எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

வவுனியா பாடசாலைகளிலிருந்து மக்கள் மனிக்பாம் பகுதிக்குப் படிப்படியாக இடம் மாற்றம்

civiling_fleeng3.jpgவன்னிப் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவுக்கு வந்து பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களைப் படிப்படியாக மனிக்பாம் பகுதியில் உள்ள நிவாரண கிராமங்களுக்கு இடம் மாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காமினி மகாவித்தியாலயம், தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் ஆரம்பப் பிரிவு, கோவில்குளம் இந்துக் கல்லூரி போன்ற பாடசாலைகளில் இருந்து படிப்படியாக இடம்பெயர்ந்த மக்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டு வருவதாகவும், காமினி மகாவித்தியாலயத்தில் இருந்தவர்கள் முழுமையாக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதுடன், பாடசாலைகளில் அமைந்துள்ள இடம்பெயர்ந்தோருக்கான நிலையங்களில் ஏற்பட்டுள்ள இட நெருக்கடியைப் போக்குவதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஊவா மாகாணத்தில் ஆட்பதிவு திணைக்கள நடமாடும் சேவை

uwa_provinces_and_districts.pngஊவா மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நேற்று ஆர ம்பிக்கப்பட்ட நிலையில், தேர்தலுக்கு முன்னர் அப்பகுதி வாக்காளர்களு க்கு தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொடுப்பதற்கான துரித நடவடிக்கையை உள்நாட்டு நிருவாக அமைச்சு மேற்கொண்டுள்ளது.

இதற்கிணங்க ஆட்பதிவுத் திணைக்களம் பதுளை மாவட்டத்தில் பல்வேறு பகுதிக ளிலும் நடமாடும் சேவைகளை நடத்தி தேசிய அடையாள அட்டைகளை வழங்கத் தீர்மானித்துள்ளது.உள்நாட்டு நிருவாக அமைச்சரான பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவின் பணிப்பின் பேரில் ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் ஏ. பீ. தர்மதாச இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இதன்படி நேற்று 17ம் திகதி முதல் எதிர்வரும் 21ம் திகதி வரை பதுளை மாவட்டத்தின் பத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இந்த நடமாடும் சேவை நடத்தப்படுகிறது. நேற்று ஹல்துமுல்லை, ஹாலிஎல பிரதசங்களில் நடமாடும் சேவை நடைபெற் றதுடன், 18ம் திகதி அப்புத்தளை, வெலி மடையிலும் 19ம் திகதி ஊவா பரணகம, பண்டாரவளையிலும் 20ம் திகதி லுணு கலை, சொரணாதொட்டவிலும் 21ம் திகதி பதுளை மற்றும் கந்தகெட்டிய பிரதேசங்க ளிலும் இந்த நடமாடும் சேவை நடத்தப்ப டவுள்ளது.

ஊவா மாகாணத்தின் அனைத்து கிராம சேவகர் பிரிவுகளிலும் 2008ம் ஆண்டு தேர் தல் இடாப்பில் பெயர் உள்ளடக்கப்பட்டு, இதுவரை தேசிய அடையாள அட்டைக ளைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் மற்றும் அடையாள அட்டை தொலைந்தவர்கள் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளு மாறு ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் தெரிவிக்கின்றார்.இதேவேளை; ஊவா மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று ஆரம்பமாகியதுடன், எதிர்வரும் 24ம் திகதி வேட்புமனுத் தாக்கல் நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தோட்டங்கள் தோறும் டெங்கு விழிப்பூட்டும் நிகழ்ச்சி திட்டம்

dengu_1.gifதோட் டங்கள் தோறும் டெங்கு பற்றி விழிப்பூட்டும் நிகழ்ச்சித் திட்டத்தினை விரைவில் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக முன்னாள் ஊவா மாகாண சபை உறுப்பினரும், இ.தொ.கா. உப தலைவருமான கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.  பதுளை மாவட்டத்திலுள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கிடையே மேற்படி டெங்கு நுளம்பு தொடர்பான அறிவூட்டும் கருத்தரங்கு மற்றும் இதர நடவடிக்கை தொடர்பான விடயங்களை அந்த தோட்ட முகாமையாளர்களுடன் கலந்தாலோசித்து நடத்தவும், மரணங்களை ஏற்படுத்தும் நுளம்பு ஒழிப்பு தொடர்பான செயற்திட்டம் முன்னெடுக்கப்படும்.

நுளம்புகள் பெருகும் இடங்கள், அன்றாடம் சுத்திகரிக்கப்பட வேண்டிய இடங்கள் மற்றும் இந்த நுளம்பால் ஏற்படும் காய்ச்சலை கட்டுப்படுத்தும் முறை போன்ற விடயங்களை நேரடியாக தோட்ட லயன்களுக்குச் சென்று அறிவூட்டவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த அறிவூட்டும் நிகழ்ச்சிகளுக்கு இ.தொ.காங்கிரஸ் காரியாலயங்கள் மூலமும் கல்வி அமைச்சின் மூலமும் பூரண அனுசரணை கிடைக்கும் என கே.விஸ்வநாதன் மேலும் தெரிவித்தார்.

அரச நிறுவனங்களில் ஊழல், மோசடிகள் -அமைச்சர் அமுனுகம குற்றச்சாட்டு

அரச நிறுவனங்களில் இடம்பெறும் ஊழல் மோசடிகளை நிறுத்தும்வரை நாட்டைக் கட்டியெழுப்ப முடியாதெனத் தெரிவித்துள்ள அமைச்சர் சரத் அமுனுகம, நாட்டை அபிவிருத்தி செய்ய அரசுக்கு கிடைக்கும் வரிமூல வருமானம் பற்றாக்குறையாக உள்ளதெனவும் தெரிவித்தார். அத்துடன், அரசுக்கு கிடைக்கும் வருமானங்களின் மூலம் அரச ஊழியர்களின் ஊதியத்தை வழங்கவும் பெற்றகடன்களை திருப்பி அடைக்கவும் ஓய்வூதியம் வழங்கவும் அரச கட்டிடங்களுக்கு இடைக்கிடை வர்ணம் பூசவுமே போதியதாக இருக்கின்றது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

தகவல் மற்றும் ஊடக அமைச்சின் அனுசரணையின் கீழ் பிணை பரிவர்த்தனை ஆணைக்குழு மற்றும் நிதிச் சேவைகள் அக்கடமி ஆகியன இணைந்து நடத்தும் நிதியியல் ஊடகச் சான்றிதழ் கற்கைநெறியின் அங்குரார்ப்பண நிகழ்வு செவ்வாய்க்கிழமை பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றபோது அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பொது நிர்வாக மற்றும் உள்விவகார அமைச்சரும் நிதி திட்டமிடல் பிரதி அமைச்சருமான சரத் அமுனுகம  தெரிவித்தார்.

பிரட்டனில் வரவுசெலவுத் திட்டம் தொடர்பாக இருதரப்பு விமர்சனங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது. ஒன்று இங்கிலாந்து வங்கி மற்றையது “பினான்சியல் ரைம்ஸ்’ என்ற ஆங்கில பத்திரிகை. இதிலிருந்து அரச கருமங்ளில் ஊடகத்துறையின் பங்கு எவ்வளவு முக்கியமென்பதை தெளிவாக அறிய முடிகின்றது.

தற்பொழுது மக்கள் பத்திரிகை வாசிப்பது வெகுவாகக் குறைந்துள்ளது. காரணம் தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியாகும். இணையத்தளத்தின் மூலம் செய்திகளை அறிந்து கொள்ளும் மக்கள் பத்திரிகைகளில் ஆர்வம் காட்டுவதில்லை. அண்மையில் நாட்டின் வடபகுதியில் மோதல்கள் தீவிரமடைந்திருந்த நிலையில் உலகளவில் பொருளாதாரத்துறை பாரிய வீழ்ச்சியைச் சந்தித்ததுடன் நெருக்கடிக்கும் உள்ளாகியது. இச்சந்தர்ப்பத்தில் யுத்தச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த ஊடகங்கள் பொருளாதாரப் பிரச்சினை குறித்த செய்திகளுக்கு முக்கியம் வழங்கவில்லை.

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 1.9 பில்லியன் கடனைப் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் விண்ணப்பித்திருக்கிறது. இவ்விடயம் தொடர்பாகவும் ஊடகங்கள் உரிய விளக்கங்களையோ விமர்சனங்களையோ வழங்கவில்லை. இலங்கையில் கிட்டத்தட்ட 140 அரச நிறுவனங்கள் உண்டு. இந்நிறுவனங்கள் அரசுக்கு இலாபம் தேடித்தரவில்லை. மாறாக தமது நிறுவனங்கள் பெற்றுக்கொள்ளும் வரிமூல அல்லது ஏனைய வருமானங்களைக் கொண்டு ஊதியம் வழங்கி மக்களின் பணத்தை வீணடிக்கின்றன. அரச நிறுவனங்களில் ஊழல் மோசடிகள் அதிகமாகக் காணப்படுகின்றன. இவற்றை நிறுத்தும்வரை நாட்டைக் கட்டியெழுப்புவதென்பது இயலாத காரியமெனத் தெரிவித்தார்.

வடக்கே உள்ளுராட்சி சபைத் தேர்தலில் த.தே.கூ. போட்டியிடும்: மாவை சேனாதிராஜா

007tna.jpgயாழ்ப் பாணம் மாநகர சபை மற்றும் வவுனியா நகர சபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சி (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) போட்டியிடும் என அக்கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

தெள்ளு கடித்ததால் ஹட்டன் மகளிர் கல்லூரி பூட்டு

மாணவிகள் பலரை தெள்ளுப் பூச்சிகள் கடித்ததால், ஹட்டன் புனித கப்ரியல் மகளிர் வித்தியாலயம் நேற் றுக் காலை 10 மணியிலிருந்து எதிர்வரும் திங்கட்கிழமை வரை மூடப்பட்டுள்ளது.

நேற்றுக் காலை பாடசாலையின் தமிழ்ப் பிரிவின் சுமார் 50 மாணவிகள் தெள்ளுப் பூச்சிக்கடிக்கு உள்ளாகியமை கண்டறியப்ப ட்டு காலை 10 மணிக்கு உடனடியாக பாடசாலைக்கு விடுமுறை வழங்கப்பட்டது. ஹட்டன்-டிக்கோயா சுகாதாரப் பரிசோதகர்கள் விரைந்து வந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். எனினும், பாடசாலை திங்கள் வரை மூடப்பட்டது.

‘எம் மக்களை மீட்க ‘BTF ன்’ மாபெரும் (முதலைக் கண்ணீர்) போராட்டம்’ : ரி சோதிலிங்கம்

Protest_Londonமுகாம்களில் உள்ள மக்களுக்காக செய்யும் போரட்டம் அவர்களின் அவல நிலையையும் அவர்கள் திரும்பிப் போய் தமது சொந்த இடங்களில் வாழும்நிலையை உருவாக்கும் போராட்டமாக இருக்க வேண்டும். அந்த வகையில் யூன் 20ல் BTF -British Tamil Forum ஒழுங்கு செய்துள்ள பேரணி முகாம்களில் அவஸ்த்தைப்படும் மக்கள் மீண்டும் தமது வாழ்விடங்களுக்கு மீள குடியேற்ற உதவும் என்பதை நம்புவது மிகவும் கடினமாக உள்ளது.

2. கடந்த காலங்களில் பிரிஎப் (பிரித்தானிய தமிழர் பேரவை) போன்ற புலிகளின் ஆதவாளர்களால் நடாத்தப்பட்ட போராட்டங்கள் புலிகளின் அழிவுக்கும் புலிகளின் தலைவரின் படுகொலைக்கும் துணை போனது மட்டுமல்ல பல்லாயிரக் கணக்கான தமிழர்களின் உயிரிழப்பிற்கும் காரணமானது.

3. ‘புலிகளுக்கும் தமிழீழம் வேணும் எமக்கும் தமிழீழம் வேணும்’ என்பதால் நாம் அவர்கள் இயக்கத்தையும் அந்தக் கொடியையும் ஏற்றுக் கொண்டோம் என்று இயங்கி தமிழீழக் கோசம், பிரபாகரன் படம், புலிக்கொடியடன் நடாத்திய பேரணிகள் போல் இந்த முறையும்  பிரிஎப் புலிக்கொடி தமிழ்க் கொடி விற்று நிதி சேகரிப்பில் இறங்கினால்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.

4. புலிகளின் ஆதரவாளர்களால் இயக்குனர்களால் கடந்த காலங்களில் புலிகளின் பெயரால் மக்களுக்காக மக்களிடமிருந்து சேர்த்த  நிதி மோசடிகளும் தாம் போராட்டத்திற்கு உதவி செய்கிறோம் என்று போராட்த்திற்கும் துரோகம் இழைத்துள்ளதை புலிகளின் ஆதரவாளர்களால் பகிரங்கமாகவே பேசப்படும் விடயமாக உள்ளது.

5. இன்றுவரையில் உயிரிழந்த புலிப் போராளிகளுக்கும் அதன் தலைவருக்கும் அஞ்சலிக் கூட்டம் செய்யாமலும் இன்றும் புலிகள் மீண்டும் எழுவர்; 5வது தமிழீழப்போர் தொடுப்பர்; புலிக்கொடியே தேசியக் கொடி என்றும் கோசம் இட்டு முகாம்களில் உள்ள மக்களின் வாழ்வில் நிலைமைகளை மோசமாக்கும் நிலைக்குத் தள்ளிவிடுவார்கள் என்ற அச்சம் தவிர்க்க முடியாதது.

6. நாட்டில் உள்ள உண்மைச்சுற்றாடல் நிகழ்வை கவனத்தில் எடுக்காமல் புலம்பெயர் சூழலில் கனவு உலகில் தவறான முடிவுகள் எடுக்ப்பட்டு தவறாக வழிநடாத்தப்பட்டது. இதன் முடிவில் புலிகளின் தலைமையும் புலிப்போராளிகளும் அழிக்கப்பட்டனர். இந்த போராட்டங்களின் முடிவுகளின் விமர்சனங்கள் இல்லாமல் மீண்டும் ஒரு போரட்டம் நடத்துவதும் அதுவம் இவ்வளவு அவசர அவசரமாக இது நடாத்தப்படுவதும் இது புலிகளுக்குள்ளேயே நடைபெறும் குழுவாத்தின் பிரதிபலிப்புக்களா என்ற பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

7. இன்று இந்த மக்கள் முகாம்களில்  அவலநிலைக்குத் தள்ளப்பட்டதற்கு முக்கிய காரணமாக இருப்பது கிளிநொச்சி மன்னார் முல்லைத்தீவு வவுனியா பிரதேசங்களில் வாழ்ந்த மக்களை புலிகளின் தலைவரையும் ஆயுதங்களையும் பாதுகாக்கும் பொருட்டு மனிதக் கேடயங்களாக பயன்படுத்த இழுத்துச்சென்றதே என்பதை பிரிஎப் மறந்து விடக்கூடாது. இப்படி இழுத்துச்சென்ற மக்களை புதைகுழிகளுக்குள்ளும் செல் மழைக்குள்ளும் பசி பட்டினியுடன் மரணத்தை எதிர்நோக்க வைத்ததும் புலம்பெயர் புலிகளின் தவறான வழிகாட்டலே என்பதை பிரிஎப் மறந்துவிடக்கூடாது. இன்றுள்ள வன்னி முகாம்களைவிட மிகவும் மோசமான நிலையிலேயே இந்த மக்களை புலிகளின் தலைமை வைத்திருந்ததும் இந்த மக்களை புலம் பெயர் புலிகளின் தவறான புத்திமதியில் பலிக்கடாக்களாக்கும் திட்டத்தின் தோல்வியையும் பிரிஎப் மறந்துவிடக் கூடாது.

8. இன்றுள்ள முகாம் வாழ்க்கையை புலிகளே புதுமாத்தளன் – முள்ளி வாய்க்கால் பகுதியில் ஆரம்பித்து வைத்து மக்களை மரணம் நோக்கி நடாத்தினர் என்பதையும் இந்த சம்பவங்களை பிரிஎப் புலிகளிடம் தட்டிக்கேட்கவில்லை என்பதையும் இங்கே கூறிக்கொள்வது தவிர்க்க முடியாதது.

9. அது மட்டுமல்ல இப்படியான இந்த சூழ்நிலையிலிருந்து தப்பி ஓடி வந்தவர்களை தலைவரை தனியே விட்டுவிட்டு ஓடிவந்த துரோகிகள் என்றும் இந்த துரோகிகளுக்கு எந்த உதவியும் செய்யக் கூடாது என்று கூறியவர்களும் பிரிஎப்  மற்றும் புலிகளின் ஆதரவாளர்களே.

10. மேலும் மேற்கூறிய இந்த துரோகப்பட்டத்தை ஏக்காளமாக தூபமிட்டு பரப்பிய ஜபிசி ஜிரிவி தீபம் போன்ற ஊடகங்கள் இன்று இவற்றுக்கு என்ன சொல்கிறார்கள்? அரசியல் சவால்களைவிட இராணுவ வெற்றிகளை தமிழீழ வெற்றியாக ஊதித் தொலைத்த இந்த ஊடகங்கள் இன்றும் உங்கள் பேரணியை ஊதித்தள்ளும்.

11. மூன்று மாதங்களுக்கு முன்பு அந்த மக்களின் பரிதாபத்தை துரோகம் என்று கூறிவிட்டு இன்று அதேமாதிரியான சூழ்நிலையில் ஆனால் ஓரளவு மரணபயம் இல்லாமல் வாழும் மக்களை அரசின் மனித உரிமை மீறல்கள் என்று சத்தம்போடும் பிரிஎப் ஏன் அன்று புலிகளால் இதே போன்ற கொடுமைகள் நடைபெறும் போது எதிர்த்து குரல் எழுப்பவில்லை. அப்படி குரல் எழுப்பி  தடுத்து வைக்கப்பட்டு இருந்த மக்களை விடுவிக்கும்படி புலிகளை வற்புறுத்தியிருந்தால் இந்த நிலைமை இப்படி ஏற்ப்பட்டிருக்காது.

12. இன்று புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டபின்பும் அந்தப் பிரதேசங்களில் மீளக் குடியேற்றம் செய்யாமல் எமது மக்களை இப்படியாக அடைத்து வைத்திருப்பதை மனிதாபிமானமுள்ள எவரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அப்படியான மனித உரிமை மீறல்களை தமிழ்பேசும் மக்கள் எதிர்த்தே வந்துள்ளனர். ஆனால் இதேமாதிரியான மனித உரிமை மீறல்களை புலிகள் செய்யும் பொது மட்டும் காரணம் கூறிய பிரிஎப் இப்போது அரசிற்கு எதிராக குரல் எழுப்புவதை வரவேற்கும் அதே வேளை தமது கடந்தகால தவறுகளையும் பகிரங்கமாக மக்களிடம் ஒத்துக்கொள்ள துணிந்து முன்வர வேண்டும்.

13. இந்த யுத்த திருவிழாவை நடாத்த பண உதவி செய்த புலம் பெயர் மக்கள் திருவிழா முடிவில் துப்பரவு வேவைகளுக்கும் செய்யவும் முன்வரவேண்டும். வன்னி நிலப் பரப்பு எங்கும் நிலக் கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டு இருப்பதாக அரசு தெரிவிக்கிறது. புலிகளும் அதனைத் தெரிவித்துள்ளனர். ஆகவே இந்த யுத்தத்திற்கு ஆரம்பத்தில் போர் முழக்கம் இட்டவர்கள் இந்தக் கண்ணி வெடி அகற்றும் பணிக்கு உதவுவது அவசியம்.

14. இன்று வன்னி மக்களின் முகாம் வாழ்க்கையில் இலங்கை இராணுவம் பொலீசார் ஒருபக்கம் லஞ்சம் வாங்கிக்கொண்டு மக்களை வெளியே அனுமதித்துவிட்டு மக்கள் தப்பி ஓடிவிட்டனர் என்று தேடுதல் வேட்டைகள் செய்வதும் இவர்கள் காணாமல் போனோர் என தமிழர்கள் பிரச்சாரம் செய்வதும் நிகழ்கின்றது. புலிகளுடன் தொடர்புபட்டவர்கள் அழைத்துச் செல்லப்படும் சம்பவங்கள் நிகழ்ந்தள்ளன. நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. இவர்கள் எங்கு கொண்டு செல்லப்படுகிறார்கள் என்பது பற்றிய விபரங்களை அரசு வெளியிடவில்லை. இவை பற்றி சுனில் அபயசேகர போன்ற மனித உரிமைவாதிகள் தொடர்ச்சியாக கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அவர்களது குரல்களைப் பலப்படுத்துவது மிக மிக அவசியம்.

15. மேற்கூறிய காரணங்களின் அடிப்படையில் கடந்தகாலத் தவறுகள் பற்றிய விமர்சனத்தை முன்வைக்காமல் பிரிஎப் திடீரென இந்த மக்களுக்கான போராட்ட களத்தில் இறங்கியுள்ளது பலமான சந்தேகங்களை உருவாக்கியுள்ளது. இப்படியான போராட்டங்களை ஆரம்பிக்க முன்னர் பிரிஎப் ஒரு சுய விமர்சனத்தை முன்வைத்திருக்க வேண்டும்.

சமஷ்டியை ஏற்க இரு தரப்பும் மறுப்பு; சமாதான முயற்சி முறிவடைய இதுவே காரணம் : எரிக் சொல்ஹெய்ம்

erik_solheim.jpgஇலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் சமஷ்டித் தீர்வை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கவில்லை. அதனாலேயே,வெற்றிபெறும் நிலையில் இருந்த சமாதான முயற்சிகள் இறுதிக்கட்டத்தில் முறிவடைந்தன.”

இவ்வாறு நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும் இலங்கைக்கான முன்னாள் விசேட சமாதானப் பிரதிநிதியுமான எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்திருக்கிறார்.

பி.பி.ஸியின் ‘ஹார்ட் டோக்’ நிகழ்ச்சிக்கு வழங்கிய பேட்டியில் இதனைத் தெரிவித்துள்ள அவர், இப்போதைய நிலையில் இலங்கைக்கு எதிரான தடைகள் அவசியமில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இலங்கையின் மனிதாபிமானப் பணிகளுக்காக அரசுக்கு நிதியுதவி வழங்குவதாக இருந்தால், இடம்பெயர்ந்தோரின் முகாம்களுக்குள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படுவது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்களுக்குச் சிறந்த எதிர்காலம் உண்டென்பதை இலங்கை அரசு நிரூபிக்க வேண்டும் : புதிய அமெ. தூதுவர் பெட்ரிக்கா

butenis.jpgதமிழர் களுக்குச் சிறந்த எதிர்காலம் உண்டென்பதனை அரசாங்கம் யதார்த்தபூர்வமாக நிரூபிக்க வேண்டுமென இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவர் பெட்ரிக்கா புட்டீனிஸ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான போரில் லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து வாழ்கின்றனர். இவ்வாறு வாழும் தமிழ் சிறுபான்மை மக்களது உரிமைகளை உறுதிப்படுத்த அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். படுகொலைகள், சட்டவிரோத கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

சமாதானத்தை ஏற்படுத்தக் கூடிய சிறந்த சந்தர்ப்பத்தை இலங்கை அரசாங்கம் கைநழுவ விடக் கூடாது.ஐக்கிய இலங்கைக்குள் தமக்கு சிறந்த எதிர்காலம் இருப்பதாக தமிழ் மக்கள் உணரக் கூடிய வகையில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அமைய வேண்டும்.

விடுதலைப் புலிகள் தனிநாடு கோரி 30 வருடங்களாகப் போராடி வந்தனர். ஆனால் கடந்த மாதம் அரச படைகள் அவர்களைத் தோற்கடித்து விட்டனர். சுமார் 3 லட்சம் மக்கள் இன்று இடம்பெயர்ந்து முகாம்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். சர்வதேச சமூகத்தினால் இலங்கைக்கு அளிக்கப்பட்டு வரும் ஆதரவு குறித்து அரசாங்கம் திருப்தியடைய வேண்டும். இடம்பெயர்ந்தோர் முகாம்களில் சுதந்திரமாக பணியாற்ற தொண்டு நிறுவனங்களுக்குப் பூரண அனுமதியளிக்கப்பட வேண்டும்” என்றார்.

பதியுதீன் மஹ்மூத் நினைவு தின வைபவம் இன்று கொழும்பில்!

காலஞ்சென்ற முன்னாள் கல்வி அமைச்சர் காயிதே மில்லத் பதியுதீன் மஹ்மூத் அவர்களின் நினைவு தின வைபவம் இன்று கொழும்பில் நடைபெறவுள்ளது. அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணி சம்மேளன ஏற்பாட்டில் இன்று மாலை 4.00 மணிக்கு பொரளை, நகரோதய மண்டபத்தில் நடைபெறவுள்ள இவ்வைபவத்தில் சுகாதார சேவைகள் மற்றும் போஷாக்குத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளார் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வைபவத்தில் கொழும்பு, ஆனந்தா கல்லூரியின் முன்னாள் துணை அதிபர் வண. திவ்யகஹ யஸஸ்ஸி தேரர் சமாதான சகவாழ்வுக்கு சமத்துவ சமுதாயத்தை நோக்கி.. எனும் தலைப்பில் விசேட உரை நிகழ்த்தவுள்ளார். பதியுதீன் மஹ்மூத் நினைவாக இன்றைய வைபத்தில் உயர்கல்விப் புலமைப் பரிசில் ஒன்று வழங்கப்படவுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.