வன்னிப் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவுக்கு வந்து பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களைப் படிப்படியாக மனிக்பாம் பகுதியில் உள்ள நிவாரண கிராமங்களுக்கு இடம் மாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காமினி மகாவித்தியாலயம், தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் ஆரம்பப் பிரிவு, கோவில்குளம் இந்துக் கல்லூரி போன்ற பாடசாலைகளில் இருந்து படிப்படியாக இடம்பெயர்ந்த மக்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டு வருவதாகவும், காமினி மகாவித்தியாலயத்தில் இருந்தவர்கள் முழுமையாக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதுடன், பாடசாலைகளில் அமைந்துள்ள இடம்பெயர்ந்தோருக்கான நிலையங்களில் ஏற்பட்டுள்ள இட நெருக்கடியைப் போக்குவதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.