நிமிடத்துக்கு நிமிடம் விஸ்வரூபமெடுத்துக் கொண்டிருக்கும் தமிழர் பிரச்சினை தொடர்பில் அரசாங்கத்திடம் தெளிவான நோக்கு காணப்படவில்லை. தேசிய பிரச்சினை விடயத்தில் தொடர்ந்தும் கண் திறக்கப்படாத நிலை ஏற்படுமிடத்து பிற்காலத்தில் மிக மோசமான விளைவுகளையே அது ஏற்படுத்தப் போகின்றது என்று ஜே.வி.பி. யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவிக்கின்றார்.
தீர்வுத் திட்டங்கள் பிற்போடப்பட்டு வருகின்ற காரணத்தினாலேயே அந்நிய சக்திகள் எமது உள்வீட்டுப் பிரச்சினைகளுக்குள் தலையிடுகின்றன. வன்னி மக்களின் நிலைமைகள் குறித்து கருணாநிதியோ அல்லது அவரது மகள் கனிமொழியோ கவலைப்படத் தேவையில்லை என்றும் அவர் சொன்னார்.
கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச இதனைத் தெரிவித்தார். இங்கு அவர் மேலும் கூறுகையில்,
பயங்கரவாதமும் பிரிவினைவாதமும் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் சகோதரத்துவம் மற்றும் ஐக்கியத்துடனான இலங்கையை கட்டியெழுப்புவதே சகல இனத்தவரதும் எதிர்பார்ப்பாகும். தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்காக நாம் எதிர் கொண்டுள்ள தேசிய பிரச்சினையாக தோற்றம் பெற்றுள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகளை சரியானதும் தீர்க்கமானதுமான வழியில் புரிந்து அதற்கு தீர்வைப் பெற்றுக் கொடுப்பதுமே இன்றைய முதற் கட்டப் பணியாக இருக்கின்றது.
இது சவால் மிக்கதாகும். இந்த சவால்மிக்க பணியை முன்னெடுப்பதற்கான வேலைத்திட்டம் அல்லது ஒழுங்கமைப்பு அரசாங்கத்திடம் இல்லை. பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக தற்போது அதனை குழப்பியடித்துக் கொண்டிருக்கின்றது. இருப்பினும், இனங்களுக்கிடையிலான சமத்துவமின்மையை துடைத்தெறிவதற்கான ஆரம்ப கட்ட வேலைத்திட்டங்களையேனும் முன்னெடுக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.