வவுனியா, செட்டிக்குளம் தள வைத்தியசாலைiயில் சுமார் 10 வருடங்களின் பின்னர் இன்று முதலாவது பிரசவம் நிகழ்ந்துள்ளதாக மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. இதுபற்றி அமைச்சு மேலும் குறிப்பிடுகையில்
வவுனியா நிவாரணக் கிராமங்களுக்கு இன்று விஜயம் மேற்கொண்ட அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, பந்துல குணவர்தன, திஸ்ஸ கரலியத்த மற்றும் ரிஷாத் பதியுதீன் ஆகியோர் செட்டிக்குளம் தள வைத்தியசாலையின் குறைபாடுகளைப் பார்வையிட்டனர்.
இவ்வைத்தியசாலைiயில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பிரசவ அறை மற்றும் வைத்தியர்களுக்கான ஓய்வு அறை ஆகியவற்றையும் அமைச்சர்கள் இன்று திறந்து வைத்தனர். இன்று திறந்துவைக்கப்பட்ட பிரசவ அறையிலேயே 10 வருடங்களின் பின்னரான முதலாவது குழந்தை பிறந்துள்ளது.
இது தவிர ஆனந்த குமாரசுவாமி நிவாரணக் கிராமத்தில் இலங்கை மருந்தாக்கல் கூட்டுத் தாபனத்தின் அனுசரனையில் அரச ஒசுசல நிறுவனமொன்றும் இன்று திறந்து வைக்கப்பட்டதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.