விஸ்வா

விஸ்வா

இந்திய வெளியுறவுச்செயலர் வடபகுதிக்கு விஜயம்.

Nirupama_Raoஇலங்கைக்கு விஜயம் செய்யும் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நிருபமாராவ் எதிர்வரும் 31ம் திகதி செவ்வாய் கிழமை வடபகுதிக்கு விஜயம் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹெலிகப்ரர் மூலம் இப்பகுதிகளுக்கு செல்லும் இவர் வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களுக்கு விஜயம் செய்து பிற்பகல் 2மணிக்கு யாழ்பாணம் செல்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் துரையப்பா விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வொன்றில் கலந்து கொள்வதோடு, பொது நுலகத்தில் நடைபெறவுள்ள கலந்துரையாடலிலும் அவர் கலந்து கொள்ளவுள்ளார். வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, யாழ்.அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் யாழ்.மேயர் திருமதி யோ.பற்குணராஜா ஆகியோரும் இந்நிழ்வில் கலந்து கொள்ள வுள்ளனர். யாழ்.மாவட்டத்தில் இடம்பெறும் மீள்குடியமர்வு, ஏற்கனவே மீள்குடியேற்றப்பட்ட மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்து இக்கலந்துரையாடலில் முக்கியமாக ஆராயப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் பசில் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் கூட்டம்.

basil.jpgகிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்கூட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சியில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்திற்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தலைமை தாங்குவார் என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டச்செயலகத்தில் இக்கூட்டம் நiபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும், மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தொடர்பான விடயங்கள் என்பன ஆராயப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வரை மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அவர்களுக்கு தேவைப்படும் வசதிகள் போன்ற விடயங்களும் இதன்போது ஆராயப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Batticalo_Clock_Towerதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினரும் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினருமான கில்லி என்றழைக்கப்படும் பிரகாசம் சகாயமணி என்பவர் காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இவர் காணமாமல் போயுள்ளமை குறித்து மாநகரசபை மேயரும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

 இது குறித்து கிழக்கு  மாகாண முதலமைச்சரின் கவனத்திற்கும் கொண்டு வரப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மாலை மேயர் சிவகீதா பிரபாகரனை அவரது வீட்டில் சந்தித்து விட்டுத் திரும்புகையில் இவர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மாநகர சபை  உறுப்பினரான இவர் காணாமல் போயுள்ள சம்பவத்தையடுத்து ஏனைய மாநகர சபை உறுப்பினர்கள் மத்தியில் பதற்றம் நிலவுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் காணாமல் போயுள்ளமை குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சந்நிதி திருவிழாவில் இரு நாளில் 29 தங்கச் சங்கிலிகள் திருட்டு!

Sellacannathy_Templeதொண்டை மானாறு சந்நிதி ஆலயத்தில் நேற்று (Aug 24 2010) மட்டும் 12 தங்கச் சங்கிலிகள் களவு போயுள்ளதாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சந்நிதி ஆலயத்தின் தீர்த்தத் திருவிழாவான நேற்று மிக அதிகளவான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர். இவ்வேளையிலேயே இத்தங்கச் சங்கிலிகள் திருடர்களால் அபகரித்துச் செல்லப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் மட்டும் 17 சங்கிலிகளும், இரண்டு தாலிக்கொடிகளும் களவாடப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்களவுகளிலிருந்து பொதுமக்கள் தங்கள் நகைகளைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறும் முடிந்தளவு தங்கநகைள் அணிவதைத் தவிர்க்குமாறும் பொலிஸார் அறிவுறுத்திவருகின்ற போதும், பொதுமக்கள் அதனைக் கவனத்தில் கொள்ளாமல் தங்க நகைகளை அணிந்து திருவிழாக்களுக்கு வருவதாகவும், அதனை அவர்கள் ஒரு கௌரவமாகக் கருதுவதாகவும் பொலிஸார் ஒருவர் கருத்துக்கூறுகையில் தெரிவித்தார்.

இது இவ்வாறிருக்க, கடந்த சனிக்கிழமை வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு தனியார் பஸ் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்த பெண்ணொருவரின் இரண்டரை இலட்ச ரூபா பெறுமதியான தங்க நகைகள் களவு போயுள்ளன. கணவனால் கைவிடப்பட்ட இரு பிள்ளைகளின் தாயான செல்வேந்திரன் இந்திராணி என்பவரின் நகையே களவாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர் வைத்திருந்த 15ஆயிரம் ருபா பணமும் சில முக்கிய ஆவணங்களும் களவாட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் பெய்த கடும் மழையினால் விவசாயிகளுக்குப் பாதிப்பு.

வடக்கில் தற்போது பெய்து வரும் பலத்த மழையினால் விவசாயச் செய்கைகள் பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளன. நேற்று (Aug 24 2010) நாள் முழுவதும் பலத்த மழை பெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. வன்னியில் மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்ட பகுதிகளில் இம்முறை சிறுபோக நெற்செய்கையில்  விவசாயிகள் ஈடுபட்டிருந்தனர் இவ்வயல்கள் அறுவடைக்குத்தயாரான நிலையில், பெய்த கடும் மழையினால் அறுவடை பாதிப்படைந்துள்ளதோடு, விளைந்த வயல்கள் பலவும் வெள்ளத்தில் மூழ்கியதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, வடமராட்சி பருத்தித்துறைப் பகுதியில் வெங்காயச் செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்த பெருமளவு நிலப்பரப்பு வெள்ளத்துள் மூழ்கி விவசாயிகளுக்கு பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related News:
மழையினால் அவதியுறும் மீள்குடியமர்த்தப்பட்ட வன்னி மக்கள்!

வடக்கு கிழக்கில் ஆழ்கடல் மீன்பிடிக்க விரைவில் அனுமதி.

Fishing_in_Jaffnaஆழ்கடலில் மீன்பிடிப்பதற்கு வடக்கு கிழக்கு மக்களுக்கு விரைவில் அனுமதி வழங்கப்படும் என கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். சுமார் முப்பது வருடங்களாக வடக்கு கிழக்கு மீனவர்கள் கரையோர மீன்பிடி நடவடிக்கைகளுக்கு மட்டுமே அனுமதிக்கபட்டிருந்தனர். ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கைகள் பாதுகாப்புத் தரப்பினரால் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. ஆனால், அயல் நாடுகளிலிருந்து வரும் படகுககள் வடக்கு கிழக்கிலுள்ள ஆழ்கடலில் மீன்களைப் பிடித்துச் சென்றன. வடக்கு கிழக்கில் விரைவில் ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் திட்டங்களை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

2013ம் ஆண்டுக்குள் இலங்கையின் மீன் உற்பத்தியை 6 இலட்சத்து 86 ஆயிரம் மெற்றிக் தொன்னாக அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமராட்சிக் கிழக்கு மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக முக்கிய கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது.

வடமராட்சிக் கிழக்கு மக்களை மீள்குடியமர்த்தல் தொடர்பான முக்கிய கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் 28ம் திகதி பலாலி படைத்தலைமையகத்தில் நடைபெறவுள்ளது. யாழ். மாவட்ட படைத்தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்கவும் யாழ். அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் ஆகியோரும் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டு வடமராட்சிக் கிழக்கு மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியமர்த்துவது குறித்து ஆராயவுள்ளனர்.

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து முகாம்களிலும் வேறு பிரதேசங்களிலும் வசித்து வரும் வடமராட்சிக் கிழக்கு மக்கள் விரைவில் மீள்குடியமர்த்தப்படுவர் என ஏற்கனவே யாழ். புடைத்ததளபதி வாக்குறுதியளித்திருந்தார். அத்துடன் அரசாங்க அதிபரும் ஏற்கனவே படைத்தளபதியிடம் இவ்விடயம் குறித்து பேசியிருந்தார். இந்நிலையில், நடைபெறவுள்ள கலந்துரையாடலில் வடமராட்சிக் கிழக்கு  மக்களின் மீள்குடியேற்றம் குறித்து முக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

வடமராட்சிக்கழக்கு மக்கள் பெரும்பாலானவர்கள் கடற்றொலிலாளர்களாவர். கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக இடம்பெயர்ந்து வாழ்வதால் இவர்கள் தொழில் வாய்ப்பின்றி பாதிப்புற்ற நிலையிலுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

சர்ச்சைக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா யாழ்ப்பாணம் வருகை!

mervyn2.jpgசிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சர்ச்சைக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா யாழ்ப்பாணம் விஜயம் செய்துள்ளார். தனது குடும்பத்தினருடன் இவர் நேற்றிரவு யாழ்ப்பாணம் வருகை தந்தார். வரும் வழியில் கொடிகாமம் இராமாவில் அகதி முகாமிற்கு விஜயம் செய்து அங்குள்ள மக்களை சந்தித்தார். சுமார் 10 இலட்ச ரூபா பெறுமதியான அரிசி, பால்மா மற்றும் உபஉணவுப் பொருட்களையும் அம்மக்களுக்கு வழங்கி அம்மக்கள் மத்தியில உரைநிகழ்த்தினார். பின்னர் மாலை 6.30 மணியளவில் யாழ்ப்பாணம் சென்ற அவர் இரவுப் பொழுதை யாழ்.நகரில் கழித்தார். மேர்வின் சில்வாவுடன் கண்டி காலதன்னவில சிறீ மகாபத்திரகாளி ஆலய பூசகர் நயம்பதி ஆராச்சிலாகே காமினி ஆனந்தவும் வருகைதந்திருந்தார்.

சமுர்த்தி உத்தியோத்தர் ஒருவரை மரத்துடன் கட்டியதால் பிரதியமைச்சர் பதவி பறிக்கப்பட்ட மேர்வின் சில்வா சனிமாற்றம் காரணமாகவே தனக்கு இந்நிலை ஏற்பட்டது என தெரிவித்திருந்தார். தற்போது யாழ்ப்பாணத்திற்கு பூசகர் ஒருவருடன் வருகை தந்திருக்கும் அவர் ஏதேனும் நேர்த்திகடனுக்காக வந்திருக்கலாம் என தென்னிலங்கை அரசியல் வாதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

முகாம்களிலுள்ள 50 ஆயிரம் மக்களை விரைவில் மீள்குடியமர்த்துமாறு ஆயர்கள் குழு ஜனாதிபதியிடம் வலியுத்தல்.

Bishops_Meet_PresidentMRஇன்னும் அகதி முகாம்களில் தங்கியுள்ள 50 ஆயிரம் மக்களை விரைவில் அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கத்தோலிக்க ஆயர்கள் குழு ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் வலியுறுத்தியுள்ளது. ஏற்கனவே மீள்குடியமர்த்தபட்ட மக்களுக்கான வாழ்வாதார உதவிகளை தாமதமின்றி வழங்குவது குறித்தும் இக்குழு ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளது.

Bishops_Meet_PresidentMRகொழும்பில் நடைபெறும் ஆயர்களின் வருடாந்தக் கூட்டத்திற்காக நாடு முழுவதிலுமிருந்து வந்து ஒன்று கூடியிருக்கும் கத்தோலிக்க ஆயர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதியை சந்தித்து இவ்விடயம் குறித்து வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சந்திப்பின் போது இதுவரை இரண்டு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் மீள்குடியமாத்தப்பட்டுள்ளமைக்கு ஜனாதிபதிக்கு பாராட்டுக்களையும் இக்குழவினர் தெரிவித்தனர். இன்னுமும் மீள்குடியமர்த்தப்படாமல் அகதிமுகாம்களில் தங்கியுள்ள மக்களை விரைவில் அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தல், மீள்குடியமத்தப்பட்ட மக்களுக்கான வாழ்வாதார உதவிகளை மேற்கொள்ளல், சிறுவர்கள் பாடசாலை மாணவர்களின் நலன்களை பேணுதல் என்பன தொடர்பாகவும் உரையாடப்பட்டதோடு, ஆயர்கள் குழவினர் வருடக்கணக்காக சிறைகளில் வாடும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாகவும் கலந்துரையாடியுள்ளனர்.

யாழ். ஆலயச்சூழலில் நடமாடும் திருடர்கள் குறித்து பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

Nallur_Thiruvillaயாழ்.குடாநாட்டில் நல்லார் கந்தசாமி அலயம் உட்பட பல ஆலயங்களில் திருவிழா உற்சவங்கள் நடைபற்று வரும் நிலையில பெருந்திரளாக கூடும் பக்தர்களிடம் நகைகளை கொள்ளையடிக்கும் கும்பல்களின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. பல்வேறு வேடங்களில் நடமாடித் திரியும் இக் கள்வர்களிடமிருந்து தங்கள் நகைகளைப் பாதுகாத்துக்கொள்ள பொதுமக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என யாழ். பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நேவின் பத்மதேவா எச்சரித்துள்ளார்.

Nallur_Thiruvillaகுறிப்பாக நல்லூர் ஆலயத் திருவிழாவில் மிக அதிகளவான பக்தர்கள் தினமும் வருகை தந்து கொண்டிருக்கும் நிலையில், அவ்வாலய சுற்றாடல்களில் திருடர்களின் நடமாட்டமும் அதரித்துள்ளதாக சுடடிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் தங்க நகைகளைத் தவிர்த்து ‘கவரிங்’ நகைகளை அணிந்து வருமாறும் பொலிஸாரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அண்மையில் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் சாத்திரம் கூறுபவர்கள் போல் நடித்து பொதுமக்களின் தங்க நகைகளை அபகரித்த 12 பேரை பொலிஸார் கைது செய்தமை குறிப்பிடத்தாக்கதாகும்.