அறுபது வருட காலத்திற்குப் பின்னர் இலங்கைப் பாராளுமன்றத்தில் புதியதொரு நிலைமை தோன்றியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நேற்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்தப் பாராளுமன்றமாவது நியாயமானதும் நீதியானதுமான தீர்வைக் காணுமெனத் தாம் நம்புவதாகவும் சம்பந்தன் குறிப்பிட்டார். ஏழாவது பாராளுமன்றத்திற்கான முதலாவது அமர்வு நேற்று ஆரம்பமான போது புதிய சபாநாயகராக சமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து கட்சித் தலைவர்கள் புதிய சபாநாயகரைப் பாராட்டி உரை யாற்றினார்கள். இதன்போது சம்பந்தனும் உரையாற்றினார்.
சம்பந்தனின் உரை நேற்று முற்றிலும் வித்தியாசமான ஓர் அணுகுமுறையை வெளிப்படுத்தியது. விபரம் வருமாறு :-
‘சபாநாயகர் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டமைக்கு எனது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியின் சார்பில் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். சென்ற பாராளுமன்றம் முதன் முறையாகக் கூடியபோது சபாநாயகர் தெரிவு எவ்வாறு இடம்பெற்றது என்பது என் ஞாபகத்திற்கு வருகிறது. ஆளுந் தரப்புக்கும் எதிர்த் தரப்புக்கும் இடையில் போட்டி ஏற்பட்டதால் முழு நாளும் வாக்கெடுப்பு நடந்தது.
இறுதியில் ஒரு வாக்கில் சபாநாயகர் தெரிவானார். நாம் 22 வாக்குகளைப் பெற்றுக் கொடுத்தோம். இம்முறை நீங்கள் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்Zர்கள். இது இந்தச் சபை உங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. நான் உங்கள் தெரிவை வரவேற்கிறேன். உங்களின் செயற்பாடுகளுக்கு முழுமையான ஆதரவைப் பெற்றுத் தருவதாக உறுதியளிக்கிறேன்.
30 வருடகால யுத்தம் முடிவடைந்த நிலையில், சபை கூடுவதாகப் பிரதமர் உரையாற்றும் போது கூறினார். அது பொருத்தமான கருத்து. யுத்தம் முடிவுக்கு வந்துள்ளது உண்மை. நாட்டு மக்கள் யுத்தத்தை விரும்பவில்லை. மக்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டார்கள். யுத்தம் முடிவுக்கு வந்ததை நாம் வரவேற்கின்றோம்.
அதே சமயம், நாட்டில் சமாதானம், நீதி, நேர்மை ஏற்பட்டுவிட்டதாக நாம் கருத முடியாது, ஏற்க முடியாது. நீதி, நியாயம் மக்களுக்குக் கிடைக்க இந்தப் பாராளுமன்றம் பணியாற்ற வேண்டும். இதற்கு முன் இருந்த பாராளுமன்றங்கள் அந்த நிலையில் இருக்கவில்லை. கடந்த 60 வருட காலமாக நியாயமான, நீதியான தீர்வைக்காண்பதற்கு முடியவில்லை. புதிய பாராளுமன்றம் அதனை நிறைவேற்றும் என நம்புகிறேன். அரசியல் சாசனத்தையும் நிலையியற் கட்டளைகளையும் பாதுகாப்பது மாத்திரமன்றி மரபுகளும் உள்ளன.
பாராளுமன்றத்தின் கெளரவம் முழுமையாக உங்களில் (சபாநாயகரில்) தங்கியிருக்கிறது. உங்களின் கெளரவம் பாராளுமன்ற கெளரவத்தில் தங்கியிருக்கிறது. இதனைப் பிரிக்க முடியாது’ என்றும் சம்பந்தன் மேலும் குறிப்பிட்டார்.