கொலைக்குற்றம் சாட்டப்பட்டவருக்கு அமைச்சர் பதவி வழங்குவது முறையா? – ஆளும் கட்சி செய்தியாளர் மாநாட்டில் சலசலப்பு

கொலை குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவருக்கு அரசாங்கத்தில் அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருப்பது முறையானதா என்று நேற்று முன்தினம்  செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கேள்வி ஒன்று எழுப்பப்பட்டதை அடுத்து அங்கு சலசலப்பொன்று ஏற்பட்டுள்ளது.

கொழும்பு, மகாவலி கேந்திர நிலையத்தில் சுதந்திர முன்னணியில் நேற்று முன்தினம்  நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கேள்வியொன்றை எழுப்பிய ஊடகவியலாளர் ஒருவர், இதுவரை எந்த அரசாங்கமும் செய்திராத வகையில் இந்த அரசாங்கத்தினால் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டமையானது மிகவும் மதிக்கத்தக்கதும், வரவேற்கத்தக்கதுமான விடயமாக இருக்கின்ற அதேநேரம், பியசிறி விஜேநாயக்க (விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் எம்.பி) போன்ற கொலை குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவருக்கு இந்த அரசாங்கத்தில் அமைச்சுப் பதவி வழங்கப்பட்டிருப்பது சரியா எனக் கேட்டார்.

இதற்கு பதிலளிக்கும் முகமாக பேசிய தேசிய சுதந்திர முன்னணியின் பொது செயலாளரும் சுற்றுலாத்துறை அமைச்சருமான நந்தன குணதிலக, ஒருவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் வரை அவரை குற்றவாளியெனக் கூற முடியாதென தெரிவித்தார்.

எனினும், சிவில் மயப்படுத்தப்பட்ட ஏனைய நாடுகளில் இவ்வாறான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டாலே, எம்.பீ.க்கள் அல்லது அமைச்சர்கள் தங்களது பதவிகளை இராஜிநாமா செய்து விடுவதாக கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர் சுட்டிக் காட்டினர்.

ஊடகவியலாளரின் வாதத்தை ஏற்கொள்ளாத அமைச்சர் நந்தன குணதிலக்க, அப்படியென்றால் எவருக்கும் யார் மீதும் பொய்யன குற்றச்சாட்டுகளை சுமத்திவிட்டு அவரை குற்றவாளி என்று கூறி விட முடியுமே எனத் தெரிவிக்க, ஊடகவியாலாளரோ, அமைச்சர் பியசிறி விஜேநாயக்க கொலைக்குற்றசாட்டின் பேரில் ஏற்கனவே விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததை சுட்டிக் காட்டினார்.

இவ்வாறு அமைச்சருக்கு, ஊடகவியலாளருக்கும் இடையேயான வாதப் பிரதிவாதம் சூடும் பிடிக்கவே, அங்கிருந்த சக ஊடகவியலாளர்கள் அதை சுவரஸ்யமாக பார்த்துக் கொண்டிருந்தனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *