விஸ்வா

விஸ்வா

யாழ்ப்பாணத்தில் டெங்குநுளம்பை ஒழிக்க ‘பக்றீரியா’

யாழ். குடாநாட்டில் டெங்கு நுளம்பை இல்லாமல் செய்யும் நடவடிக்கைகளில் ஒரு கட்டமாக கழிவு நீர் அகற்ற முடியாத இடங்களில் டெங்கு நுளம்புகளுக்கெதிரான ‘பக்றீரியா’ பயன்படுத்தப்படவுள்ளது. கழிவு நீர் வாய்க்கால்களுக்கு தெளிப்பதற்கான இந்த ‘பக்றீரியா’ கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்ட தொற்றுநோய்த் தடுப்புப்பிரிவின் பொறுப்பதிகாரி திருமதி. திருமகள் சிவசங்கர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குடாநாட்டில் டெங்கு நோயை ஓரளவிற்கு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ள போதும், அதனை முற்றாகத் தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டியுள்ளதெனவும், அடுத்து வரப்போகும் மழைக்காலத்தில் டெங்கு நோய் பரவுவதற்கான ஆபத்துகளைத் தவிர்க்க பொதுமக்கள் மத்தியில் டெங்கு நொய் தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய வீட்டுத்திட்டத்திற்கு பொதுமக்களிடம் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

இந்திய அரசினால் யாழ். குடாநாட்டில் அமைக்கப்படவுள்ள வீட்டுத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளன. பயனாளிகள் பிரதேசச் செயலங்களில் விண்ணப்பப் படிவங்களைப் பெற்று எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்பாக கையளிக்க வேண்டும் என யாழ். அரச அதிபர் திருமதி. இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தை சொந்த இடமாகக்கொண்டு 18-05-2009 இற்குப்பின் யாழ்ப்பாணத்தில் மீள்குடியமர்ந்தவர்கள், சொந்தக் காணிகளையுடையவர்கள் மட்டும் இவ்வீட்டுத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடு பகுதியளவில் சேதமடைந்தவர்களும் விண்ணப்பிக்க முடியும் எனவும அவர்கள் அதனைப் புனரமைப்பதற்கு இரண்டு லட்சரூபா வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே வேளை, போரினால் பாதிக்கப்பட்ட விதவைகளின் குடும்பங்கள், போரில் உயிரிழந்தவர்கள், காணாமல்போனவர்கள், காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வீடமைப்பிற்கான நிதி கட்டம் கட்டமாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டனில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பணமோசடி செய்தவர் பிணையில் விடுதலை.

வெளிநாட்டில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாக மாணவர்களிடம் பணம் பெற்று மோசடி செய்ததாகக் கூறப்படும் கணனி நிறுவனம் ஒன்றின் உரிமையாளர் குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.

லண்டனுக்க அனுப்பி தொழில் வாய்ப்பினைப் பெற்றுத்தருவதாகக் கூறி குறித்த நபர் மூன்று மாணவர்களிடம் ஐந்து இலட்ச ரூபா வீதம் பெற்றுள்ளார். அம்மாணவர்களிடம் போலிச் சான்றிதழ்களையும் அவர் வழங்கியுள்ளார். இந்த ஏமாற்று நடவடிக்கை தொடர்பாக இம்மூன்று மாணவர்களும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இம்முறைப்பாட்டையடுத்தே இவர் கைது செய்யப்பட்டார்.

இம்மோசடி குறித்த வழக்கினை விசாரணை செய்த யாழ். நீதவான் ஏ. ஏ. ஆனந்தராஜா  இது குறித்து விசாரணை செய்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டதுடன் குறித்த நபரை 75 ரூபா பெறுமதிக்கு மூன்று பேரின் சரீரப் பிணையில் செல்ல அனுமதித்து வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

கிளி – முல்லை இல் பணியாற்ற அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் அரச சார்பற்ற நிறுவனங்கள் சென்று பணிபுரிவதற்கு பாதுகாப்பு அமைச்சினால் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முற்றாக இல்லாவிடினும் ஓரளவிற்கு இக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்னியில் ஏ-9 பாதையூடாக பயணம் செய்வதற்கு அரசசார்பற்ற நிறுவனங்கள் ஒவ்வொரு தடவையும் பாதுகாப்பு அமைச்சிடம் அனுமதி பெறவேண்டியிருந்தது. தற்போது அம்முறை தளர்த்தப்பட்டு அனுமதி மூன்று மாதங்களுக்கு வழங்கப்படுகின்றது என யாழ.மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையத் தலைவர் வி. கேசவன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், வன்னியில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் பல தேவைகள் இன்னமும் நிறைவேற்றப்படாமலுள்ளது எனவும், கிளிநொச்சி முலலைத்தீவு மாவட்டங்களில் பணியாற்ற அரசசார்பற்ற நிறுவனங்கள் முன்வரவேண்டும் எனவும், அங்கு பணியாற்றும் நிறுவனங்கள் அரசாங்கத்தின் எண்ணங்களுக்கும் திட்டங்களுக்கும் அமைய செயற்படவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

யாழ்.அரச அதிபர் அதிவிசேடத்தர நிர்வாகியாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளார்

Imelda_Sugumar_GA_Jaffnaயாழ்ப்பாண அரசாங்க அதிபர் திருமதி. இமெல்டா சுகுமார் இலங்கையின் அதிவிசேடத் தர நிர்வாகியாக தரமுயர்த்தப்பட்டுள்ளார். பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு இலங்கையின் அதிவிசேட நிர்வாகச் சேவையாளர்களாக 57பேரின் பெயர் விபரங்;களை வெளியிட்டுள்ளது.

 அதில் தமிழ் பேசும் இருவர் இடம்பெற்றுள்ளனர். அதில் ஒருவராக யாழப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் இடம்பெற்றுள்ளார். 2005ஆம்ஆண்டு நிர்வாக சேவைத்தர வரிசைப் பட்டியலில் 490வது இடத்திலிருந்த இவர் இவ்வருடம் 44வது இடத்திற்கு தரமுயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு கிழக்கில் போரினால் 89 ஆயிரம் விதவைகள்!- பிரதி அமைச்சர்

Hizbullah M.L.A.Mவடக்கு கிழக்கில் யுத்தத்தினால் 89 ஆயிரம் பெண்கள் தங்கள் கணவரை இழந்து விதவைகளாகியுள்ளதாக சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார். அண்மையில் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

கிழக்கில் 49 ஆயிரம் பெண்களும், வடக்கில் 40 ஆயிரம் பெண்களும் கணவரை இழந்துள்ளனர் என அவர் குறிப்பட்டுள்ளார்.

இதில் 25ஆயிரம் பெண்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இவ்வாறு கணவரை இழந்த பெண்களில் 12ஆயிரம் பேர் 40 வயதிற்கும் குறைந்தவர்கள், 8ஆயிரம் பேர் குறைந்த பட்சம் மூன்று குழந்தைகளுடன் உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கரைச்சி பிரதேசசபை செயலாளர் பணியிலிருந்து இடைநிறுத்தம்.

கிளிநொச்சி மாவட்டம் கரைச்சிப் பிரதேசசபை செயலாளர் பே. குலேந்திரன் என்பவர் நேற்று வியாழக்கிழமை முதல் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறியின் உத்தரவின் பேரிலேயே அவர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிர்வாக நடவடிக்கைகளை துஸ்பிரயோகம் செய்தார் என்கிற குற்றச்சாட்டிலேயே அவர் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்விடயம் தொடர்பாக வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பி.ஜோன்சன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.

இது இவ்வாறிருக்க, போருக்குப்பின் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மக்கள் பெருமளவில் மீள்குடியேற்றப்பட்டுள்ள நிலையில் மக்கள் தங்களின் பல்வேறு தேவைகளுக்காக அரசநிறுவனங்கள், திணைக்களங்களுக்க நாளாந்தம் செல்ல வேண்டி ஏற்பட்டுள்ளதால் அவ்வாறு செல்லும் போது  அவர்கள் அதிகாரிகளாலும், ஊழியர்களாலும் அலைக்கழிக்கப்படுவதாகவும் சில விடயங்களுக்காக சிலருக்கு இலஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

யாழ். மாவட்டத்தில் வெள்ள அனர்த்தங்களைத் தடுக்க அரச அதிபர் முன்கூட்டியே நடவடிக்கை!

Jaffna_Floodயாழ். மாவட்டத்தில் வெள்ள அபாயங்களைத் தடுப்பதற்கு யாழ். அரசஅதிபர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். ஏதிர்வரும் மாதங்களில் கடும்மழை பெய்ய விருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், யாழ். மாவட்டத்தில் வெள்ள அனர்த்தம் ஏற்படக்கூடிய இடங்களை அடையாளம் கண்டு அறிக்கையிடுமாறு அவர் பிரதேசச் செயலர்களை பணித்துள்ளார்.

Jaffna_Floodவெள்ள பாதிப்புக்களிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் நோக்கில் முன்கூட்டியே நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கில் தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன.

வெள்ளப் பாதிப்புகளுக்குள்ளாகுமென எதிர்பார்க்கப்படுகின்ற கிராமசேவையாளர் பிரிவு, கிராமம், அவற்றின் சனத்தொகை, மக்கள் இடம்பெயர வேண்டி ஏற்பட்டால் அவர்களைத் தங்க வைக்க வேண்டிய இடங்கள், அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய வசதிகள் என்பன குறித்த விபரங்கள் திரட்டப்பட்டு அறிக்கைகள் தயாரிக்குமாறு அரசாங்க அதிபரால் கோரப்பட்டுள்ளது.

வயாவிளான் மகாவித்தியாலயம் ஜனவரிக்குப் பின்னரே பழைய இடத்தில் இயங்கும்.

Vayavilaan_Mahavidyalayamஉயர் பாதுகாப்பு வலயத்திலிருந்த வயாவிளான் மகாவித்தியாலயம் கடந்த செவ்வாய் கிழமை படையினரால் பாடசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்படும் வைபவம் இடம்பெற்றிருந்த போதும் அப்பாடசாலைக் கட்டடங்களை புனரமைக்க வேண்டியிருப்பதால் அடுத்த வருடம் ஜனவரி மாதமே அது முழுமையாக கையளிக்கப்படும் என படைத்தரப்பால் அறிவிக்கப்பட்டுள்ளது.

Vayavilaan_Mahavidyalayamகடந்த செவ்வாய் கிழமை வயாவிழான் பாடசாலை கையளிக்கப்படும் நிகழ்வு பெரியளவில் நடத்தப்பட்டது.  அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர். மாணவர்கள் உட்பட்ட பாடசாலை சமூகத்தினர், வடமாகாண ஆளுநர், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும், அதிகாரிகள் பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். பாடசாலைத் தளபாடங்களும் அங்கு கொண்டு செல்லப்பட்டிருந்தன. எனினும் அடுத்த நாளே அப்பாடசாலை உரும்பிராயிலுள்ள அதன் தற்காலிக கட்டடத்தில் மீண்டும் இயங்குகின்றது.

 பாடசாலைக் கட்டடங்கள் புனரமைக்கப்பட வேண்டியிருந்தால் அவற்றைப் புனரமைத்து விட்டு ஜனவரி மாதமே அதனை ஆரமப்பிக்கும் நிகழ்வையும் நடத்தியிருக்கலாமே என அப்பாடசாலையின் பெற்றோர், மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

வடமராட்சிக் கிழக்குப் பகுதிகளில் தமிழரின் வரலாற்றுத் தொல்பொருட்கள்!

Jaffna_Manipallavamவடமராட்சிக் கிழக்குப் பகுதிகளில் தமிழரின் வரலாற்றுத் தொன்மையை உறுதிப்படுத்தும் தொல்லியல் எச்சங்கள் காணப்படுவதாக யாழ். பல்கலைக்கழக வரலாற்றுத்துறைப் பேராசிரியர் செ.கிருஸ்ணராஜா தெரிவித்துள்ளார்.

வடமராட்சிக்கிழக்குப் பகுதிகளான அம்பன், குடத்தனை, நாகர்கோவில், பகுதிகளில் இத்தொல்லியல் எச்சங்கள் தொடர்ச்சியாக கண்டறியப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தமது தலைமையிலான வரலாற்று ஆய்வுக்குழுவினர் நேரடியாக அவ்விடங்களுக்குச் சென்று இவற்றை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தள்ளார்.

Jaffna_Manipallavamகுறித்த பகுதிகளில் மணல் அகழ்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மணல் அகழ்ந்தெடுக்கப்பட்ட குழிகளுக்குள் சென்று அவதானித்த போது, சுன்னாகம், கந்தரோடைப் பகுதிகளிலிருந்து மீட்கப்பட்டதைப் போன்ற மணிவகைகள், கூரை ஓடுகள், முதலான மரபுரிமைப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு யாழ். பல்கலைக்கழக அரும் பொருட்காட்சியகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 இது தவிர தமிழ் பிராமி வடிவில் ‘நாகபூமி’ ‘பரராச’ போன்ற சொற்கள் பதிக்கப்பட்ட நாணயங்களும் நாகர்கோவிலில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள பேராசியர் கிருஸ்ணராஜா அப்பகுதிகளில் மணல் அகழ்வுப்பணிகளில் ஈடுபடுவோர் இத்தொல்லியல் பொருட்களுக்குச் சேதம் விளைவிக்காமல் தொல்பொருட்கள் கண்டெடுக்கப்படுமானல் அவற்றை யாழ்.பல்கலைக்கழக வராற்றுத்துறையில் ஒப்படைத்துதவுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.