மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களில் சுமார் 7000 மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்பட்ட குடிநீர், மின் விநியோகம், நீர்ப்பாசனம், மற்றும் சுகாதார அபிவிருத்தித் திட்டங்கள் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன.
வட மாகாண அபிவிருத்தி, மீள்குடியேற்றம் என்பனவற்றுக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவரும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தலைமையில் இந்த அபிவிருத்தி திட்டங்களுக்கான ஆரம்ப நிகழ்வுகள் இன்று நடைபெறவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.
மன்னார், கிளிநொச்சி பகுதிகளில் மீளக் குடியமர்த்தப்பட்ட மக்களின் நலன் கருதி, அவர்களது வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் பொருட்டே அரசாங்கம், வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் ஊடாக இந்த அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வட மாகாண சபை, இலங்கை மின்சார சபை, ஆசிய அபிவிருத்தி வங்கி, மற்றும் ஜப்பான் சர்வதேச உதவி நிறுவனம் ஆகியவற்றின் ஒத்துழைப்பு மற்றும் நிதி உதவியுடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.