எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

டெங்கு நோயால் நேற்றுவரை 134பேர் பலி; 9400பேர் பாதிப்பு

dengu_1.gifடெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக சுகாதாரப் பராமரிப்பு போஷாக்குத் துறை அமைச்சின் நோய்பரவுகைத் தடுப்பு பிரிவு மருத்துவ அதிகாரியான மனோரி கீத்தாஞ்சலி நேற்றுத் தெரிவித்தார்.

இக்காய்ச்சல் காரணமாக நேற்று வரையும் 134 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 9400 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.இக்காய்ச்சலுக்கு மே மாதத்தில் மாத்திரம் நாலாயிரம் பேர் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர் கண்டி, கொழும்பு, கம்பஹா, ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, கேகாலை போன்ற 12 மாவட்டங்களில் இக்காய்ச்சல் தொடர்ந்தும் தீவிர நிலையில் காணப்படுகின்றது என்றும் கூறினார்.

இதன் காரணத்தினால் நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை ஒழித்து சுற்றாடலை சுத்தமாகவும், உலர் நிலையிலும் வைத்திருப்பதில் மக்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதுவே நுளம்புகள் பரப்புகின்ற நோய்களைக் கட்டுப்படுத்துவதற்குப் பெரிதும் உதவும் எனவும் அவர் கூறினார்.

ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரி-56 ரக ரவைகள் கண்டுபிடிப்பு

மட்டக் களப்பு, தோணித்தோட்டமடு பிரதேசத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரி-56 ரக துப்பாக்கி ரவைகளை இராணுவத்தினர் நேற்று முன்தினம் மீட்டெடுத்ததாக தேசியப் பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலைய அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இராணுவத்தினரின் 23 வது படைப் பிரிவுக்குக் கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட தேடுதலின் போதே இவ்வளவு தொகை ரவைகள் மீட்கப்பட்டதாகவும் அவர் கூறினார். இதேவேளை மட்டக்களப்பு, நரக்கமுல்ல, இழுப் படிச்சேனை போன்ற பிரதேசங்களிலிருந்து இரு கிளேமோர் குண்டுகள், நான்கு கைக்குண்டுகள் உட்பட ஒரு தொகுதி வெடி பொருட்களையும் இராணுவத்தினர் மீட்டெடுத்துள்ளனர்.

இதேநேரம் முல்லைத்தீவு தாளம்குளத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 9 எம். எம். கைக்துப்பாக்கிக்குரிய 99 ரவைகளையும், முல்லைத்தீவு, அம்பகாமம் பிரதேசத்திலி ருந்து ஜி-3 ரக துப்பாக்கிக்குரிய 31 ரவைகளையும், விஸ்வமடு பிரதேசத்திலிருந்து இரு ஆர். பி. ஜி. குண்டு களையும், மேம்படுத்தப்பட்ட இரு குண்டுகளையும் இராணுவத்தினர் மீட்டெடுத்துள்ளனர் என்றார்.

கல்வியியல் கல்லூரியில் பயிற்சிபெற்ற 295 பேருக்கு கிழக்கில் நியமனம்

teacher.jpgகல்வி யியல் கல்லூரிகளில் பயிற்சிகளை நிறைவு செய்த மூவாயிரம் மாணவர்களில் 295 பேருக்கு கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் நியமனங்களை வழங்க கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.  கல்வியியல் கல்லூரியின் இறுதிப்பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்றவர்களுக்கு அவர்கள் விரும்பிய பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களுக்கமைய நியமனம் வழங்கப்படுமெனவும் ஏனைய நியமனங்கள் பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களுக்கேற்ப வழங்கப்படுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.

கிழக்கு மாகாணத்தில் 7 வருடங்களுக்கு அதிகமாக சேவையிலீடுபட்டுள்ளவர்களுக்கு அவர்களது சொந்த இடங்களுக்கு இடமாற்றங்களை வழங்கும் முகமாகவே இந்நியமனங்களை வழங்கவுள்ளதாகத் தெரிவித்த கல்வியமைச்சின் செயலாளர் மேல் மாகாணசபையைச் சேர்ந்த கல்வியியல் கல்லூரி இறுதிப்பரீட்சையில் சித்தி பெற்றவர்களுக்கு மேல் மாகாணத்தில் ஆசிரிய நியமனங்கள் வழங்கப்படமாட்டாது எனவும் தெரிவித்தார்.

பிரதியமைச்சர் நியோமல் பெரேராவை ஐ.தே.கட்சியில் இருந்து நீக்கத்தடை

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி மீன்பிடித்துறை அமைச்சருமான நியோமல் பெரேராவை ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து நீக்குவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ளது.
பிரதியமைச்சர் நியோமல் பெரேரா கடந்த 2004 பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டு புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.

பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் 16 பேர் ஆளும் தரப்பினருடன் சேர்ந்த போது இவரும் சேர்ந்து கொண்டார். மே 28 ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பிரதியமைச்சர் நியோமல் பெரேராவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து நீக்கியுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து, பிரதியமைச்சர் நியோமல் பெரேரா ஐக்கிய தேசியக் கட்சியின் இந்த நடவடிக்கைக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் கட்சியின் நிர்வாகக்குழு உறுப்பினர்களும் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

பரீட்சைகள் ஆணையர் தலைமையிலான குழு அடுத்த வாரம் வவுனியா விஜயம்

11edu-min.jpgவன்னி யிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவில் தங்கியுள்ள மாணவர்களுக்கு ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சையை நடத்துவது தொடர்பில் முன்னோடி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அநுர எதிரிசிங்க தலைமையிலான பரீட்சைத் திணைக்களக் குழுவொன்று வவுனியாவுக்குச் செல்லவுள்ளது.

கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்தவின் பணிப்புரைக்கமைய இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் பரீட்சைகள் ஆணையாளர் தலைமையிலான குழு அடுத்த வாரம் வவுனியாவுக்குச் செல்லவுள்ளதாகக் கல்வியமைச்சு தெரிவித்தது.

இது தொடர்பில் கல்விய மைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவிக்கையில், வவுனியாவிலிருந்து இடம்பெயர் ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மாணவர்களுக்கு க.பொ.த. உயர்தரப்பரீட்சையை அங்கு நடத்துவதற்கான முன்னோடி நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.

இதற்கென கொழும்பிலிருந்து றோயல் கல்லூரி, டி.எஸ். சேனநாயக்க கல்லூரி போன்ற உயர் கல்லூரிகளிலிருந்து தேர்ச்சியுள்ள ஆசிரியர்கள் அங்கு அனுப்பிவைக்கப்பட்டு பரீட்சைக்கு மாணவர்களைத் தயார்படுத்தும் நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இதற்கிணங்க ஐந்தாமாண்டு புலமைப்பரீட்சையும் ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் நடத்தப்பட வுள்ளதால் அப்பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களைச் சந்தித்தல் உட்பட அதற்கான சகல ஏற்பாடுகளையும் மேற்கொள்வதற்காக மேற்படி குழுவினர் வவுனியாவிற்குச் செல்லவுள்ளனர். இவர்களுடன் கொழும்பிலிருந்து ஆசிரியர் குழுவொன்றையும் அனுப்பி அம்மாணவர்களின் கல்வி நிலை பற்றி ஆராயவும், பரீட்சைக்கு அவர்களை ஆயத்தப்படுத்தவும் நடவடிக் கைகள் மேற்கொள்ளப்படுமென அவ்வதிகாரி மேலும் தெரிவித்தார்.

குமரன் பத்மநாதனைக் கைது செய்ய சர்வதேசத்தின் உதவியை நாடுகிறது அரசாங்கம்

lttepathmnathan.jpg இலங் கையின் வட பகுதியில் இருந்து விடுதலைப்புலிகள் படையினரால் முற்றாக அழிக்கப்பட்டு விட்டனர். இந்நிலையில் வெளிநாடுகளில் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் குமரன் பத்மநாதன் மேற்கொண்டு வருவதாக நம்பப்படுகின்றது. இவரைக் கைது செய்வதற்காக சர்வதேசத்தின் உதவியை அரசாங்கம் நாடியுள்ளதாக ஹிந்து பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கின்றது.

கடந்த ஜனவரி 30 ஆந் திகதி புலிகளின் தலைவர் பிரபாகரன், குமரன் பத்மநாதனுக்கு புலிகளின் சர்வதேச உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளராக நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கே பத்மநாதனை கைது செய்வதற்காக அவர் தொடர்பான பல தகவல்களை சர்வதேச நாடுகளுக்குத் தாம் அனுப்பி வைத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம தெரிவித்துள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்திய ரசிகர்களிடம் தோனி மன்னிப்பு

t20-world-cup.jpgஇருபது20 உலகக் கிண்ண போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியதற்காக இந்திய அணித் தலைவர் மஹேந்திர சிங் தோனி இந்திய ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார். தோல்விக்கு பின்னர் தோனி கூறியதாவது,

நாங்கள் சரியாக விளையாடவில்லை. இதனால் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டோம். இதனால் ரசிகர்கள் மிகுந்த கோபத்தில் இருப்பார்கள் என்பது எனக்கு தெரியும். இதற்காக அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

இந்திய ரசிகர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்கள். இது அவர்களுக்கு மிகுந்த ஏமாற்றமாக இருக்கும். மேற்கிந்திய தீவுகளில் நடைபெறும் அடுத்த உலகக் கிண்ணத்தில் மீண்டும் விஸ்வரூபம் எடுப்போம் என்று உறுதியளிக்கிறேன். 2007 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் (50 ஓவர்) நாங்கள் தோற்றது எனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் சோகமயமானது ஏமாற்றத்தை தந்தது. அதே போன்று தற்போது ஏமாற்றம் அடைகிறேன். பந்து வீச்சாளர்கள் தங்கள் பணியை மிகவும் சிறப்பாக செய்தனர். துடுப்பாட்ட வீரர்கள்தான் எடுபடவில்லை. 154 ஓட்ட இலக்கு என்பது எளிதானதுதான். துடுப்பாட்ட வீரர்கள் சரியாக ஆடவில்லை. இதுவே தோல்விக்கு காரணம்.

மஹ்மூத் அகமதி நிஜாத்துக்கு ஜனாதிபதி வாழ்த்து

president-ahamadinejad.jpgஈரானின் ஜனாதிபதியாக மஹ்மூத் அகமதி நிஜாத் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளமை இலங்கை மக்களுக்கு பேருவகை தரக்கூடியதொரு செய்தியாகுமென  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஈரானின் ஜனாதிபதியாக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ள மஹ்மூத் அகமதி நிஜாத்துக்கு ஜனாதிபதி அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியொன்றிலேயே இவ்வாறு கூறியுள்ளார். இந்த வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

இலங்கையின் நெருங்கிய நண்பன் என்ற வகையில் உங்கள் தெரிவு இலங்கை மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகின்றது.

உங்களது புதிய பதவிக் காலத்தில் இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையிலான நல்லுறவுகள் மேலும் பலமடையும் எனவும் இரு நாடுகளுக்கும் நன்மையளிக்கும் திட்டங்களில் நெருக்கமான ஒத்துழைப்பு நீடிக்கும் எனவும் எதிர்பார்க்கிறேன். உங்களுக்கு எனது இதயபூர்வமான வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் தமது வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

செட்டிக்குளம் தள வைத்தியசாலையில் 10 வருடங்களின் பின்னர் முதலாவது பிரசவம் இன்று

idp-100609.jpgவவுனியா, செட்டிக்குளம் தள வைத்தியசாலைiயில் சுமார் 10 வருடங்களின் பின்னர் இன்று முதலாவது பிரசவம் நிகழ்ந்துள்ளதாக மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. இதுபற்றி அமைச்சு மேலும் குறிப்பிடுகையில்

வவுனியா நிவாரணக் கிராமங்களுக்கு இன்று விஜயம் மேற்கொண்ட அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, பந்துல குணவர்தன,  திஸ்ஸ கரலியத்த மற்றும் ரிஷாத் பதியுதீன் ஆகியோர் செட்டிக்குளம் தள வைத்தியசாலையின் குறைபாடுகளைப் பார்வையிட்டனர்.

இவ்வைத்தியசாலைiயில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பிரசவ அறை மற்றும் வைத்தியர்களுக்கான ஓய்வு அறை ஆகியவற்றையும் அமைச்சர்கள் இன்று திறந்து வைத்தனர். இன்று திறந்துவைக்கப்பட்ட பிரசவ அறையிலேயே 10 வருடங்களின் பின்னரான முதலாவது குழந்தை பிறந்துள்ளது.

இது தவிர ஆனந்த குமாரசுவாமி நிவாரணக் கிராமத்தில் இலங்கை மருந்தாக்கல் கூட்டுத் தாபனத்தின் அனுசரனையில் அரச ஒசுசல நிறுவனமொன்றும் இன்று திறந்து வைக்கப்பட்டதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

டுவென்டி-20 உலக கோப்பை : அரையிறுதிக்கு தகுதிபெற்றது பாகிஸ்தான்

t20-world-cup.jpgஇங்கி லாந்தில் நடக்கும் இருபதுக்கு 20  உலக கோப்பை கிரிக்கெட் சூப்பர் 8 போட்டியின் இன்றைய முதல் ஆட்டத்தில் ’எப்’ பிரிவில் அயர்லாந்து பாகிஸ்தான் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது.. பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 159 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 9விக்கெட்டுகளை இழந்து 120ஓட்டங்களை பெற்றது. பாகிஸ்தான் அணி 35 ஓட்டங்களால் அயர்லாந்தை வெற்றி கொண்டதால் அரையிறுதிக்கு தகுதிபெற்றது 

உலகக் கிண்ண இருபதுக்கு 20 போட்டித் தொடரின் மிக முக்கியமான சுப்பர் எட்டு 2வது ஆட்டத்தில் ’இ’ பிரிவில் இங்கிலாந்து வெஸ்ட்இண்டீஸ் அணிகளும் மோதுகின்றன.