சர்வதேச பொருளாதார வீழ்ச்சியானது வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் கடுமையான பாதிப்பினை ஏற்படுத்துமென உலகவங்கி எச்சரித்திருப்பதுடன் இதன் தாக்கம் நீண்ட காலத்துக்கு நீடிக்குமெனவும் தெரிவித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பாக உலகவங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் தற்போதுதான் சர்வதேச பொருளாதாரம் சரிவைச் சந்தித்துள்ளது. இதனால் சர்வதேச பொருளாதார வளர்ச்சி குறையும். இதனால் 27 ஆயிரம் இலட்சம் கோடி அமெரிக்க டொலர் முதல் 70 ஆயிரம் இலட்சம் கோடி டொலர் வரை பணப்புழக்கம் குறையும்.
இதனால் மொத்தமுள்ள 116 வளரும் நாடுகளில் பாதிப்பு ஏற்படும், ஏற்கெனவே 94 நாடுகளில் பொருளாதார தேக்க நிலையின் தாக்கம் உணரப்பட்டுள்ளது. இதனால் பல தொழில்துறைகள் கடுமையாகப் பாதிக்கப்படும்.
இப்பிரச்சினைக்கு அரசு, பல்வேறு மையங்கள் மற்றும் தனியார் துறையினர் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலமே தீர்வு காண முடியும். புதிதாக வேலை வாய்ப்பை உருவாக்குவது, சமூக பாதுகாப்பு திட்டங்களை அமுல்படுத்துவதன் மூலமே வறுமையில் வாடுவோரின் எண்ணிக்கை அதிகமாகாமல் தடுக்க முடியும்.
கடந்த 80 ஆண்டுகளில் ஏற்படாத அளவுக்கு சர்வதேச பொருளாதார வளர்ச்சி 15 சதவீத அளவுக்கு வீழ்ச்சியடையும்.
நிதி நெருக்கடியைச் சமாளிக்க வளரும் நாடுகள் சர்வதேச அளவில் கடன் பெற முயன்றாலும் அதற்கு அதிக வட்டி செலுத்த வேண்டிய சூழல் உருவாகும். முதலீடுகள் குறைவதால் பொருளாதார வளர்ச்சி மேலும் சரிவைச் சந்திக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே மிகவும் மோசமான பொருளாதார நிலையில் உள்ள ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் மக்கள் இன்னும் மோசமான நிலையைச் சந்திக்க நேரிடும் என்று உலக வங்கியின் நிர்வாக இயக்குநர் நகோஸி ஒகோன்ஜோ இவேலா தெரிவித்தார்.
மேலும் ஏற்கெனவே வளர்ச்சியடைந்த நாடுகளிலிருந்து பெறப்படும் நிதியின் மூலம் பல்வேறு நிதித் திட்டங்களைச் செயல்படுத்தும் மூன்றாம் உலக நாடுகள் இந்த சரிவு காரணமாக மிகக் கடுமையான சிக்கலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
பெரும்பாலான நாடுகள் நடப்பு ஆண்டில் தாங்கள் பிற வளரும் நாடுகளுக்கு அளிக்கும் உதவித் தொகையை பெருமளவு குறைத்துக் கொள்ளத் திட்டமிட்டுள்ளன. இதனால் நிதியை எதிர்பார்க்கும் வளரும் நாடுகளுக்கு மேலும் சிக்கல் உருவாகுமென இவேலா சுட்டிக் காட்டியுள்ளார்.