ்ச்சி என்பதில் சந்தேகமில்லை.உண்மையில் புலிகளின் அடக்குமுறையில் இவர்களில் ஓர் சிலரின் ஆளுமைகள் சிதைக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு இன்னுமோர் சந்தர்ப்பம் வழங்குவதைப் பரிசீலிக்கலாம். ஆனால் ஜெயானந்தமுர்த்தி சிவாஜிலிங்கம் போன்றோர்களை தெளிவுபெற்ற மக்கள் மன்னிப்பார்களென்று நான் கருதவில்லை. {இந்திய மக்களின் தீர்ப்பு நல்ல சான்று }. ஏனென்றால் அடிப்படை மக்கள் கொள்கையின்றி தமது இருப்புக்காக இங்குள்ள குருத்துக்களை உசுப்பேற்றி அழிக்கத் தயங்காதவர்களென்பதனை கண்ணூடு கண்டுள்ளோம். இனிமேல் இந்தியாவிற்கோ சர்வதேசத்திற்கோ எமக்கு உதவிசெய்வதில் பெரும்தடைகள் இருக்காது என்பதே எனது நம்பிக்கை. அதைவிட ஜனாதிபதி போரில் எப்படி சர்தேசத்தையே படலைக்கு வெளியே விட்டாரோ சமாதானத்திலும் அதையே பின்பற்றி முன்னுதாரணமாக திகழ ஆசைகொண்டவர் என்பதுடன் எதையும் சாதிக்கக்கூடிய நிலமையை உருவாக்கியுள்ளார் என நம்பலாம்/நம்பித்தான் பார்ப்போமே நன்றி.

    Reply
  • thurai
    thurai

    தமிழர்,தமிழினம்,தமிழீழம்,தமிழ்தேசியம் என்பதெல்லாம் அரசியல் வாதிகளினதும் ஆதிக்கமோகம் கொண்டவர்களின் மந்திரஙளே. இலங்கையர்,மனிதர் என்ற ஓர் குடையின் கீழ் ஒன்றுபட்ட வாழ்வினை உருமையுடன் வாழப் பழகவேண்டும்.

    எதிரியையும் நண்பனாக்குபவனே அறிவாளி.நண்பர்களையும் பகைவனாக்குபவன் முட்டாள். பாக்குநீரிணை எம்மைப்
    பிரிக்காதிருந்தால், தமிழினத்தைச் சூழ எத்தனை இனங்கள் வாழ்கின்றனர் என் சிந்தித்துப் பார்ப்போம். இவர்களெல்லோரும்
    எம் பகைவர்களா?

    அழையா விருந்தாளியாக் புலத்தில் அகதிகளாக வந்தவர்கள் வீதியில் படுத்து போக்குவரத்தை தடைசெய்யும் குணம் போலவே, தெற்கிலங்கையில் வியாபாரத்திற்கும், அரச பதவிகளிற்கும் குடியேறியவர்கள், அங்கிருந்து கொண்டே தமிழிற்கு உருமை வேண்டுமென் குரல் கொடுத்தார்கள்.

    நாடு என்பது அதனை விரும்பி அங்கே வாழ்பவனிற்கே உரியது. புலத்தில் இருந்து குரல் கொடுத்து வன்னியை அழித்தது போதும். மிகுதியையாவ்து வாழவிடுங்கள்.

    துரை

    Reply
  • rony
    rony

    டமிலன், “நீங்களெல்லாம் அரசியல் வாதிகளா?” என்று கேட்பதைவிட, நீங்களெல்லாம் மனிதர்களா? என்று கேட்டால் மிகவும்
    பொருத்தமாயிருக்கும். இந்த கூத்தமைப்பினரில் எவராவது தமது அனியாய சம்பளத்தில் கேவலம் ஒரு மாத சம்பளத்தையாவது கொடுத்துதவ முன்வருவார்களா?…இவர்களுக்கு முதலில் ஒருவழி பண்ணவேண்டும். இலங்கை அரசு சரியில்லை.

    Reply
  • palli.
    palli.

    டமிலன் இந்த கேள்வி யாரை பார்த்து? தேச பின்னோட்ட எம்மை பார்த்தா?? அப்படியாயின் இல்லை. சரி புலிகளை பார்த்தா? அதுவும் இல்லை என்பதே சரி. கூட்டமைப்பை பார்த்தா?? ஆம் எனதான் சொல்ல வேண்டும் காரனம் ஆயுத முனையில் தான் இவர்கள் இதுவரை கூதமைப்பாக இருந்தனர். இனிதான் இவர்கள் கூடமைப்பாக செயல் படுவார்களா என பார்க்க வேண்டும். மற்ற அமைப்புகளா?? சத்தியமாய் பல்லிக்கு தெரியாது.

    Reply