எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

இன்று யாழ். பெரிய பள்ளியில் தொழுகை

jaffnamosque.jpgயாழ்ப் பாணம் பெரிய பள்ளிவாசல் 20 வருடங்களுக்குப் பின்னர் இன்று வெள்ளிக்கிழமை மீண்டும் உத்தியோக பூர்கமாகத் திறந்து வைக்கப்படவுள் ளதுடன் முதலாவது ஜும்ஆப் பிரசங்கமும் இடம்பெறவுள்ளது.

ஒற்றுமையையும், சமாதானத்தையும் வலியுறுத்தி முதலாவது ஜும்ஆப் பிரசங்கத்தை கொழும்பு பெரிய மர்க்கஸ், ரஷாதிய்யா அரபுக் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளரும், இப்னு உமர் ஹதீஸ் கற்கை நிலையத்தின் பணிப்பாளருமான மெளலவி எம். ஜே. அப்துல் காலிக் தேவ்பந்தி நிகழ்த்தவுள்ளார்.

காட்டுப்பள்ளி என அழைக்கப்படும் இந்தப் பள்ளிவாசல் 1713ல் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. பல்லவர் கால சிற்பத்தை ஒத்ததாக அமைக்கப்பட்டுள்ள இந்தப் பள்ளி 297 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததும் மிகப்பெரியதுமாகும்.

இந்தப் பள்ளிவாசல் தற்பொழுது முழுமையாக புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளதுடன் சுமார் மூவாயிரத்திற்கும் அதிகமானவர்கள் தொழக்கூடிய வசதியைக் கொண்டுள்ளது.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டு தற்பொழுது நாட்டின் பல பாகங்களிலும் இஸ்லாமியப் பணியில் ஈடுபட்டுள்ள 46 உலமாக்களும் இன்றைய நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.

இன்று பெண்களு க்கான விசேட பயான் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அஸர் தொழுகையைத் தொடர்ந்து உலமாக்களுடனான ஆலோசனைக் கூட்டமும் மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து இஸ்மாயில் மெளலவியால் விஷேட பிரார்த்தனையும் நடை பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்களில் ஒருவரான மெளலவி அப்துல்லாஹ் பாயிஸ் தெரிவித்தார்.

முஸ்லிம் கல்லூரி வீதியில் அமைய ப்பட்டு ள்ள இந்தப் பள்ளிவாச லுக்குட்பட்ட பகுதியில் முஸ்லிம்கள் மீண்டும் மீளக்குடியமர்ந்ததைய டுத்தே பள்ளிவாசல் புனரமைக்கப்பட்டு அழகிய தோற்றத்து டன் காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார். ஒல்லாந்தர் காலத்தில் பெரியளவில் இந்தப் பள்ளிவாசல் கட்டப்பட்டுள்ளது. அப்போது அந்தப் பிரதேசத்தில் செல்வந்தராக இருந்த முகம்மது தம்பி மரைக்காயரும், வண்ணார் பண்ணை வைத்தியலிங்க செட்டியார் என்பவரும் இணைந்தே இப்பள்ளியைக் கட்டியதாக வரலாற்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

புலிகள் அமைப்பில் இணைக்கப்பட்டிருந்த 200 சிறுவர்கள் விடுதலை!

விடுதலைப் புலிகள் அமைப்பில் உறுப்பினராக இருந்து, தடுப்பு முகமாம்களில் வைத்து பராமரிக்கப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட்ட  200 சிறுவர்கள் 24-05-2010 வவுனியா நீதிமன்றத்தினால் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். பல மாவட்டங்களைச் சேர்ந்த இச்சிறுவர்கள் இராணுவப் பாதுகாப்புடன் ஐ.நா. சிறுவர் நிதியப் பிரதிநிதிகளின் வழித்துணையுடன் நிதிமன்றததிற்கு அழைத்து வரப்பட்டனர்.  நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் சிறுவர் நன்னடத்தைப் பிரிவு அதிகாரிகளின் ஊடாக அங்கு வந்திருந்த பெற்றோர்களிடம் அச்சிறுவர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.

கொழும்பு இந்துக் கல்லூரியில்  இவர்களுக்கான புனர்வாழ் வளிக்கப்பட்டதாகவும், இவர்கள் புனர்வாழ்வு நடவடிக்கையின் போது திருப்திகரமாக செயற்பட்டதாலும், போதுமான புனர்வாழ்வினைப் பெற்றுக்கொண்டதாலும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பம்மலப்பிட்டி இந்துக் கல்லூரியில் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட புழந்தைப் போராளிகள் சில வாரங்களுக்கு முன் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் இசை நிகழ்ச்சி ஒன்றினை வழங்கியது குறிப்பிடத்தக்கது. ( முன்னாள் போராளிகள் உட்பட 495 பேர் பெற்றோர்களிடம் ஒப்படைப்பு!) அம்பேபுச புனர்வாழ்வு முகாமில் இருந்து கொழும்பு இந்துக் கல்லூரிக்கு மாற்றப்பட்ட இச்சிறுவர்களுக்கு இசைக் கருவிகள் மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு லிற்றில் எய்ட் உதவியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ( http://littleaid.org.uk/ and http://littleaid.org.uk/gallery/musical-instruments-to-ambepusse-24th-july-2009 )

மனிதஉரிமையில் மட்டும் கவனம் செலுத்துவதில் நிற்கவேண்டாம் அமெரிக்காவுக்கு கூறுகிறது இலங்கை

glpeiris.jpgமனித உரிமைகள் விவகாரங்களில் கவனத்தைச் செலுத்தும் ஒரு விடயத்தில் மட்டும் நிற்கவேண்டாம் எனவும் இலங்கையில் யுத்தத்திற்குப் பின்னரான சூழ்நிலையில் ஏனைய வாய்ப்புகளும் அலுவல்களும் இருப்பதாகவும் இலங்கை அமெரிக்காவுக்குத் தெரிவித்திருக்கிறது. யுத்தம் முடிவடைந்து ஒருவருடம் பூர்த்தியடைந்திருக்கும் நிலையில் இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

மனிதஉரிமைகள் விடயத்தில் கவனத்தை செலுத்துவதையிட்டு எந்த வழியிலும் நாங்கள் இணக்கமின்மையை வெளிப்படுத்தவில்லை. அது விளங்கிக்கொள்ளக் கூடியது. அதுதொடர்பாக நாங்கள் புகார் தெரிவிக்கவில்லை என்றும் பீரிஸ் கூறியுள்ளார். கேந்திரோபாய மற்றும் சர்வதேசகற்கைகளுக்கான நிலையத்தில் குழுமியிருந்த புத்திஜீவிகள் மத்தியில் உரையாற்றும்போதே பீரிஸ் இதனைத் தெரிவித்ததாக ஏ.எவ்.பி. செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது.  உறவானது ஒரு பரிமாணத்திற்குட்பட்டதாக இருக்கக்கூடாது என்றவிடயத்தையே நாங்கள் சுட்டிக்காட்டுகிறோம். இலங்கையும் அமெரிக்காவும் ஒன்றுபட்டு மேற்கொள்வதற்கான வேறு பல விடயங்களும் உள்ளன என்று அவர் கூறியுள்ளார்.

நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை அமெரிக்க செனட்டர்கள், காங்கிரஸாருடன் சந்திப்புகளை மேற்கொண்டதாகக் கூறிய பீரிஸ் அடுத்த இருநாட்களில் மேலும் சந்திப்புகளை நடத்துவதற்கு தாம் திட்டமிட்டிருப்பதாகவும் கூறியுள்ளார். கிழக்கு ஆசியாவிற்கான தனது பயணத்தை முடித்துக்கொண்டு அமெரிக்கா திரும்பும் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்டனை நாளை வெள்ளிக்கிழமை பீரிஸ் சந்திக்கவுள்ளார்.  யுத்தத்திலிருந்தும் மீண்டு வந்திருக்கும் இலங்கையானது ஆற்றுப்படுத்தல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தனக்குக் கிடைத்திருக்கும் ஆணையை முன்னெடுக்க வேண்டுமென ஹிலாரியின் பேச்சாளர் பிலிப் குரோவ்லி கடந்த மாதம் வலியுறுத்தியிருந்தார். தேர்தலின் மூலம் குறிப்பிடத்தக்க ஆணையை அரசாங்கம் பெற்றிருப்பதாகத் தென்படுவதாகவும் குரோவ்லி கூறியிருந்தார்.

யாழில் வெசாக் கொண்டாட்டங்கள்

jaffna.jpgயாழ்ப் பாணத்தில் இம்முறை வெசாக் பண்டிகை மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது,

‘யாப்பா படுனை தஹம் அமாவை’ என்ற தொனிப்பொருளில் இம்முறை பாரிய அளவில் வெசாக் கொண்டாட்டத்தை நடத்துவதற்கு யாழ் பாதுகாப்பு படைகளின் தலைமையகம் திட்டமிட்டுள்ளது. பயங்கரவாதத்தை முடிவுக்குக்கொண்டு வந்த பின்னர் யாழ்ப்பாணத்தில் முதற் தடவையாக வெசாக் பண்டிகை கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று 27ம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்த வெசாக் பண்டிகை எதிர்வரும் 30ம் திகதி வரை நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாணம், கோட்டை, துரையப்பா விளையாட்டரங்கு மற்றும் யாழ். நூலகம் ஆகிய பிரதேசங்கள் உள்ளடங்கிய பகுதி விசேட வெசாக் வலயமாக பிரகடனப்படு த்தப்பட்டுள்ளது. பல்வேறு ஜாதக கதைகளை விவரிக்கும் தோரணங்கள், வெசாக் கூடுகள், தான சாலைகள் என்பன நிர்மாணிக்கப்பட்டு ள்ளதுடன் தமிழில் பக்தி கீதங்களை இசைப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்கள்: ரூ.7000 மில். செலவில் அபிவிருத்தி திட்டங்கள்

மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களில் சுமார் 7000 மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்பட்ட குடிநீர், மின் விநியோகம், நீர்ப்பாசனம், மற்றும் சுகாதார அபிவிருத்தித் திட்டங்கள் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன.

வட மாகாண அபிவிருத்தி, மீள்குடியேற்றம் என்பனவற்றுக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவரும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தலைமையில் இந்த அபிவிருத்தி திட்டங்களுக்கான ஆரம்ப நிகழ்வுகள் இன்று நடைபெறவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

மன்னார், கிளிநொச்சி பகுதிகளில் மீளக் குடியமர்த்தப்பட்ட மக்களின் நலன் கருதி, அவர்களது வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் பொருட்டே அரசாங்கம், வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் ஊடாக இந்த அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வட மாகாண சபை, இலங்கை மின்சார சபை, ஆசிய அபிவிருத்தி வங்கி,  மற்றும் ஜப்பான் சர்வதேச உதவி நிறுவனம் ஆகியவற்றின் ஒத்துழைப்பு மற்றும் நிதி உதவியுடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

மன்னாரில் எண்ணெய் வள ஆராய்ச்சியில் இந்தியக் கம்பனி

spj.jpgமன்னார் பிரதேசத்திலுள்ள எண்ணெய் வளம் தொடர்பில் ஆராய்ச்சி செய்யும் நடவடிக்கையில் இந்தியக் கம்பனி ஒன்று ஈடுபடவுள்ளது  என்று பெற்றோலிய வளத் துறை அமைச்சர் சுசில் பிரேம ஜெயந்த  தெரிவித்தார். இதற்கான விலைமனுக் கோரல் சர்வதேச அளவில் மேற்கொள்ளப்படவுள்ளது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். இந்த ஆராய்ச்சி நடவடிக்கைகள் எதிர்வரும் 2011ஆம் ஆண்டு ஜனவரி  மார்ச் மாதங்களுக்குள் நிறைவடையும் எனவும் தெரிவித்தார்.

சட்டவிரோத கட்டிடங்களை அகற்ற இன்று முதல் பாரிய திட்டம்

மேல் மாகாணத்தில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள கட்டடங்களை அகற்றுவதற்கு பாதுகாப்பு அமைச்சு இன்று (27) முதல் பாரிய வேலைத் திட்டங்களை ஆரம்பித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் ஆலோசனையின் பேரில் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தலைமையில் பொலிஸார், நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் தாழ் நிலத்தை மீள நிரப்பும் கூட்டுத்தாபனம் ஆகியவற்றுடன் இணைந்து இச் சட்ட விரோத கட்டடங்களை அகற்றி வருகின்றனர்.

பொது மக்களுக்கு சிரமம் ஏற்படுத்தும் வகையில் அல்லது சூச்சகமான முறையில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதியின்றி ஒரு கட்டிடத்தையோ அல்லது ஒரு நிரப்பப்பட்ட காணியையோ பலாத்காரமாக கைப்பற்றிருப்பின் இன்று (27) முதல் இயங்கும் விசேட கருமபீடத்துக்கு இது பற்றி அறியத்தருமாறு பொலிஸ் மா அதிபர் பொது மக்களை கேட்டுள்ளார். இரகசியப் பொலிஸை சார்ந்ததாக அமைக் கப்பட்டுள்ள இந்த விசேட கருமப்பீடத்தின் தொலைபேசி இலக்கம் 1933 ஆகும். இந்த கருமபீடத்துக்கு கிடைக்கும் முறைப்பாடுக ளை இரகசியப் பொலிஸார் ஆராய்வார்கள்.

தென்மேல் பருவப் பெயர்ச்சி மழை ஆரம்பமானதும் இடிமின்னல் தாக்கம் குறையும்

lightning.jpgதென்மேல் பருவப் பெயர்ச்சி மழை வீழ்ச்சி ஆரம்பமானதும் இடி, மின்னலின் தீவிரத் தன்மை முழுமையாக நீங்கிவிடும் என்று வானிலை அவதான நிலையத்தின் வானிலைப் பொறுப்பாளர் ஜயசிங்க ஆராய்ச்சி தெரிவித்தார். என்றாலும் இடி, மின்னல் தாக்கம் காரணமாக கடந்த இருமாதங்களில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், இடைப்பருவப் பெயர்ச்சி மழை காலங்களில் இடி, மின்னல் தாக்கம் தீவிரமானதாகக் காணப்படுவது வழமையாகும். அந்த வகையில் கட்நத மார்ச் மாதம் 14ம் திகதி முதல் நேற்று முன்தினம் 25ம் திகதி வரையும் இடி, மின்னல் தாக்கம் காரணமாக 21 பேர் உயிரிழந்திருக்கின்றார்கள். என்றாலும் தென்மேல் பருவ பெயர்ச்சி மழை கால நிலை ஆரம்பமானதும் இடி, மின்னல் தாக்கம் முழுமையாக நீங்கி விடுமென எதிர்பார்க்கின்றோம்.

பஞ்சசீலக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் நாம் உயிர்க் கொலை, இரத்தம் சிந்துதல், சித்திரவதை என்பவற்றை ஒருபோதும் அனுமதிப்பதில்லை – ஜனாதிபதி

president.jpgபுத்த பெருமானின் பிறப்பு, முக்தி பெறுதல், பரிநிர்வான நிலையை அடைதல் ஆகிய மூன்று முக்கியமான சுப நிகழ்வுகளை குறித்து நிற்கும் வெசாக் பெளர்ணமி தினம் உலகெங்கிலும் வாழும் பெளத்தர்களுக்கு மிக உயர்ந்த சமய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும்.

இன்றைய தினத்தில் நாம் பெளத்த சம்பிரதாயங்களிலும் நடைமுறைகளிலும் ஈடுபட்டு இத்தினத்தை மிகவும் அர்த்தமுள்ள வகையில் கழிக்க வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள வெசாக் தினச் செய்தியில் கூறியுள்ளார். அச்செய்தியில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளதாவது, பஞ்சசீலக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் நாம் உயிர்க் கொலை, இரத்தம் சிந்துதல், சித்திரவதை என்பவற்றை ஒருபோதும் அனுமதிப்பதில்லை.  நாட்டில் பல்லாயிரம் உயிர்களைக் காவுகொண்ட முப்பது வருடகால பயங்கரவாத யுகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதன் பின்னர் இவ் வருட வெசாக் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.

இதற்கான சாதகமானதும் சுதந்திரமானமான சூழல் ஏற்பட்டுள்ளமை பெளத்தர்களுக்குக் கிடைத்துள்ள அதிர்ஷ்டமாகும். இந்த மகிழ்ச்சி என்றும் நிலைத்திருப்பதற்கு நாம் ஆன்மீக நல்லொழுக்க வழியைப் பின்பற்ற வேண்டும். மெத்தா, கருணா, முதிதா, உபேக்கா என்பவற்றுடன் கூடிய வாழ்க்கை முறையை நாம் பின்பற்ற வேண்டும்.

புத்தபெருமானின் போதனைகளுக்கேற்ப சகிப்புத்தன்மையூடாக ஆறுதலைப்பெறும் குறுகியபார்வை இல்லாது தூரநோக்கையும் அர்ப்பணத்தையும் கொண்ட தேசமாக நாம் இருக்க வேண்டும். ‘நிப்பான’ நிலையை அடைவதற்கான எமது பாதையில் கடந்த காலங்களில் தாமதம் தடையாக இருந்திருக்குமானால் அத்தா மதத்தைத் தவிர்க்கும் வழிகளை நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

யோ ச புப்பே பமஜ்ஜித்வா – பச்சா சோ நப்பமஜ்ஜதி
சோ இமங் லோகங் பபாசெதி – அபா முத்தோவ சன்திமா

‘துவக்கத்தில் ஒருவன் தாமதித்தாலும் அதன் பின்னர் அவன் தாமதிக்காவிடின் அவன் மேகத்தினூடே மேலெழுந்துவரும் சந்திரனைப் போல் இவ்வுலகை ஒளிரச் செய்வான்’ -தம்மபதம்

நல்லொழுக்கத்துடன் வாழ்பவர்கள் கடந்தகால தவறுகளுக்காக நிகழ்காலத்தில் வருந்தமாட்டார்கள் ஒரு நல்லொழுக்கமுள்ள தேசத்தை கட்டியெழுப்புவதற்காக இந்த வெசாக் பண்டிகை தினத்தில் புத்த பெருமானின் வழியை முழுமையாகப் பின்பற்றுவதற்கு உறுதி பூணுவோம்.உங்கள் எல்லோருக்கும் மும்மணிகளின் ஆசி கிட்டுவதாக!

வட, கிழக்கு விகாரைகளிலும் இம்முறை வெசாக்கை விமர்சையாகக் கொண்டாட ஏற்பாடு கொள்கையை மதிக்கும் பௌத்தர்களாக மாறுவோம்; பிரதமர்

புத்தர் பெருமானின் பிறப்பு, பரிநிர்வாணமடைதல் போன்றன இடம்பெற்ற வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு உலக வாழ் பௌத்த மக்கள் உள்ளிட்ட இலங்கை வாழ் பௌத்த மக்களுக்கு வாழ்த்துச் செய்தியொன்றினை வழங்கக் கிடைத்தமையானது பிரதம அமைச்சர், புத்தசாசன சமய விவகார அமைச்சர் என்ற வகையில் எனக்குக் கிடைத்த பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன் என்று பிரதமர் டி.எம்.ஜயரட்ண தெரிவித்துள்ளார்.

2600 ஆவது சம்புத்தஜயந்தி விழாவினை முன்னிட்டு சமய அனுஷ்டானங்களுக்காக ஆயத்தமாகும் இச்சந்தர்ப்பத்திலே இம்முறை வெசாக் உற்சவத்தினை கொள்கையை மதிக்கக் கூடிய பௌத்தர்களை உருவாக்குவதற்கான உன்னத நோக்கத்தினை அடிப்படையாகக் கொண்டு நினைவுகூர வேண்டுமென்பதே எனது உணர்வாகும் என்று வெசாக்கை முன்னிட்டு விடுத்த செய்தியில் பிரதமர் கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;

சொல்லால் மட்டுமன்றி செயலாலும் உண்மையான பௌத்தர் என்பதனை பிரதிபலிக்கக் கூடிய வகையில் இன,மத,குல,வகுப்பு பேதங்கள் அனைத்தினையும் துறந்து கருணைமிக்க சமூகமொன்றினை உருவாக்குவதற்கான உத்தம பணியே தற்போது எம்முன்னால் உள்ள முதல் சவாலாகும்.மற்றையவரின் துயரை துயராகவும், சந்தோஷத்தினை சந்தோஷமாகவும் தாமும் அனுபவிக்கும் ஒருவரையே உண்மையான பௌத்தர் ஒருவராக குறிப்பிட முடியும். அவர் ஒருபோதும் இன, மத, குல, சமய அல்லது உயர்ந்த, தாழ்ந்த போன்ற பேதங்களின் மூலம் மனதை கெட்ட வழியில் செல்ல அனுமதிக்காத ஒருவராக காணப்படுவார். சரி பிழையினை சரியாக இனங்காணக் கூடிய உள்ளம் உண்மையான பௌத்தரிடம் காணப்படுகின்றது. எமது சமூகத்தினுள் அவ்வாறான பௌத்த உள்ளங்களை உருவாக்குதல் வேண்டும்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் உன்னத தலைமைத்துவத்தின் கீழ் பயங்கரவாத பிடியிலிருந்து இலங்கை தாய் நாட்டை மீட்டெடுத்து ஒரு வருட பூர்த்தியுடனான சமகாலத்தில் கொண்டாடப்படும் இம்முறை வெசாக் உற்சவத்தினை வடக்கு, கிழக்கு விகாரைகளிலும் மிக விமர்சையாக கொண்டாடுவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வடக்கிலும் தெற்கிலும் சகோதரத்துவ உணர்வுடன் சாது நாதம் ஒலிக்கும் இந்த உத்தம தினத்திலே உண்மையான பௌத்தர்களாக அறவழியினை சரியாக இனங்கண்டு கொள்வதற்கும் அந்தப் பாதையிலேயே பயணிப்பதற்கும் உங்களுக்கு மும்மணிகளினதும் ஆசீர்வாதம் கிடைக்கப்பெற வேண்டுமென பிரார்த்திக்கின்றேன்.