எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

விடுதலைப்புலிகளின் தயாமோகன் மலேசியாவுக்கு தப்பிச் சென்றுவிட்டார் – அமைச்சர் முரளீதரன் தெரிவிப்பு

விடுதலைப்புலிகளின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான தயாமோகன் மலேசியாவுக்கு தப்பிச் சென்று விட்டதாக அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் (கருணா) கூறியுள்ளார். கடந்த மே மாதம் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்பு புலி உறுப்பினர்கள் சரணடைய முயற்சிப்பதாகவும் அல்லது வெளியேற விரும்புவதாகவும் முன்னர் அமைச்சர் முரளீதரன் கூறியிருந்தார்.

பி.பி.சி.யின் சந்தேசிய சேவைக்கு இதனைத் தெரிவித்துள்ள அமைச்சர் முரளீதரன் அம்பாறைக் காட்டுக்குள் இருந்த தயாமோகனும் கேணல் ராமும் தப்பிச் சென்றுவிட்டதாக கூறியுள்ளார். ஆனால், இந்த தகவல் தொடர்பான தமது வட்டாரம் குறித்த விபரத்தை அவர் வழங்கியிருக்கவில்லை என்று பி.பி.சி. செய்திச் சேவை தெரிவித்தது.

விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின் பி.பி.சி. தமிழ்ச் சேவைக்கு கிழக்கிலுள்ள உறுப்பினர்கள் சரணடைவது குறித்துச் சிந்திக்கவில்லை என்று தயாமோகன் கூறியிருந்தார். இதேவேளை, இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் ஒருங்கிணைதல் தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள அமைச்சர் முரளீதரன் கண்ணிவெடி அகற்றப்பட்ட பின்பு 300 குடும்பங்கள் மன்னார் பகுதியின் இரு கிராமங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழ்ப் படையணியை இலங்கை இராணுவம் உருவாக்குவது தொடர்பாக முன்னர் குறிப்பிட்டிருந்தது குறித்து கருத்து தெரிவித்த அவர்; ஆயுதப் படைகளில் தமிழ் இளைஞர்கள் இணைவதற்கு அரசாங்கம் ஊக்குவிப்பதாக கூறியுள்ளார்.

இதுவரை அவரின் 600 ஆதரவாளர்கள் இராணுவத்திலும் பொலிஸிலும் இணைந்துள்ளனர். மட்டக்களப்பில் பொலிஸ் பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

200 மில். டொலர் கனரக ஆயுத ரவை கொள்வனவு நிறுத்தம்

sarath-pon-eka.jpgபுலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது பயன்படுத்தவென சீனாவிடமிருந்து தருவிக்கப்படவிருந்த 200 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கனரக ஆயுத ரவைகள் நிறுத்தப்பட்டதாக புதிய பிரதான பாதுகாப்பு அதிகாரியாக பதவியேற்ற ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் குறித்த காலத்திற்குள் முடிவுற்றமையினாலும், புலிகளிடமிருந்து பெருந்தொகையான கன ரக ஆயுதங்கள், குண்டுகள் மீட்டெடுக்கப்பட்டமையிலுமே மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

புதிய பிரதான பாதுகாப்பு அதிகாரியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட ஜெனரல் சரத் பொன்சேகா நேற்று தனது கடமைகளை பொறுப்பேற்றார். இதன் பின்னர் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கொழும்பு இராணுவத் தலைமையகத்திலுள்ள கூட்டுப் படைத் தலைமையகத்தில் நடைபெற்ற இந்த செய்தியாளர் மாநாட்டில் ஜெனரல் பொன்சேகா மேலும் உரையாற்றுகையில்:

யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் பெருமளவிலான ரவைகள் பாவிக்கப்பட்டன. அதே சமயம் நாளுக்கு நாள் புலிகளின் கட்டுப் பாட்டிலிருந்த பிரதேசங்களை கைப்பற்றிய படையினர் அங்கிருந்து பெருந்தொகையான ஆயுதங்கள், துப்பாக்கி ரவைகள் மற்றும் பல்வேறு யுத்த உபகரணங்களை மீட்டெடுத்தனர்.

மீட்டெடுக்கப்பட்ட பெருந்தொகையான ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களில் சில அந்த சமயமே யுத்த காலத்தில் பயன்படுத்தப்பட்டன.

எஞ்சியுள்ள ஆயுதங்களையும், உபகரணங்களையும் பயிற்சி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தவுள்ளதுடன் மேலதிக களஞ்சியமாகவும் வைக்கவுள்ளோம். ஜெனரல் பொன்சேகா கடமைகளை பொறுப்பேற்க முன்னர் முப்படைகளினால் வழங்கப்பட்ட மரியாதை அணி வகுப்புக் களையும் ஏற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்வில் பிரியாவிடை பெற்றுச் செல்லும் பிரதான பாதுகாப்பு அதிகாரி ஏயார் சீப் மார்ஷல் டொனால்ட் பெரேரா, புதிய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரி, விமானப்படைத் தளபதி எயார் சீப் மார்ஷல் ரொஷான் குணதிலக்க, புதிய கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் திஸர சமரசிங்க, பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரத்ன ஆகியோரும் கலந்துகொண்டனர்

யுத்தம், கடல்கோளால் பாதிக்கப்பட்டோருக்கு தொழில்வாய்ப்பு வழங்க நடவடிக்கை

அம்பாறை மாவட்டத்தில் கடந்தகால யுத்த சூழ்நிலை மற்றும் கடல்கோள் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் ஆடைத் தொழிற்சாலைகளை அமைப்பதற்கான நடவடிக்கைகளை கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சு மேற்கொண்டு வருகின்றது. “கிழக்கு உதயம்’ வேலைத் திட்டத்தின் கீழ் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நிதியுதவியுடன் சம்மாந்துறை, உகனை மற்றும் அக்கரைப்பற்று போன்ற இடங்களிலே இவ்வாறான ஆடைத் தொழிற்சாலைகள் அமைக்கப்படவுள்ளன.

அம்பாறை மாவட்டத்தில் இவ்வாறான தொழிற்சாலைகளை அமைப்பதற்காக முதற்கட்டமாக உபயோகமில்லாது காணப்படும் கட்டிடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. அத்துடன், இதற்கு மேலதிகமாக புதிய கட்டிடங்களும் நிர்மாணிக்கப்படவுள்ளன.

மேலும், ஆலையடிவேம்பு, அம்பாறை மற்றும் மருதமுனை போன்ற இடங்களில் கைத்தறி நெசவுத் தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான அமைப்புகளை ஏற்படுத்தி ஒவ்வொரு நிலையத்திலும் தலா 100 யுவதிகளுக்கு பயிற்சிகளை வழங்கி பின்னர் அந்த நிலையங்களிலே தொழில்வாய்ப்பினை வழங்கவும் கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த – லிபிய தலைவர் சந்திப்பு

111111.jpgஅணி சேரா நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கு பற்றுவதற்காக எகிப்துக்கு விஜயம் செய்திருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், லிபியத் தலைவர் கேர்ணல் முஅம்மர் கடாபி க்குமிடையில் நேற்றுக் காலையில் விசேட நல்லெண்ண சந்திப்பொன்று நடைபெற்றது.

இச்சந்திப்பின் போது இருநாடுகளுக்குமிடையிலான நட்புறவு தொடர்பாகவும் அதனை மேலும் மேம்படுத்துவது குறித்தும், இரு நாட்டுத் தலைவர்களும் விசேட கவனம் செலுத்தினர்.

அதேநேரம், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் அண்மையில் லிபியாவுக்கு மேற்கொண்டிருந்த ராஜதந்திர விஜயத்தின் போது இணக்கம் காணப்பட்டிருக்கும் விடயங்கள் குறித்தும் இரு நாட்டுத் தலைவர்களும் கவனம் செலுத்தினர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பாக லிபியத் தலைவருக்கு எடுத்துக் கூறினார்.

பயங்கரவாதம் முழுமையாக தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து வடக்கு, கிழக்கு பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் மேற்கொள்ளுகின்ற வேலைத் திட்டங்கள் தொடர்பாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ லிபியத் தலைவருக்குத் தெளிவுபடுத்தினார்.

இலங்கைக்குக் கடந்த மூன்று தசாப்தங்களாகப் பெரும் தலையிடியாக இருந்து வந்த பயங்கரவாதத்தை முழுமையாகத் தோற்கடித்தமைக்காக லிபியத் தலைவர் கடாபி இலங்கை ஜனாதிபதிக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

கட்டியெழுப்பப்படுகின்ற புதிய இலங்கையுடனான நட்புறவை நிலைநிறுத்தி, மேம்படுத்திக்கொள்வதற்கு எமது அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் லிபியத் தலைவர் கடாபி அச்சமயம் தெரிவித்துள்ளார். அணிசேரா மாநாடு நடைபெறும் எகிப்தின் ஷாம் அல் ஷெய்க் நகரில் இரு நாட்டுத் தலைவர்களுக்குமிடை யிலான இச்சந்திப்பு நடைபெற்றது.

தமிழர் விடயத்தில் கண் திறக்கப்படாவிட்டால் அது மோசமான விளைவுகளுக்கே வழிவகுக்கும் – சோமவன்ச

நிமிடத்துக்கு நிமிடம் விஸ்வரூபமெடுத்துக் கொண்டிருக்கும் தமிழர் பிரச்சினை தொடர்பில் அரசாங்கத்திடம் தெளிவான நோக்கு காணப்படவில்லை. தேசிய பிரச்சினை விடயத்தில் தொடர்ந்தும் கண் திறக்கப்படாத நிலை ஏற்படுமிடத்து பிற்காலத்தில் மிக மோசமான விளைவுகளையே அது ஏற்படுத்தப் போகின்றது என்று ஜே.வி.பி. யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவிக்கின்றார்.

தீர்வுத் திட்டங்கள் பிற்போடப்பட்டு வருகின்ற காரணத்தினாலேயே அந்நிய சக்திகள் எமது உள்வீட்டுப் பிரச்சினைகளுக்குள் தலையிடுகின்றன. வன்னி மக்களின் நிலைமைகள் குறித்து கருணாநிதியோ அல்லது அவரது மகள் கனிமொழியோ கவலைப்படத் தேவையில்லை என்றும் அவர் சொன்னார்.

கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச இதனைத் தெரிவித்தார். இங்கு அவர் மேலும் கூறுகையில்,

பயங்கரவாதமும் பிரிவினைவாதமும் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் சகோதரத்துவம் மற்றும் ஐக்கியத்துடனான இலங்கையை கட்டியெழுப்புவதே சகல இனத்தவரதும் எதிர்பார்ப்பாகும். தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்காக நாம் எதிர் கொண்டுள்ள தேசிய பிரச்சினையாக தோற்றம் பெற்றுள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகளை சரியானதும் தீர்க்கமானதுமான வழியில் புரிந்து அதற்கு தீர்வைப் பெற்றுக் கொடுப்பதுமே இன்றைய முதற் கட்டப் பணியாக இருக்கின்றது.

இது சவால் மிக்கதாகும். இந்த சவால்மிக்க பணியை முன்னெடுப்பதற்கான வேலைத்திட்டம் அல்லது ஒழுங்கமைப்பு அரசாங்கத்திடம் இல்லை. பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக தற்போது அதனை குழப்பியடித்துக் கொண்டிருக்கின்றது. இருப்பினும், இனங்களுக்கிடையிலான சமத்துவமின்மையை துடைத்தெறிவதற்கான ஆரம்ப கட்ட வேலைத்திட்டங்களையேனும் முன்னெடுக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.

முல்லைத்தீவு, கிளிநொச்சி, ஒட்டுசுட்டான் பிரதேசங்களுக்கு நேற்று முதல் மின்சாரம்

basil-raja.jpgவடக்கு வசந்தம் திட்டத்தின் கீழ் கிளிநொச்சி முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் மற்றும் நெடுங்கேணி ஆகிய பிரதேசங்களுக்கு நேற்று (15) மின்சார வசதி அளிக்கப்பட்டது. வடக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பெசில் ராஜபக்ஷ மின்சாரம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.

மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் டபிள்யு. டி. ஜே. செனவிரத்தினவின் ஆலோசனையின் பிரகாரம் இப்பகுதிகளுக்கு மின்சார வசதி வழங்கப்பட்டுள்ளது. வடக்கு வசந்தம் திட்டத்தின் கீழ் 180 நாட்களுக்குள் வடபகுதியிலுள்ள பல இடங்களுக்கு துரிதமாக மின்சார வசதி அளிக்க மின்சக்தி, எரிசக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைதீவு மற்றும் யாழ். நகரங்களில் உப மின்நிலையங்கள் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு இந்தப் பணிகள் 2 1/2 வருட காலத்தில் பூர்த்தி செய்யப்படவுள்ளன. மாங்குளத்தில் இருந்து 30 கிலோ மீட்டர் தூரத்துக்கு மின்மாற்றித் தொகுதி அமைக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி, எரிசக்தி அமைச்சு கூறியது.

இது தவிர வவுனியாவில் இருந்து மாங்குளம் வரை மின்சார இணைப்புத் தொகுதி யொன்று நிர்மாணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் இரு வருடங்களுக்குள் வடக்கில் உள்ள சகல கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்கும் மேற்படி திட்டங்களுக்கு 6000 மில்லியன் ரூபா செலவாகும் என எதிர் பார்க்கப்படுகிறது.

மோதல் காரணமாக வட பகுதியிலுள்ள பல கிராமங்களுக்கு நீண்டகாலமாக மின்சார வசதி வழங்கப்பட்டிருக்கவில்லை. மோதல்களின் போது புலிகள் மின்மாற்றிகள், உப மின்நிலையங்கள் என் பவற்றை அழித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கொலைக்குற்றம் சாட்டப்பட்டவருக்கு அமைச்சர் பதவி வழங்குவது முறையா? – ஆளும் கட்சி செய்தியாளர் மாநாட்டில் சலசலப்பு

கொலை குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவருக்கு அரசாங்கத்தில் அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருப்பது முறையானதா என்று நேற்று முன்தினம்  செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கேள்வி ஒன்று எழுப்பப்பட்டதை அடுத்து அங்கு சலசலப்பொன்று ஏற்பட்டுள்ளது.

கொழும்பு, மகாவலி கேந்திர நிலையத்தில் சுதந்திர முன்னணியில் நேற்று முன்தினம்  நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கேள்வியொன்றை எழுப்பிய ஊடகவியலாளர் ஒருவர், இதுவரை எந்த அரசாங்கமும் செய்திராத வகையில் இந்த அரசாங்கத்தினால் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டமையானது மிகவும் மதிக்கத்தக்கதும், வரவேற்கத்தக்கதுமான விடயமாக இருக்கின்ற அதேநேரம், பியசிறி விஜேநாயக்க (விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் எம்.பி) போன்ற கொலை குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவருக்கு இந்த அரசாங்கத்தில் அமைச்சுப் பதவி வழங்கப்பட்டிருப்பது சரியா எனக் கேட்டார்.

இதற்கு பதிலளிக்கும் முகமாக பேசிய தேசிய சுதந்திர முன்னணியின் பொது செயலாளரும் சுற்றுலாத்துறை அமைச்சருமான நந்தன குணதிலக, ஒருவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் வரை அவரை குற்றவாளியெனக் கூற முடியாதென தெரிவித்தார்.

எனினும், சிவில் மயப்படுத்தப்பட்ட ஏனைய நாடுகளில் இவ்வாறான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டாலே, எம்.பீ.க்கள் அல்லது அமைச்சர்கள் தங்களது பதவிகளை இராஜிநாமா செய்து விடுவதாக கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர் சுட்டிக் காட்டினர்.

ஊடகவியலாளரின் வாதத்தை ஏற்கொள்ளாத அமைச்சர் நந்தன குணதிலக்க, அப்படியென்றால் எவருக்கும் யார் மீதும் பொய்யன குற்றச்சாட்டுகளை சுமத்திவிட்டு அவரை குற்றவாளி என்று கூறி விட முடியுமே எனத் தெரிவிக்க, ஊடகவியாலாளரோ, அமைச்சர் பியசிறி விஜேநாயக்க கொலைக்குற்றசாட்டின் பேரில் ஏற்கனவே விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததை சுட்டிக் காட்டினார்.

இவ்வாறு அமைச்சருக்கு, ஊடகவியலாளருக்கும் இடையேயான வாதப் பிரதிவாதம் சூடும் பிடிக்கவே, அங்கிருந்த சக ஊடகவியலாளர்கள் அதை சுவரஸ்யமாக பார்த்துக் கொண்டிருந்தனர்.

கண்ணிகள் அகற்றும் பணிக்கு 500 இந்திய இராணுவத்தினர்

sarath-pon-eka.jpgவடக்கு, கிழக்கில் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் புலிகளால் புதைத்து வைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளுக்கு உதவ 500 பேர் கொண்ட இந்திய இராணுவக் குழு வெகுவிரைவில் இலங்கை வரவுள்ளதாக புதிய பிரதான பாதுகாப்பு அதிகாரி ஜெனரல் சரத் பொன் சேகா தெரிவித்தார்.

மக்களை வெகுவிரைவில் மீளக் குடியமர்த்தும் நோக்குடன் எமது பாதுகாப்புப் படைப்பிரிவினரும் வெளிநாட்டு நிறுவனங்களும் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டு வரும் அதேசமயம் இவர்களுடன் இணைந்து சேவையாற்றும் வகையிலேயே 500 இந்திய இராணுவ வீரர்களை அனுப்ப இணக்கம் காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

புதிய பிரதான பாதுகாப்பு அதிகாரியாக நேற்று கடமைகளை பொறுப்பேற்ற ஜெனரல் சரத் பொன்சேகா ஊடகவியலாளர் மத்தியில் உரையாற்றும் போது மேலும் தகவல் தருகையில்:

புலிகளால் புதைத்து வைக்கப்பட்ட கண்ணிவெடிகளுக்கு மத்தியிலேயே எமது பாதுகாப்புப் படைவீரர்கள் களமுனையில் முன்னேறிச் சென்றனர். இதன் காரணமாக பலர் உயிர் நீத்ததுடன், மேலும் பலர் காயமடைந்தனர்.

வடக்கின் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட அதேசமயம் கிழக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் எமது படை வீரர்களும், வெளிநாட்டு நிறுவனங்களும் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.  இவற்றில் அதிகமாகவும், வேகமாகவும் இராணுவத்தினரே மீட்டெடுத்தனர்.

கண்ணிவெடி அகற்றும் பணி என்பது மிகவும் இலகுவானதும், சுருக்கமாக செய்யக்கூடியதுமான ஒரு காரியமல்ல. காட்டுப் பகுதிகளிலும், சதுப்பு நிலப் பரப்பிலும் புதைத்து வைக்கப்பட்டுள்ள கண்ணி வெடிகளை மிக இலகுவாக அகற்ற முடியாது. எனினும் வெகுவிரைவில் அகற்றத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவை முழுமையாக அகற்றப்பட்ட பின்னர் மக்களை மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தபால் மூலவாக்களிப்பு: வாக்குச்சீட்டுகள் நேற்று அனுப்பி வைப்பு

வவுனியா நகர சபை தேர்தலுக்கு தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பித் தவர்களில் தெரிவான 183 பேருக்குரிய வாக்குச் சீட்டு க்கள் நேற்று புதன்கிழமை அனுப்பிவைக்கப்பட்டதென மாவட்ட தேர்தல் உதவி ஆணையாளர் ஏ. எஸ். கருணாநிதி தெரிவித்தார்.

தபால் மூல வாக்களிப்பு இம்மாதம் 27ம், 28ம் திகதி களில் நடைபெறுமெனவும் அவர் சொன்னார்.

அடுத்த மாதம் 8ம் திகதி நடைபெறவுள்ள வவுனியா நகர சபைத் தேர்தலுக்குரிய வாக்கு சீட்டுக்கள் வவுனியா தேர்தல் அலுவலகத்திற்கு வந்து சேர்ந்துள்ளன. மிகவும் பாதுகாப்பான முறையில் வாக்குச் சீட்டுக்கள் வைக்கப் பட்டுள்ளதென மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

பங்களாதேஷ் வீரர்களுக்கு அபராதம்

16-07-2009.jpgமேற் கிந்திய தீவுகளுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் நடுவரிடம் அளவுக்கு அதிகமாக முறையீடு செய்த பங்களாதேஷ் சகலதுறை ஆட்டக்காரர் ஷகீப் அல் ஹஸன் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஷஹ்தாத் ஹொஸை ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை முடிவடைந்த பங்களாதேஷ்மேற்கிந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் பங்களாதேஷ் அணித்தலைவராக செயல்பட்ட ஷகீப் அல் ஹஸன் மற்றும் ஷஹ்தாத் ஹொஸை ஆகியோர் போட்டி நடுவரிடம் அளவுக்கு அதிகமாக முறையீடு செய்தனர்.

இது ஐ.சி.சி. ஒழுக்க விதியை மீறும் செயல் என ஐ.சி.சி. போட்டி மத்தியஸ்தர் அன்டி பைக்ரொப்ட் தெரிவித்துள்ளார். இதற்காக ஷகீப் அல் ஹஸனுக்கு போட்டிக்கட்டணத்தில் இருந்து 10 வீதமும் ஷஹ்தாத் ஹொஸைனுக்கு 5 வீதமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதே குற்றத்திற்காக பங்களாதேஷ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் இம்ருல் கைஸுக்கு ஐ.சி.சி. எச்சரிக்கை விடுத்துள்ளது.