கிழக்கு மாகாண சபையின் முக்கியமான முதல் பணி இனங்களிடையே நல்லுறவை ஏற்படுத்துவதேயாகும். அதனை மிக குறுகிய காலப்பகுதியில் பூரணமாக எட்ட முடியாது. எனினும் இன்று இனங்களுக்கிடையே சுமுகமான சூழ்நிலை காணப்பட்டு வருவதானது எம்மிடையே பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.கிழக்கு மாகாணத்தில் மக்களுடனான அனைத்து சந்திப்புக்களிலும், கூட்டங்களிலும் இவ்வினங்களின் பிரதிநிதிகள் பிரசன்னமாயிருந்து வருவது வேறு எந்த மாகாணத்திலும் காணமுடியாததொரு நிகழ்வாகும். அரசியல் தலைமைகள் ஒன்றுபட்டால் நிச்சயம் இன முரண்பாடுகளைத் தீர்த்து சுமுகமானதொரு சூழ்நிலையை நாட்டில் தோற்றுவிக்க முடியும். இவ்வாறு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
கிழக்கின் உதயம் வேலைத்திட்டத்தின் கீழ் தேசிய ஒற்றுமையைக் கிழக்கின் அபிவிருத்தி ஊடாக ஏற்படுத்தல் தொடர்பான அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான அறிவூட்டல் நிகழ்ச்சித் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சின் அனுசரணையுடன் அமைச்சர் எம். எஸ். உதுமாலெப்பையின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்;
கிழக்கு மாகாண சபை அமையப் பெறுவதற்கு முன்னர் உலகில் காணப்படுகின்ற அத்தனை அராஜகங்களும் இம்மாகாணத்திலே மலிந்து காணப்பட்டன. அதிகாரம், நிர்வாகம் என்பன குறித்த ஒரு நபரிடம் இருந்து வந்தன. 20 வருட காலத்தின் பின்னர் மக்களின் பிரதிநிதிகளிடம் அவை ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதனால் அனைத்து சமூகங்களினதும் கருத்துகள் , பாதுகாப்பு, இருப்பிடம், அபிவிருத்தி, வேலைத்திட்டங்கள் போன்றன துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் மூவின சமூகங்களிடையே நம்பிக்கை, புரிந்துணர்வு,நல்ல மனப்பாங்கு தோன்றி அமைதியான சூழ்நிலை ஏற்பட்டு வருகின்றது.
இன்று ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது கிழக்கு மாகாணம் கல்வி , சுகாதாரம், விவசாயம், விளையாட்டு போன்ற அனைத்துத் துறைகளிலும் பின்னடைந்தே காணப்படுகின்றது. கடந்த கால யுத்தம், இயற்கை அனர்த்தம் போன்றவற்றினால் பல மனித உயிர்களும் பௌதீக வளங்களும் அழிந்துபோய் உள்ளன. இதன் விளைவுகள் இன்னும் பிரதிபலித்துக் கொண்டேயிருக்கின்றன. யுத்தம், அனர்த்தம் போன்றவற்றினால் பெண்களும் சிறுவர்களுமே அதிகமான தாக்கங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். இதனால் இன்றைய கணிப்பீட்டின் படி 49 ஆயிரம் விதவைகள் கிழக்கு மாகாணத்திலுள்ளனர். 6 ஆயிரம் இளைஞர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளிலிருந்து மீண்டுள்ளனர். கல்வித்துறையில் மிகவும் மோசமான பின்னடைவு நிலை காணப்படுகிறது. க.பொ.த.சாதாரணதரப் பரீட்சை எழுதியவர்களில் 50 வீதத்திற்கும் குறைவானவர்களே க.பொ.த. உயர்தரத்திற்குச் செல்கின்றனர். இதேவேளை , யுத்தப்பிரதேசங்களில் உள்ள மாணவர்களில் அநேகமானவர்கள் 12 வயதிற்குப் பின்பே 1 ஆம் தரம் கற்பதற்காக வருகின்றனர்.
தற்போது கல்வித்துறையில் 500 ஆங்கில, விஞ்ஞான , கணிதப் பிரிவுக்கான பயிலுநர் ஆசிரியர்கள் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர். பாதைகள் அமைப்பதற்காக 6 ஆயிரம் மில்லியன் ரூபாவும் ஏனைய கட்டமைப்பு வேலைகளுக்கு ஐ.எம்.எப். பின் ஊடாக பெருமளவு நிதியும் கிடைக்கப்பெறவுள்ளது. இதேவேளை விவசாயத்துறை தற்போது பாரிய முன்னேற்றம் அடைந்துள்ளது. கடந்த காலங்களை விட சென்ற வருடம் 1 இலட்சத்து 31 ஆயிரம் ஏக்கர் அதிகமாக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டது. இது மொத்தத் தேசிய உற்பத்தியில் 30 வீதப் பங்களிப்பை செய்துள்ளது. இனிவரும் காலங்களில் சகல துறைகளிலும் முன்னேற்றம் அடையும் வகையில் கிழக்கு மாகாணம் கட்டியெழுப்பப்படும் என்றார்.