மனித உரிமைகள் விவகாரங்களில் கவனத்தைச் செலுத்தும் ஒரு விடயத்தில் மட்டும் நிற்கவேண்டாம் எனவும் இலங்கையில் யுத்தத்திற்குப் பின்னரான சூழ்நிலையில் ஏனைய வாய்ப்புகளும் அலுவல்களும் இருப்பதாகவும் இலங்கை அமெரிக்காவுக்குத் தெரிவித்திருக்கிறது. யுத்தம் முடிவடைந்து ஒருவருடம் பூர்த்தியடைந்திருக்கும் நிலையில் இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
மனிதஉரிமைகள் விடயத்தில் கவனத்தை செலுத்துவதையிட்டு எந்த வழியிலும் நாங்கள் இணக்கமின்மையை வெளிப்படுத்தவில்லை. அது விளங்கிக்கொள்ளக் கூடியது. அதுதொடர்பாக நாங்கள் புகார் தெரிவிக்கவில்லை என்றும் பீரிஸ் கூறியுள்ளார். கேந்திரோபாய மற்றும் சர்வதேசகற்கைகளுக்கான நிலையத்தில் குழுமியிருந்த புத்திஜீவிகள் மத்தியில் உரையாற்றும்போதே பீரிஸ் இதனைத் தெரிவித்ததாக ஏ.எவ்.பி. செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது. உறவானது ஒரு பரிமாணத்திற்குட்பட்டதாக இருக்கக்கூடாது என்றவிடயத்தையே நாங்கள் சுட்டிக்காட்டுகிறோம். இலங்கையும் அமெரிக்காவும் ஒன்றுபட்டு மேற்கொள்வதற்கான வேறு பல விடயங்களும் உள்ளன என்று அவர் கூறியுள்ளார்.
நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை அமெரிக்க செனட்டர்கள், காங்கிரஸாருடன் சந்திப்புகளை மேற்கொண்டதாகக் கூறிய பீரிஸ் அடுத்த இருநாட்களில் மேலும் சந்திப்புகளை நடத்துவதற்கு தாம் திட்டமிட்டிருப்பதாகவும் கூறியுள்ளார். கிழக்கு ஆசியாவிற்கான தனது பயணத்தை முடித்துக்கொண்டு அமெரிக்கா திரும்பும் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்டனை நாளை வெள்ளிக்கிழமை பீரிஸ் சந்திக்கவுள்ளார். யுத்தத்திலிருந்தும் மீண்டு வந்திருக்கும் இலங்கையானது ஆற்றுப்படுத்தல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தனக்குக் கிடைத்திருக்கும் ஆணையை முன்னெடுக்க வேண்டுமென ஹிலாரியின் பேச்சாளர் பிலிப் குரோவ்லி கடந்த மாதம் வலியுறுத்தியிருந்தார். தேர்தலின் மூலம் குறிப்பிடத்தக்க ஆணையை அரசாங்கம் பெற்றிருப்பதாகத் தென்படுவதாகவும் குரோவ்லி கூறியிருந்தார்.