நாட்டின் நிதி நிலைவரமானது வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதனால், சர்வதேச நிதி நிறுவனங்கள் எமது நாட்டின் மீதுள்ள நம்பிக்கையை இழந்துள்ளன. இதற்கு அரசாங்கத்தின் தவறான நிதிக் கொள்கையே காரணம் என ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடம் பெறப்படவுள்ள 1,500 மில்லியன் டொலர் கடன் தொகையானது, எந்த அடிப்படையில் அல்லது எவ்வாறான உடன்படிக்கையின் கீழ் பெறப்பட்டது என்பதனை உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் என்றும் அக்கட்சி அரசாங்கத்தை கோருகின்றது. எதிர்க்கட்சி அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட எம்.பி. லக்ஷ்மன் கிரியெல்ல மேற்கண்டவாறு தெரிவித்தார்.
லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. இங்கு மேலும் கூறுகையில், ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்தின் போது எமது நாட்டுக்கு 4500 மில்லியன் ரூபா நன்கொடையாகக் கிடைக்கவிருந்தது. டோக்கியோ பேச்சுவார்த்தையின் பின்னர் மேற்படி நிதி கிடைக்கும் தருணத்தில் இன்றைய அரச தரப்பினரும் ஜே.வி.பி. மற்றும் ஹெல உறுமய ஆகிய இனவாதக் கட்சிகளும் இணைந்து கொண்டு இந்த நிதி திரும்பிச் செல்வதற்கான சகல சூழ்ச்சிகளையும் மேற்கொண்டன. ஐக்கிய தேசியக் கட்சி நாட்டைக் காட்டிக்கொடுக்கப் போவதாக பிரசாரங்களை மேற்கொண்டன. ஆனால், கடந்த மூன்று வருட காலமாக ஆட்சியில் இருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கூட்டமைப்பு அரசாங்கமானது நாட்டையும் மக்களையும் கொள்ளையடித்ததே தவிர வேறெதனையும் செய்யவில்லை.
சர்வதேச மற்றும் உள்ளூர் நிதி நிறுவனங்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட கடன்களை கொள்ளையடித்து அந்தச் சுமையை மக்கள் மீது சுமத்தியுள்ளது. தற்போது அரசாங்கம் பெற்றுள்ள கடன்களுக்கு வட்டித் தொகையாக 6,000 கோடி ரூபாவை செலுத்தவிருக்கின்ற அதேவேளை, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 1,900 மில்லியன் டொலர்களை கடனாகப் பெறுவதற்கு விண்ணப்பித்துள்ளது. சர்வதேச நிதி நிறுவனங்கள், கடன் வழங்கும் விடயத்தில் கையை விரித்ததையடுத்தே தற்போது சர்வதேச நாணய நிதியத்தைப் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கின்றது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிகாரத்தில் இருக்கின்ற இன்றைய கட்டத்தில், தமது அரசாங்கம் வெளிநாட்டுக் கடன்களில் நம்பியிருக்கவில்லை என்றும், அப்படியான கடன்கள் தமக்குத் தேவையில்லையென்றும் கூறிவந்தது. இன்று நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.
நாட்டின் அபிவிருத்திக்கு சர்வதேச கொடுக்கல் வாங்கலின் அவசியத்தை ஐக்கிய தேசியக் கட்சி உணர்ந்திருந்தது. இதனை ஏற்றுக்கொள்ளாத கூட்டமைப்பு அரசாங்கம் எம்மீது சேறு பூசும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது.
ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திற்கு இனாமாகக் கிடைக்கவிருந்த நிதி தொடர்பில் கூச்சலிட்ட ஹெல உறுமய மற்றும் விமல் வீரவன்ச குழுவினர், தற்போது அரசாங்கம் மேற்கொண்டுள்ள கபடத் தன்மை குறித்து ஏன் மௌனமாக இருக்கின்றனர் எனக் கேட்க விரும்புகிறேன். எமது நாட்டின் நிதி நிலைவரம் தற்போது வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது. இன்னும் இரண்டு வார காலத்திற்கே நாட்டைக் கொண்டு நடத்தமுடியாத நிலையை அரசாங்கம் எட்டியுள்ளது. இதற்காகவே சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெறத் துடிக்கின்றது. இந்த கடன் திட்டத்தில் சந்தேகம் நிலவுகின்றது.
வெளிநாட்டுக் கடன்களை நம்பியிருக்கவில்லையென பொய்கூறி மக்களை ஏமாற்றியவர்கள் இப்போது எவ்வாறான உடன்படிக்கையின் அடிப்படையில் மேற்படி கடனைப் பெற்றுக்கொள்ளப் போகின்றனர் என்பது எவரும் அறியாத விடயமாகும். எனவே, இதன் ரகசியத்தை வெளிப்படுத்துமாறு ஐக்கிய தேசியக் கட்சி, அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கின்றது என்றார்.