எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

எட்டாவது கிராமிய மின்விநியோகத் திட்டம்!

எட்டாவது கிராமிய மின்விநியோகத் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்திருந்தார்.
57 மில்லியன் யூரோவை ஈரான் அரசாங்கம் இத்திட்டத்திற்கு கடனுதவியாக வழங்குகின்றது. இத்திட்டத்தினூடாக 1000 கிராமங்களைச் சேர்ந்த 1 இலட்சத்து 80 ஆயிரம் பாவனையாளர்கள் நன்மையடைவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தேர்தலை சிறந்த முறையில் நடத்த அரசு ஒத்துழைப்பு வழங்கும்

vote.jpgநீதியானதும், நியாயமானதுமான தேர்தலை நடத்தி முடிப்பதற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும், தகவல், ஊடகத்துறை அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலை சிறந்த முறையில் நடத்துவதற்கு தேவையான ஒத்துழைப்புக்களை தேர்தல் ஆணையாளருக்கு வழங்க தயாராகவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை ஊடகங்களுக்கு அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு நேற்று பிற்பகல் அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அமைச்சர் இங்கு மேலும் உரையாற்றுகையில் :- கடந்த காலங்களிலும் சிறந்த தேர்தல்களை நடத்துவதற்கான ஒத்துழைப்புக்களை அரசாங்கம் எல்லா சந்தர்ப்பங்களிலும் வழங்கியுள்ளது.

புனித முஹர்ரம் மாத ஆரம்பம்

வியாழன் மாலை மஃரிப் தொழுகையை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளி வாசலில் நடைபெற்ற பிறைக்குழு மாநாட்டில் புனித முஹர்ரம் மாதத்தின் தலைப்பிறை வியாழன் மாலை தென்பட்டதற்கான தகவல்கள் கிடைக்கப்பெறாமையினால் துல்ஹிஜ்ஜஹ் மாதத்தை முப்பதாக பூர்த்தி செய்து வெள்ளி மாலை சனி இரவு புனித முஹர்ரம் மாதத்தை ஆரம்பிப்பதென தீர்மானிக்கப்பட்டது.

இம் மாநாட்டில் கலந்துகொண்ட உலமாக்கள், கதீப்மார்கள், அகில இலங்கை ஜம்இயதுல் உலமா, ஷரீஆ கவுன்சில், அன்ஜுமன் பாயிஸ் இ. ரஸா (மேமன் சங்கம்) முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் ஜும்ஆ பள்ளி வாசல்கள், ஸாவியா, தக்கியா நிருவாகிகள் ஆகியோரால் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. இதன் பிரகாரம் ‘புனித ஸபர்’ மாதத்தின் தலைப்பிறை பார்க்க வேண்டிய நாள் (புனித முஹர்ரம் 29) 16.01.2010 சனி பின்னேரம் ஞாயிறு இரவு எனவும் முடிவு செய்யப்பட்டது.

அமைச்சர்களின் எண்ணிக்கையை குறைப்பது நடைமுறைச் சாத்தியமற்றது -அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா

anura-priya.jpgபாராளு மன்றத்தில் அரசாங்கத்துக்கு பெரும்பான்மைப் பலம் இல்லாத நிலையில் அமைச்சர்களின் எண்ணிக்கையை குறைப்பது நடைமுறைச்சாத்தியமற்றது என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா கூறினார் .

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது,

நாட்டைக் கட்டியெழுப்பும் நோக்கில் அரசாங்கத்துக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆதரவு வழங்க முன்வரும்போது அவர்களுக்கு அமைச்சுப் பொறுப்புகள் வழங்குவது சரியானதே. இதற்காக அரசாங்கம் புதிய அமைச்சுக்களை உருவாக்கவில்லை. ஏற்கனவே இருந்த அமைச்சுக்களுக்கே அமைச்சர்களாக புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் ஜனாதி ஜே.ஆர். ஜெயவர்தனாவின் ஆட்சிக் காலத்தில் 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பின்படி நூற்றுக்கும் அதிகமான அமைச்சர்கள் நியமிக்கபட்டனர் என்பது அனைவரும் அறிந்ததே.

பொது மக்களிடமிருந்து அறவிடப்படும் வரிகள் அமைச்சர்களுக்கு மட்டும் செலவிடப்படுவதில்லை. அவற்றில் பெருந்தொகைப் பணம் நாட்டின் இலவசக் கல்வி மற்றும் சுகாதார சேவை என்பனபோன்றவற்றுக்குச் செலவிடப்படுகின்றன. உலகில் இலவசக் கல்வியும் மருத்துவ வசதிகளும் வழங்கப்படும் ஒரே நாடு எமது இலங்கையே என்றும் அமைச்சர் கூறினார்.

புதிய நியமனங்கள் இடமாற்றங்கள் பதவி உயர்வுகள் இடை நிறுத்தம்;!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையாளரின் உத்தரவுக்கு மதிப்பளிக்கும் வகையில் புதிய நியமனங்கள் இடமாற்றங்கள் பதவி உயர்வுகள் என்பவற்றை இடைநறுத்த உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும் சுகாதார சேவை போன்ற அத்தியவசிய சேவைகளில் இதற்கு விதிவிலக்களிக்கப்பட வேண்டும் என அமைச்சரவையால் முடிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் ஐரோப்பிய ‘புலி’ ஆதரவாளர் மகிந்த ராஜபக்சவுக்காக பிரச்சாரம் செய்ய இலங்கை செல்கிறார். : த ஜெயபாலன்

Nadarajah_Sethurubanவருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் நடராஜா சேதுரூபன் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாக சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினரும் தமிழ் மக்களின் விவகாரங்கள் தொடர்பாக ஜனாதிபதிக்கு ஆலோசணை வழங்குபவருமான கலாநிதி லெவின் வி சி ராஜரட்ணம் தெரிவித்துள்ளார். கிறிஸ்மஸ் காலப்பகுதியில் இலங்கை வரவுள்ள சேதுரூபன் இலங்கையில் உள்ள குறிப்பாக தமிழ் ஊடகங்களுக்கு ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து நேர்காணல்கள வழங்க இருப்பதாகவும் கலாநிதி லெவின் வி சி ராஜரட்ணம் தெரிவித்துள்ளார். இத்தகவல் உண்மையானது என்பதை தேசம்நெற்க்கு உறுதிப்படுத்திய சேதுரூபன் இன்னும் இரு வாரங்களுக்குள் தான் இலங்கை செல்லவுள்ளதாகவும் தெரிவித்தார்.  ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் குழு ஒன்று இலங்கையில் இருந்து நோர்வேக்கு வரவுள்ளதாகக் கூறிய அவர் இக்குழு சர்வதேச ஆதரவை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு திரட்டும் நோக்கில் வருவதாகவும் தெரிவித்தார். விரைவில் இலங்கை செல்லவுள்ள சேதுரூபன் மீண்டும் அக்குழுவுடன் நோர்வே வரலாம் எனவும் கூறினார்.

நடராஜா சேதுரூபன் இலங்கைத் தமிழ் மக்களின் வாக்கு வங்கிமீது பிடிமானத்தை கொண்ட ஒருவரல்ல. ஆனால் இலங்கையில் ஊடகவியலாளராகக் கடமையாற்றிய சேதுரூபன் காலஞ்சென்ற தவிபு இன் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கத்தின் அன்புக்குரியவருடன் பணியாற்றியவர். அதன் மூலம் அன்ரன் பாலசிங்கத்துக்கு அறிமுகமானவர். 2002 நோர்வேயில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் ரிபிசி ஊடகவியலாளராகக் கலந்துகொண்ட சேதுரூபன் அன்ரன் பாலசிங்கத்துடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டவர்.

அதன் பின்னர் ரிபிசி வானொலியில் ரிபிசி 10வது ஆண்டு : கடந்து வந்த பாதை : த ஜெயபாலன் ஏற்பட்ட முரண்பாட்டுடன் அவ்வானொலியைவிட்டு வெளியேறி தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான செயற்பாடுகளில் ஈடுபட்டவர். குறிப்பாக ரிபிசி யில் இருந்த காலத்தில் நட்பான ஹரோ கவுன்சிலர் தயா இடைக்காடர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான உண்ணாவிரதம் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்ட போது அதன் பின்புலத்தில் நின்றவர்களில் சேதுரூபன் குறிப்பிடத்தக்கவர். இக்காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்து விலகிய ஆர் ஜெயதேவனுக்கு எதிரான மிகக் கடுமையான பிரச்சாரங்கள் சேதுரூபனால் முன்னெடுக்கப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பானவர்களின் அரசியல் நிலைப்பாடுகளில் திடீர் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த ஆர் ஜெயதேவன், ரிபிசி வானொலி என்பன தற்போது அரசுக்கு எதிரான போக்கை வெளிப்படுத்துகின்றன. அன்று தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த சேதுரூபன் தற்போது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கின்றார்.

தற்போது சேதுரூபனுடன் தொடர்புடைய எதிரும் புதிருமான சட்ட நடவடிக்கைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. நோர்வேயில் வாழும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளரான நெடியவனின் மனைவியின் குடும்பத்தினர் தான் இலங்கை அரசுக்கு உளவு பார்த்து வழங்குவதாக ஒஸ்லோவிற்கு வெளியே உள்ள மோல்டே பொலிஸ் நிலையத்தில் குற்றப்பதிவு செய்துள்ளதாக சேதுரூபன் தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மற்றுமொரு பொறுப்பாளரான முரளி என்பவரும் அதே குற்றச்சாட்டை ஸ்ரோனர் பொலிஸ் நிலையத்திலும் தன்மீது பதிவு செய்திரப்பதாகவும் தெரிவித்தார். நோர்வேயில் மற்றுமொரு அரசுக்கு சார்பாக உளவு பார்ப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.

தற்போது நோர்வே நியூஸ் என்ற இணையத்தளத்தின் ஆசிரியராகச் செயற்படும் சேதுரூபன் ஏசியன் ரிபியூன் ஆசிரியர் கெ ரி ராஜசிங்கத்திற்கு எதிராக மானநஸ்ட வழக்கைத் தொடுத்துள்ளார். சுவீடனில் வாழும் கே ரி ராஜசிங்கம் பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் எனத் தன்னைக் குறிப்பிட்டு தன் பற்றிய அபாண்டமான செய்திகளை வெளியிட்டதாக சேதுரூபன் குற்றம்சாட்டியுள்ளார். Submissions_to_the_court_2009-09-16_and_2009-09-30.pdf , Letter_from_the_court_dated_2009-12-03_and_submission_from_the_defendants_dated_2009-11-16.pdf

இதே சமயம் லண்டன் ரிபிசி வானொலி உடைப்பிலும் சேதுரூபன் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் என்று குற்றம்சாட்டப்பட்டு இருந்தார்.

இவற்றுக்கிடையே ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிக் கூட்டின் ஆதரவுடன் போட்டியிடும் முன்னாள் ஜெனரல் சரத் பொன்சேகாவின் சட்டக் குழு தன்னுடன் தொடர்பு கொண்டதாகவும் சேதுரூபன் தெரிவிக்கின்றார். ஏசியன் ரிபியூன் ஆசிரியர் கே ரி ராஜசிங்கம் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர். தற்போது ஏசியன் ரிபியூன் இணையத்திற்கான நிதியை இலங்கை அரசே வழங்கி வருகின்றது என்ற செய்தி கடந்த ஆண்டு இலங்கைத் தேசிய நாளிதள்களில் வெளிவந்திருந்தது. அண்மையில் சரத் பொன்சேகா பற்றிய ஆதாரமற்ற செய்திகள் ஏசியன் ரிபியூனில் வெளிவந்தது தொடர்பாக சரத் பொன்சேகாவின் சட்ட குழு ஏசியன் ரிபியூன் மீதும் கே ரி ராஜசிங்கம் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க முற்பட்டு உள்ளனர். ஏசியன் ரிபியூன் மீது ஏற்கனவே சேதுரூபனின் வழக்கும் இருப்பதால் அது பற்றிய விபரம் அறியவே சரத் பொன்சேகாவின் சட்டக் குழு சேதுரூபனைத் தொடர்பு கொண்டதாக தெரியவருகின்றது.

மகிந்த ராஜபக்சவிற்கு சேதுரூபனின் ஆதரவு என்பது இவ்வாறான சட்டச் சிக்கல்களில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்கான ஒரு நகர்வா எனக் கேட்ட போது எவ்வித கேள்விகளுக்கும் அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார். சரத் பொன்சேகாவை ஆதரிப்பதற்கான வாய்ப்பும் உள்ளதா எனக் கேட்ட போது ‘சரத் பொன்சேகா ஆட்சிக்கு வரும்பட்சத்தில் ஆயுதக் குழுக்கள் அனைத்தும் இல்லாமல் போய்விடும் அதுவொரு நல்லஅம்சம்’ எனத் தெரிவித்தார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராவதற்கோ அல்லது பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் உண்டா எனக் கேட்டதற்கு இப்போதைக்கு அவை பற்றி எதுவும் குறிப்பிட முடியாது எனத் தெரிவித்தார்.

._._._._._.

த ஜெயபாலனின் குறிப்பு:

//இலங்கையில் ஊடகவியலாளராகக் கடமையாற்றிய சேதுரூபன் காலஞ்சென்ற தவிபு இன் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கத்தின் முதல் மனைவியுடன் பணியாற்றியவர்.// என்று ஆரம்பத்தில் எழுதப்பட்டு இருந்தது.

மேற்படி குறிப்பில் //’முதல் மனைவியுடன்’ என்பது ‘அன்புக்குரியவருடன்’// என்று வந்திருக்க வேண்டும். தகவல் மூலம் அன்புக்குரியவர் என்று அவரது பெயரைக் குறிப்பிட்டு இருந்தது. அதனைக் கேட்டுப் பதிவு செய்யும் போது நான் தவறாக அது அவருடைய மனைவி என்று அர்த்தப்படுத்திக் கொண்டேன். மேற்படி அந்த அன்புக்குரியவருடன் சேது வீரகேசரி பத்திரிகையில் பணியாற்றி இருந்தார்.

தவறுக்கு வருந்துகிறேன். தற்போது திருத்தி அமைக்கப்பட்டு உள்ளது.

த ஜெயபாலன்

முதல் வெற்றியைப் போன்று இரண்டாவதையும் வெற்றிகொள்வேன் – ஜனாதிபதி

presi_election.jpgமுதல் வெற்றியைப் போன்று இரண்டாவது வெற்றியையும் நிச்சயம்  பெறுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுவை தேர்தல் ஆணையாளர் நாயகம் செயலகத்தில் தாக்கல் செய்துவிட்டு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

முதல் வெற்றியாக யுத்தத்தை வெற்றிகொண்டென். அதேபோன்று இரண்டாவது வெற்றியாக பொருளாதார வெற்றியையும் நிச்சயமாகப் பெறுவேன். நாட்டின் முன்னேற்றத்தக்காவே பாடுபடுவதாகவும் ஜனாதிபதி மெலும் தெரிவித்தார்.

அர்ஜூனா ரணதுங்க ஜெனரல் பொன்சேகாவிற்கு ஆதரவு.

arjuna-ranatunga.jpgசிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூனா ரணதுங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் பொதுவேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகவிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக இன்று அறிவித்துள்ளார்.

குழப்பம் நிகழும் வாக்களிப்பு நிலையங்களின் வாக்குகள் இரத்து – தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் எச்சரிக்கை

dayananda_disanayake.jpgநடைபெற வுள்ள ஜனாதிபதித் தேர்தலின் போது குழப்பம் நிகழும் வாக்களிப்பு நிலையங்களின் வாக்குகளை இரத்து செய்வதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தயானந்த திஸாநாயக்க எச்சரிக்கை விடுத்தார். ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யும் நிகழ்வு இன்று கலை ராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்தின் செயலகத்தில் இடம்பெற்றது. இதில் உரை நிகழ்த்தும் போதே அவர் இவந்தத் தகவலை வெளியிட்டார்.

இரத்து செய்ய நேரிட்டால் மீண்டும் தேர்தல் நடத்த நேரிடும் என்றும் அவ்வாறு தேர்தல் நடத்தப்படுமாயின் பெறுபேறுகள் தாமதமடையலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை இம்முறை விருப்பு வாக்குகளைத் தெரிவிப்பதற்காக புள்ளடி இடுவதற்குப் பதிலாக 1,2, 3 என இலக்கங்களைக் குறிப்பிட வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் வாக்காளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

எனினும் புள்ளடியிட்டு ஒருவருக்கான விருப்பத்தை தெரிவித்திருந்தால் அதனையும் ஏற்றுக்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் இம்முறையே கூடுதலான வேட்பாளர்கள்

sri_election.jpgஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை தேர்தல் செயலகத்தில் இடம்பெற உள்ளது. எதிர்வரும் ஜனவரி 26ம் திகதி நடைபெறவுள்ள தேர்தலுக்காகக் கட்டுப்பணம் செலுத்த வழங்கப்பட்டிருந்த காலக்கெடு நேற்று நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடைந்தது.  ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு 23 வேட்பாளர்கள் கட்டுப் பணம் செலுத்தியுள்ளனர். இதில் 18 அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களும் 5 சுயேச்சை வேட்பாளர்களும் இருப்பதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது.

ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் இம்முறையே கூடுதலான வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். 2005 தேர்தலில் 13 வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. வேட்புமனுத் தாக்கலை முன்னிட்டு ராஜகிரிய தேர்தல் செயலக பிரதேசத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் போக்குவரத்து ஒழுங்குகளும் செய்யப்பட்டுள்ளன.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்யவுள்ளதால் பொரளையில் இருந்து வெலிக்கடை பொலிஸ் நிலையம் வரையிலான வீதி மற்றும் டி. எஸ். சேனாநாயக்க சந்தி முதல் பாராளுமன்ற பாதையினூடாக வெலிக்கடை பொலிஸ் வரையிலான வீதி ஆகியவற்றில் இன்று காலை 9.00 மணி முதல் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டிருக்கும். இதேவேளை தேர்தல் செயலக பகுதியில் மேலதிக பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

வேட்புமனுத் தாக்கலுக்கு முன்னதாக வேட்பாளர்கள் தமது பதாகைகள், சுவரொட்டிகள் என்பவற்றை அகற்றுமாறு கோரப்பட்டுள்ளது. வேட்பு மனுத் தாக்கலின் பின்னர் சகல சுவரொட்டிகள் பதாகைகள் என்பன அகற்றப்பட உள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இதேவேளை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பிப்பதற்காக வழங்கப்பட்டிருந்த காலக்கெடு இன்றுடன் நிறைவடைவதாக தேர்தல் செயலகம் கூறியது. புனர்வாழ்வு பெற்றுவரும் முன்னாள் புலி உறுப்பினர்களுக்கும் தபால் மூலம் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. வேட்புமனுக்கள் தாக்கல் செய்வதற்காக குறித்த வேட்பாளருடன் மேலும் இருவருக்கு தேர்தல் செயலகத்துக்கு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் வேட்பாளருடன் மேலும் 10 விருந்தினர்களுக்கும் அங்கு வர அனுமதி கிடைக்கும்.

வேட்பு மனுக்கள் தொடர்பில் ஆட்சேபங்களை முன்வைக்க இன்று காலை 9.00 மணி முதல் 11.30 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆட்சேபங்களின் பின்னர் தேர்தலில் போட்டியிடத் தகுதியான வேட்பாளர்களின் விபரங்களை தேர்தல் ஆணையாளர் அறிவிப்பார்.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடுகிறார். ஐ. தே. க.வும், ஜே. வி. பியும் இம்முறை தேர்தலில் போட்டியிடவில்லை. புதிய ஜனநாயக முன்னணி சார்பாக சரத் பொன்சேகா போட்டியிடுகிறார்.

இது தவிர இடதுசாரி முன்னணி சார்பாக விக்ரமபாகு கருணாரத்ன, ஐ. தே. க மாற்று முன்னணி வேட்பாளராக சரத் கோங்கஹகே, ஐக்கிய சோசலிசக் கட்சி வேட்பாளராக சிறிதுங்க ஜயசூரிய, சோசலிச சமத்துவக் கட்சி சார்பாக விஜே டயஸ் அனைவரும் பிரஜைகள் அனைவரும் மன்னர்கள் கட்சி வேட்பாளராக எம். பி. தெமினி முல்ல, இலங்கை முற்போக்கு முன்னணி வேட்பாளராக ஜே. ஏ. பி. பீடர் நெல்சன் பெரேரா, புதிய சிஹல உருமய வேட்பாளராக சரத் மனமேந்திர, தேசிய அபிவிருத்தி முன்னணி வேட்பாளராக அசல அசோக சுரவீர, இலங்கை தொழிலாளர் கட்சி வேட்பாளராக ஜி. டி. பி. எஸ். ஏ. லியனகே, எமது தேசிய முன்னணி வேட்பாளராக கே. பி. ஆர். எல். பெரேரா, ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி சார்பாக எம். சீ. எம். இஸ்மாயில், ருகுணு மக்கள் கட்சி சார்பாக அருண த சொய்சா, தேசிய முன்னணி சார்பாக சனத் பின்னதுவ, தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி வேட்பாளராக சேனரத்ன சில்வா, ஜனசெத முன்னணி சார்பாக பத்தரமுள்ள சீலரத்ன தேரர், ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பாக சன்ன ஜானக கமகேயும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

சுயேச்சையாக போட்டியிட 5 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

யாழ். மாவட்ட முன்னாள் எம்.பி., ஐ. எம். இலியாஸ், முன்னாள் பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபா, முன்னாள் ஐ. தே. க. எம்.பி, யு. பி. விஜேகோன், தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி, கே. சிவாஜிலிங்கம், டபிள்யு. வி. மஹிமன் ரஞ்சித் ஆகியோரே இவ்வாறு சுயேச்சையாக போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.