சஜீர் அகமட் பி

சஜீர் அகமட் பி

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

university-of-peradeniya.jpgபேரா தனை பல்கலைக்கழக மாணவர்கள் பேராதனை கலஹா சந்தியில் நேற்று புதன்கிழமை நண்பகல் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். இணைந்த சுகாதார கற்கை பீடத்தினை திறக்கக் கோரியும், இப்பீட மாணவர்களும் செய்முறை பயிற்சிக்காக கண்டி, பேராதனை மற்றும் கம்பளை ஆஸ்பத்திரிகளில் அனுமதி பெற்றுத்தரக் கோரியுமே இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் சுலோக அட்டைகளை ஏந்தியவாறு 3 மணி நேரம் கோஷமெழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். இணைந்த சுகாதார கற்கை பீட மாணவர்களுக்கு போதனா வைத்தியசாலைகள் செயல்முறை பயிற்சிக்கான அனுமதியை மறுத்ததனால் ஏற்பட்ட பிரச்சினையை அடுத்தே பீடம் காலவரையறையின்றி மூடப்பட்டது.

கலைக்கேந்திர நிலையம் யாழ்ப்பாணத்தில்…

jaffna.jpgஇலங் கை திரைப்பட கூட்டுத்தாபனம் யாழ்ப்பாணத்தில் கலைக்கேந்திர நிலையம் ஒன்றை அமைக்கவுள்ளது. அரசாங்கத்தின் கண்காணிப்பின் கீழ் வடக்கு மற்றும் தெற்கு ஆகிய பகுதிகளுக்கு இடையிலான நட்புறவை வளர்ப்பதே இதன் நோக்கமாகும்.

குறித்த பகுதிகளிலுள்ள கலைஞர்களின் கலை ஆற்றலை வளர்ப்பதற்காக அரசு இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குண்டுத் தாக்குதலில் காயமடைந்தோரை பசில், ரிஷாத், டலஸ் நேரில் சென்று பார்வை! முதற்கட்ட நஷ்ட ஈடும் கையளிப்பு

basil_akuressa_casualties.jpgஅக்குரஸ்ஸ,  கொடபிட்டிய குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கான நஷ்டஈடுகளை வழங்கவும் காயமடைந்தவர்களை பார்வையிடவுமென ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ அமைச்சர் ரிஷாத் பதியுதீன், அமைச்சர் டலஸ் அழகபெரும அமைச்சர் சந்திரசிறி கஜதீர ஆகியோர் நேற்று சென்றிருந்தனர்.

குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட பிரதேச சபைத் தலைவர் உப தலைவர் ஆகியோரின் இல்லங்களுக்குச் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.

அங்கிருந்து அமைச்சர்களான ரிஷாத் பதியுதீன், டலஸ் அழகபெரும, சந்திரசிறி கஜதீர ஆகியோர் மாத்தறை வைத்தியசாலைக்குச் சென்று காயமடைந்தவர்களுக்கான முதற்கட்ட நஷ்டஈட்டுத் தொகையையும் வழங்கினர்.

குண்டு வெடிப்பில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் ஏனையோரையும் அமைச்சர்கள் பார்வையிட்டதுடன் அளிக்கப்படும் சிகிச்சைகள் தொடர்பாக வைத்தியசாலை பணிப்பாளர்களுடனும் கலந்துரையாடினர்.

இதேவேளை குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த  அக்குரஸ்ஸ பிரதேச சபையின் உபதலைவர் உபாலி சரத்சந்திர, கம்புறுபிட்டிய பிரதேச சபையின் உபதலைவர் திலக் தம்மிக விஜயசேகர,, தெவிநுவர பிரதேச சபையின் தலைவர் லின்டன் அபேவீர ஆகியோரது இல்லங்களுக்கு போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் சென்று தமது அநுதாபங்களைத் தெரிவித்தனர்.

இந்தக் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் காயப் பட்டோருக்கு 10,000 ரூபாவும் மரணித்த குடும்பம் ஒன்றுக்கு தலா 50,000 ரூபாவையும் வழங்குவதற்காக இடர் முகாமைத்துவ அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையில் குழுவொன்று செயலாற்றுவதாகவும் தெரிய வருகிறது.

ஆளங்குளம் சந்தியில் இனந்தெரியாத நபர்களால் பஸ் ஒன்று தீக்கிரை : இன்று அதிகாலை சம்பவம்

srilanka-bus.jpgவாழைச் சேனை – பொலன்னறுவை வீதியிலுள்ள ஆலங்குளம் சந்தியில் இன்று அதிகாலை இ.போ.ச. பஸ் ஒன்று இனந்தெரியாத நபர்களினால் வழிமறிக்கப்பட்டுத் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து நேற்றிரவு கல்முனை நோக்கிப் புறப்பட்ட இ.போ.ச. பஸ்ஸே இவ்வாறு தீ வைக்கப்பட்டுள்ளது.

குறித்த பஸ்ஸில் 50இற்கும் மேற்பட்டோர் பயணம் செய்து கொண்டிருந்த போதிலும், அவர்களை இறக்கி விட்டே இந் நபர்கள் பஸ்ஸுக்குத் தீ வைத்து விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.(புனானைக்கும் நாவலடிச் சந்திக்கும் இடையில்)

6 பேர் கொண்ட குழுவினரே பஸ்ஸுக்குத் தீ வைத்துள்ளதாகவும் அந்நபர்கள் சீருடையுடன் வந்ததாகவும் தகவல்கள் மூலம் தெரிய வருகின்றது.

முற்றாகத் தீக்கிரையான மேற்படி பஸ் கல்முனை டிப்போவுக்கு உரியதெனக் கூறப்படுகின்றது. வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

இலங்கை கிரிக்கட் அணியின் புதிய தலைவராக குமார் சங்கக்கார! உப தலைவராக முரளிதரன்!!

murali_sangakkara.jpgஇலங்கை கிரிக்கட் அணியின் புதிய தலைவராக குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் தேசிய தெரிவுக் குழு இந்த நியமனத்தை மேற்கொண்டுள்ளது. இலங்கை அணியின் உப தலைவராக நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணியின் தலைவராக இதுவரை கடமையாற்றிய மஹேல ஜயவர்தனää அண்மையில் பாகிஸ்தானுக்கு இலங்கை அணி மேற்கொண்ட கிரிக்கட் சுற்றுலாவுடன் தலைமைப் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இதற்கிணங்க அணியின் புதிய தலைவர் மற்றும் உப தலைவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, எதிர்வரும் ஜுன் மாதம் 5ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள உலகக் கிண்ண ருவன்டி-20 கிரிக்கட் சுற்றுப் போட்டிகள் வரை இலங்கை அணி எவ்வித சர்வதேச ஆட்டங்களிலும் கலந்துகொள்ளாது என எதிர்பார்க்கப்படுகிறது.

அமைச்சர் தேறி வருகிறார்

mahinda-wijayaratna.jpgகுண்டு வெடிப்பில் படுகாயமடைந்து கொழும்பு பெரியாஸ்பத்திரியின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் மஹிந்த விஜேசேக்கரவின் உடல் நிலையில் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தேசிய வைத்தியசாலை யின் பணிப்பாளர் டாக்டர் ஹெக்டர் வீரசிங்க தெரிவித்தார்.

மிகவும் ஆபத்தான நிலையில் கொழும்புக்கு கொண்டுவரப்பட்ட அமைச்சர் மஹிந்த விஜேசேக்கர சுமார் 4 மணி நேர சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.

இன்னமும் அவர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவிலேயே அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்று தெரிவித்த டாக்டர் ஹெக்டர் வீரசிங்க, அவரது உடல் நிலையில் சிறிய முன்னேற்றம் காணக்கூடியதாக இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

யாழ். உற்பத்தி பொருட்களுடன் 11 லொறிகள் இன்று கொழும்பு வருகை

jaffna.jpgயாழ். குடா உற்பத்திப் பொருட்களை ஏற்றிக் கொண்டு 11 லொறிகள் இன்று காலை யாழ். நாவற்குழி களஞ்சியசாலையிலிருந்து புறப்படுகின்றன.

நேற்று முன்தினம் இரவு நாவற்குழியை சென்றடைந்த லொறிகளிலிருந்த பொருட்களை இறக்கிய பின்னர் யாழ். உற்பத்திப் பொருட்களை நேற்று ஏற்றினர். வெங்காயம், மரக்கறி வகைகள் மற்றும் மீன், கருவாடு வகைகளும் ஏற்றப்பட்டன.

யாழ். குடாநாட்டு உற்பத்திப் பொருட்களை கொழும்புக்கு கொண்டுவர விரும்புவோர் யாழ். அரச அதிபர் அலுவலகத்தில் இயங்கும் விசேட செயலணி அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் கேட்கப்பட்டுள்ளனர். இந்த அலுவலகத்தில் சென்று யாழ். உற்பத்திப் பொருட்களை கொழும்புக்கு கொண்டு செல்வோர் தமது விபரங்களை பதிவு செய்ய வேண்டும்.

அத்துடன் கொழும்பிலிருந்து யாழ். குடாநாட்டுக்கு பொருட்களை கொண்டு செல்லும் தனியார் வர்த்தகர்க ளும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளரிடம் தம்மை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.வெலிசறை களஞ்சிய சாலையில் வைத்து லொறிகளில் ஏற்றப்படும் பொருட்கள் யாழ். நாவற்குழி களஞ்சிய சாலையில் வைத்தே இறக்கப்படும். அதேபோன்றுஅங்கு ஏற்றப்படும் பொருட்கள் வெலிசறை களஞ்சிய சாலையிலேயே இறக்கப்படும்.

கடந்த திங்கட்கிழமை புறப்பட்ட லொறிகள் வவுனியா வில் தரித்து நின்று அங்கிருந்து ஏ-9 ஊடாக நாவற்குழியை நேற்று முன்தினம் இரவு 7.30 மணியள வில் சென்றடைந்தது.

யாழ். அரச அதிபர் கே. கணேஸ், செயலக அதிகாரிகள் மற்றும் சமூக சேவைகள் அமைச்சின் அதிகாரிகளும் நாவற்குழி களஞ்சிய சாலையில் இரவு லொறிகளை பொறுப்பேற்றுக் கொண்டனர். இன்று காலை புறப்படும் 22 லொறிகளில் 11 லொறிகளில் யாழ். மக்களின் உற்பத்திப் பொருட்கள் கொண்டுவரப்படுகின்றன.

சர்வதேச பொருளாதார வீழ்ச்சியால் வளரும் நாடுகளே கடும் பாதிப்பு – உலக வங்கி எச்சரிக்கை

world-bank.jpgசர்வதேச பொருளாதார வீழ்ச்சியானது வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் கடுமையான பாதிப்பினை ஏற்படுத்துமென உலகவங்கி எச்சரித்திருப்பதுடன் இதன் தாக்கம் நீண்ட காலத்துக்கு நீடிக்குமெனவும் தெரிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பாக உலகவங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் தற்போதுதான் சர்வதேச பொருளாதாரம் சரிவைச் சந்தித்துள்ளது. இதனால் சர்வதேச பொருளாதார வளர்ச்சி குறையும். இதனால் 27 ஆயிரம் இலட்சம் கோடி அமெரிக்க டொலர் முதல் 70 ஆயிரம் இலட்சம் கோடி டொலர் வரை பணப்புழக்கம் குறையும்.

இதனால் மொத்தமுள்ள 116 வளரும் நாடுகளில் பாதிப்பு ஏற்படும், ஏற்கெனவே 94 நாடுகளில் பொருளாதார தேக்க நிலையின் தாக்கம் உணரப்பட்டுள்ளது. இதனால் பல தொழில்துறைகள் கடுமையாகப் பாதிக்கப்படும்.

இப்பிரச்சினைக்கு அரசு, பல்வேறு மையங்கள் மற்றும் தனியார் துறையினர் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலமே தீர்வு காண முடியும். புதிதாக வேலை வாய்ப்பை உருவாக்குவது, சமூக பாதுகாப்பு திட்டங்களை அமுல்படுத்துவதன் மூலமே வறுமையில் வாடுவோரின் எண்ணிக்கை அதிகமாகாமல் தடுக்க முடியும்.

கடந்த 80 ஆண்டுகளில் ஏற்படாத அளவுக்கு சர்வதேச பொருளாதார வளர்ச்சி 15 சதவீத அளவுக்கு வீழ்ச்சியடையும்.

நிதி நெருக்கடியைச் சமாளிக்க வளரும் நாடுகள் சர்வதேச அளவில் கடன் பெற முயன்றாலும் அதற்கு அதிக வட்டி செலுத்த வேண்டிய சூழல் உருவாகும். முதலீடுகள் குறைவதால் பொருளாதார வளர்ச்சி மேலும் சரிவைச் சந்திக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே மிகவும் மோசமான பொருளாதார நிலையில் உள்ள ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் மக்கள் இன்னும் மோசமான நிலையைச் சந்திக்க நேரிடும் என்று உலக வங்கியின் நிர்வாக இயக்குநர் நகோஸி ஒகோன்ஜோ இவேலா தெரிவித்தார்.

மேலும் ஏற்கெனவே வளர்ச்சியடைந்த நாடுகளிலிருந்து பெறப்படும் நிதியின் மூலம் பல்வேறு நிதித் திட்டங்களைச் செயல்படுத்தும் மூன்றாம் உலக நாடுகள் இந்த சரிவு காரணமாக மிகக் கடுமையான சிக்கலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

பெரும்பாலான நாடுகள் நடப்பு ஆண்டில் தாங்கள் பிற வளரும் நாடுகளுக்கு அளிக்கும் உதவித் தொகையை பெருமளவு குறைத்துக் கொள்ளத் திட்டமிட்டுள்ளன. இதனால் நிதியை எதிர்பார்க்கும் வளரும் நாடுகளுக்கு மேலும் சிக்கல் உருவாகுமென இவேலா சுட்டிக் காட்டியுள்ளார்.

அரசியல் தலைமைகள் ஒன்றுபட்டால் இன முரண்பாடுகளற்ற சுமுகமான சூழ்நிலையை நாட்டில் தோற்றுவிக்க முடியும் – எம். எல். ஏ.ஏம். ஹிஸ்புல்லாஹ்

hisbullah.jpgகிழக்கு மாகாண சபையின் முக்கியமான முதல் பணி இனங்களிடையே நல்லுறவை ஏற்படுத்துவதேயாகும். அதனை மிக குறுகிய காலப்பகுதியில் பூரணமாக எட்ட முடியாது. எனினும் இன்று இனங்களுக்கிடையே சுமுகமான சூழ்நிலை காணப்பட்டு வருவதானது எம்மிடையே பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.கிழக்கு மாகாணத்தில் மக்களுடனான அனைத்து சந்திப்புக்களிலும், கூட்டங்களிலும் இவ்வினங்களின் பிரதிநிதிகள் பிரசன்னமாயிருந்து வருவது வேறு எந்த மாகாணத்திலும் காணமுடியாததொரு நிகழ்வாகும். அரசியல் தலைமைகள் ஒன்றுபட்டால் நிச்சயம் இன முரண்பாடுகளைத் தீர்த்து சுமுகமானதொரு சூழ்நிலையை நாட்டில் தோற்றுவிக்க முடியும். இவ்வாறு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

கிழக்கின் உதயம் வேலைத்திட்டத்தின் கீழ் தேசிய ஒற்றுமையைக் கிழக்கின் அபிவிருத்தி ஊடாக ஏற்படுத்தல் தொடர்பான அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான அறிவூட்டல் நிகழ்ச்சித் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சின் அனுசரணையுடன் அமைச்சர் எம். எஸ். உதுமாலெப்பையின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்;

கிழக்கு மாகாண சபை அமையப் பெறுவதற்கு முன்னர் உலகில் காணப்படுகின்ற அத்தனை அராஜகங்களும் இம்மாகாணத்திலே மலிந்து காணப்பட்டன. அதிகாரம், நிர்வாகம் என்பன குறித்த ஒரு நபரிடம் இருந்து வந்தன. 20 வருட காலத்தின் பின்னர் மக்களின் பிரதிநிதிகளிடம் அவை ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதனால் அனைத்து சமூகங்களினதும் கருத்துகள் , பாதுகாப்பு, இருப்பிடம், அபிவிருத்தி, வேலைத்திட்டங்கள் போன்றன துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் மூவின சமூகங்களிடையே நம்பிக்கை, புரிந்துணர்வு,நல்ல மனப்பாங்கு தோன்றி அமைதியான சூழ்நிலை ஏற்பட்டு வருகின்றது.

இன்று ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது கிழக்கு மாகாணம் கல்வி , சுகாதாரம், விவசாயம், விளையாட்டு போன்ற அனைத்துத் துறைகளிலும் பின்னடைந்தே காணப்படுகின்றது. கடந்த கால யுத்தம், இயற்கை அனர்த்தம் போன்றவற்றினால் பல மனித உயிர்களும் பௌதீக வளங்களும் அழிந்துபோய் உள்ளன. இதன் விளைவுகள் இன்னும் பிரதிபலித்துக் கொண்டேயிருக்கின்றன. யுத்தம், அனர்த்தம் போன்றவற்றினால் பெண்களும் சிறுவர்களுமே அதிகமான தாக்கங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். இதனால் இன்றைய கணிப்பீட்டின் படி 49 ஆயிரம் விதவைகள் கிழக்கு மாகாணத்திலுள்ளனர். 6 ஆயிரம் இளைஞர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளிலிருந்து மீண்டுள்ளனர். கல்வித்துறையில் மிகவும் மோசமான பின்னடைவு நிலை காணப்படுகிறது. க.பொ.த.சாதாரணதரப் பரீட்சை எழுதியவர்களில் 50 வீதத்திற்கும் குறைவானவர்களே க.பொ.த. உயர்தரத்திற்குச் செல்கின்றனர். இதேவேளை , யுத்தப்பிரதேசங்களில் உள்ள மாணவர்களில் அநேகமானவர்கள் 12 வயதிற்குப் பின்பே 1 ஆம் தரம் கற்பதற்காக வருகின்றனர்.

தற்போது கல்வித்துறையில் 500 ஆங்கில, விஞ்ஞான , கணிதப் பிரிவுக்கான பயிலுநர் ஆசிரியர்கள் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர். பாதைகள் அமைப்பதற்காக 6 ஆயிரம் மில்லியன் ரூபாவும் ஏனைய கட்டமைப்பு வேலைகளுக்கு ஐ.எம்.எப். பின் ஊடாக பெருமளவு நிதியும் கிடைக்கப்பெறவுள்ளது. இதேவேளை விவசாயத்துறை தற்போது பாரிய முன்னேற்றம் அடைந்துள்ளது. கடந்த காலங்களை விட சென்ற வருடம் 1 இலட்சத்து 31 ஆயிரம் ஏக்கர் அதிகமாக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டது. இது மொத்தத் தேசிய உற்பத்தியில் 30 வீதப் பங்களிப்பை செய்துள்ளது. இனிவரும் காலங்களில் சகல துறைகளிலும் முன்னேற்றம் அடையும் வகையில் கிழக்கு மாகாணம் கட்டியெழுப்பப்படும் என்றார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் செய்த உடன்படிக்கையை வெளிப்படுத்த வேண்டும்- லக்ஷ்மன் கிரியெல்ல

kiriella.jpgநாட்டின் நிதி நிலைவரமானது வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதனால், சர்வதேச நிதி நிறுவனங்கள் எமது நாட்டின் மீதுள்ள நம்பிக்கையை இழந்துள்ளன. இதற்கு அரசாங்கத்தின் தவறான நிதிக் கொள்கையே காரணம் என ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடம் பெறப்படவுள்ள 1,500 மில்லியன் டொலர் கடன் தொகையானது, எந்த அடிப்படையில் அல்லது எவ்வாறான உடன்படிக்கையின் கீழ் பெறப்பட்டது என்பதனை உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் என்றும் அக்கட்சி அரசாங்கத்தை கோருகின்றது. எதிர்க்கட்சி அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட எம்.பி. லக்ஷ்மன் கிரியெல்ல மேற்கண்டவாறு தெரிவித்தார்.

லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. இங்கு மேலும் கூறுகையில், ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்தின் போது எமது நாட்டுக்கு 4500 மில்லியன் ரூபா நன்கொடையாகக் கிடைக்கவிருந்தது. டோக்கியோ பேச்சுவார்த்தையின் பின்னர் மேற்படி நிதி கிடைக்கும் தருணத்தில் இன்றைய அரச தரப்பினரும் ஜே.வி.பி. மற்றும் ஹெல உறுமய ஆகிய இனவாதக் கட்சிகளும் இணைந்து கொண்டு இந்த நிதி திரும்பிச் செல்வதற்கான சகல சூழ்ச்சிகளையும் மேற்கொண்டன. ஐக்கிய தேசியக் கட்சி நாட்டைக் காட்டிக்கொடுக்கப் போவதாக பிரசாரங்களை மேற்கொண்டன. ஆனால், கடந்த மூன்று வருட காலமாக ஆட்சியில் இருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கூட்டமைப்பு அரசாங்கமானது நாட்டையும் மக்களையும் கொள்ளையடித்ததே தவிர வேறெதனையும் செய்யவில்லை.

சர்வதேச மற்றும் உள்ளூர் நிதி நிறுவனங்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட கடன்களை கொள்ளையடித்து அந்தச் சுமையை மக்கள் மீது சுமத்தியுள்ளது. தற்போது அரசாங்கம் பெற்றுள்ள கடன்களுக்கு வட்டித் தொகையாக 6,000 கோடி ரூபாவை செலுத்தவிருக்கின்ற அதேவேளை, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 1,900 மில்லியன் டொலர்களை கடனாகப் பெறுவதற்கு விண்ணப்பித்துள்ளது. சர்வதேச நிதி நிறுவனங்கள், கடன் வழங்கும் விடயத்தில் கையை விரித்ததையடுத்தே தற்போது சர்வதேச நாணய நிதியத்தைப் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கின்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிகாரத்தில் இருக்கின்ற இன்றைய கட்டத்தில், தமது அரசாங்கம் வெளிநாட்டுக் கடன்களில் நம்பியிருக்கவில்லை என்றும், அப்படியான கடன்கள் தமக்குத் தேவையில்லையென்றும் கூறிவந்தது. இன்று நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.

நாட்டின் அபிவிருத்திக்கு சர்வதேச கொடுக்கல் வாங்கலின் அவசியத்தை ஐக்கிய தேசியக் கட்சி உணர்ந்திருந்தது. இதனை ஏற்றுக்கொள்ளாத கூட்டமைப்பு அரசாங்கம் எம்மீது சேறு பூசும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது.

ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திற்கு இனாமாகக் கிடைக்கவிருந்த நிதி தொடர்பில் கூச்சலிட்ட ஹெல உறுமய மற்றும் விமல் வீரவன்ச குழுவினர், தற்போது அரசாங்கம் மேற்கொண்டுள்ள கபடத் தன்மை குறித்து ஏன் மௌனமாக இருக்கின்றனர் எனக் கேட்க விரும்புகிறேன். எமது நாட்டின் நிதி நிலைவரம் தற்போது வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது. இன்னும் இரண்டு வார காலத்திற்கே நாட்டைக் கொண்டு நடத்தமுடியாத நிலையை அரசாங்கம் எட்டியுள்ளது. இதற்காகவே சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெறத் துடிக்கின்றது. இந்த கடன் திட்டத்தில் சந்தேகம் நிலவுகின்றது.

வெளிநாட்டுக் கடன்களை நம்பியிருக்கவில்லையென பொய்கூறி மக்களை ஏமாற்றியவர்கள் இப்போது எவ்வாறான உடன்படிக்கையின் அடிப்படையில் மேற்படி கடனைப் பெற்றுக்கொள்ளப் போகின்றனர் என்பது எவரும் அறியாத விடயமாகும். எனவே, இதன் ரகசியத்தை வெளிப்படுத்துமாறு ஐக்கிய தேசியக் கட்சி, அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கின்றது என்றார்.