எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

‘தமிழீழம் பெற்றுத் தருவேன் என்றெல்லாம் ஏமாற்றாமல் பிரதேசப் பிரச்சினைகளை முன்வைத்து வாக்குக் கேட்கிறேன்’ சுயேட்சை வேட்பாளர் க வரதீஸ்வரன்

Varatheeswaran_K‘நான் இலங்கையில் பத்து வயதாக இருக்கம் போது தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கையில் அவசரகாலச்சட்டம் கொண்டுவரப்பட்டது. இன்று எனக்கு 40 வயதாக உள்ள போதும் இன்றும் இலங்கையில் இந்த அவசரகாலச் சட்டம் தமிழ் மக்களுக்கு எதிராக நடைமுறையில் உள்ளது. நான் இம்முறை முதற்தடவையாக உள்ளுராட்ச்சித் தேர்தலில் போட்டியிடுகின்றேன்.’ எனத் தெரிவித்தார் நியூஹாம் கவுன்சிலின் வோல் என்ட் பிரிவில் போட்டியிடுகின்ற வரதீஸ்வரன் கனகசுந்தரம். இவர் மே 6ல் நடைபெறவுள்ள உள்ளுராட்சித் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிடுகின்றார்.
 
தான் வாழும் வாட்டில் 7 ஆயிரம் வாக்காளர்கள் இருப்பதாகவும் அதில் 45 சதவிகிதத்தினரே வாக்களிப்பில் கலந்து கொள்வது வழக்கமானது என்றும் அதாவது அண்ணளவாக 3500 வாக்காளர்களே வாக்களிப்பர் என்றும் இந்த வாக்காளர்களில் 2 ஆயிரம் வாக்களர்கள் மட்டில் தமிழ் வாக்காளர்கள் என்றும் இந்த தமிழ் வாக்காளர்களில் ஆயிரம் வாக்காளர்கள் தனக்கு வாக்களித்தால் தான் உள்ளுராட்சி சபையில் ஒரு அங்கத்தவராகிவிடலாம் என்றும் வரதீஸ்வரன் கனகசுந்தரம் கணக்குப் பண்ணி உள்ளார்.

அவர் தேசம்நெற்க்கு வழங்கிய நேர்காணலின் தொகுப்பு இங்கு பதிவிடப்படுகின்றது.

தேசம்நெற்: நீங்கள் வசிக்கும் கவுன்சிலில் 60 அங்கத்தவர்களில் 54 பேர் லேபர் கட்சியின் அங்கத்தவர்கள் உள்ளனர். அப்படியான லேபர் பகுதியில் நீங்கள் எப்படி சுயாதீன வேட்பாளராக தேர்தலில் நிற்கிறீர்கள்?
 
வரன்: லேபர் பெரும்பான்மையாக உள்ளபோதும் எனது வாட்டில் லேபர் கட்சியினர் கடந்த 13 வருடங்களாக எந்த முன்னேற்றமான காரியங்களையும் செய்யவில்லை. எமது வாட்டில் மேம்பாலம் (Overhead Bridge) ஒன்றுள்ளது. இந்த பாதையே மக்கள் சுலபமாக ரெயில்வே நிலையத்திற்கு போய்வரக் கூடிய பாதை. இந்த மேம்பாலம் அருகே பற்பல சமூகவிரோத செயல்களும் இளைஞர்களின் வழிப்பறிமுதல்களும் குறிப்பாக  பெண்களிடம் கைப்பைகளை பறிப்பதுமாக பல சட்டவிரோத செயல்கள் நடைபெறுகின்றன. இரவில் இந்த மேம்பாலம் ஆபத்து நிறைந்த இடம் இந்த பாலத்திற்கு ஒரு சிசிரிவி பொருத்தும்படி ஆயிரத்திற்கு மெற்ப்பட்ட மக்கள் கையெழுத்துப்போட்டு மனுக்கொடுத்தும் இந்த லேபர் கட்சியின் உறுப்பினர்கள் செவிசாய்க்கவில்லை இந்தப்பிரச்சினை இந்தப்பகுதி மக்களின் முக்கிய விடயமாக உள்ளது. இதைவிட இந்த பிரதேசத்தில் வாகன தரிப்பிட வசதிகளை மேம்படுத்தும்படி லேபர் உறுப்பினர்களிடம் கேட்டும் அவர்கள் இதில் அக்கறை காட்டவில்லை.
 
நான் உள்ளுராட்சி உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டால் எமது முக்கிய தெருவான Buregers Road இல் உள்ள பெருநிலத்தில் பூங்கா ஒன்றை உருவாக்குவேன், ஒரு கிறமர் பாடசாலையை உருவாக்குவேன், இந்தப் பகுதியில் வசிப்பவர்களுக்கு குறைந்த கட்டண அரச வீடுகளை பெற்றுக் கொடுப்பேன், முக்கியமாக இந்த வாட்டின் பாதுகாப்பினை மேம்படுத்துவேன் என்றும் உறுதியளிக்கிறேன்.
 
தேசம்நெற்:  ஒரு சுயேட்சையாக இவ்வளவு திட்டத்தை நடைமுறைப்படுத்துவது இயலுமான விடயமல்ல. இதற்கான நிதி ஒதுக்கீட்டை செய்வதற்கு பலமான ஆதரவு இருக்க வேண்டும். நீங்கள் ஒரு கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றியடையும் பட்சத்தில் அது சாத்தியமாக இருந்திருக்கும்..
 
வரன்: எந்தக் கட்சியில் சேர்ந்தாலும் எனது ஆதரவுப்பலம் தான் முக்கியம். அந்த ஆதரவுப்பலம் எப்படி என்பதை நிரூபித்தால் தான் எந்தக் கட்சியினரும் எனக்கு தமது கட்சியில் இடம் தருவார்கள். நான் கூடிய அளவு லிபரல் கட்சியுடனேயே இணைந்து வேலை செய்ய விரும்புபவன். காரணம் லிபரல் கட்சிதான் தற்போதுள்ள கட்சிகளின் கொள்கைகளில் பரந்துபட்ட மக்களுக்கானதும் குடியேறியவர்களுக்கான அகதிகளுக்கானதுமான கொள்கைகளைக் கொண்டுள்ளது. எனது வட்டாரத்தில் 95 சதவிகிதத்துக்கும் அதிகமானவர்கள் வெளிநாட்டவர்கள், குடியேறியவர்கள். நான் தமிழர்க்கு ஆதரவான கட்சியுன்தான் இணைவேன்.

தேசம்நெற்: உங்கள் கடந்தகால அரசியற் பின்னணிகள் என்ன? 

வரன்: நான் இலங்கையில் 10 வயதாக இருக்கும் போது தமிழ் மாணவ அமைப்பில் இருந்தேன். பின்னர் ஈரோஸ் இன் மாணவ அமைப்பான  மாணவ இளைஞர் அமைப்பிலும் (GUYS) பின்னர் ஈரோஸ் அமைப்பு புலிகளால் 1990ல் தடை செய்யப்படும் வரையில் ஈரோஸ் அமைப்பிலும் இணைந்து வேலை செய்திருந்தேன். பின்னர் கொழும்பில் இலங்கை பொலீசாரால் கைது செய்யப்பட்டு வெலிக்கடை சிறையில் இருந்து பின்னர் விடுதலையாகி இப்போது இங்கே வாழ்கிறேன்.

ஆனால் இங்கிருந்து கொண்டு அங்குள்ள மக்களுக்காக புலம்பெயர்ந்த தமிழீழம் பெற்றுத்தருவேன் என்று ஏமாற்றாமல் உண்மையை சொல்லி அங்குள்ள மக்களின் பிரச்சனையை அங்குள்ள மக்களும் அவர்களின் பிரதிநிதிகளுமே செய்ய வேண்டும். நாம் ஆதரவு அளிக்கலாமேயன்றி அந்த மக்களை நாடு கடந்த தமிழீழம் என்று சொல்லி ஏமாற்றுபவர்கள் போல நடக்கக் கூடாது. இங்கே எமது வாழ்க்கை பிரச்சினைகள் வளர்ந்து விட்டது அதை நாம் முகம் கொடுப்பதும் அவசியமானது.

ஆனால் என்னை கொன்சர்வேற்றிவ் தமிழ் வேட்பாளர் நான் ஒரு இலங்கை அரசின் கைக்கூலி என்றும் தனக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்று என்னைப் பற்றி தேவையில்லாத விசமத்தனமான பிரச்சாரத்ததை மேற்கொள்கிறார். இந்த வட்டாரத்தில் உள்ள மக்களுக்கு என்னைப் பற்றி நன்கு தெரியும். அம்மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்வோம்.
 
தேசம்நெற்: உங்கள் பிரசார வேலைகள் எப்படி நடைபெறுகிறது? மக்கள் ஆதரவு அளிக்கிறார்களா?
 
வரன்: எனது பிரச்சாரத்திற்கு 500 பவுண்ஸ் மட்டிலேயே செலவு செய்தேன். இது எனது சொந்தப் பணத்தில் தான் செய்தேன். அத்துடன் அதுல்யா என்ற தொலைபேசி அட்டை கம்பனியினர் எனக்கு வேண்டிய உதவிகளையும் செய்து தருகிறார்கள், ஜிரிவியில் விளம்பரம் போட்டுள்ளேன்.
 
மக்களிடம் வீடு வீடாக போய் ஆதரவு கேட்டுள்ளேன். மக்கள் ஆதரவு தருவதாக சொல்லியுள்ளார்கள். மக்களின் ஆதரவு நிலையை பார்க்கும்போது குறிப்பாக தமிழ் மக்கள் நல்ல ஆதரவு தருகிறார்கள் போல் தெரிகிறது. காரணம் மற்றய எல்லா தேர்தல் வேட்பாளர்களும் எமது வாட்டில் வசிப்பவர்கள் அல்ல. சிலர் வேறு பிரதேசங்களில் வசிப்பவர்கள். அவர்களுக்கு எமது வட்டாரத்தில் உள்ள பிரச்சினைகளைத் தெரியாது. இவ்வளவு காலமும் எமது தமிழர்களுக்கு பிரதிநிதியாக இருந்தவர்களில் மலையாளியும் வெள்ளை இனத்தவருமே கூட. தமிழர்கள் என்னை தெரிவு செய்வார்கள் என திடமாக நம்புகிறேன்.
 
புலம்பெயர்ந்த நாட்டில் எமக்கு கிடைத்துள்ள ஜனநாயக சுதந்திரத்தை பாராட்டுகிறேன் இப்படியான ஜனநாயக சுதந்திரம் எமது தமிழ் மக்களுக்கு இலங்கையின் வட – கிழக்கு பிரதேசங்களில் முழுமையாக கிடைக்க வழிவகைகளும் செய்யப்பட வேண்டும்.

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக கலாநிதி சரத் அமுனுகம

sarath.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சிரேஷ்ட ஆலோசகராக கலாநிதி சரத் அமுனுகம நியமிக்கப்பட்டுள்ளார் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. 

பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள பசில் ராஜபக்ஷவின் வெற்றிடத்துக்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கண்டி திருத்துவக் கல்லூரியில் கல்வி பயின்ற இவர்  பல்கலைக்கழக பட்டதாரியாவார். 1962 ஆம் ஆண்ட அரசாங்க சேவையில் இணைந்த இவர்  பின்னர்  அரசிலில் இணைந்து பல முக்கிய அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளார்.

காதர் ஹாஜி தனித்துச் செயற்பட முடிவு

cadar.jpgகண்டி மாவட்ட ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் காதர்ஹாஜியார் பாராளுமன்றத்தில் தனித்துச் செயற்பட முடிவுசெய்துள்ளதாக நம்பகமாகத் தெரியவருகின்றது. கட்சித் தலைமையுடன் ஏற்பட்டுள்ள கருத்து மோதல்கள் காரணமாகவே அவர் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. கட்சியில் அவர் வகித்த தேசிய முஸ்லிம் அமைப்பாளர் பதவி உட்பட ஏனைய பதவிகளை அவர் ஏற்கனவே இராஜினாமாச் செய்துள்ளமை இங்கு நினைவூட்டத்தக்கது.

அவசர காலச் சட்டம் 118 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

parliament2.jpgஅவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கும் பிரேரணை இன்று பாராளுமன்றத்தில் 118 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரதமர்  டி.எம். ஜயரத்னவால் முன்வைக்கப்பட்ட இப்பிரேரணை இரண்டு தினங்கள் விவாதிக்கப்பட்ட பின்னர் இன்று வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

இதற்கு ஆதரவாக 132 வாக்குகளும் எதிராக 14 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஐ.தே.கவும் எதிர்த்து வாக்களித்தன. ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் காதர் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தார் என்பது குறிப்பிடத்தக்கது 

புதிதாக 4 அமைச்சர்கள் 6 பிரதி அமைச்சர்கள் ஜனாதிபதி முன் பதவிப் பிரமாணம்

arumugam.jpgபுதிதாக அமைச்சரவை அந்தஸ்துள்ள 4 நான்கு அமைச்சர்களும் 6 பிரதி அமைச்சர்களும் ஜனாதிபதி இல்லத்தில் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனா;.

அமைச்சர்கள்

ஆறுமுகன் தொண்டமான் – கால்நடைவளர்ப்பு கிராமிய சமூக அபிவிருத்தி
பேராசிரியர் திஸ்ஸவிதாரண – தொழில்நுட்ப ஆராய்ச்சி
கெஹலிய ரம்புக்வல – ஊடகம் மற்றும் தகவல்துறை
எஸ். பி. திஸாநாயக்க – உயர் கல்வி

பிரதி அமைச்சர்கள்
சரத் அமுனுகம – நிதி மற்றும் திட்டமிடல்
மேர்வின் சில்வா – நெடுஞ்சாலைகள்
மகிந்தானந்த அளுத்கமகே – இளைஞர் விவகாரம்
பைஸர் முஸ்தபா – சுற்றாடல்
எம்.கே.ஏ.டி.எஸ். குணவர்தன – புத்தசாஸன மற்றும் சமய விவகாரம்
ஜகத் பாலசூரிய – தொழில் மற்றும் தொழில் பயிற்சி

அவசரகால சட்டத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது இளைஞர், யுவதிகளே – நாமல்

chamal.jpgநாட்டிற்காக, நாட்டின் ஒருமைப்பாட்டிற்காக குரல் கொடுக்கக் கூடிய இளைஞர் சமுதாயம் ஒன்றை உருவாக்க வேண்டும். எதிர்கால சந்ததியினருக்கு அவசரகாலச் சட்டம் அற்ற நாட்டை உருவாக்குவோம் என அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது கன்னி உரையில் தெரிவித்தார்.

அவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே நாமல் ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார். சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று பாராளுமன்றம் கூடியது. பிரதமர் டி. எம். ஜயரட்ன அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கான பிரேரணையை சபையில் சமர்ப்பித்துப் பேசினார். இதனைத் தொடர்ந்து நாமல் ராஜபக்ஷ எம். பி. உரையாற்றினார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் :- அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். எனினும் பயங்கரவாதம் முழுமையாக அணைந்துவிடவில்லை. இன்னும் நீறுபூத்த நெருப்பாக எரிந்துகொண்டு தான் உள்ளது. எனவே அவசரகாலச் சட்டம் படிப்படியாக அகற்றப்பட வேண்டும்.

அவசரகாலச் சட்டம் இறுதியாக 2005ஆம் ஆண்டுகளில் அமைச்சர் லஷ்மன் கதிர்காமரின் படுகொலையுடன் தான் அமுலுக்கு வந்தது. என்னுடைய வயதையும் விட கூடுதல் வயது இந்த அவசரகாலச் சட்டத்துக்கு உள்ளது. வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட நாடு முழுவதுமுள்ள என்னைப் போன்ற சகோதர, சகோதரிகள் அனைவரும் அவசரகாலச் சட்டத்தினுள்தான் வாழ்ந்தார்கள். இளைஞர், யுவதிகள் தான் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். இந்த அவசரகாலச் சட்டத்தை நீக்க வேண்டியதன் நேரம் நெருங்கியுள்ளது- எனினும் உடனடியாக செய்ய முடியாது.

பயங்கரவாதம் தோன்றியதற்கான அடிப்படை என்ன என்பது பற்றி பார்ப்போமானால் முன்னேற்றமடையாத கஷ்டப் பிரதேசம் தான் பயங்கரவாதிகளின் பிறப்பிடமாக இருந்துள்ளது.

குறிப்பாக சேகுவேராவும் இவ்வாறான கருத்தைத்தான் கூறியிருந்தார். பின்தங்கிய, கஷ்டப் பிரதேசத்திலிருந்து தான் புரட்சிகள் ஆரம்பமாகியுள்ளன. இதனையே பிரபாகரனும் தெரிவித்திருந்தார். பின்தங்கிய கஷ்டப் பிரதேசத்திலிருந்து வரும் இளைஞர்கள், யுவதிகளே தனது அமைப்பில் தங்கி இருப்பவர்கள் என்றும், வசதியாக நகர்ப்புறத்தில் வாழ்பவர்கள் தங்குவதில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.

கஷ்டப் பிரதேசம், என்ற சொல்லுக்கு இடமில்லாமல் கிராம மட்டத்தில் அபிவிருத்தி முன்னெடுக்கப்படல் வேண்டும். எமக்கு கிடைத்த சுதந்திரத்தை சரியான முறையில் பயன்படுத்துவதுடன் இந்நாட்டின் இளம் சமுதாயத்திற்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும்.

கிராம மட்டத்தில் அபிவிருத்தியை முன்னெடுக்காவிடின் மீண்டும் ஒரு புரட்சி, அல்லது கெரில்லா அமைப்பு உருவாவதை தடுத்துவிட முடியாது என்றும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். 1948ம் ஆண்டு லக்ஷ்மன் ராஜபக்ஷவையும், 1970 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும், 2010 ஆம் ஆண்டு தன்னையும் மிகவும் குறைந்த இளம் வயதில் பாராளுமன்றத்துக்கு அனுப்புவதற்காக வாக்களித்த அம்பாந்தோட்டை மக்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக நாமல் ராஜபக்ஷ தனது கன்னிப் பேச்சை ஆரம்பிக்கும் போதே தெரிவித்தார்.

அம்பாந்தோட்டையில் உட்கட்டமைப்பு வசதிகள் ஒழுங்காக இல்லை. வீதிகள் அனைத்தும் குண்டும் குழியுமாக இருக்கிறது என 1954 ஆம் ஆண்டு டி. ஏ. ராஜபக்ஷ இந்த சபையில் தெரிவித்திருந்தார்.

1970 ஆம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இவ்வாறான கூற்றை இந்தச் சபையில் தெரிவித்திருந்தார். கிராம அபிவிருத்தி, உட் கட்டமைப்பு வசதிகளை மேம்படு த்த வேண்டும் என்ற தேவை அன்றே உணரப்பட்டது என்றும் நாமல் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்தார்.

3 மாத செலவீனத்துக்கு 44,014 கோடி ரூபாவை ஒதுக்கீடு செய்வதாக ஜனாதிபதி சபைக்கு அறிவிப்பு. அரசியலமைப்பை மீறும் செயல்; ஐ.தே.க.எதிர்ப்பு

parliament.jpgஅரசின் 3 மாத செலவினங்களுக்கென திரட்டு நிதியிலிருந்து 44,014.7 கோடி ரூபாவை ஒதுக்கீடு செய்ய அனுமதி வழங்குவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்துக்கு நேற்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ள அதேநேரம், கணக்கு வாக்கெடுப்புப் பிரேரணையோ அல்லது வரவுசெலவுத்திட்டமோ பாராளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்காமல் அரச செலவினங்களுக்கென திரட்டு நிதியிலிருந்து ஜனாதிபதி நிதி ஒதுக்கீடு செய்வது அரசியலமைப்பை மீறும் செயலென பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பாராளுமன்றம் நேற்றுக் காலை 9.30 மணிக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடியது.

அச்சமயம் ஜனாதிபதியின் அறிவிப்புகளை வாசித்த சபாநாயகர், அரசியலமைப்பின் 150 (3) ஆம் பிரிவில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்தின் பிரகாரம் ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 22 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கான அரச செலவினங்களுக்கென திரட்டு நிதியத்திலிருந்து 44,014.7 கோடி ரூபாவை ஒதுக்க அனுமதியளிப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்துக்கு அறிவித்திருப்பதாக கூறினார்.

இதன் பின்னர் சபையில் ஏற்பட்ட சர்ச்சையொன்றின் போது ஐ.தே.க.வின் குருநாகல் மாவட்ட எம்.பி.யான தயாசிறி ஜயசேகர முதலில் இது குறித்த பிரச்சினையை கிளப்பினார். “பாராளுமன்றத்தின் அதிகாரம் அவமதிக்கப்பட்டுள்ளது. நிதி அதிகாரம் பாராளுமன்றத்துக்கே இருக்கிறது.

அரசியலமைப்பின் 150 (3) சரத்தின் பிரகாரம் நிதி ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது  என்று அவர் இதன்போது கூறினார்.

இதேநேரம், ஒழுங்குப் பிரச்சினையொன்றை கிளப்பி இவ் விவகாரத்தை அரசியலமைப்பை மேற்கோள்காட்டி விளக்கிய ஐ.தே.க.வின் கொழும்பு மாவட்ட எம்.பி.யான விஜேதாச ராஜபக்ஷ “அரசியலமைப்பின் 150 (3) ஆவது சரத்தின் பிரகாரம் கூறப்படுவது என்னவென்றால், நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டு சட்டமாக நிறைவேற்றப்படாத நிலையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டால் ஜனாதிபதியால் திரட்டு நிதியத்திலிருந்து 3 மாத செலவினங்களுக்கு நிதி ஒதுக்க முடியும் அல்லது நிதி ஒதுக்கீடு சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டிருக்காத நிலையில் தேர்தலொன்றுக்காக திரட்டு நிதியத்திலிருந்து நிதி ஒதுக்க முடியும். ஆனால், தற்போதைய நிலையில் அவ்வாறான எந்த சந்தர்ப்பமும் இல்லாததால் ஜனாதிபதியால் திரட்டு நிதியத்திலிருந்து நிதி ஒதுக்க முடியாது. இது அரசியலமைப்புக்கு முரணானது என்றார். எனினும் விஜேதாச ராஜபக்ஷவின் விளக்கத்தை ஏற்றுக் கொள்ளாத சபை முதல்வரும் அமைச்சருமான நிமால் சிறிபால டி சில்வா;

“அரசியலமைப்பின் 150 (3) சரத்துக்கு உட்பட்டே ஜனாதிபதி தனது அறிவிப்பை சபாநாயகர் மூலம் விடுத்திருக்கிறார். சட்டமா அதிபரின் பூரண ஆலோசனையின் பிரகாரமே இது செய்யப்பட்டிருக்கிறது. எனவே, விஜேதாச ராஜபக்ஷவின் ஆலோசனை ஜனாதிபதிக்குத் தேவைப்படாது. சட்டமா அதிபரின் ஆலோசனையை ஏற்றுக்கொள்ள முடியாதென்றால் உயர்நீதிமன்றம் செல்ல முடியும். சட்டமா அதிபரின் ஆலோசனைகளுக்கு நீங்கள், நாங்கள் கட்டுப்பட்டுள்ளோம். ஜனாதிபதி அனுப்பிய அறிவித்தலை விவாதத்துக்கு உட்படுத்த முடியாது  என்றும் தெரிவித்தார்.

எனினும் இது உயர்நீதிமன்றத்தில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினையில்லை என்றும் இதற்கான அதிகாரம் பாராளுமன்றத்துக்கே இருக்கிறது என்றும் இதில் சபாநாயகரே முடிவு சொல்ல வேண்டும் என்றும் விஜேதாச ராஜபக்ஷ கூறினார்.

இதேநேரம், அரசியலமைப்பின் 150 (3), 150 (4) சரத்துகளின் பிரகாரம் திரட்டு நிதியத்திலிருந்து நிதி ஒதுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருப்பதாக ஆளுந்தரப்பு எம்.பி.யான லலித் திசாநாயக்க தெரிவித்தார். ரணில்இதனைத் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க;

“ஜனாதிபதி அனுப்பிய உத்தரவின் பிரதியொன்றை எமக்குத் தாருங்கள். 2000 ஆம் ஆண்டில் அப்போதைய சபாநாயகர் அநுர பண்டாரநாயக்க சட்டமா அதிபரின் அதிகாரம் தொடர்பில் நிலைப்பாடொன்றுக்கு வந்தார். பாராளுமன்றத்துக்கு சட்டமூலமொன்று சமர்ப்பிக்கப்படும் போது அது தொடர்பாக மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கோருவதற்கு மட்டுமே சட்டமா அதிபரின் ஆலோசனை அவசியமென்பதே அவரது நிலைப்பாடாக இருந்தது. எனவே, பாராளுமன்ற அங்கீகாரம் இன்றி அநுர பண்டாரநாயக்கவின் தீர்ப்பை மாற்ற முடியாது.எனவே, இவ்விடயத்தில் பாராளுமன்றத்தின் அதிகாரத்தை உயர் நீதிமன்றத்துக்கு வழங்கப் பார்க்கிறீர்கள். இதை நாமே தீர்க்க முடியும். பாராளுமன்றத்துக்கே நிதி அதிகாரம் இருக்கிறது. பாராளுமன்ற அதிகாரத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு சபாநாயகருக்குள்ளது.

இந்த விடயம் பற்றி ஆராய்ந்து உரிய உத்தரவைப் பிறப்பிப்பதாகவும் இதை விவாதமாக்கிக் கொள்ளத் தேவையில்லை என்றும் கூறி சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்தார்

11 ஆயிரம் தமிழ் இளைஞர்களுக்கு நீதி இன்னமும் வழங்கப்படவில்லை ஜெனரல் சரத் பொன்சேகா

sarath_.jpg“சரண டைந்த நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 11 ஆயிரம் தமிழ் இளைஞர்களுக்கும் இதுவரையில் நீதி வழங்கப்படவில்லை. அவர்கள் மீதான விசாரணைகளைத் துரிதப்படுத்தி அந்த இளைஞர்களை விடுதலை செய்ய அல்லது வழக்குத் தாக்கல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்திய ஜனநாயக தேசியக் கூட்டணி எம்.பி.ஜெனரல் சரத் பொன்சேகா “பயங்கரவாதத் தடைச்சட்டம் அமுலிலுள்ள ஒரு நாட்டில் அவசரகாலச்சட்டம் தேவையில்லை என்றும் கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றியபோது இவ்வாறு கூறிய ஜெனரல் பொன்சேகா மேலும் கூறியதாவது;

“நான் 2 ஆவது லெப்டினன்டாக இருந்த போது முதன் முதலில் பழைய பாராளுமன்றத்துக்குச் சென்றுள்ளேன். இராணுவ வெற்றியின் பின்னர் ஓர் இராணுவத் தளபதியாக இந்தப் பாராளுமன்றத்துக்கு வந்தேன். அப்போது ஜனாதிபதி எனது பெயரைக் குறிப்பிட்டு இந்தப் பாராளுமன்றத்தில் வைத்து வெகுவாகப் பாராட்டினார்.

ஆனால், இன்று மீண்டும் இந்தப் பாராளுமன்றத்துக்கு அரசியல்வாதியாக ஒரு தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதியாக வந்துள்ளேன். எனது அரசியல்வாழ்க்கையைக் கட்டியெழுப்ப எனக்கு வலுவூட்டிய ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி.ஆகியோருக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். என்மீது சேறு பூசிய , என்மீது பழிகளைச் சுமத்தியவர்களுக்கும் நான் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளதுடன், யுத்த காலத்தில் எனக்கு ஆதரவளித்த விடுதலைப் புலிகளுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இந்த நாட்டில் அவசரகாலச் சட்டத்தின் கீழ் வாழாதவர்கள் மிகக் குறைவானவர்களேயுள்ளனர். ஒரு ஜனநாயக நாட்டில் சாதாரண சட்டங்களின் கீழேயே மக்கள் வாழ வேண்டும். ஆனால், ஒரு ஜனநாயக நாடு இருந்ததாக எவருக்கும் நினைவில்லை. ஒரு நாட்டில் சாதாரண சட்டங்களின் கீழ் ஆட்சி செய்ய முடியாது விட்டால் ஆட்சியாளர்கள் தான் வெட்கப்பட வேண்டும். தற்போது இந்த நாட்டிற்கு அவசரகாலச் சட்டம் என்பது தேவையற்றதொரு விடயம்.

தற்போது மக்களின் சுதந்திரத்தைப் பறிக்கும் வகையிலும் துன்புறுத்தும் வகையிலும் அச்சுறுத்தும் வகையிலுமேயே அவசரகாலச் சட்டம் பயன்படுத்தப்படுகின்றது. இது அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் நிலை. தவறானவர்களிடம் அதிகாரங்களைக் கொடுப்பது குரங்கின் கையில் கூர்மையான கத்தியொன்றைக் கொடுப்பதற்கு சமனானது. குறுகிய நோக்கங்களுடன் செயற்படுபவர்கள் பாடங்களை கற்றுக்கொள்ளும் நிலைமை ஏற்படும்.

இந்த நாட்டில் முன்னர் சிறந்த பாதுகாப்பு அமைச்சு செயலர்கள் இருந்தார்கள். அவர்கள் சட்டங்களை சிறப்பாகப் பயன்படுத்தினார்கள். அவர்களால் நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படவில்லை. தற்போது நாட்டில் அமைதி, சமாதானம் ஏற்பட்டுள்ள நிலையில் மக்களை அடக்கி வைக்கும் அவசரகாலச்சட்டம் பயன்படுத்தப்படுகின்றது. இந்த நாட்டில் நியாயம் நிலை நிறுத்தப்படுவதற்கு அவசரகாலச் சட்டம் நீக்கப்பட வேண்டும்.

அமெரிக்காவுக்கு அல்ஹைடா மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றபோதும் அந்நாட்டில் அவசரகாலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இங்கு மியன்மார் போன்ற இராணுவ ஆட்சி நடந்தால் அதனை ஏற்க முடியாது. அனைவரும் சமமான உரிமைகளுடன் வாழும் நாடு என்பதை உணர்ந்து மக்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் செயற்பட அரசியல்வாதிகள் முன்வரவேண்டும்.

தற்போது இந்த நாட்டில் யுத்தம் இல்லை. கடந்த ஒரு வருட காலமாக எந்தப் பயங்கரவாத நடவடிக்கையும் இடம்பெறவில்லை. மக்களுக்கு ஆபத்து ஏற்படவில்லை. பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை. நாட்டுக்கு ஆபத்தில்லை. எனவே, இந்த நாட்டுக்கு அவசரகாலச் சட்டம் இனித் தேவையில்லை.பயங்கரவாதத் தடைச்சட்டம் அமுலில் இருக்கும்போது அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்படுவது வையற்றதொரு விடயம்.

யுத்த காலத்தின் போது சரணடைந்த 11 ஆயிரம் தமிழ் இளைஞர்கள் நீதிக்காக ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு இன்றுவரை நீதி கிடைக்கவில்லை. எனவே அவர்கள் மீதான விசாரணைகளைத் துரிதப்படுத்தி அவர்களை விடுதலை செய்ய வேண்டும். அல்லது வழக்குத் தாக்கல் செய்யப்பட வேண்டும். நாம் யுத்தத்தில் வெற்றி பெற்றுள்ள போதும் இன ஐக்கியத்தை புரிந்துணர்வை ஏற்படுத்தி நியாயத்தை நிலைநாட்டத் தவறிவிட்டோம். ஆனால், இவற்றையே மக்கள் அரசிடம் எதிர்பார்க்கின்றனர். நீதிமன்றங்கள் நீதியாகச் செயற்பட வேண்டும். சிறைப்படுத்துவதன் மூலமோ நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்வதன் மூலமோ தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க முடியாது. 100 சிறைகளில் அடைத்தாலும் மீண்டும் மீண்டும் வருவோம்.

தம்மை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை நாட்டுத் தலைமைக்கு இருக்குமாக இருந்தால் அவசரகாலச் சட்டம் தேவையில்லை. தாம் யாருக்கு வாக்களித்தோம் என்று கூட வெளியில் கூற முடியாத நிலையில் இன்று மக்கள் உள்ளனர். அப்படிக் கூறுவோர் நாட்டை விட்டே ஓட வேண்டிய நிலை. இந்த நாட்டில் மக்கள் சுதந்திரத்தை அனுபவிக்கவில்லை என்பதே எனது ஆணித்தரமான கருத்து. கருத்துகளை வெளியிட மக்கள் அச்சமடைகின்றனர். இந் நாட்டில் தொடர்ந்து சுதந்திரமாக வாழ முடியாத நிலை. பலர் நாட்டை விட்டே வெளியேறுகின்றனர். ஊடகங்களின் வாய்கள் மூடப்படுகின்றன. மக்களை அமைதியாக வைத்திருக்கவே இந்தச் சட்டம் பயன்படுத்தப்படுகிறது.

உண்மை பேசுவோர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு சிறைக்குள் தள்ளப்படுகின்றனர். ஆனாலும், சட்டம் தன் பணியைச் செய்யும். உண்மை ஒருநாள் வெளிப்படும். நீதி நிலைநாட்டப்படும். இந்த நாட்டின் ஆட்சியை எதிர்த்த மக்களுக்கும் எனது கட்சிக்கு வாக்களித்த 4 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கும் எனக்கு வாக்களித்த 98 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொழும்பு மாவட்ட மக்களுக்கும் நான் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்”

மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தில் மோதல்; நான்கு பேர் படுகாயம்

சுகாதார பட்டப்படிப்பு மாணவர்கள் தமது பட்டப்படிப்புக்கான கால எல்லையை ஒரு வருடத்தால் குறைத்ததை எதிர்த்து கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாணவர்களுக்கும் பொலிஸாருக்குமிடையில் ஏற்பட்ட மோதலில் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். மாணவர்களின் ஆர்ப்பாட்டம் விகாரமகாதேவி பூங்கா முன்பாக நேற்று செவ்வாய்க்கிழமை காலை 11.30 மணியளவில் ஆரம்பித்தது. பெருமளவு பொலிஸார் நிறுத்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் மாணவர்கள் அலரிமாளிகை நோக்கி செல்லாது தடுக்க நகரமண்டப சுற்றுவட்டத்தில் அப்பாதையை மறித்து பொலிஸார் நின்றனர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் அங்கிருந்து திரும்பி லிப்டன் சுற்றுவட்டம் நோக்கிச் சென்றனர்.

இந்நிலையில் பொலிஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோருக்கு முன்னால் சென்று மாணவர்கள் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவுக்கு செல்வதாகக் கருதி ஆணைக்குழு அமைந்துள்ள லோர்ட் வீதியில் தடுப்பதற்கு காத்திருந்தனர். இதையடுத்து மாணவர்கள் டீன்ஸ் வீதி வழியாக சென்றனர். இந்நிலையில் அவர்களுக்கு முன்னால் சென்று 200 மீற்றர் தூரத்தில் இடைமறித்தனர்.

இதனையடுத்து பொலிஸாருக்கும் மாணவர்களுக்குமிடையில் கைகலப்பு ஏற்பட்டது. இதனால் ஒரு மாணவனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதுடன், ஏனைய மூன்று மாணவர்களுக்கு காயமேற்பட்டது. நிலைமையை சமாளிப்பதற்கு கலகம் அடக்கும் பொலிஸார் வரவழைக்கப்பட்டனர்.  பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவை ஆர்ப்பாட்டக்காரர்கள் பிற்பகல் 12.45 மணியளவில் வந்தடைந்து ஆணைக்குழு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதனால் லோட் வீதி வழியான போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பொலிஸார் போக்குவரத்தை சீர்செய்ய சிரமப்பட்டனர். எமது பட்டப்படிப்பு 5 பாடநெறிகளாக 4 வருடம் இடம்பெற்று வந்தது. இதனை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவே தீர்மானித்தது.

நான்கு வருட பாடநெறியை மூன்று வருடங்களில் முடிப்பதற்கு அரசு மேற்கொண்ட தீர்மானம் நியாயமானதா? இந்த பட்டப்படிப்பை மாணவர்கள் எவ்வாறு முழுமையாக பூர்த்தி செய்யமுடியும். இதனால் சுகாதாரத் துறைக்கு பாரிய பாதிப்பு ஏற்படுமென்றும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் உதுல் பிரேமரட்ன கருத்துத் தெரிவித்தார்.

மாணவர்கள் பிரதியமைச்சர் நந்திமிந்திர ஏக்கநாயக்கவுடன் சந்திப்பை மேற்கொண்டனர். இதன்போது உயர்கல்வியமைச்சர் பதவியேற்றதும் ஓரிரு தினங்களில் அழைத்தது பிரச்சினைகளையும் பேசித்தீர்வுகாண்பதாக தெரிவிக்கப்பட்டதையடுத்தே ஆர்ப்பாட்டத்தை பிற்பகல் 2.30 மணியளவில் மாணவர்கள் கைவிட்டனர்.

ரியாத்தில் வரலாறு காணாத பெரும் மழை

சவூதி அரேபியத் தலைநகர் ரியாத்தில் வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளத்தால் நகரமே ஸ்தம்பித்துப் போயுள்ளது. இது குறித்து இளவரசர் பைசல் பின் அப்துல்லா கூறுகையில்,

ரியாத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளும் மூடப்படவுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆங்காங்கு மழை வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட வாகனங்களை மீட்கும் நடவடிக்கைகளில் ரியாத் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. பாலங்களில் தேங்கியுள்ள நீரை அகற்றவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.